பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்! (Post No.4175)

Written by S.NAGARAJAN

 

Date: 31 August 2017

 

Time uploaded in London-11-43 am

 

Post No. 4175

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

by ச.நாகராஜன்

 

 

அனுபவம் பேசுகிறது

பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்!

 

ச.நாகராஜன்

 

லெப்டினண்ட் கர்னல் சிஷிர் கோகலே ராணுவத்தின் பாதுகாப்புத் துறையில் பல்லாண்டு பணியாற்றிய மூத்த டாக்டர். விஞ்ஞான மனப்பான்மை கொண்ட அவர் ஆதிவாசிகளின் “தாழ்ந்த” நிலைமையைக் கொண்டு வருத்தம் அடைந்தார்.

அவர்களை எப்படியேனும் “முன்னேற்ற” வேண்டும் என்று கங்கணம் பூண்ட அவர் தனது “நல்ல காரியத்தை” அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தார்.

 

நடந்தது என்ன?

 

அவரே தனது அனுபவத்தை ஒரு கட்டுரையில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

 

அந்தமானில் வாழ்ந்து வந்த பூர்வ குடிகளின் குடிசைகள் மிக மோசமாக இருந்தன.அவை மரத்தால் ஆனவை. ஓலைகள் வேயப்பட்டவை. திடீர் திடீர் என்று பெய்யும் கனமழையாலும் வெயிலாலும் பழங்கால முறையிலான கற்களை அடுப்பாக வைத்து விறகை வைத்து சமைக்கும் முறையினாலும் குடிசைகள் பார்க்கச் சகிக்க முடியாதவையாக் இருந்தன.

அதனால் அங்கு வாழ்பவரின் கண்கள் சிவந்திருந்தன; சுவாசக் கோளாறுகள் வேறு இருந்தன.

 

இதை எப்படிப் போக்குவது?

 

தீவிர சிந்தனைக்குப் பிறகு  புகையற்ற ஸ்டவ்களை அங்கு சில குடிசைகளில் நிரமாணித்தார் கோகலே. அவர்கள் இருமுவது குறைந்தது. சமைக்கும் போது புகையினால் கண்களிலிருந்து பெருகும் நீர் குறைந்தது. பார்க்க சந்தோஷமான காட்சி. கோகலே மகிழ்ந்தார்.

 

இதைப் பார்த்த பூர்வ குடியினரில் ஏனையோரும் இந்தப் புதிய முறையை விரும்பி ஏற்றுக் கொண்டனர்.

 

ஒரு வருடம் கழிந்தது.

 

தாங்கள் நிறுவி ‘புது வழி’ காட்டியதால் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு மிகிழ அங்கு சென்றார் கோகலே.

 

சந்தோஷமான முகங்களைக் காணப் போகிறோம் என்று சென்ற அவரது குழுவினருக்கு ஒரு திகைப்பூட்டுக் காட்சி காத்திருந்தது.

அங்கு கிராமத்தையே காணோம்.

 

திகைப்படைந்த அவர்கள் பூர்வ குடியினரைத் தேடி காட்டின் உட்பகுதிக்குச் சென்றனர்.

அங்கே புதிதாக அமைக்கப்பட்ட குடிசைகளில் அவர்கள் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் கோபத்துடன் கோகலே குழுவினரைச் சூழ்ந்து கொண்டனர்.

 

 

கோபமான குரலில், “ நீங்கள் எங்களுக்குப் பெரும் தீங்கு இழைத்து விட்டீர்கள். எங்கள் முன்னோர் எங்களுக்கு வலுவான வீடுகளை அமைத்துக் கொடுத்திருந்தனர். தலைமுறை தலைமுறையாக் அதில் வாழ்ந்து வந்தோம். அவற்றை ஒரே ஆண்டில் அழிக்க வகை செய்து விட்டீர்களே! உடனே இங்கிருந்து ஓடிப் போய் விடுங்கள்” என்று அவர்கள் கத்தினர்.

அனைவரும் திகைத்தனர்.

திகைப்புடன் திரும்பினாலும் அவர்களிடம் இருந்த விஞ்ஞான மனப்பான்மை அவர்களை பழைய குடிசைகளை நோக்கிப் போக வைத்தது.

 

அந்தக் குடிசைகளில் இருந்த மரங்கள் கறையானால் அரிக்கப்பட்டு உளுத்துப் போயிருந்தன. கூரை விட்டங்கள் வளைந்திருந்தன.பலவித பூச்சிகள் கட்டைகளையும் குடிசைப் பகுதிகளையும் விதம் விதமாக் ஆக்கிரமித்திருந்தன.

வாழவே முடியாத ஒரு கோரம்!

 

கொசுக்களும் பூச்சிகளும் குழுவினரைச் சூழ்ந்து கடிக்க உள்ளே அவர்கள் பார்த்த போது அவர்கள் தந்த புகையில்லா ஸ்டவ் மட்டும் அலங்காரமாக அப்படியே இருந்தது!

திகைப்பும் வியப்பும் ஆட்கொள்ள அவர்கள் தங்கள் கூடாரத்திற்குத் திரும்பினர்.

 

அப்போது வழியிலே அவர்களைப் பார்த்த பழங்குடியினரில் வயதான ஒருவர்,’என்ன கவலையுடன் இருக்கிறீர்களே! என்ன விஷயம்?” என்று கனிவாகக் கேட்டார்.

நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்ல அவர் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டார்.

 

 

“இன்று களைப்புடன் இருக்கிறீர்கள். மன உளைச்சல் வேறு.

ஆகவே நாளை உங்களுடன் நானும் வருகிறேன். அவர்களைப் பார்ப்போம்” என்றார் அவர்.

 

கோகலே குழுவினரைப் போல ஏராளமான “குழுவினரை”ப் பார்த்து விட்ட அனுபவம் அவர் முகத்தில் தெரிந்தது.

மறுநாள் அவரும் கூட வந்தார்.

பழைய குடிசைகளில் சிதிலமடைந்து கிடந்த கட்டைகள், சில பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றை ஆய்வுக்காக சேர்த்தது விஞ்ஞானக் குழு.

 

“அவர்களுக்கு உதவவே முன் வந்தோம். அவர்களோ எங்களைத் தீய ஆவிகளைக் கொண்டு வந்து விட்டு விட்டோம் என்கிறார்கள். நீங்களும் ஒரு பழங்குடியினர் தானே. நாங்கள் தீய ஆவிகளையா இங்கு விட்டோம், சொல்லுங்கள்” என்று கேட்டார் கோகலே.

“இல்லை, நீங்கள் தீய ஆவிகளை இங்கு விடவில்லை” என்றார் அந்தப் பெரியவர்.

 

 

அவர் சொற்கள் சற்று ஆறுதல் அளித்தன.

“ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கிருந்த நல்ல ஆவிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று விட்டீர்கள்’ என்று தொடர்ந்து கூறினார் அவர்.

 

 

இதைக் கேட்ட குழுவினர் திகைத்தனர்.

 

அவர் தொடர்ந்தார்: “ தீ மூட்டி சமைப்பது புனிதமானது. அது நல்ல ஆவிகளையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. புகையும் சாம்பலும் குடிசை நீடித்திருக்க நமது உடலுக்கு உணவு போல அவசியமானது. புகையும் வெப்பமும் பூச்சிகள், கரையான் போன்ற தீய ஆவிகளை ஒண்ட விடாது. அந்த புகை என்ற நல்ல ஆவியை விரட்டி விட்டு கரையான் என்ற தீய ஆவிகளைத் தந்ததால் தான் அவர்கள் உங்கள் மீது கோபப் படுகிறார்கள்.இந்தக் குடிசைகளுக்குப் விறகு வைத்து கல்லினால் ஆன அடுப்பில் சமைப்பதே சிறந்த பாதுகாப்பு!”

 

 

படிப்பறிவே இல்லாத சாமானிய பூர்வீக பழங்குடிப் பெரியவரின் வார்த்தைகள் அவர்களை பிரமிக்க வைத்தன.

சிறிய வார்த்தைகள் மூலம் அரிய உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

 

அந்தக் கணம் முதல் படிப்பறிவில்லாதவன், பழங்குடி என்றெல்லாம் சொல்லி அவர்களை கேலி செய்யக் கூடாது அவர்களின் அறிவுக்கும் அனுபவத்திற்கும் முன்னால் விஞ்ஞான மனப்பான்மை கூட பல சமயம் தோற்று விடும் என்பதை கோகலே உணர்ந்து கொண்டார்.

 

 

இந்த அனுபவத்தை ஒரு கட்டுரை வாயிலாக அவர் தெரிவித்து “விஞ்ஞானம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் தானா கற்பிக்கப்படுகிறது? அறியப்படுகிறது?” என்ற கேள்வியையும் கட்டுரையின் முடிவில் எழுப்புகிறார்!

உண்மை தான்!

 

அறிய வேண்டிய நல்ல விஷயங்கள் எல்லா இடங்களிலுமே இருக்கின்றன.

 

பூர்வ குடியினரிடமும் கூட!

****

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: