வீணான ஒரு ஆராய்ச்சி! வேனன் கதை!(Post No.4303)

Written by London Swaminathan

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 10-40 am

 

 

Post No. 4303

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேனன் என்ற புராண புருஷன் பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது. அந்த வேனன் கதையைப் படிக்கும் போதெல்லாம் ‘வீண்’ என்ற சொல்லே இவன் பெயரில் இருந்துதான் வந்ததோ என்று எண்ணினேன்.

 

 

“ஏண்டா வீண் வம்பு பேசுகிறாய்? ஏண்டா இப்படி வீணாப் போற” என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்.

 

பழைய ஆனந்தவிகடன் தமிழ் அகராதியைப் பார்த்த போது,

வீண்= பயனின்மை

என்று ஒரே சொல்லில் முடித்துவிட்டனர்.

 

சங்க இலக்கிய சொற்களஞ்சியத்தைப் பார்த்தபோது, வீண் என்ற சொல்லோ, வீணை என்ற சொல்லோ இல்லை!

 

திருக்குறள் சொல்லடைவைப் பார்த்தபோதும் ‘வீண்’ என்ற சொல்லே இல்லை. இதை எல்லாம் பார்தவுடன் என் ஊகம் சரிதான் என்று தோன்றியது. மேலும் ‘வீண்’ பற்றி ஆராய்ச்சி செய்தேன். கழகப் பழமொழி அகரவரிசையில் ‘வீண்’ என்ற சொல்லில் பிறந்த சில பழமொழிகள் இருந்தன. அதில் வீண் என்ற பெயர்ச் சொல்லில் பிறந்த “வீணன் (வெட்டிப்பயல், துட்டன்)” என்ற சொல்லைக் கண்டேன்.

சரிதான்! நான் ஊகித்தது நூற்றுக்கு நூறு சரியே என்று சொல்லியது போல இருந்தது “வீணன்” என்ற சொல்.

 

அதாவது, வீண் என்ற சொல் திருவள்ளுவர் காலத்திலோ, அதற்கு முந்தைய சங்க காலத்திலோ  தமிழில் இல்லை! அந்தச் சொல்

தோன்றக் காரணமான வீணன்/ வேணன் என்னும் துட்டன் பற்றிய கதை சுவையான கதை.

 

அது என்ன கதை?

விஷ்ணு புராணத்தில் வேனன் என்னும் கதை வருகிறது. வேனன் என்ற மன்னன் மிகவும் கொடியவன்; துஷ்டன். ஹிரண்யகசிபு போல எல்லா சமயச் சடங்குகளுக்கும் தடை போட்டான். ரிஷி முனிவர்களுக்குக் கோபம் வந்தது; அவனைக் கொன்றுவிட்டனர். ஆனால் அது “வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கியது போல” ஆயிற்று. அரசன் இல்லாத நாட்டில் “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்ற காட்டு நீதி நிலவியது.

 

அதை சம்ஸ்கிருதத்தில் அ+ராஜகம்= அராஜகம்= அரசன் இல்லாத நிலை என்பர். இன்று கூட தமிழிலும் அராஜகம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்த சொல்; எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சிக்கு எதிராகப் பிரயோகிக்கும் சொல்!

 

அராஜக நிலையை மாற்ற ரிஷி முனிவர்கள் மஹாநாடு கூட்டினர்; சரி வேனனின் இடது கையைக் கடைந்து ஒரு அரசனை உருவாக்குவோம் என்று முயன்றனர். ஒரு கோரமான கருப்பு பூதம் வந்தது; அடச் சீ! நீ போ!! என்று விரட்டி விட்டனர். பின்னர் வேனன் சடலத்தில் வலது கையைக் கடைந்தனர். பிருது என்ற அழகிய ஆண் மகன் வந்தான். அவனை அரசனாக நியமித்தனர். ஆனால் அராஜக நிலையால் யாரும் வேலைக்குப் போகவில்லை; விவசாயம் நடக்கவில்லை; உடனே பிருது பூமியை மிரட்டினான். அது பசு வடிவம் கொண்டு பிரம்ம லோகம் வரை சென்றது; விடவில்லை பிருது; பின்னர் அந்தப் பூமி சொன்னது:

“இதோ பார்; இந்துக்கள் பெண் கொலை, பிராமணக் கொலை இரண்டும் செய்ய மாட்டார்கள்; நானே பசுவாகப் பாலைப் பொழிகிறேன்” என்று பாலைப் பொழிந்தது. இந்தப் பூமி முழுதும் வளம் கொழித்தது; பயிர்கள் செழித்தன. அன்று முதல் பூமிக்குப் ‘பிருத்வீ’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

 

இந்தக் கதை அருமையான தத்துவம், சங்கேத மொழி (CODED LANGUAGE, SYMBOLIC) நிறைந்த சிம்பாலிக் கதை!

 

அதாவது ராஜா இல்லாவிடில் — நல்ல ஆட்சியாளர் இல்லாவிடில் — அ ராஜகம் தாண்டவம் ஆடும்; மக்கள் ஸ்டிரைக் செய்வர்; பயிர்கள் விளையாது; பஞ்சம் ஏற்படும் அவனே கடுமையான விதிகளைப் பின்பற்றி அராஜகப் பேர்வழிகளை ஒடுக்கி நல்லாட்சி செய்தால் பூமி பாலாய்ச் சொறியும்; அதாவது மக்கள் வேலை செய்வர்; பலன் கிடைக்கும். அருமையான சிம்பாலிக் ஸ்டோரி Symbolic Story!

 

இந்து மதத்தில் புராணங்களில் இப்படித்தான் அடையாள பூர்வ, சங்கேத மொழியில், மறை மொழியில் கதைகள் இருக்கும்; வேதங்களில், பிராமணங்கள் என்னும் நூலில் எல்லாக் கதைகளும் சங்கேத மொழிக் கதைகள்தாம்; அவைகளைப் புரிந்து கொள்ள முடியாத வெள்ளைத்தோல் வெளிநாட்டாரும், மார்கஸீய வாந்திகளும், ஆங்கிலம் மட்டுமே படித்த அரை வேக்காட்டு அறிவிலிகளும் இந்து மதத்தை எள்ளி நகை ஆடினர்.

“வீண்” என்ற சொல்லைக் கொடுத்ததே வேனன் கதைதான்!!

வேனன்= வீணன்= வீண்

 

இதனால்தான் சங்க காலத்தில் இல்லாத இச் சொல், வள்ளுவர் பயன்படுத்தாத இச் சொல் பிற்காலத்தில் தமிழில் வந்தது என்பது எனது ஊகம்; புதிய சான்று– எதிர்ச் சன்றுகள் இல்லாதவரை- எனது ஊகம் சரியே!

 

அகத்தியர் விந்திய மலையை கர்வபங்கம் செய்தது, கடலைக் குடித்தது, பரசுராமன் கேரள பூமியைக் கடலில் இருந்து மீட்டது, பகீரதன் ஊசிமுனையில் தவம் செய்து கங்கையைக் கொண்டு வந்தது, காக்கை கவிழ்த்த கமண்டலம் மூலம் அகத்தியர் காவிரியை உருவாக்கியது — முதலியன எல்லாம் பிரமாண்டமான பொறியியல்- எஞ்ஜினீயரிங் அதிசயங்கள் (Engineering Marvels) , பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம்! ஒலி அலைகளையும் தண்ணீரையும் பயன்படுத்தி பிரம்மாண்டமான சக்தியை உருவாக்கலாம், மனோவேகத்தில் சென்று பல வெளி உலகங்களை அடையலாம்; ஐன்ஸ்டைனின் கொள்கையை மாற்றலாம் – என்று நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகளையும் படிக்கவும்.

TAGS:— வேனன் கதை, வீண், விஷ்ணு புராணம், ஆராய்ச்சி

-சுபம்-

Leave a comment

1 Comment

  1. The last part of the encounter between Prithu and Earth is a little unclear. Did Earth concede in fear of Prithu and did he turn for better?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: