Written by London Swaminathan
Date: 19 September 2017
Time uploaded in London- 12-34
Post No. 4226
Pictures are taken from various sources; thanks.
அஸ்வினி தேவர்கள் பற்றி ரிக் வேதத்தில் அற்புதமான கவிதைகள் உள்ளன. வெளிநாட்டோருக்கு இவை பெரும் வியப்பை அளிக்கின்றன. எல்லா வெளிநாட்டு “அறிஞர்களும்” இவர்கள் மர்மமானவர்கள் என்று சித்தரித்துள்ளனர். இவர்கள் இரட்டையர்; உலகில் எல்லா கலாசாரங்களிலும் இரட்டையர் உண்டு. ஆயினும் யாரையும் அஸ்வினி தேவர்களுடன் ஒப்பிட முடியவில்லை; ஆரியர்கள் வெளியேயிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்று பேசும் அறிவிலிகளுக்கு ரிக் வேதம் பெரிய புதிர் போடுகிறது; இன்றுவரை எவரும் புதிருக்கு விடை காண இயலவில்லை. இத்ஹாச, புராணங்களில் பல கதைகள் இருந்தாலும் ரிக் வேதம் கூறும் அஸ்வினி தேவர்கள் வியப்பான சுவையான செய்திகளை அளிக்கிறார்கள்; படித்து மகிழுங்கள்:-
நோயாளிகளைக் குணப்படுத்துவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!
ஆபத்தில் மாட்டிக்கொண்டவர்களை விரைந்து சென்று காப்பாற்றுவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!
தொல்லையில் சிக்கியவர்களின் கஷ்டங்களை அகற்றுவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!
அஸ்வினி தேவர்களில் ஒருவர் பெயர் நாசத்ய (அசத்தியம் இல்லாதவர்); மற்றொருவர் பெயர் தஸ்ரா (ஒளி வீசும்)
அஸ்வினி தேவர்கள் அவர்களுடைய தேரில் சூரியனையும் சந்திரனையும் ஏற்றிச் செல்கின்றனராம்; தேனையும் கொண்டு செல்கின்றனராம். அவர்களுடைய தேரை குதிரை, கழுதைகள், கழுகு அன்னங்கள் செலுத்துவதாகவும் கவிகள் பாடியுள்ளனர் அவர்கள் இருக்கும் இடம் மலை உச்சி, ஆகாயம், அந்தர வானம், தாவரங்கள், வீடுகள் என்று பலவிதமாகச் சொல்லபட்டுள்ளன. சங்கத் தமிழ் இலக்கியத்தில் அணங்குகள் பற்றிய குறிப்புகளை இவைகளுடன் ஒப்பிடலாம்!
இவர்கள் மருத்துவர்கள், சர்ஜன்கள், வேத கால டாக்டர்கள்! கடலில் மூழ்கியவர்களைக் காப்பாற்றினர்!
எரியும் வீட்டில் இருந்தோரை மீட்டனர்!
உடைந்த காலை ஒட்ட வைத்தனர்!
வேத காலத்தில் மருத்துவத் துறை எவ்வளவு முன்னேறி இருந்தது, கடல் பயணம் எவ்வளவு முன்னேற்றம் கண்டது என்பதை அஸ்வினி தேவர்கள் பற்றிய துதிகள் காட்டுகின்றன.
வேத கால நாகரீகம், அக்காலத்தில் இருந்த ஏனைய நாகரீங்களை விட மிக மிக முன்னேறி இருந்ததை அஸ்வினி தேவர்கள் காட்டுவர்!
இவர்களை கிரேக்க புராணத்தின் கஸ்டோர், பாலிட்யூக்ஸ் ஆகியோருடனும், ரோமன் க லாசாரத்தில் காஸ்டர் பொல்லக்ஸ் (ஜெமினி) ஆகியோருடனும் பால்டிக்கில் உள்ள தீவஸ் என்னும் தேவர்களுடனும் மேல்நாட்டினர் ஒப்பிடுவர். ஆனால் இவற்றில் எல்லாம் எல்லாம் முழுமையான ஒற்றுமை எதுவும் இராது; ஒரு அம்சம் மட்டுமே இருக்கும். ஆயினும் இவை எல்லாம் கி.மு800-க்குப் பிற்பட்டவை. ஆனால் அஸ்வினி தேவர்களை இவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டு முன்னவர்கள்!
துருக்கி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்படும் (கி.மு. 1380) கடவுளரில் அஸ்வினி தேவர்களும் இருக்கின்றனர்! மிட்டனி- ஹிட்டைட் உடன்படிக்கையில் மித்ர வருண இந்திரனுடன் இவர்களும் காணப்படுகின்றனர். ரிக் வேத துதி வரிசையில் இவர்கள் பெயர்கள் இருப்பதால் கி.மு 1400-க்கு முன்னரே ரிக்வேதம் சிரியா-துருக்கி பகுதிக்குச் சென்றுவிட்டது உறுதியாகிறது!
துக்ரா என்பவன் அவனது மகன் பூஜ்யுவை கப்பலில் அனுப்பினான்; இறக்கும் மனிதன் எப்படிச் செல்வத்தை பூமியில் விட்டுப் பிரிவானோ அப்படி மகனை இழந்தான். அவன் கடலில் தத்தளித்தபோது அஸ்வினி தேவர்கள்தான் அவர்களை மூன்று பகல் மூன்று இரவுக்குப் பின்னர் கரை சேர்த்தார்கள். நூறு சக்கரம், ஆறு குதிரைகள் பூட்டிய தேரில் வேகமாக அழைத்துவந்தார்கள். பிடித்துக்கொள்ள ஆதாரமே இல்லாத கொழு கொம்பே இல்லாத நடுக்கடலில் அஸ்வினி தேவர்கள் இதைச் செய்தனர். 100 சக்ரம் என்பது 100 துடுப்புள்ள பெரிய கப்பலை குறிக்கும் (1-16-4) ரிக் வேதத்தில், இன்னொரு இடத்திலுமிக்கதை வருகிறது.
இதன் மூலம் 100 துடுப்பு கொண்ட பெரிய கப்பல்கள் இருந்ததையும் கடல் மீட்புப் படை இருந்ததையும் அறிகிறோம்.(1-116-4)
“ஓ அஸ்வினி தேவர்களே! எனது இந்த துதி உங்களை கூர்மையாக்கட்டும்; ஒரு சாணைபிடிக்கும் கல் எப்படி கத்தியைக் கூர்மையாக்குமோ அப்படி கூர்மையாக்கட்டும் 3-39-2
அதாவது கூரான கத்தி எவ்வளவு பலன் தருமோ அப்படி நீயும் எனக்கருள்வாயாக.
(வேத கால சமுதாயம் வீரர்களைக் கொண்டது என்பதை இந்த உவமை விளக்குகிறது. இது போல அவ்வையார் பாடிய கூர்மையான வாள் பற்றிய கவிதை சங்க இலக்கியத்தில் உள்ளது)
வேத கால மக்கள் மிக மிக நாகரீக முன்னேற்றம் கண்டவர்கள்! இரும்பைக் காய்ச்சி உருக்கும் தொழில் உவமையாக வருகிறது. தங்கம் பற்றி நூற்றுக் கணக்கான இடங்களில், ஆயிரக்கணக்கான இடங்களில் என்றும் சொல்லலாம்— உவமைகள் வருகின்றன. இது அவர்கள் இடையே இருந்த செல்வச் செழிப்பைக் காட்டுகிறது.
கிணற்றில் கிடந்த ரேபா என்பவனைக் அஸ்வினி தேவர்கள் காப்பாற்றுகின்றனர். இது எப்படி இருந்ததென்றால் பானைக்குள் இருந்த தங்கத்தைக் கண்டுபிடித்தது போல இருந்ததாம் (1-117-12)
பானைக்குள் தங்கத்தை வைத்து புதைத்து வைப்பது இந்துக்களிடையே உள்ள வழக்கம். தமிழன் புதைத்துக் கெட்டான் என்ற பழமொழியையும் ஒப்பிடலாம். பாடலிபுரத்தில் கங்கை நதிக்குள் நந்த வம்ச அரசர்கள் தங்கப் புதையலை ம றைத்து வைத்த சங்க இலக்கியப் பாடலையும் ஒப்பிடலாம் (கங்கை நதி தங்கம் பற்றிய எனது கட்டுரையில் மேல் விவரம் காண்க)
வேத கால இந்துக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர் என்பதை அஸ்வினி தேவர்கள் பற்றிய கவிதைகள் காட்டுகின்றன.
“யாகத்திற்கு இரண்டு பசுமாடுகள் போல, இரண்டு மான்கள் போல, இரண்டு அன்னங்கள் போல விரைந்து வாருங்கள் (5-78-1)” என்று வேத கால ரிஷிகள் துதிக்கின்றனர். இந்த உவமைகள் அஸ்வினி தேவர்களின் அழகையும் விரைவையும் காட்டுகின்றன. அதிகமாக அவர்கள் பறவைகளுடன் உவமிக்கப்படுகின்றனர் (8-35-7)
ஹம்ச (அன்னம்), ஸ்யேன (கழுகு) ஆகியவற்றுடனும் இரட்டைச் இ றகுகளுடனும் உவமைகள் உள்ளன.
அஸ்வினி தேவர்களுக்குப் பல விளக்கங்கள் இருப்பதை யாஸ்கர் நிருக்த்தத்தில் குறிப்பீட்டுள்ளர்:
இரவும் பகலும்
வானமும் பூமியும்
சூரியனும் சந்திரனும்
பழங்கால அரசர்கள் (என்று வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுவதாகவும் யாஸ்கர் கூறுவார். அந்தக் காலத்திலேயே வரலாற்று அறிஞர்கள் இருந்தது யாஸ்கர் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. வேத கால மன்னர்கள் சகல கலா வல்லவர்கள்)
என்று அஸ்வினி தேவர்களுக்கு விளக்கங்கள்!
அஸ்வினௌ என்பதை குதிரை உடையோர் என்றும் மொழி பெயர்க்கலாம். அவர்கள் இருவரும் சகோதரர்களோ ,நண்பர்களோ
அவர்கள்தான் உலகில் முதல் முதலில் சமூக சேவை செய்த இரட்டையர். எல்லோருக்கும் உதவுவதே தொழில்!
அவர்கள் சோம பானத்தை மறுத்ததாகவும் குறிப்பு உள்ளது!
வேத கால மக்கள், கணக்கில் அசகாய சூரர்கள்! கணிதப் புலிகள்! யாப்பு இலக்கணத்தில் கூட எண் படி மீட்டர் அதிகரிக்கும் (காயத்திரி, உஷ்னிக், அனுஷ்டுப், பங்க்தி…….)
Image of Discouri
அஸ்வினுக்கு 2, பிருஹஸ்பதிக்கு 17!
அக்னிக்கு ஒரு அசை (சிலபிள்)
அஸ்வினிக்கு இரண்டு
விஷ்ணுக்கு மூன்று
சோமனுக்கு நான்கு
பூசனுக்கு ஐந்து
பிரஜாபதிக்கு 17
தத்யாங் என்ற முனிவர்தான் அஸ்வினி தேவர்களுக்கு தேனின் ரஹசியத்தைச் சொல்லிக் கொடுத்தனர். இது அதர்வ வேதத்தில் உள்ளது.
விவஸ்வான் சரண்யுவின் புதல்வர்கள் என்று பிற்கால நூல்கள் பகரும்.
அஸ்வின சாத்ர பரிசுக்கு நடந்த போட்டியில், கழுதைகளால் இழுத்துச் செல்லப்பட்ட அஸ்வினி தேவர்களின் தேரே வெற்றி பெற்றது. அவைகள் அதிகம் கஷ்டப்பட்டதால் கழுதைப் பால் அளவு குறைந்ததாகவும், அவைகள் மிகவும் மெதுவாக நடக்கத் துவங்கின என்றும் ஐதரேய பிராமணம் ஒரு கதை சொல்லும்.
அவர்கள் அழகானவர்கள்; இளமை மாறாத இளம் சிங்கங்கள்; பொன்னிறமானவர்கள்; தங்க ரதத் தில் பவனி வருபவர்கள் என்றெல்லாம் புகழப்படுகிறார்கள்.
அவர்கள் அதிகாலைப் பொழுதில் வெளிச்சத்தைக் கொணருவார்கள். உதயத்தை—உஷஸ்– வருவதை அறிவிப்பவர்கள். அவர்கள் குதிரையை விரட்ட சாட்டையைச் சொடுக்கினால் அதிலிருந்து தேன் சிந்தும். அபூர்வ சக்தி படைத்த சோமம் என்னும் கொடிகள் எங்கே வளருகின்றன என்ற ரஹசியத்தை கடவுளருக்குத் தெரிவிப்பதும் அஸ்வினி தேவர்களே!
சியவன மஹரிஷிக்கு இளமையைக் கொடுத்த வரலாறும் பிற்கால நூல்களில் இருக்கிறது.
OLD ARTICLES FROM MY BLOGS:
tamilandvedas.com/tag/அஸ்வினி…
நட்சத்திர அதிசயங்கள் -Part 3. அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை …
tamilandvedas.com/tag/அஸ்வினி
Posts about அஸ்வினி … இதன் அதி தேவதை அஸ்வினி தேவர்கள்! … //tamilandvedas.com/2012/06/29 …
–SUBHAM–