Written by S.NAGARAJAN
Date: 15 September 2017
Time uploaded in London- 5-25 am
Post No. 4213
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
15-9-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 30வது) கட்டுரை
இரஸவாதத்தால் தங்கமாக்கியோர்!
இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 2
by ச.நாகராஜன்
“ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நகர்வதற்கு முன்னர் காத்திரு; அடி எடுத்து வைப்பதற்கு முன்னர் விழியைப் பதி; அனைத்தையும் உற்று கவனி.” – நிக்கோலஸ் ஃப்ளாமல்
இரஸவாதத்தில் பித்துப் பிடித்து அலைவோர் ஏராளம். இவர்களை நாகத்திலிருந்து வெளீப்படுவதாகச் சொல்லப்படும் நாகமணிக் கல்லைத் தேடி அலைவோருடன் ஒப்பிடலாம்.
தங்கள் கையில் இரஸவாதப் பொடி இருப்பதாகவும் அதனால் தங்கத்தை “உருவாக்க முடியும்” என்றும் கூறும் இவர்கள் தங்கப் பொடியையும் கூடக் காண்பிப்பார்கள்.
ஆகவே தங்கம் பற்றிய சில இரகசியங்களை அனைவரும் அறிந்து கொள்வது ந்ல்லது.
உண்மையான தங்கத்தையும் போலித் தங்கத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?
இரஸவாத நிபுணர்களும் பொற்கொல்லர்களும் தங்கத்தின் மீதான ஆசையுடன் ‘தங்கமான’ துறையில் ஈடுபடுபவர்களும் தங்கத்தின் தூய்மையைப் பார்ப்பதற்கு என்ன வழியைச் சொல்கின்றனர்? அதைச் சூடாக்கி, உருக்கிப் பார்ப்பதே சிறந்த வழி என்று அனைவரும் ஏகோபித்துக் கூறுகின்றனர்.
இப்படி உருக்குவதால் தூய்மையற்ற இதர உலோகங்கள் மற்றும் கசடுகள் அகன்று விடும்.
இன்னொரு பழைய வழி தங்கத்தை உரைகல்லில் உரசிப் பார்ப்பது. தங்கத்தையும் அத்துடன் ஒப்பிட வேண்டிய இன்னொரு உலோகத்தையும் உரைகல்லில் உரசிப் பார்த்தால் உடனே நல்ல வித்தியாசம் தெரியும். இதனால் போலிகளைத் தூக்கி எறிந்து விடலாம்.
இன்னொரு வழி – அடர்த்தியை வைத்துக் கண்டு பிடிப்பது. தங்கத்தையும் , தங்கத்தைப் போல உள்ள இன்னொரு உலோகத்தையும் ஒரே எடையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பீக்கரில் நீரை விட்டு அதில் தங்கத்தைப் போட வேண்டும். தங்கம் உடனடியாக நன்கு உள்ளே அமுங்கி மூழ்கி விடும். அப்போது நீரின் மட்டத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் தங்கத்தை எடுத்து விட்டு ஒப்பிட வேண்டிய பொருளை அதே பீக்கரில் போட்டுப் பார்த்து நீர் மட்டத்தைப் பார்க்க வேண்டும். ஒப்பிடும் பொருள் தங்கமாக இருந்தால் அதே மட்டத்தை நீரில் காட்டும்; இல்லையேல் நீர் மட்டம் உயரும்.
இந்தச் சுலபமான வழியும் போலிகளைக் காட்ட உதவும்.
தங்கத்தை உருவாக்கும் இரஸவாதிகள் அதை இப்படிப்பட்ட அறிவியல் வழிகளின் மூலம் அது தங்கம் இல்லை என்று சொல்லும் போது நம்ப மறுக்கின்றனர்; அல்லது மிகவும் மன வருத்தம் கொள்கின்றனர்.
தங்கம் போல இருக்கும் ஒரு பளபளப்பான பொருள் நார்டிக் கோல்ட் ((Nordic Gold) இதில் 89% தாமிரம், 5% அலுமினியம், 5% துத்தநாகம், 1% டின்
இதை உருவாக்க முயலும் போது அலுமினியத்தை உருவாக்குவது மிகவும் கஷ்டம்.
இன்னொரு தங்கம் போல இருக்கும் பொருள் கோல்ட் டாம்பாக் (Gold Tombac or Red arsenic Tombac)
இதில் 85% தாமிரமும் துத்தநாகமும் உள்ளது ரெட் ஆர்செனிக் டாம்பாக்கில் 98% தாமிரமும் 2% ஆர்செனிக்கும் உள்ளது.
லெட் ஐயோடின் (Lead Iodine) பார்க்கத் தங்கம் போலவே இருக்கும்.
இரஸவாதக்கலையில் ஈடுபட்டவர்கள் பல விதமாக தங்கம் இருப்பதாக நம்புகின்றனர்.
கெபர் (Geber) தங்கமானது நுட்பமான பாதரஸத்தால் ஆனது என்றும் கந்தகம் போன்றவை அதற்கு தங்க வண்ணத்தை அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
சென் யின் என்னும் சீன இரஸவாதி தனிம மாற்றத்தால் (Tranmutation) தங்கத்தை விட உயர்தரமான சில மூலகக் கூறுகள் அதில் கலந்திருக்கும் என்று கூறுகிறார்.
சில இரஸவாதிகளோ திரவ வடிவத்தில் தங்க திரவத்தை குடித்தே இருக்கின்றனர்.
பெரிய இரஸவாதிகள் யாரும் தங்களைச் சாதாரணமான பொற்கொல்லர்கள் சோதனை செய்வதை விரும்பியதில்லை. படாடோபமான அவர்களது பகட்டுக்கு முன் மற்றவர்கள் எம்மாத்திரம்! அப்படி ஒருவர் சோதனை செய்வது தனக்கு இழைக்கும் அவமதிப்பு என்றும் தெய்வ குற்றம் என்றும் கருதினர்.
பிரான்ஸை சேர்ந்த பிரபல இரஸவாதியான நிக்கோலஸ் ஃப்ளாமெல் (Nicholas Flamel) 1330ஆம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர்.
புத்தக விற்பனையாளரான நிக்கோலஸ் இரண்டு கடைகளுக்குச் சொந்தக்காரர். சாதாரண எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர் ஒரு நாள் ஒரு கனமான பழைய புத்தகத்தை எடுக்க வேண்டி இருந்தது. அதைத் திறந்து பார்த்தவர் அசந்து போனார். அதில் பல எழுத்துக்கள் மாறி மாறி இருந்தன. பல மொழிகளில் அந்தப் புத்தகம் எழுதப் பட்டிருந்தது.
நிக்கோலஸிற்கு பல மொழிகள் அத்துபடி. நிக்கோலஸின் மனைவியான பெரெனெல்லி அவரை விட பத்து வயது மூத்தவர். அவரும் இந்தப் புத்தகத்தைப் பார்த்து விட்டு இந்த மர்மமான புத்தகத்தில் உள்ள சங்கேத சொற்களில் இருந்த புதிரை அவிழ்க்க ஐரோப்பா முழுவதும் சுற்றினார். இறுதியில் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஆப்ரஹாம் (Abraham the mage) என்று அவர்கள் கண்டு பிடித்தனர்.
ஆப்ரஹாம் உடல் முழுவதும் தங்க மயமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவர் எழுதிய கோடக்ஸ் (Codex) என்ற புத்தகம் நிக்கோலஸை இரஸவாதத்தில் புகுத்தியது.
அவருக்கு இறந்தவருடன் தொடர்பு கொள்வதோ அல்லது மந்திர தந்திரங்களோ தெரியாது. ஆனால் அவரது மனைவியோ இதில் வல்லுநர்.
இருவரும் இணைந்து கடைசியில் ஒரு வழியாக கோடக்ஸ் புத்தக்த்தில் இருந்த மர்மத்தைக் கண்டு பிடித்துவிட்டனர். நிக்கோலஸின் மனைவி “என்றும் இளமையுடன் இருப்பதற்கான ஒரு மருந்தை” கண்டுபிடித்தார்,
ஆனால் அந்த விசித்திரமான இளமை மருந்தைத் தொடர்ந்து அவர்கள் அருந்த வேண்டும். கோடக்ஸ் புத்தகம் கூறும் சரியான வழி முறைப்படி அருந்தாவிட்டால் ஒரு நாளில் ஒரு வருட வயது மூப்பு வந்து விடும்.
இதற்கிடையில் இங்கிலாந்தின் அரசிக்கு உயர் ஆலோசனை கூறும் ஜான் டீ என்பவரை அவர்கள் தங்கள் சிஷ்யனாக ஏற்றனர். ஆனால் விதி வசமாக அவரே இவர்களைக் கொல்ல முயன்றார். ஆகவே நிக்கோலஸும் அவரது மனைவியும் தாங்கள் இறந்து விட்டதாக தங்கள் முடிவை உலகிற்கு அறிவிக்க போலியாக நடிக்க வேண்டியதாயிற்று,
நிகோலஸின் அபார சக்தியைப் பற்றி ஏராளமான கதைகளும் சம்பவங்களும் உண்டு.
அவரைச் சுற்றி ஒளி வட்டம் உண்டு என்றும் அவர் பல மிருகங்களின் கண் கொண்டு பார்க்க வல்லவர் என்றும், அவர் எந்த வித உலோகத்தின் அணுவையும் மாற்ற வல்லவர் என்றும் இன்ன பிற சக்திகள் அவருக்கு உண்டு என்றும் ஏராளமான செய்திகள் உலவி வந்தன.
இரஸவாதத்தில் குறிப்பிடத் தகுந்த ஒருவராக கூறப்படுபவர் நிக்கோலஸ். இரஸவாத மர்மம் போலவே அவர் வாழ்வும் கூட ஒரு மர்மம் தான்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
,,
பிரபல கணித மேதையான கோடல் (Godel) குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தார். அதனுடைய இறுதி கட்ட விசாரணை நீதிபதியின் முன்னர் வந்தது. அதே நீதிபதி தான் ஐன்ஸ்டீனின் குடியுரிமை பற்றி விசாரித்து அளித்தவர். ஆகவே கோடலுடன் ஐன்ஸ்டீனும் இன்னொரு நண்பரான ஆஸ்கர் மார்கென்ஸ்டர்னும் (Oscar Morgenstern) கூடச் சென்றனர். ஐன்ஸ்டீனைப் பார்த்த நீதிபதிக்குத் தலைகால் புரியவில்லை.
அவருடன் நெடுநேரம் தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நாஜி ஜெர்மனியில் என்னவெல்லாம் நடந்தது உள்ளிட்ட அனைத்தையும் கூறி முடித்த நீதிபதி கடையில் கோடல் பக்கம் திரும்பினார்: “ நமது அரசியல் சாஸனத்தை நீங்கள் நன்கு படித்திருப்பீர்களே! அதெல்லாம் இங்கு நடைபெற வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருப்பீர்களே” என்றார்.
உடனே கோடல், “உண்மையைச் சொல்லப் போனால்..” என்று ஆரம்பித்தார்.
அவ்வளவு தான், கூட இருந்த நண்பர் அவர் தோளைப் பலமாக இடித்தார். உடனே கோடல் புரிந்து கொண்டு தன் வாயை மூடிக் கொண்டார்.
பிறகென்ன,அவருக்கு நீதிபதி குடியுரிமையை வழங்கினார்.
நல்ல வேளையாக உண்மையைச் சொல்ல ஆரம்பிக்கவில்லை கோடல்.(அமெரிக்க சாஸனத்தைத் தா படித்ததில்லை என்று சொன்னாலும் ஆபத்து, நாஜி ஜெர்மனியில் அவர் நடந்ததாகச் சொல்லியதை எதிர்த்துச் சொன்னாலும் ஆபத்து தான்!)
சில சமயம் சில இடங்களில் உண்மையைச் சொல்லக் கூடாது இல்லையா?
***