Written by London Swaminathan
Date: 9 NOVEMBER 2017
Time uploaded in London- 14-25
Post No. 4381
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
வள்ளுவன் பாடிய முப்பாலில், அதாவது தமிழ் வேதமான திருக்குறளில், கடைசி பாலான காமத்துப் பாலை மொழிபெயர்க்க கிறிஸ்தவ பாதிரிகள் மறுத்து விட்டனர். இதென்னடா! அபசாரம், அபசாரம்; ஹராம், ஹராம்! இதெல்லாம் மக்களுக்குச் சொல்லக் கூடாது என்று மறைத்து விட்டனர். இதெல்லாம் சுமார் 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் இந்துக்களோவெனில் வேத காலம் முதல் ‘செக்ஸ்’ SEX உவமைகளை, சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தியுள்ளனர். ரிக் வேதத்தில் உள்ள சில மந்திரங்களை மிகவும் செக்ஸியானது SEXY– குறிப்பாக பிராமண நூல்களில் உள்ள சில விஷயங்கள் “அசிங்கமானவை” என்று வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்க்காமல் விட்டதை பழைய புத்தகங்களைப் படிப்போர் அறிவர்.
உலகில் இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் முதன்மை என்பதைப் பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன். அது போல காம நூல் விஷயத்திலும் 2000 ஆண்டுக்கு முன்னர் வாத்ஸ்யாயனர் எழுதிய காமசாஸ்திரம்தான் அவ்வகையில் முதன்மையானது.
இதோ வள்ளுவன் குறளும் ஒரு ஆங்கில சம்பவமும்:
வள்ளுவன் அதிசயப் படுகிறான் ‘ஏ பெண்ணே! நான் இப்படி ஒரு தீயைக் கண்டதே இல்லை. நீ அருகில் வந்தால் குளிர்ச்சியாக இருக்கிறது. தூரத்தில் போய்விட்டாலோ உடம்பே உன்னை நினைத்து நினைத்து பற்றி எரிகிறது (காமத் தீயால்)’ என்கிறான்.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் ( குறள் 1104)
பொருள்
இவளை விட்டு நீங்கினால் சுடுகிறது; அருகில் வந்தால்
குளிர்கிறது: இந்த புதுவகைத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?
கண்களில் தீ
இங்கிலாந்தில் டெவன்ஷைர் என்னும் பகுதியின் பிரபுவுடைய மனைவி (Duchess of Devonshire) பேரழகி. ஒரு நாள் அவள் தான் சென்ற வாஹனத்தில் இருந்து இறங்கினாள். அந்த நேரம் பார்த்து குப்பை வண்டிக்காரன் (Dustman) தெருவிலுள்ள குப்பைகளை அள்ள நின்று கொண்டிருந்தான்; வழக்கம்போல சிகரெட்டைப் பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை எடுக்கத் திரும்பினான்.
அந்த நேரத்தில் அவன் இந்த பேரழகியைக் கண்டான். அவனோ குப்பை அள்ளுபவன்; இவளோ பிரபுவின் மனைவி. I Love You ‘ஐ லவ் யூ’ என்றா சொல்ல முடியும்?
அவன் சொன்னான்,
“அடக் கடவுளே! எத்தனை அழகு! கடவுள் காப்பாற்றட்டும்; கொஞ்சம் நில்லுங்கள்; கண்களில் இருந்து சிகரெட்டுக்கு நெருப்பு மட்டும் எடுத்துக் கொள்கிறேன்!”
அவள் கண்களில் அத்தனை ஒளியாம்; இதைக் கேட்டதி ,,,ருந்து இந்தச் சொற்கள் அவள் காதில் ரீங்காரம் செய்துகொண்டே இருந்தது. யார் அவளை என்ன புகழ்ந்தாலும் அவளுக்கு ருசிக்கவில்லை; “இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அந்தக் குப்பைக்காரன் நெஞ்சைத் திறந்து சொன்னானே அதுதான் உண்மையான வருணனை” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
xxxx
ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!
பிரெஞ்சு மொழியில் கதைகள் எழுதும் ஆசிரியரும் மூன்று கல்விக் கழகங்களின் தலைவருமான ஃபாண்டநெல் (Fontenelle), ஒரு அழகியை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அந்த அழகியும் , அவருடைய காதல் மொழிகளை ரசித்துக் கேட்பாள்.
ஃபாண்டநெல்லுக்கு வயது 97; ஒரு நாள் ஒரு பொது இடத்தில் வேகமாகச் சென்று — அதாவது அழகியையும் பார்க்காமல்– வேறொரு இடத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.
இந்த அழகிக்குக் கோபம் வந்துவிட்டது; “அடச்சீ! இவ்வளவுதானா? உங்கள் காதல் வசனங்கள். பாராமுகமாகப் போகிறீர்களே? இதற்கு என்ன அர்த்தமாம்! என்றாள்
அவர் சொன்னார், “அன்பே உண்மைதான்; உன்னைப் பார்த்துவிட்டால் — பார்த்திருந்தால் அச்சுப்போல நின்றிருப்பேனே! நகரவா முடியும்?” – என்றார்.
அந்தப் பெண்ணும் உச்சிகுளிர்ந்து போய் அப்படியே சிலை போல நின்றுவிட்டாள்.
பெண்களின் அழகிற்கு ஆண்கள் அடிமை!
ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!
xxxx
ஒரு பெண் பேச்சில் கில்லாடி; அழகிலோ லம்பாடி!
அவளைப் பற்றி புகழ்பெற்ற ஒரு அறிஞர் சொன்னார்:
ஓ, அவளா! பேசிப் பேசியே அழகை உருப்பெறச் செய்துவிடுவாளே!
-என்று
xxxx
ஆப்ரஹாம் லிங்கனின் அழகு!!!
ஆப்ரஹாம் லிங்கனுக்கு குழந்தைகள் மீது அலாதிப் பிரியம்; இதை ஊரே அறியும்; ஆகையால் பலரும் வாய்ப்புக் கிடைத்தால் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வர்.
ஆப்ரஹாம் லிங்கன், குணத்தில் உயர் குன்று; அழகிலோ சிறு மணல் மேடு.
இதுபற்றி வீட்டில் அங்க்கலாய்க்கும் ஒருவர் தனது மகளை–பள்ளிக்கூடச் சிறுமியை– ஆப்ரஹாம் லிங்கனைக் காண அழைத்துச் சென்றார்.
லிங்கனும் அந்தச் சிறுமியை மடியில் வைத்துக் கொண்டு, ஒரு தந்தை கொஞ்சுவது போலக் கொஞ்சிப் பேசினார். அவள் லிங்கனின் முகத்தைப் பார்த்து விட்டு படீரெனச் சொன்னாள்:
அப்பா! ஆப்ரஹாம் லிங்கன் ஒன்றும் அவலட்சணமாக இல்லையே!
பிறகு என்ன? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்; சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது.
xxxx
டேய்! போண்டா மூக்கு!
ஒருவருக்கு அதி பயங்கர கோபம்! அவர் மூக்கினை யாரோ நக்கல் அடித்தாராம்.
அந்த ஆளும் எதிரில் தென்பாட்டான்.
“ஏய் என்ன தைரியம் உனக்கு; நான் இல்லாதபோது என்னை ‘போண்டா’ மூக்கன் என்று கிண்டல் செய்தாயாமே!
நானா! அப்படிச் சொல்லவே இல்லையே! ஆனால்………….. ஆனால்………… இப்பொழுது உங்கள் மூக்கைப் பார்த்தால், உண்மையில் அது ‘போண்டா’ மூக்குதான்! என்றான்.
பின்னர் நடந்ததை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!!!
TAGS:— மூக்கு, கண், அழகு, கண்களில் தீ, லிங்கன் அழகு, குப்பைக்காரன்
—சுபம், சுபம்–