Written by S.NAGARAJAN
Date: 2 NOVEMBER 2017
Time uploaded in London- 5-58 am
Post No. 4358
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
அதிசய பூ
இது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று!
ச.நாகராஜன்
பிரபல ஆங்கில காதல் கதை மன்னரான ஜெஃப்ரி ஃபர்னால் சுவையான காதல் அட்வென்சர் கதைகளை எழுதி உலகைக் கவரந்தவர்.
இங்கிலாந்தில் 1878ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிறந்த ஃபர்னால் இயல்பாகவே கலை உள்ளம் படைத்தவர். அவருக்குச் சிறு வயது முதலே எழுதும் கலை இயல்பாக வந்தது.
சார்லஸ் டிக்கன்ஸ், ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன் ஆகியோரின் நாவல்களால் அவர் பெரிதும் கவரப்பட்டார்.
பல கவிதைகளையும் கதைகளையும் எழுத ஆரம்பித்தார். அவரது தி ப்ராட் ஹைவே (The Broad Highway – 1910) என்ற நாவலை அமெரிக்காவில் பதிப்பகங்களுக்கு அனுப்பினார்.ஆனால் அவை அந்த நாவலை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பின.
உடனடியாக தனது மாமியாருக்கு அதை அனுப்பினார். அவர் இங்கிலாந்தில் இருந்தார்.இங்கிலாந்தில் அது வெளியிடப்பட்டது. மறு ஆண்டு அமெரிக்கப் பதிப்பாளர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து பத்து வருட காலம் முதலிடத்தைப் பிடித்து அந்த நாவல் சாதனை படைத்தது.
தொடர்ந்து தி அமெச்சூர் ஜெண்டில்மேன் உள்ளிட்ட ஏராளமான ரொமான்ஸ் நாவல்களை அவர் எழுதினார்.
அவர் 1936ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். மர்மமான இந்த தேசத்தைப் பார்த்து வியந்தார். மறுபிறப்பில் அவருக்கு நம்பிக்கை உண்டு.
8-4-1936இல் தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைக்கு அவர் பேட்டி கொடுத்தார்.
அதில் அவர் கூறியது:
“India has mystified me. It is more beautiful than I could imagine or dream of. I am charmed by the life of the country, specially the villages, I believe in the Law of Karma, but I do not believe that men can ever be born as animals. It is impertinent for any one visiting India for a few weeks, or even months, to write a book on the life or people of India. This mighty land goes far beyond the understanding of any mere sojourner.”
“இந்தியா என்னைத் திகைக்க வைத்தது. நான் கற்பனை செய்ததை விட, கனவு கண்டதை விட, அது மிக அழகானது. இந்த நாட்டில் உள்ள வாழ்க்கை முறையால் நான் கவரப்பட்டேன். குறிப்பாக கிராமங்களில் உள்ளோரின் வாழ்க்கை முறையால். எனக்கு கர்ம பலன் கொள்கையில் நம்பிக்கை உண்டு. ஆனால் மனிதன் ஒரு போதும் மிருகமாகப் பிறக்கமுடியாது என்று நம்புகிறேன். சில வாரங்களோ அல்லது, ஏன், சில மாதங்களோ கூட இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருகை புரியும் ஒருவர் இங்குள்ள வாழ்க்கை முறை பற்றியோ அல்லது மக்களைப் பற்றியோ எழுதுவது என்பது பொருத்தமற்றது. தற்காலிகமாக ஊர் சுற்றிப் பார்க்க வரும் ஒருவரது புரிதலுக்கு மிக மிக அப்பாற்பட்டது இந்த பிரம்மாண்டமான தேசம்.”
‘புரிந்து கொள்ள முடியாத மர்ம தேசமாக இருப்பது இந்தியா’ என்பதை மிக அழகாகப் புரிந்து கொண்ட ஃபர்னால் மன மகிழ்ச்சியுடன் இந்தியாவைச் சுற்றிப் பார்த்தார். மக்களைப் புரிந்து கொண்டார். மறுபிறப்பில் தனக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இது போல ஏராளமான அயல் நாட்டவர் வியக்கும் வாழ்க்கை முறை இந்திய வாழ்க்கை முறை என்பது குறிப்பிடத்தகுந்தது.
***