இரஸவாதக்கலை நிபுணர்கள்? – 1 (Post No.4204)

Written  by S.NAGARAJAN

 

Date: 12 September 2017

 

Time uploaded in London-6-36 am

 

Post No. 4204

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 8-9-17 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

இரஸவாதத்தால் தங்கமாக்கியோர்!

 

இரஸவாதக்கலை நிபுணர்கள்? – 1

 ச.நாகராஜன்

 

 

“புலமைவாதம் என்பது என்ன? நுட்பமாக வாதிடுவது தான். இறையியல் என்பது என்ன? தெளிவற்ற சொல்நடை தான்! ஜோதிடம் என்பதோ சிக்கலான பரந்த ஒரு சாஸ்திரம். இவை எல்லாம் இரஸவாதத்திற்கு முன்னர் சிறுபிள்ளைத்தனமான குழந்தை விளையாட்டுக்களே! – ஆல்பர்ட் பாய்ஸான் (இரஸவாதக்கலை நிபுணர்)

                              

           இரஸவாதம் என்று கூறியவுடனேயே நமக்கு நினைவுக்கு வருவது பா சித்தர்கள் மற்றும் யோகிகளே!

 

 

   சமீப காலத்தில் நன்கு வரலாற்று ஆவணங்களுடன் கூடிய மாபெரும் அவதார சித்தர் ராமலிங்க சுவாமிகள் எனலாம். வள்ளலார் என்று நாடு போற்றும் அவரை உரிய விதத்தில் தமிழர்கள் உலகளாவிய விதத்தில் அறியச் செய்து மரியாதை செய்யத் தவறி விட்டார்கள் என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு விஷயம்.

 

அவதாரம் என்றால் மேலிருந்து கீழிறங்கல் என்று பொருள். விண்ணிலிருந்து அபூர்வமாக வந்துதித்த ராமலிங்க சுவாமிகள், “கடைவிரித்தோம்; கொள்வாரில்லை என்ற ஏக்கத்துடன் ‘உடலுடன் மறைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி ‘உடலுடன் மறைந்தவர் சமீப கால வரலாற்றில் இவர் ஒருவரே!

   சுவாமிகளின் வாழ்க்கையில் தண்ணீரால் விளக்கு எரிந்தது உள்ளிட்ட ஏராளமான அற்புதங்கள் நடந்துள்ளன. அவரது அணுக்கத் தொண்டரான தொழுவூர் வேலாயுத முதலியார் அவரது வரலாற்றை மிகவும் அழகுற எழுதியுள்ளார். அவர் வள்ளலாரை  ஒரு பெரிய இரஸவாதி (He is a great Alchemist) என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

பொன் செயல் வகையை இறைவனே தனக்கு உணர்த்தியதாக சுவாமிகளே கீழ்க்கண்ட தனது பாடலில் கூறியுள்ளார் இப்படி:

 

 

“ என்செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி

    என்னை வாழ்விக்கின்ற பதியைப்

பொன் செயல் வகையை உணர்த்தி என் உள்ளத்தே

   பொருந்திய மருந்தையென் பொருளை

வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க

   வைத்த சன்மார்க்க சற்குருவைக்

கொள்செயல் ஒழித்த சத்திய ஞானக்

    கோயிலில் கண்டு கொண்டேனே

“பொன் செயல் வகையை உணர்த்திதனக்கு அருள் செய்தது இறைவனே என்று அவர் குறிப்பிட்டிருப்பது அவரது ரஸவாதக் கலை நிபுணத்வத்தை ஐயமின்றி உணர வைக்கிறது.

   அத்துடன் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த கடிதத்தில் பொன் உரைக்கும் உரைகல்லும் வெள்ளி உரைக்கின்ற உரைகல்லும் வாங்கி அனுப்பும்படி கேட்டிருக்கிறார். அவை வந்து சேர்ந்ததை இன்னொரு கடிதத்தில் அடிகளார் தெரிவிக்கிறார்.

 

 

இரஸவாத வித்தையை வள்ளலார் செய்து காண்பிக்கவே அதைத் தாமும் பெற பலரும் அவரை அணுகினர். அவர்களிடமெல்லாம், “இச்சையற்றவனுக்கே இதைச் செய்ய இயலும். ஆகவே இதில் இறங்க முயற்சிக்க வேண்டாம் என்று அவர் அருளுரை பகர்ந்தார்.

 

தூய மனதுடன் ஆசையற்றவர்களுக்கே இரஸவாத வித்தை கைகூடும் என்பது பெரியோர் வாக்கு.

(ஊரன் அடிகள் எழுதிய இராமலிங்க அடிகள் வரலாறு 450 – 452 ஆம் பக்கங்களில் இந்தக் குறிப்பைக் காணலாம்.)

 

    இன்னும் பழைய வரலாற்றை உற்று நோக்கினால் ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடி பொன்னாலான நெல்லிக்கனிகளை ஒரு ஏழைக்கு அளித்ததையும், வித்யாரண்யர் இறைவி அருளால் தங்கம் பெற்று விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவ உதவியதையும் பார்க்கிறோம்.

 

 

    ஏராளமான சித்தர்கள் தாமிரத்தை தங்கமாக்கிய கதைகள் தமிழகத்தில் நிறைய உண்டு.

இதே போல மேலை நாட்டிலும் இரஸவாத நிபுணர்களைப் பற்றிய பல வரலாறுகள் உள்ளன.

ஜன் பாப்டிஸ்ட் வான் ஹெல்மாண்ட (Jan Baptista Van Helmont – பிறப்பு 12-1-1580 மறைவு 31-12—1644) தெற்கு நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் மருத்துவர். இரசாயன வல்லுநரான அவர் கார்பன் டை ஆக்ஸைடைக் கண்டுபிடித்தார். ஜீரணம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு பல உண்மைகளைக் கண்டறிந்தார்.

 

 

தான் செய்த மருத்துவத்திற்குப் பணம் வாங்க மறுத்த அபூர்வ மனிதர் அவர். தாவரக் கலையில் அசாத்திய நிபுணர்.

மனித உடலையும் மனிதன் வாழும் உலகையும் நன்கு அறிவதற்கான ஆரம்பம் இரஸவாதமே என்று அவர் திடமாக நம்பினார்.

 

ஆகவே அதை ஆராய ஆரம்பித்தார். எல்லா மூலகங்களுக்கும் ஆதி மூலம் ஒன்று உண்டு என்று அவர் நினைத்தார். அவர் இரஸாவாதக் கலையில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட ஒரு இரஸவாதக்கலை நிபுணர் அப்படி தங்கம் ஆக்கியதைத் தான் நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார். தங்கமாக ஆக்கும் மாயப் பொடி காவிக் கலரில் இருப்பதாக அவர் கூறினார். பாதரஸத்தை இந்தப் பொடியின் மூலமாக 200 கிராம் தங்கமாக ஆக்கியதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தகுந்தது!

 

 

இன்னொரு குறிப்பிடத்தகுந்த ரஸவாதி சீனாவைச் சேர்ந்தவர்.

 ஜீ ஹாங் (Ge Hong) என்ற பெயரைக் கொண்ட அவர் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ரஸவாதி.

எல்லோரும் இறவாமல் அமரத்தன்மை எய்தலாம் என்பது அவரது முக்கிய நம்பிக்கை. எல்லாமே ஒன்றாக “ஏகம் என்ற நிலையில் இருப்பதாக அவர் கருதி அந்த “ஏக நிலையை அடைய பெரும் உள்மன சாந்தியையும் தெளிவையும் அடைய வேண்டும் என்றார் அவர்.

 

 

இரஸவாதத்தால் மூலிகைகள் மற்றும் கூட்டுபொருள்களால் அந்த ஆற்றலைக் கூட்ட முடியும் என்று கூறினார்.

 இரஸவாதம் மூலமாக உருவாக்கப்படும் தங்கம் அழியாது, எரியாது, மறையாது, “இறக்காது என்பது அவர் கொள்கை.

இந்த அனைதது நலன்களையும் அந்தத் தங்கம் உடலுக்குத் தந்து விடும் என்பது அவர் கொள்கை. கந்தகத்தையும் வெடியுப்பையும் பற்றி முதன் முதலில் அவரே எழுதியுள்ளார். இதுவே பின்னால் கன் பவுடர் செய்ய உதவியது என்பது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம்.

 

 

நீடித்த ஆயுளைத் தரும் இளமைப் பொடியைக் கண்டுபிடிக்கப் போனவர் அதற்கு எதிராக யுத்தத்திற்குப் பயன்படும் கன் பவுடரைக் கண்டுபிடித்தது ஒரு விசித்திரமே!

இன்னும் சிலரை அடுத்துப் பார்ப்போம்.

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

    பன்னாட்டு விண்வெளிநிலையத்தில் ஜப்பானிலிருந்து சென்ற முதல் கமாண்டரான கோயிச்சி வகாடாவுடன் (Koichi Wakata) துணையாகச் சென்றது யார் தெரியுமா?

ஜப்பானின் ரொபாட் அஸ்ட்ரானட்டான கிரோபோ (Kirobo robot) என்னும் ரொபாட் தான்! டோக்கியோ பல்கலைக்கழகம் வடிவமைத்த இந்த ரொபாட் விண்வெளிநிலையத்திற்கு 2013இல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வந்து சேர்ந்தது. கிரோபோ என்றால் நம்பிக்கை என்று பொருள்.

 

 

கிரோபோவின் உயரம் 13 அங்குலம் தான். 7.1 அங்குலம் அதன் அகலம். 5.9 அங்குலம் அதன் கனம். அதன் எடையோ ஒரு கிலோகிராம் தான். அது ஜப்பானிய மொழியில் பேச வல்லது.

அது மற்றவர் பேசுவதைப் புரிந்து கொள்ளும். முகத்தைப் பார்த்து ஆளையும் புரிந்து கொள்ளும்; வீடியோ ரிகார்டிங் செய்யும்.

 

 

விண்வெளியில் ஜீரோ கிராவிடி நிலை இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்தாற் போல கிரோபோ வடிவமைக்கப்பட்டது.

 7-11-2013 முதல் 13-5-2014 முடிய விண்வெளி நிலையத்தில் இருந்த வகாடாவிற்கு அது நன்கு துணை செய்தது.முதன் முதலாக வகாடாவுடன் ரொபாட்டான கிரோபோ ஜப்பானிய மொழியில் உரையாடியது.

 

 

மனிதனும் ரொபாட்டும் எப்படி ஒருவருக்கொருவர் துணையாக அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் என்பதை ஆராய்வதற்காக அது விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

 

 

18 மாத காலம் விண்வெளியில் இருந்த கிரோபோ இரண்டு கின்னஸ் சாதனைகளைச் செய்தது. ஒன்று, அது தான் விண்வெளியில் மனிதனுக்குத் துணையாகச் சென்ற முதல் ரொபாட்.

 

இன்னொன்று அதுவே அதிக உயரத்தில் பேசிய ரொபாட்!

விண்வெளிவீரரான வகாடாவிற்கு கிரோபோவினால் ஏக பெருமை. கிரோபோ ரொபாட்டை வைத்து உலகில் ஏராளமான ஜோக்குகள் உண்டு. அனைவரும் படித்து மகிழலாம்.

****

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: