வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன? (POST No.4272)

Written by S.NAGARAJAN

 

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 5-35 am

 

Post No. 4272

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Russian stamp for English Poet John Milton

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 5)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239-இன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன -வால்மீகி, கம்பரைத் தெரியாததால் தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

பாடல் 11

குமுத வாயிற் குழவி மிழற்றுறும்

அமுத தாரை இனிதென் றசைத்தஅவ்

விபுதன் நூலொடு மெய்ப்ப்ல கைக்கணே

சமனில் நின்று தயங்கத் தகுவது

 

பொருள்: குமுத மலர் போலும் இதழ்களுடைய சிறு குழந்தைகள் குழறும் கொச்சைச் சொற்கள் குழலினிலும், யாழினிலும் இனிமையுடையனவென்று கூறிய தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் செய்துள்ள தமிழ் மறையாகிய குறளோடு சங்கப் பலகையிற் சமனாக நிலவி நிற்கத் தகுதி வாய்ந்துள்ளது இக் கம்ப ராமாயண மகா காவியம்.

குறிப்பு: கம்ப ராமாயணம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னே கடைச்சங்கம் இறந்து போயினமையால் இந்நூல் சங்கப்பலகை ஏறாதொழிந்தது எனக் கூறல்

மிகையாகாது.

Greek Poet Homer on coin

பாடல் 12

அங்கம் சேரும் அவயவ சாலத்துள்

துங்கம் சேரொண்மை சூட்டும் முகமன்றே;

திங்கள் போலும் முகத்திற் கெழில்நிலம்

தங்கச் செய்வ சலச விழியரோ

 

பொருள்: ஓர் உடலைச் சேர்ந்த உறுப்புக் கூட்டத்தில் அவ்வுடலுக்கு அழகைத் தருவது முகமே ஆகும். சந்திரன் போல ஒளிரும் அம்முகத்திற்கும் அழகைப் பொழிவன ஆங்குத் தாமரை மலர் போல் விகசிக்கும் இரண்டு விழிகளுமேயாம்.

 

பாடல் 13

பாஷை மாதர் பலருளும் இன்னிசை

ஓசை மாதர் உறும்தமிழ் ஒண்டொடி

வாச வாண்முகம் வாய்ந்த விழியுகம்

ஏசில் ராமன் கதைகுறள் என்பவே

 

பொருள்: குற்றமற்ற ராமன் கதை, குறள் என்னும் இரண்டு நூல்களையும், உலகத்தில் நின்று நிலவும் அநேக பாஷைகள் என்னும் அழகிய மாதர்கள் குழுமிய கூட்டத்தில் இனிய ஒலியின்பத்தாற் சொல்லோசையின் அழகு இத்தன்மைத்தென விளக்கிக் காட்டும் தமிழாய அணங்கின் முகத்தில் இன்பாய வாசத்தையும் அறிவாய ஒளியையும் ஊட்டி இலகும் இரண்டு விழிகளென்னச் சொல்லலாம்.

 Poet from Italy -Virgil

பாடல் 14

காவி யன்றக விஞர்பூங் கானரு

காவி யன்றழ காரலர் தூவுமங்

காவி யன்றரு வன்றேஇத் தென்கவி

காவி யமணம் கான்றொளிர் கற்பகம்

 

பொருள்: (கால தேச வேற்றுமையாலும், மொழி வேற்றுமையாலும், பல்வேறு கவித்துறை வேற்றுமையாலும்) பல தொகுதியாகச் சேர்ந்து நிற்கும் கவிஞராம் காக்கள் நிறைந்திருக்கும் அழகிய மொழி ஆரண்யத்திற்கு அடுத்துத் தங்கி அழகிய மலர்களைத் தூவி விளங்கி நிற்கும் ஒரு பெரிய தருவென இவ்வெழிற்கலைஞனை யான் ஒப்பிடேன்; இக்காட்டில் நின்றும் மிக்க தூரத்தில் காவிய மணம் எக்காலத்தும் வீசிக் கொண்டு நிற்கும் ஒரு நிகரில் கற்பகத் தருவென்றே அவனை யான் சொல்லத் துணிவேன்.

 

பாடல் 15

நாமகள் அருள் நண்ணும் வரகவி

ஹோமர் வர்ஜில் மில்ற்றன் என்ன ஓதுவார்

வாமமார் வடதேச வான்மீகர் தென்

சீமையத் தமிழ்க் கம்பர்த் தெரியலார்

 

பொருள்: ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்று விளங்கும் வரகவிகள் ஹோமர், வர்ஜில், மில்ற்றன் என்னும் மூவரே என்று மேற்றிசையோர் கூறுகின்றனர். ஆனால் அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் வடதேசத்தில் அழகிய ஆரியப் புலவனாம் வான்மீகியையும் தென் தேசத்தில் இனிய தமிழ்க்கவியரசனாம் கம்பனையும் அறியாமையேயன்றி வேறன்று.

**

மேலே உள்ள அழகிய ஐந்து பாக்களில் கம்பனைப் பற்றிய கவிஞரின் உன்னதமான புகழாரத்தைக் காண்கிறோம்.

குறளுக்குச் சமமாக சங்கப் பலகையில் ஏறும் தகுதி பெற்றது கம்ப ராமாயணம்.

 

உடலுக்கு அழகு முகம்.முகத்திற்கு அழகு இரு விழிகள். அப்படிப்பட்ட விழிகளாக குறளும் கம்ப ராமாயணமும் திகழ்கின்றன.

உலகில் பல மொழிகள் உண்டு; ஒலியின்பம் மீதுற இனிய  சொல்லோசையால் அழகுறத் திகழும் இன்ப வாசம், அறிவு ஒளி என்னத் திகழும் இரு கண்கள் அல்லவா அவை!

 

 

காட்டில் விளங்கும் பெரியதொரு மரம் என இவனை நான் ஒப்பிட மாட்டேன். ஆனால் நினைத்ததை எல்லாம் தரும் கற்பக மரம் என்றே கூறுவேன்.

மேலை நாட்டினர் கவிஞர்கள் என்றால் ஹோமர்,வர்ஜில், மில்டன் ஆகிய மூவர் மட்டுமே கவிஞர்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள் வடதிசைப் புலவனான வான்மீகியை அறிய மாட்டார். தென் திசைப் புலவனாகிய கம்பனை அறிய மாட்டார்.

Homer on Greek Stamp

 

இவர்களை அறிந்திருந்தால் அந்தக் கவிஞர்களின் நிலை என்ன ஆகுமோ

 

இப்படி அழகுற உலகளாவிய ஒரு சஞ்சாரத்தை மேற்கொண்டு வான்மீகியையும் கம்பனையும் உலக கவிஞர்கள் வரிசையில் முன்னணியில் நிறுத்தி அவர்கள் தகதிக்குத் தக்கபடி தர வேண்டிய மரியாதையை கவிஞர் சிவராஜ பிள்ளை அழகுத் தமிழில் தருகிறார்.

 

கம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்

***

 

Leave a comment

3 Comments

  1. கவிஞர் சிவராஜபிள்ளையின் கம்பர்-வால்மீகி பக்தியும் பற்றும் போற்றுதற்குரியன. ஆனால், அதற்காக வர்ஜிலையும், ஹோமரையும் மில்டனையும் வம்புக்கிழுக்கவேண்டாமே !
    ஒவ்வொரு சமுதாயத்திலும் உயர்ந்த தெய்வீகக் கவிகள் இருந்திருக்கிறார்கள். உயர்ந்த விஷயங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். பண்பாட்டு மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்திருக்கிறார்கள். அவரவர்கள் பண்பாட்டிற்கும் மொழி நடைக்கும் ஏற்றவகையில் பாடியிருக்கிறார்கள். வெவ்வேறு மரபுகளைச் சார்ந்த, மொழிகளில் உள்ள உயர்ந்த காவியங்களை ஒப்பிடுவது சரியாகுமா என்பது சந்தேகத்துக்கிடமானது. ஆனால் சில உயர்ந்த, ஆன்மீகக் கருத்துக்கள் மனித குலம் முழுமைக்கும் பொதுவாக இருக்கின்றன. இவற்றை சிறந்த கவிகள் சிறப்பித்தே இருக்கிறார்கள். Great minds think alike.

    சிவராஜபிள்ளையவர்கள் வர்ஜில், ஹோமர், மில்டன் நூல்களை அந்தந்த மொழிமூலத்திலேயே பயின்றாரா என்பது தெரியாது! அப்படிப் பயிலாமல் ஒப்பிடுவது எப்படிச் சரியாகும்?

    ஹோமரின் காவியங்கள் ஏறத்தாழ ராமாயண-மஹாபாரத நிகழ்ச்சிகளையே அடிப்படையாகக் கொண்டவை! அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் மஹாபாரதப் பாத்திரங்களைப் பெரிதும் சார்ந்திருக்கிறார்கள். நமது அறிஞர்களில் லத்தீன், கிரேக்க, ஆங்கில மொழிகளில் உண்மையான, சிறந்த புலமை பெற்றிருந்தவர் ஸ்ரீ அரவிந்தர் ஒருவரே. ஹோமரின் இலியட்டால் ஈர்க்கப்பட்ட அவர், அதன் தொடர்ச்சியாக ” இலியன்” [ ILION] என்று ஒரு காவியமே எழுதினார்! [ இலியட் எட்டு நாள் நடக்கும் நிகழ்ச்சிகளைச் சொல்கிறது; இலியன் இறுதி நாள் நிகழ்ச்சிகளைச் சொல்கிறது!] ஸ்ரீ அரவிந்தர் என்ன. வால்மீகி மகிமையை அறியாதவரா? வால்மீகியையும் வ்யாசரையும் பற்றி அவரைவிடச் சிறப்பாக யார் எழுதியிருக்கிறார்கள் ?

    ஹோமர் பார்வையற்றவர். அவர் அகக்காட்சியில் கண்டு எழுதினார். இது ஒரு தெய்வீக உந்துதலால் நடந்தது. [ இதை மேலை நாட்டினரை விட நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்! ] மில்டன் ” Paradise Lost ” காவியம் எழுதியபோது பார்வை இழந்திருந்தார் ! ஆனால் ஓர் உயர்ந்த காவியம் படைக்கவேண்டும் என்ற உந்துதலால் , கங்கணம் கட்டிக்கொண்டபடி, எழுதினார் ! இதுவும் தெய்வீக அருளால் நடந்ததே! அவரவர் மரபுக்குத் தக்கபடி எழுதினார்கள். ஹோமரும் வர்ஜிலும் தேசீயக்கவிகளாக போற்றப்படுகிறார்கள்., மில்டன் அத்தகைய இடத்தைப் பெறாவிட்டாலும் உயர்ந்த கவிஞராக மதிக்கப்படுபவர்.,

    நமக்கு வால்மீகியும் கம்பரும் இரு கண்கள். அதற்காக பிற மொழி கவிஞர்களை என் குறைத்து மதிப்பிடவேண்டும்? It looks uncharitable.

  2. கேள்வி சரி தான்! இதற்கு உரிய சமாதானம் சொல்லத் தான் வேண்டும். கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை வாழ்ந்த காலத்தைச் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். மேலை நாட்டினர் எது செய்தாலும் அது சரி, பாரதத்தில் எது ஆழப் பதிந்திருநாலும் அது தப்பு என்று ஒரு கைக்கூலிப் படைச் சொல்லிக் கொண்டே இருந்தது. கம்பனையும் வால்மீகியையும் மட்டம் தட்டுவது இவர்களின் முதல் தொழில். மில்டனைப் பார், வர்ஜிலைப் பார் என்று அடுக்கு மொழியில் அள்ளி விடுவது அடுத்த தொழில். ஏன்,ஒரு (கைக்கூலி ) ‘அறிஞர்’ கம்பனின் ரசத்தையே எழுதினாரே! சீதையின் “கவர்ச்சிப் பிரதேசங்களை” சொல்லி சொல்லி மாய்ந்து போனார் அந்த ‘அறிஞர்’. இதற்கு உண்மையான அறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகளை/ நூலை எழுதினர்.
    ஆகவே அந்தக் கால கட்டத்தில் சிவராஜ பிள்ளை இப்படிச் சொல்லி இருக்கிறார். மில்டனை விட கம்பன் ஒரு படி உயர்ந்த இடங்களை விவரிக்க தனிக் கட்டுரை தேவை. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கம்பனும் மில்டனும் நூலையும் படிக்கலாம். கருத்துப் பதிவிற்கு நன்றி,நன்றி,நன்றி.

  3. I have enjoyed and been enlightened by your posts, thank you.

    While I don’t see you doing it much, but I do come across in blogs and fb posts that leads me to perceive this: we tamils seem to labour under an enormous inferiority complex that we feel compelled to shout at every turn how we are ‘better,, ‘superior’, ‘cultured’ than others. Isn’t it possible to enjoy the treasure available to us peaceably without putting others down or drawing odious comparisons? Isn’t time we look at it more maturely and let the beauty speak for itself instead of thirsting for endorsements? I understand this is probably because of a seething anger at the neglect of our heritage especially at the hands of our own youngsters. My humble take is we could better than be child-like ‘my dad is stronger’ and collect what is due to us by reaching out with more effective appreciation articles/posts – as you do – instead of stridently beating our breasts from roof-tops.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: