தமிழ்ச் சுவடி மர்மம்! மாயச் சதுரச் சுவடி- PART 1 ( Post No.4166)

Written by S.NAGARAJAN

 

Date: 27 August 2017

 

Time uploaded in London- 4-48 am

 

Post No. 4166

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

தமிழ்ச் சுவடி மர்மம்!

மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 1

 

ச.நாகராஜன்

 

தமிழின் பெயரைச் சொல்லிச் சொல்லியே தங்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் தரங்கெட்டவர்கள் செழித்து வளர்கின்றனர்.

 

ஆனால் உண்மையாகத் தமிழை ஆராய்ந்து தமிழில் உள்ள சுவடிகளின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் தமிழர்களைத் தமிழர்கள் கவனிப்பதே இல்லை; கவனித்தால் அல்லவா பாராட்ட முடியும்.

 

தமிழை வளர்க்கும் அரிய பெண்மணியாக விளங்குகிறார் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முனைவரான முனைவர் திருமதி கா.சத்தியபாமா.

இவர் செய்த அரும்பணி மாயச் சதுரங்களைப் பற்றிய பழைய தமிழ்ச் சுவடிகளைப் படித்து ஆராய்ந்து புரிந்து கொண்டு அதை உலகிற்கு வெளிப்படுத்தியதே ஆகும்.

 

தமிழின் அருமை சில சொற்களால் அமைந்த பாடல்களால் பெரிய கணித வித்தைகளை விளக்குவதாகும். இதே போன்ற சூத்திரப் பாடல்களால் சோதிடமும் விளக்கப்படுவது தமிழின் தனிச் சிறப்பு.

 

எனது பழைய கட்டுரை ஒன்றில் எப்படி சதுரங்க பந்தப் பாடல் ஒன்றின் புதிரை அவிழ்க்க பல காலம் நான் முயன்று திடீரென்று (கடவுள் அருளால்) வெற்றி பெற்றதை விளக்கியுள்ளேன்.

திருமதி சத்தியபாமாவோ அனாயாசமாக பல சிக்கலான பாடல்களை விளக்குகிறார்.

 

இவரை உரிய முறையில் தமிழ் உலகம் கௌரவிக்கவில்லையே என வருந்துகிறேன். இப்படிப்பட்ட திறமைசாலியான தமிழ்ச் செல்விகளையும் தமிழ்ச் செல்வர்களையும் தமிழ் உலகம் உணர்ந்து போற்றும் நாள் எந்த நாளோ அந்த நாளே தமிழுக்கான நன்னாள் ஆகும்.

 

விஷயத்திற்கு வருவோம்.

 

சுவடிகளை ஆராய்ந்த சத்தியபாமா 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழில் இப்படி சிக்கலான புதிர்களை அவிழ்க்கும் வழிகள் பாடல்களில் உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மாயச சதுரங்களை அமைப்பதில் மூன்று வழிமுறைகள் உள்ளன.

 

 

 • வரிசையாக எண்களை எழுதி மாயச் சதுரங்களை அமைத்தல்
 • பரிபாஷையாகக் கூறப்பட்டுள்ள எண்களை வரிசையாக எழுதி மாயச் சதுரங்களை அமைத்தல்
 • கொடுக்கப்பட்டுள்ள கூட்டுத் தொகை எண்களுக்கான மாயச் சதுரம் அமைத்தல்

மேலே கூறப்பட்டுள்ள அனைத்தையும் சுவடிப் பாடல்கள் தருகின்றன!

 

என்ன ஒரு பிரம்மாண்டமான அறிவு! தமிழரின் பண்டைய நூல்களில் இது போல ஆயிரக்கணக்கான அற்புதங்கள் உள்ளன!!

 

முதல் வகையில் உள்ள ஒரு பாடலை விளக்குகிறார் மாயச் சதுரப் பெண்மணி:-

 

சீர்பெறும் ஈரே ழொன்று சியபணி ரெண்டும் ஏழு

ஏர்பெறும் பதினொன் றெட்டு இயல்பதி மூன்று ரெண்டு

பேர்பெறும் ஐந்தீர் ஐந்து பெருகுமூன்று பின்னீ ரெட்டு

கூர்பெறும் நால்மு வைந்தாற் குறிப்புடன் ஒன்ப தாமே

            (சுவடி எண் 1475)

 

இப்பாடலில் வரிசையாகக் கூறப்பட்டுள்ள எண்களை கட்டங்களில் இப்படி அமைக்க வேண்டும்.

 

14 1 12 7
11 8 13 2
5 10 3 16
4 15 6 9

 

மேலே உள்ள மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 34!

 

சிறிய ஒரு பாட்டு சிக்கலான அமைப்பை விளக்கி விட்டது.

 

அடுத் பரிபாஷை வகைப் பாடலுக்கு உதாரணத்தைத் தருகிறார் தமிழ் முனைவர்:

 

மேசமே இலக்க தாக விளங்கிய சோதி பத்தாம்

பூசமாம் சுப்பிர தீபம் பதினான்கு புந்தி பொன்னன்

மாசில்லா கும்பம் காரி மணிசித்ர பானு இந்து

ஆசில்லா மீனம் வெள்ளி ஆறரை அத்த மாமே

          (சுவடி எண் 1475)

 

இந்தப் பாடலைப் பார்த்தால் சோதிடப் பாடல் போல இருக்கிறது.

 

ஆனால் பரிபாஷை மர்மத்தை விண்டு பார்த்தால் வருவது அழகிய மாயச் சதுரம்!

 

மேஷம் – இராசிகளில் முதலாவதாக் அமைவது. ஆகவே இங்கு சுட்டிக் காட்டப்படும் எண் 1

ஸ்வாதி – நட்சத்திரங்களில் பதினைந்தாவது. ஆகவே வரும் எண் 15

 

பூசம் : நட்சத்திரங்களில் எட்டாவது. ஆகவே எண் 8

புந்தி : புதனின் மற்றொரு பெயர் புந்தி. வாரத்தின் நான்காவது நாள். ஆகவே வரும் எண் 4

பொன்னன்: வியாழனின் இன்னொரு பெயர் பொன்னன். வாரத்தின் ஐந்தாவது நாள். ஆகவே எண் 5

கும்பம் : இராசிகளில் பதினொன்றாம் இராசி. ஆகவே எண் 11

 

காரி – சனியின் மற்றொரு பெயர் காரி. வாரத்தின் ஏழாவது நாள். ஆகவே வரும் எண் 7

மணி : நவமணிகள் ஒன்பது. ஆகவே 9

சித்ரபானு : தமிழ் வருடங்களில் பதினாறாவது. ஆகவே 16

இந்து:  சந்திரனின் மற்றொரு பெயர் இந்து. வாரத்தின் இரண்டாவது நாள். ஆகவே எண் 2

மீனம் : இராசிகளில் பனிரெண்டாவது இராசி. ஆகவே எண் 12

 

வெள்ளி : வாரத்தின் ஆறாவது நாள். ஆகவே 6

ஆறரை : ஆறு அரை = 3; (6 x ½)  = 3  ஆகவே 3

அத்தம் : ஹஸ்தம் தமிழில் அத்தம் என வழங்கப்பெறும். இது 27 நட்சத்திர வரிசையில் பதின்மூன்றாவது நட்சத்திரம்.

ஆகவே எண் 13

பத்து என்ற எண்ணும், 14 என்ற எண்ணும் பாடலில் நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளது.

இனி சுலபம் தான் – மாயச் சதுரத்தை அமைப்பது!

 

 

1 15 10 8
14 4 5 11
7 9 16 2
12 6 3 13

 

இந்த மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 34!

 

அதே சமயம் முந்தைய மாயச் சதுரமும் இந்த மாயச் சதுரமும் கூட்டுத்தொகையான் முப்பத்திநான்கால் ஒன்று பட்டிருப்பினும் அமைப்பால் வேறு பட்டுள்ளது.

என்ன ஒரு தமிழ்ச் சாமர்த்தியம்.

அழகிய சிறு பாடலில் ஒரு பெரிய கணிதப் புதிரின் விளக்கம்.

 

சுலபமாக நினைவில் கொள்ளவே பாடல் வடிவில் புதிரும் விளக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

 

தமிழில் இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. இது எவ்வளவு பழமையானது என்பதும் தெரியவில்லை.

இந்தப் புலவரைப் பாராட்டுவோம்; அத்துடன் இதைத் தமிழுக்கு மீட்டுத் தந்து விளக்கமும் அளித்த முனைவர் சத்தியபாமாவை மனமுவந்து பாராட்டுவோம்!

இந்தப் பாடல்க்ள் பற்றிய கட்டுரையின் தலைப்பு :

பழந்தமிழ்ப் பாடல்களில் மாயச் சதுரங்கள்.

நூலின் பெயர்:  வளரும் தமிழ் (பல கட்டுரைகள் அடங்கியுள்ள இந்த நூலின் பக்கங்கள் 279. விலை ரூ60; வெளியான ஆண்டு 2003. அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூ வெளியிட்டுள்ள நூல் இது)

 

தமிழ்க் கழகத்தின் அரிய பணி! சீரிய பணி! வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில் மூன்றாவது வகைப் பாடலைப் பார்ப்போம்.

****

Leave a comment

2 Comments

 1. R. LAKSHMANAN

   /  August 27, 2017

  நமஸ்காரம்,
  இதையே நியுயார்க்கில் உள்ள museum of mathsல், sixth sense என்கிற தலைப்பில் உள்ளது

  Lakshmanan Rajagopalan

  >

 2. dear sir
  i am unable to understand what u have written. do u mean to say these tamil palm leaves are available at New York Museum of maths?
  can u pl throw more light on sixth sense.
  Sixth Sense is a book written by Lurie Nadel and Judy Haims and Robert Stempson.273 pages published in 1990. This is about intution.
  So what does sixth sense means with Magic Square. Pl write in detail.
  Thanks again for the new information
  s nagarajan

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: