கம்பன் கவி இன்பத்தில் வம்பு-2 (Post No.4296)

Written by S.NAGARAJAN

 

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 6–08 am

 

 

Post No. 4296

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! – 2

.நாகராஜன்

 

4

இனி அடுத்து கவிதா ரஸிகரான வ.வெ.சு. ஐயர் எப்படி வர்ஜில், ஹோமர், கம்பன், வால்மீகி, கம்பன் ஆகியோரின் கவிதையை ரஸித்தார் என்று பார்ப்போம்.

கம்பன் கவிதை என்ற தொகுப்பு நூல் பிரமாதி (1939), பங்குனி 8,9,10 ஆகிய நாட்களில் காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளில் வெளியிடப்பட்டது. அதில் முதல் கட்டுரையாக ‘கம்ப ராமாயண ரசனை’ என்ற தலைப்பில் வ்.வெ.ஸுப்ரஹ்மண்ய ஐயர் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. வ.வெ.சு, ஐயரின் கம்பராமாயண ரசனை நூலை தில்லி தமிழ்ச் சங்கமும் பின்னாளில் வெளியிட்டது.

102 பக்கங்கள் உள்ள அந்த நூலில் சில பகுதிகளை மட்டும் இங்குக் காண்போம்.

5

வ.வே.சு. ஐயரின் கட்டுரை, அவரது சொற்களில் :

இது மாத்திரமில்லை, கம்ப ராமாயணமானது ஹோமர் எழுதிய இலியாதையும், விர்க்கிலீயன் எழுதிய ஏனயிதையும், மில்டனுடைய சுவர்க்க நஷ்டம் என்ற காவியத்தையும், வியாஸ பாரதத்தையும், தனக்கே முதல் நூலாக இருந்த வால்மீகி ராமாயணத்தையும் கூட பெருங் காப்பிய லட்சணத்தின் அம்சங்களுள் அநேகமாய் எல்லாவற்றிலும் வென்று விட்டது என்று சொல்லுவோம். இவ்விமரிசனத்தைத் தொடர்ந்து வாசிப்போருக்கு எமது இவ்வபிப்ராயத்தை மெய்ப்பிக்க முயலுவோம்.  (பக்கம் 4)

கவிதை என்னும் அணங்கு இலக்கண வித்துவானைத் தந்தையென மதித்து அவனை அணுகாள். தார்க்கிகளைச் சகோதரன் என்று பாவித்து அவனை நெருங்காள். வேதாத்தியயனம் செய்தவனை (யும், சந்தத்தையே கவனிப்பவனையும்) விட்டுச் சண்டாளர்களிடம் நின்று ஓடுகிறவர்கள் போல ஓடியே போய் விடுகிறாள்.; மீமாம்சையை ஆராய்பவனை நபும்ஸகன் என்று நினைத்து அவமதித்து விடுகிறாள்; காவியாலங்கார சாஸ்திரமறிந்தவனைக் கண்டதும் அவனையே தன் கொழுநனாகப் பாவித்து அவனைச் சேருகிறாள்…….. வால்மீகியைச் சாமானிய கவியாக நாம் பாவிக்கவில்லை. உலகத்திலுள்ள முதல் ஏழெட்டு மகா கவிகள் என்று கணக்கிட்டு எந்த ஜாதி அறிஞர் எண்ணினாலும் அந்தக் கணக்கில் வால்மீகியின் பெயரைச் சேர்க்காதிருக்க முடியாது. எமது சொந்த அபிப்ராயத்தில் உலகத்தின் ஒரு தனிக் காவியம் என்று சொல்லத் தகுந்தது கம்பராமாயணம் தான் என்றும், வால்மீகி ராமாயணம் அதற்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் என்றும் சொல்லுகிறோம்.   (பக்கம் 10,11)

ஹோமர் எழுதிய ஒதூஸியத்தில் வரும் குக்ளோப உபாக்கியானம், விர்க்கீலியனுடைய ஏனையத்தில் வரும் ஹார்ப்பியரின் செய்தி, ஆகிய இவைகளோடு தான் இந்த விராதன் கதையையும் இக்காண்டத்தின் கடைசியில் வரும் அயோமுகியின் கதையையும் ஒப்பிடலாகும். (The episode of Polyphemus the Cyclops in the Odyssey of Homer and the account of the Harpius in Virgil’s Eneid.) (பக்கம் 14)

 

மகாகவிகளெல்லாம் இத்தகைய மகா சந்தர்ப்பங்களில் பிரகிருதி மனித உணர்ச்சியோடு நடப்பது போல எழுதுவது சகஜமாயிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இலியாதின் 30-வது சருக்கத்தில் ஹோமர் பின்வருமாறு பாடுகிறார்:

“போர்க்கடவுள் துரோயா மீது வட்டமிட்டுக் கொண்டு தன் பயங்கரமான உருவத்தைப் ப்யற்காற்றாலும் மழை வேகத்தாலும் போர்த்தி மறைத்துக் கொண்டு, அத்துரோயாவின் உன்னதமான கோபுரங்களின் மீது நின்று கர்ஜித்துத் தன் வேகத்தைத் துரோயா நெஞ்சில் ஊற்றினான்.”

“பூதேவி புண்பட்டாள்; முடிவு வந்துற்றதென்று பகுதியாளும் தான் நிற்கும் அனைத்துப் பொருள்களினும் உயிர்த்துக் கொண்டு பொருமினாள், துடித்தாள் “ –

“Earth felt the wound and nature from her seat

Sighting through all her works, gave signs of woe

That all was lost” என்று மில்தனும் கற்பித்தெழுதுகிறான். எந்த ஜாதியினராயினும் பெருங் கவிகளின் இதயத்தில் ஒரே  மகாநாதம் ஒலிக்குமன்றோ? (பக்கம் 37)

 

உபாக்கியானங்கள் அமைப்பதில் ஹோமரைத்தான் – அவனும் இலியாதைப் பாடுகையில்தான் மிக சாமர்த்தியசாலி என்னலாம். அவன் எழுதிய ஒதூஸியம் என்னும் காவியத்தை உண்மையாக மகா காவியமென்று சொல்லக் கூடாது. அதை அநேகமாக உபாக்கியானங்களின் சேர்க்கையென்று சொல்லுவதே முறையாகும். ஆனால் இலியாதிலுள்ள அவனுடைய உட்கதைகள் சிறியனவாயும் அவய்வயங்களுக்கு அளவில் பொருத்தமாயும் இருக்கின்றன. கதையும் உபாக்கியானங்களும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, கதைக்கு இடைஞ்சற்படுத்தாமல் பெரும்பாலும் எடுக்க முடியாதனவாய் இருக்கின்றன. ராமாயணத்தில் உபாக்கியான அமைப்பு இலியாதின் அமைப்புக்குத் தாழ்ந்ததன்று. (பக்கம் 39)

 

இவ் யுத்தகாண்டம்  ஒன்று மாத்திரம் அளவில் மேனாட்டுப் பெரிய மகா காவியங்களுக்கு ஏறத்தாழச் சரியாக இருக்கிறது. சாதாரணப் பதிப்புகளில் யுத்த காண்டத்தில் 4,358 விருத்தங்கள் காணப்படுகின்றன. இலியாதில் 15,693 அறுசீர் வரிகளே இருக்கின்றன என்று கணக்கிடுகிறார்களாதலால் கம்பனது யுத்த காண்டம் இலியாதை விடப் பெரியதாகவே இருக்கிறது. அவ் இலியாதில் உள்ள சகல சுவைகளையும் இக் காண்டத்தில் நாம் காணலாகும். (பக்கம் 53)

 

போரை வர்ணிப்பதில் ஹோமரே தான் சிறந்த கவி என்று மேனாட்டு ஆசிரியரின் கூற்றுக்களைக் கண்டும், ஹோமரின் உத்கிருஷ்டமான யுத்த வர்ணனைகளைப் படித்துப் பார்த்தும் நாம் மயங்கிப் போய், ஹோமரின் போர்ச் சித்திரங்களை விட உயர்ந்த சித்திரங்கள் கிடையா என மதித்திருந்தோம். ஆனால் கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தைப் படித்துப் பார்த்ததும், கம்பன் போர் வர்ணனையில் ஹோமருக்குத் தாழ்ந்தவனில்லை என்றும், சில இடங்களிலும் சில விஷயங்களிலும் ஹோமரது போர் வர்ணனையை வென்றிருக்கிறானென்றும் கண்டு கொண்டோம். ஹோமரில் ஓர் குற்றம் இங்கு எடுத்தற்பாலது….. (பக்கம் 60)

தொடர்ந்து ஹோமரின் மீதான குற்றத்தை வ்.வெ.சு. ஐயர் விரிவாக விளக்குகிறார்.

மொத்தத்தில் சுவையான நூல்.

கம்பனின் காவியத்தை சிகரத்தில் நிறுத்தும் நேர்மையான விமரிசனம்.

அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்.

கட்டுரையை முடிக்க வேண்டுமென்று நினைத்தாலும் அரவிந்த ரிஷியின் கருத்துக்களைப் பார்க்கவில்லை என்பதால் அடுத்த கட்டுரை தொடரும். அத்துடன் இந்த விமரிசனம்  பற்றிய தொடர் முடியும்.

***

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: