புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியம் (Post No.4147)

Written BY S NAGARAJAN

 

Date: 11 August 2017

 

Time uploaded in London:- 6-03 am

 

Post No.4147

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

பாக்யா 28-7-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியமும், அளித்த இரண்டு நோபல் பரிசுகளும்!

 

 ச.நாகராஜன்

 

“பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை விளக்குவதில் பிக்-பேங் கொள்கை பிரதானமாகத் திகழ்கிறது ஜான் சி.மாதர்

 

   “சொல்லப்போனால் பெரு வெடிப்பில் ஒரு பெரிய வெடிப்பே இல்லை. இரண்டாவதாக வெடிப்பே நிகழவில்லை. பெரு வெடிப்புக் கொள்கையானது எது வெடித்தது எப்போது வெடித்தது எப்படி வெடித்தது என்பதைத் தெரிவிக்கவில்லை. வெடித்தது என்பதை மட்டும் அது சொல்கிறது. ஆகவே பெரு வெடிப்பு கொள்கை என்பது பொருந்தாத தவறான கொள்கை – விஞ்ஞானி மிச்சியோ ககு (பெரு வெடிப்புக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கூறியது)

 

         உலகில் சாதாரண அற்பமாக நாம் கருதும் ஒரு விஷயம் மிக பிரம்மாண்டமான அரிய விஷயத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

 

நம்ப முடியாத விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

 

ஆனால் உலகின் மிக பிரம்மாண்டமான, அசத்தலான கண்டு பிடிப்பு நாம் மிக அற்பமாகக் கருதும் புறா எச்சத்தால் – புறாவின் கழிவினால் – கண்டு பிடிக்கப்பட்டது என்றால் ஆச்சரியமாயில்லை. அது மட்டுமல்ல, அந்தக் கண்டுபிடிப்பு இரண்டு பேருக்கு நோபல் பரிசுகளையும் வாங்கித் தந்தது என்றால் அதை விட ஆச்சரியமாக இல்லை?!

 

    பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கண்டுபிடிப்பு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு தானே!

 

பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணமாக கூறப்படும் பிக் பேங் – பெரு வெடிப்பு பற்றிய கண்டுபிடிப்பை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வழிகாட்டியது புறா எச்சம் தான்!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் பெரு வெடிப்பு பற்றிய கொள்கை உருவாகியது. ஆனால் அதை ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.

 

அமெரிக்காவில் இருந்த ரேடியோ அஸட்ரானமர்களான ஆர்னோ பெஞ்சியாஸ் (Arno Penzias) மற்றும் ராபர்ட் உட்ரோ வில்ஸன்  (Robert Wooderow Wilson) ஆகியோர் ஹோல்ம்டெல் ஹார்ன் ஆண்டெனாவை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இதன் மூலம் பிரபஞ்சம் ஒரு பெரிய வெடிப்பினால் ஏற்பட்டது என்று அவர்கள் எண்ணினர்.

 

ஆனால் விஞ்ஞானிகளில் சிலரோ ஸ்டெடி ஸ்டேட் தியரி என்னும் கொள்கையை முன் வைத்தனர். இதன் படி பிரபஞ்சம் எப்போதும் போலத் தொன்று தொட்டு இருந்து கொண்டே வருகிறது; இனியும் மாறுதல் பெரிதாக இல்லாமல் பிரபஞ்சம் நீடித்து இருக்கும்.

 

இதில் எது சரி?

 

நியூ ஜெர்ஸி நகரில் இருந்த பெல் லாபரட்டரியில் 1964ஆம் ஆண்டு பெஞ்சியாஸும் வில்ஸனும் ஆறு மீட்டர் குறுக்களவுள்ள ஹார்ன் ஆண்டெனாவை வைத்து ரேடியோ அலைகளை எக்கோ பலூன் சாடலைட்டுகளின் மீது மோத வைத்து அதில் உருவாகும் எதிரொலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தனர். இந்த ரேடியோ அலைகள் பலஹீனமானதாக, மெல்லிய ஒலையைக் கொண்டிருந்ததால் வேறு விதமான அலைகளின் குறுக்கீட்டை அவர்கள் தடுக்க வேண்டி இருந்தது.

 

       ஆண்டெனாவில் புறாவின் எச்சம் ஏராளமாக இருந்தது. அவற்றால் ஒரு விதமான குறுக்கீடும் இருக்காது என்று முதலில் அவர்கள் நம்பினர்.

 

      ஆனால் புறாவின் எச்சத்தைத் துடைத்துச் சுத்தம் செய்து தான் பார்ப்போமே என்று அவர்கள் ஆண்டெனாவைத் தீவிரமாக சுத்தம் செய்தனர்.

 

      என்ன ஆச்சரியம், புறாவின் எச்சம் பிரபஞ்ச ரகசியத்தை மறைந்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

 

 ஒரு சீரான, மெல்லிய, மர்மமான ஒரு ஓசை வந்து கொண்டே இருந்தது. ரேடியோ அலைகள் அவர்களுக்கு ஒரு புதிய உண்மையைச் சுட்டிக் காட்டின. ஆம், பிரபஞ்சம் ஒரு பெரிய வெடிப்பினால் உருவானது தான் என்பதை அழுத்தம் திருத்தமாக அவர்களால் உணர முடிந்தது.

 

ஆனால் இதை வெளியில் ஆதாரபூர்வமாக சொல்ல முடியவில்லை.

 

இதே கால கட்டத்தில் டிக், ஜிம் பீபிள்ஸ்,டேவிட் வில்கின்ஸன் ஆகிய விஞ்ஞானிகள் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் மைக்ரோவேவ் கதிரியக்கம் பற்றி ஆய்வு நடத்தி வந்தனர். பெரு வெடிப்பு மூலம் ஒரு பெரும் கதிரியக்கம் உருவாகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

 

இவர்களின் ஆராய்ச்சி பற்றி தற்செயலாக அறிந்த பெஞ்சியாஸ் உடனே டிக்கை தனது ஆய்வுக் கூடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

 

அனைவரும் ஒருங்கே இணைந்த போது பிக்-பேங் என்னும் பெரு வெடிப்புக் கொள்கை உறுதியானது.

இந்த ஆராய்ச்சியின் விளைவாக 1978இல் பெஞ்சியாஸ் மற்றும்

வில்ஸன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

உலகினர் அனைவரும்  புறாக்கள் தந்த நோபல் பரிசுகள் என்று செல்லமாக இவர்கள் பெற்ற பரிசுகளைப் பற்றி இன்றும் கூறுகின்றனர்.

ஒரு சிறிய எச்சம் எவ்வளவு பெரிய உண்மையை ஆண்டெனாவில் மூடி வைத்திருந்தது. எச்சத்தைத் துலக்கப் போய் ஒரு பெரும் மர்மத்தையே துலக்கி விட்டனர் விஞ்ஞானிகள்!

 

தொன்று தொட்டு வழங்கி வரும் ஆன்றோர் மொழியானஅற்பம் அற்பமல்ல என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு இந்தச் சம்பவம்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானியான டார்வின் முதலில் ஒரு டாக்டராகத் தான் விரும்பினார். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் அவரால் ரத்தத்தைப் பார்க்கவே முடியவில்லை, மிகவும் பயப்பட்டார்! சரி, ஒரு பாதிரியாராக மாறி விடலாம் என்று நினைத்தார்.

அப்போது ஹெச் எம் எஸ் பீகிள் என்ற கப்பலின் காப்டனான ராபர்ட் ஃபிட்ஸ்ரே தென் அமெரிக்காவில் ஒரு மாபெரும் ஆய்வுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.

நீண்ட பயணம்! தனி ஒருவனாகத் தன்னால் அந்தப் பயணத்தையும் ஆய்வையும் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. அந்தக் கப்பலின் முந்தைய காப்டன் இதே காரணங்களால் தற்கொலை செய்து கொண்டிருந்தார். ஆகவே துணைக்குச் சரியான ஆளை அவர் தேட ஆரம்பித்தார்.

அவருக்குத் தெரிந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஒருவர், 22 வயதான சார்லஸ் டார்வின் இதற்குச் சரியான ஆள் என்று சிபாரிசு செய்தார். டார்வினின் தந்தைக்கோ இந்தப் பயணம் பிடிக்கவில்லை. திரும்பி வர நெடுங்காலம் ஆகுமே என்று அவர் நினைத்தார். ஆனால் டார்வினின் மாமா அவரை ஆதரித்து அந்தப் பயணத்தை மேற்கொள்ளச் சொல்லியதோடு அதற்கான நிதியையும் தர முன் வந்தார்.

 

டார்வினும் ஃபிட்ஸ்ரேயும் நன்கு இணைந்து பழகினர். ஆனால் பின்னால் தான் டார்வினுக்குத் தெரிந்தது தான் ஒரு மயிரிழையில் தப்பித் தான் இந்தப் பயணத்திற்கு ஃபிட்ஸ்ரேயால் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பது.

 

ஃபிட்ஸ்ரே ஒரு மனிதனின் சாமுத்ரிகா லட்சணத்தைப் பார்த்தவுடன் ஆள் எப்படி என்று கூறி விடுவாராம். அந்தக் கலை அவருக்கு அத்துபடி. அவரது சாஸ்திர அறிவின் படி டார்வினின் மூக்கு சரியில்லை. இந்த மூக்கு உள்ளவர் எப்படி வெற்றிகரமாக ஒரு பெரிய  பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று ஐயப்பட்டார் ஃபிட்ஸ்ரே.

ஆனால் பின்னால் தான் அந்த மூக்கு பற்றிய தனது கணிப்பு தவறானது என்பதை அவர் உணர்ந்தார்.

(ஆதாரம்: சார்லஸ் டார்வின் : ஹிஸ் பப்ளிஷ்ட் லெட்டர்ஸ் -1902)

***

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: