Written by London Swaminathan
Date: 1 NOVEMBER 2017
Time uploaded in London- 7-17 AM
Post No. 4356
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
வேத சம்ஹிதைகளை அடுத்து எழுந்த பிராமணங்கள் என்னும் உரைநடை நூல்களில் நிறைய தத்துவக் கதைகள் உள்ளன. சில நேரடியாகவும், சில மறைமுகமாகவும் நமக்குப் பல நீதிகளை உணர்த்துவன. தமிழ், கிரேக்கம், லத்தீன் முதலிய பல மொழிகளில் நூல்கள் தோன்றுவதற்கு மிக, மிக, மிக முன்னதாக சம்ஸ்கிருதத்தில் தோன்றிய உரைநடை நூல்கள் இவை.
ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள் (இறந்துபோன முன்னோர்கள்), அசுரர்கள் ஆகிய அனைவரும் பிரஜாபதியிடம் (பிரம்மா) சென்றனர். “ஐயன்மீர்! நாங்கள் எப்படி வாழ்வேண்டும் என்று அறிவுறுத்தவும்” என்றனர். ஒருவர் பின்னர் ஒருவராக வரிசையாகச் சென்று வினவினர். அவரும் செப்பினார் :
ஆடை அணிந்து வளைந்து நெளிந்து கூனிக் குறுகிய மனிதனே! நீ காலையிலும், மாலையிலும் உண்க.
தேவர்களே! யாகத்தில் கிடைக்கும் உணவை மட்டும் உண்க
பித்ருக்களே! மாதம் தோறும் ஒரு முறை நிலவு ஒளியில் உண்க
மிருகங்களோவெனில் நினனைத்தபோது, கண்டவை எல்லாவற்றையும் உண்ணலாம்.
அசுரர்களுக்கு இருட்டையும் மாயையையும் பிரம்மா கொடுத்தார்.
( கண்ட கண்ட நேரங்களில் கண்ட கண்ட வற்றை உண்பவன் மிருகம் என்பது சொல்லாமலே விளங்கும்; மாயையிலும் இருட்டிலும் மூழ்கிக் கிடப்பவர், இனம் புரியாத வஸ்துக்களை உண்பர்; தற்கால குடிகாரர்கள்; போதை மருந்துக்கு அடிமையானோரை ஒப்பிடலாம்;அல்லது பல்லி,தேள், பாம்பு போன்றவற்றை உண்ணும் வர்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து).
மனிதராயினும், தேவராயினும், மிருகமாயினும் — எவரும் இக்கட்டளைகளை மீறக்கூடாது. சில மனிதர்கள் இதை மீறி உண்கிறார்கள்; அவர்கள் அதர்ம வழிகளில் கொழுத்துப் போகிறார்கள். கொழுப்பு என்பது தவற்றினால் வருகிறது. ஆகையால் மனிதர்கள் காலையிலும் மாலையிலும் சாப்பிட வேண்டும்; எவர் ஒருவர் இந்த உண்மையை அறிகிறாரோ, அறிந்தபடி பின்பற்றுகிறாரோ, அவர் முழு வாழ் நாளும் வாழ்வார். அவர் பேசுவதெல்லாம் உண்மையாகிவிடும்; ஏனெனில் இது தெய்வீக உண்மை– சதபத பிராமணம் 2-4-2-6
நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:
“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!
இருபோது போகியே யென்ப—திரிபோது
ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்
போகியே யென்று புகல் உண்பான் ”
(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).
இன்னும் ஒரு குட்டிக்கதை
மாதங்கள் ஏன் தெரியுமா ஒன்றை அடுத்து ஒன்றாக , வரிசையாக வருகின்றன? ஏனெனில் பிராமண/ புரோகிதர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக வருகின்றனர். அவர்கள் ஒழுங்காக வருகின்றனர்; ஒழுங்காக உள்ளே நுழைகின்றன்ர்; இதனால் மாதங்களும் இப்படி வரும்; ஆகவே ஒருவர் பின்னால் ஒருவர் செல்க; காலடிச் சுவட்டைப் பின்பற்றுக- 3-1-7-11
இந்த மந்திரம் ஒழுங்கையும், வரிசைக் கிரமத்தையும் கற்பிக்கும் மந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இவை எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் அற்புதமான பொன்மொழிகள்!.
My Old Articles:-
ஒரு வேளை உண்பான் யோகி | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/ஒரு-வேளை-உண்பா…
15 Nov 2012 – ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே! இருபோது … (ஒருவேளை உண்பான் யோகி, இருவேளைஉண்பான் போகி மூவேளை …
உண்டி சுருக்குதல் … – Tamil and Vedas
https://tamilandvedas.com/…/உண்டி-சுருக்குதல்…
17 Jun 2014 – ((காண்க:– எனது பழைய கட்டுரை; ”ஒருவேளைஉண்பான் யோகி”……கட்டுரை … ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே இருபோது …
xxxxx SUBHAM, SUBHAM xxxxxx