உடையது விளம்பேல்! வல்லமை பேசேல்! (Post No.4374)

Written by London Swaminathan 

 

Date: 7 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-49 am

 

 

Post No. 4374

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தற்புகழ்ச்சி என்பது ஒரு நோயாகும்; நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த நோய் உண்டு; யாராவது ஒருவர் பேசா மடந்தையாக இருந்தாலோ, அல்லது உங்களைப் பாராமல் இருக்கும் பாராமுகமாக இருந்தாலோ, அவரிடம் போய், ‘அட இந்த சட்டை நன்றாக இருக்கிறதே, இந்தப் புடவை நன்றாக இருக்கிறதே! எங்கே வாங்கினீர்கள்?’ என்று கேளுங்கள்; அவர்கள் முகத்தில் ஆயிரம் செந்தாமரைகள் பூக்கும்; அவர்கள் பேச்சில் மதுரை மல்லிகை மணம் வீசும்; சுவிட்சைத் (switch) தட்டிவிட்டீர்கள்; இனி ஆஃF  (off) செய்ய மெடியாது. ‘அட! முன்னைவிட நீங்கள் இளஞர் ஆகி விட்டீர்களே; பத்து வயது குறைந்தது போல இருக்கிறீர்கள்’ என்று சொல்லுங்கள்; உங்களுக்கு திருநெல்வேலி லாலா கடை அல்வா வாங்கிக் கொடுப்பார். புகழ்ச்சிக்கு மயங்காதோர் உண்டோ?

 

 

இதெல்லாம் கூடத் தடவறில்லை; ஆனால் ஒருவர் தானாக முன்வந்து, தனது சாதனைகளைச் சொல்லுவது அறிவுடைமை அன்று; அது பேதைமையின் முற்றிய தோற்றம் ஆகும்.

 

இதனால்தான் அவ்வையாரும்

 

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)

வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439)

 

பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.

மனு நீதி நவில்வது

 

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-

 

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)

 

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16

 

 

கூரம் பாயினும் வீரியம் பேசேல்

–கொன்றை வேந்தன்

(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)

 

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை

வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்

நயவாமை யன்றே நலம்

 

பொருள்:

தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

அவ்வையார் கதை

அவ்வையாரிடம் ஒரு சிறுவன் சென்றான்; ஒரு கையில் மண்ணை எடுத்துக் கொண்டான்;  பாட்டி என் கையில் எவ்வளவு மண் இருக்கிறது? என்று சொல் பார்ப்போம் என்றான்; அவ்வையார் பதில் சொல்ல முடியாமல், மனதில் மணல் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தார்;  விடை தெரியவில்லை. அட பாட்டி, இது கூடத் தெரியவில்லையா? என் கையில் இருப்பது ‘பிடி மண்’ என்றான். முருகப் பெருமானோ சுட்ட பழம் வேன்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு அவ்வைப் பாட்டியை திணறடித்தான்; கீழே விழுந்த நாவற் பழங்களை மணல் போக ஊதிக் கொடுத்தால் அது சுட்ட  பழம் என்று அறிவுறுத்தினான்.

 

இதனால்தான் அறநெறிச்சாரத்தில் முனைப்பாடியார் என்பாரும் சொன்னார்:–

 

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்

பொருள்:

அலர்கதிர் ஞாயிற்றை — பரந்த கிரணங்களை உடைய சூரியனையும்

கைக்குடையும் காக்கும்— கையிலுள்ள சிறிய குடையும் மறைத்துவிடும்.

பலகற்றோம் யாமென்று- ஆதாலால் யாம் பல விஷயங்களைக் கற்றுவிட்டோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது.

 

பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்–  பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்க்கும்  அச்சாணி போன்ற ஒரு சொல்

சில கற்றார் கண்ணும் உளவாம்-  சில நூல்களை மட்டுமே பயின்றோரிடத்தும் உண்டு.

TAGS:–அவ்வையார், மனுநீதி, தற்புகழ்ச்சி, உடையது, வியவற்க

சுபம், சுபம்—

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: