இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 3 (Post No.4233)

Written by S.NAGARAJAN

 

Date: 22 September 2017

 

Time uploaded in London- 6-27 am

 

Post No. 4233

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

22-9-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 31வது) கட்டுரை

 

 

இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 3

 ச.நாகராஜன்

 

 

“மின்னுவதெல்லாம் பொன் அல்ல – தமிழ்ப் பழமொழி

 

பண்டைய ரோமானிய நாகரிகம் தொடங்கி இன்றைய நாள் வரை இரஸவாதக் கலையில் நிபுணர்களாக விளங்கியோர் எண்ணிலடங்காத பேர்கள். ஆரம்ப காலத்தில் இந்தக் கலையை மாஜிக் என்றும் மாயாஜாலக் கலை என்றும் கூறி வந்தனர்.

இரசாயனத்துறை அறிவியல் ரீதியில் வளர ஆரம்பித்த போது இரஸவாதத்திற்குத் தனி ஒரு அங்கீகாரம் ஏற்பட்டது. விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தனர்.

 

இதன் பக்க விளைவுகளாக பல நல்ல கண்டுபிடிப்புகளும் அரங்கேறின.

 

நூற்றுக்கணக்கானோர் இந்தக் கலையில் புகழ் பெற்றிருந்தாலும் கூட குறிப்பிடத்தகுந்த இருவரை மட்டும் இங்கு பார்ப்போம்.

 

 

 

ஜோஹன் ஃப்ரெடெரிக் பாட்கர் (Johann Friderich Bottger)

 

                18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாட்கர் ஒரு மந்திரவாதி என்றும் சுத்தமான பிராடுப் பேர்வழி என்றும் தூற்றப்பட்டவர். அவருக்கு பத்தொன்பது வயது ஆகியிருக்கும் போதே அவரை போலந்து மன்னனான ஃப்ரெடெரிக் அகஸ்டல் தனது அரசவைக்கு உடனே வருமாறு ஆணையிட்டான்.  மூல உலோகங்களை உடனே தங்கமாக மாற்றித் தருமாறு அவன் பாட்கருக்கு ஆணையிட்டான். ஆனால் அப்போது நாட்டில் நடந்த கலவரத்தால் பாட்கர் நாட்டை விட்டே தப்பி ஓடலாமா என்று நினைத்தார். ஆனால் அப்படி தப்பி ஓடும் போது அவரைக் கைது செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். மீண்டும் உடனடியாக அனைத்துப் பொருள்களையும் தங்கமாக மாற்றித் தருமாறும் இல்லையேல் அவரது தலை துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

ஆனால் மன்னன் சற்று தாராள மனம் உடையவன் என்பதால் அவர் கேட்ட படி கால அவகாசம் தந்தான். இந்தக் கால அவகாசம் என்பது பல ஆண்டுகளுக்கு நீடித்தது.

 1709 ஆம் ஆண்டு வந்தது. தங்கத்தை அவர் உருவாக்கவில்லை என்றாலும்வெள்ளைத் தங்கத்தை (White Gold) உருவாக்கிக் காட்டினார்.

 

வெள்ளைத் தங்கம் என்பது சீனாவில் போர்செலெயின் Porcelain) எனப்படும் பீங்கான் ஆகும்.

 

     இதை எப்படித் தயாரிப்பது என்பதை சீனர்கள் மிக மிக இரகசியமாகப் பாதுகாத்து வந்தனர். ஆயிரத்தி முன்னூறுகளில் பீங்கான் ஐரோப்பாவை எட்டிப் பார்த்தது. அது அங்கு தங்கத்தை விட மிக அதிக விலை மதிப்புடையதாக கருதப்பட்டது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்தால் மட்டுமே அது கிடைக்கும் என்ற நிலை இருந்ததால் அது கிடைப்பதும் கூட அரிதானது. ஆகவே அதன் மதிப்பு இன்னும் உயர்ந்தது. இதன் காரணமாக அதை மக்கள் வெள்ளைத் தங்கம் என்று கூறலாயினர்

 

 

இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டுமென்று பல நூற்றாண்டுகளாகப் பலரும் ஐரோப்பாவில் முயற்சி செய்து வந்த நிலையில் தான் இதை பாட்கர் உருவாக்கிக் காட்டினார். அவருடன் விஞ்ஞானியான எஹ்ரென்ப்ரைடு வால்தெர் (Ehrenfried Walther Von Tschirnhaus) இணைந்து முதலில் சிவப்பான கனமான ஒரு பொருளை உருவாக்கிக் காட்டினார். பின்னர் சீனாவில் இருப்பது போலவே பீங்கானை உருவாக்கிக் காட்டவே மன்னன் மிகவும் மனம் மகிழ்ந்தான். தங்கத்திற்கு அடுத்தபடியான ஒரு பொருளை உருவாக்கியதால் பாட்கர்  உயிர் பிழைத்தார்.

 

 

ஹென்னிக் ப்ராண்ட் (Hennig Brand)

 

    ஜெர்மனியைச் சேர்ந்த ஹென்னிக் ப்ராண்ட் தங்கத்தைக் கண்டு பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் கண்டு பிடித்ததோ பாஸ்பரஸை. 1630 ஆண்டு பிறந்த ப்ராண்ட் எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்றுவது எப்படி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஜெர்மனி ராணுவத்தில் சிறிது காலம் பணி புரிந்த அவர் ஒரு பணக்காரப் பெண்மனியை மணந்தார். இரஸவாதக் கலையில் ஈடுபட்ட அவர் முதலில் கண்ணாடி தயாரிப்பதில் முனைப்புடன் இருந்தார்.

 

 

      முதல் மனைவி இறக்கவே, இன்னொரு பணக்காரப் பெண்மணியை மணந்து அவரது மகனை லாபரட்டரியில் தனக்கு உதவி புரிய அழைத்தார். அவரது ஒரே முக்கியக் கொள்கை நீர் தான் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதே. நீரில் பல அபூர்வமான மர்மமான குணாதிசயங்கள் அடங்கி இருப்பதாக அவர் கருதினார். ஆகவே அந்த நீரை மனிதன் அருந்தி அது மனித உடலில் சேரும் போது இன்னும் அதிக சக்தி வாய்ந்ததாக ஆகும் என்று அவர் நம்பினார்.

ஆகவே தனது ஆராய்ச்சியில் அவர் சுமார் 1500 காலன் (5600 லிட்டர்) சிறுநீரைச் சேகரித்தார்.

 

 

எப்படி இவ்வளவு பெரிய அளவில் அதைச் சேகரித்தார் என்பது இன்று வரை ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது!

பீரை அதிகமாகக் குடிக்கும் நபர்களாகப் பார்த்து அவர்களின் சிறு நீரை அவர் சேகரித்தார் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில் பீர் குடித்தவர்களின் சிறு நீர் சற்று பொன்னிறத்தில் இருக்கும் என்ற காரணமும் கூறப்படுகிறது.

 

 

ஆனால் அதை வைத்து அவர் என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

 

 

ஒன்று, சோதனைகளில் அதைக் காய்ச்சி இருக்க வேண்டும் அல்லது சூரிய வெப்பத்தில் அதை ஆவியாக்கி இருக்க வேண்டும். இப்படி சிறுநீரைச் சுத்தப்படுத்தியபோது மிஞ்சி

இருந்தது வெள்ளை நிறப் பொடி. அதை காற்றில் காண்பித்த போது அது பற்றி எரிந்தது. தான் தங்கமாக ஆக்கும் சிந்தாமணிக் கல்லைக் கண்டுபிடித்து விட்டதாகவே ப்ராண்ட்  எண்ணினார்.

 

 

அதற்கு வெளிச்சம் தரும் பொருள் என்ற அர்த்தத்தில் பாஸ்பரஸ் என்று பெயரிட்டார்.

இன்றும் கூட தீப்பெட்டியில் திக்குச்சியை எடுத்து உரசி தீயை உருவாக்கும் அனைவரும் அதற்குக் காரணகர்த்தர் அவரே என்று அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நல்லவேளையாக பாஸ்பரஸை உருவாக்க அவர் பாணியில் இன்று சிறுநீர் தேவைப்படாமல் மாற்றுப் பொருள்களை வைத்து பாஸ்பரஸை உருவாக்குகிறோம்.

இப்படி இரஸவாதக் கலையில் ஈடுபட்டோரால் பல நல்ல புதிய கண்டுபிடிப்புகளும் ஏற்பட்டன.

 

ஈயத்தை அல்லது எந்த ஒரு உலோகத்தையும் தங்கமாக மாற்றுவது எப்படி என்பதை உலகில் இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் ஆராய்ந்து வருகின்றனர்.

இரஸவாதக் கலைக்கென நூற்றுக் கணக்கில் இணைய தளங்கள் உண்டு.

 

 

     குறிப்பிடத் தகுந்த ஒரு ஆராய்ச்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடம் மக்லீன் (Adam Mclean) திகழ்கிறார்.தங்கமாக மாற்றும் கலை சம்பந்தமான நூல்களின் 46 தொகுதிகளை வெளியிட்டிருப்பது இவரது தனிச் சிறப்பு. சுமார் 1083 அரிய நூல்களை – மிகப் பழங்காலத்திலிருந்து இன்று வரை உள்ள நூல்களை – இவர் சேர்த்து வைத்துள்ளார். இவர் தரும் விவரங்கள் மிக சுவாரசியமானவை. http://www.Alchemywebsite.com என்றே தனது இணையதளத்திற்கு இவர் பெயர் சூட்டியுள்ளார்.

 

    தங்கமான விஷயம் பற்றிப் பேச காலமும் போதாது; எழுதப் பக்கங்களும் போதாது. இந்தக் கட்டுரைத் தொடரில்  இரஸவாதக் கலை பற்றிய முக்கிய  குறிப்புகள் சிலவற்றைப் பார்த்த மகிழ்ச்சியுடன் இதில் ஆர்வமுள்ளவர்கள் மேலும் பல நூல்களைப் படித்து ஆய்வைத் தொடரலாம்.

  இத்துடன் இந்த அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 28-3-2014 மற்றும் 4-4-2014 இதழ்களில் வெளியான- அத்தியாயங்கள் 161,162 ஆகியவற்றில் மயக்கும் தங்கமும் வியக்கும் மனிதரும் என்ற கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களின் தங்க மோகம் மற்றும் தங்க வேட்டை பற்றிய சுவாரசிய தகவல்களை மீண்டும் படித்து மகிழலாம்

          தங்க ரகசியம் தொடர் நிறைவடைகிறது.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

 

பிரபல விஞ்ஞானியான ஆப்ரஹாம் ஃப்ளெக்ஸனர் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வன்ஸ்ட் ஸ்டடியின் டைரக்டராக இருந்தார். அவரைப் பற்றியும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனைப் பற்றியும் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இது:

ஒரு முறை ஐன்ஸ்டீன் கையில் ஒரு தடியுடன் இன்ஸ்டிடியூட்டிற்கு வந்தார். முந்தைய நாள் இரவில் அவர் காலில் முன் பகுதியில் காயம் பட்டிருந்தது.

“இது போல ஐந்தாறு முறை ஆகி விட்டது. அறையில் இருட்டில் நடந்ததால் வந்த வினை இது என்று ஆதங்கத்துடன் ஐன்ஸ்டீன் ஃப்ளெக்ஸனரிடம் கூறினார்.

“இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் காலில் எலும்பு எதுவும் முறியவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள எக்ஸ்ரே வேறு எடுக்க வேண்டியதாய் இருக்கிறது என்று அங்கலாய்த்தார் ஐன்ஸ்டீன்.

 

 

ஃப்ளெக்ஸனர் ஐன்ஸ்டீனை நோக்கி, “ ஆமாம், அறையில் விளக்கைப் போட்டுக் கொள்ள வேண்டியது தானே என்று சாதாரணமாகக் கேட்டார்.

 

“அட, இது எனக்குத் தோன்றவில்லையே! என்று வியப்புடன் கூவினார் ஐன்ஸ்டீன்!

****

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: