வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை! (Post No4382)

Written by S.NAGARAJAN

 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4382

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

10-11-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில்  வெளியாகியுள்ள  கட்டுரை

 

 

 

வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை!

 

 ச.நாகராஜன்

 

 

“ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்வது எப்படி என்றால், அதைச் செய்து விடுவது தான்! -அமிலியா எர்ஹார்ட்

Amelia Earhart

 

   உலகில் முதன் முதலாக ஒரு விமானத்தை ஓட்டிப் பல சாகஸங்களைச் செய்த துணிச்சல்காரப் பெண்மணியை உலகம் அவ்வளவாக அறிந்திருக்காது. அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தது உட்பட ஏராளமான சாகஸங்களை நிகழ்த்திய அமெரிக்கப் பெண்மயான அமிலியா எர்ஹார்ட் (பிறப்பு 24, ஜூலை 1897 மர்ம மறைவு 2, ஜூலை, 1937 – Amelia Earhart) மங்கையர் சரித்திரத்தில் மகோன்னதமான இடத்தைப் பிடிப்பவராவார்

 

 

அமிலியா மேரி எர்ஹார்ட் அமெரிக்காவில் கான்சாஸில் பிறந்தவர். இளமையிலிருந்தே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருந்தார். இளமையில் பேஸ்கட் பால் விளையாடுவார். ஆட்டோ ரிப்பேர் வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் கல்லூரியிலும் படித்தார்.

முதல் உலகப்போரில் ரெட் கிரஸில் இணைந்து நர்ஸாகப் பணி புரிந்தார். கனடாவில் டோரொண்டோவில் ராயல் ஃப்ளையிங் கிளப்பில் விமானங்கள் பறப்பதை வேடிக்கை பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 

 

முதல் உலகப் போர் முடிந்தவுடன் அமரிக்கா திரும்பி நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில்  மருத்துவ ஆரம்பப் படிப்பில் சேர்ந்தார்.

கலிபோர்னியாவில் 1920இல் டிசம்பர் மாதம் புகழ் பெற்ற பைலட்டான ஃபிராங்க் ஹாக்ஸ் என்பவருடன் கூடச் சேர்ந்து அவர் விமானத்தில் பறந்தார்.

 

 

1921, ஜனவரி மாதம் நேதா ஸ்னூக் என்ற பெண் பயிற்சியாளரிடம் விமானத்தை ஓட்ட கற்றுக் கொண்டார்.

இதற்காகப் பணம் கட்ட லாஸ் ஏஞ்சலஸில் டெலிபோன் கம்பெனியில் குமாஸ்தாவாக அவர் பணி புரிந்தார்.

பயிற்சி முடிந்தவுடன் தனக்கென சொந்தமாக ஒரு பழைய விமானத்தை வாங்கிக் கொண்டார். அதற்கு ‘கேனரிஎன்று செல்லப் பெயரையும் சூட்டினார்.

 

 

டிசம்பர் 1921இல் பறப்பதற்கான லைசென்ஸை பெற்றவுடன் தைரியமாக வானில் பறக்க ஆரம்பித்தார்.

1922இல் 14000 அடி உயரத்தில் பறந்த முதல் பெண்மணி என்ற சாகஸத்தை நிகழ்த்திக் காட்டினார். 1932இல் அட்லாண்டிக்கில் தனியாகப் பறந்து அதைக் கடந்த முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார். அவர் இந்த சாதனையை நிகழ்த்தியவுடன் அமெரிக்காவில் காங்கிரஸ் அவருக்கு  ‘ஃபிளையிங் கிராஸ் என்ற அரிய விருதைக் கொடுத்து கௌரவித்தது.

 

 

அதே ஆண்டில் தொடர்ந்து 19 மணி நேரம் இடைவிடாது பறந்து, லாஸ் ஏஞ்சலஸில் கிளம்பியவர் நியு ஜெர்ஸியில் வந்து இறங்கி புது சாதனையைப் படைத்தார்.

1935இல் ஹவாயிலிருந்து தனியாகக் கிளம்பி அமெரிக்காவை அடைந்து அதிலும் முதலாவது பெண்மணியாகத் திகழ்ந்து புகழ் பெற்றார்.

 

இதனாலெல்லாம் உலகெங்கும் வாழும் மங்கையர் மனதில் ஒரு உற்சாகமும் ஆர்வமும் ஏற்பட்டது. ‘நைண்டி நைன்ஸ் (Ninety Nines)  என்ற விமான ரேஸை நடத்தும் நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்தார்.

 

தொடர்ந்த சாகஸமே அவரின் இறுதிக்குக் காரணமாக அமைந்தது.

 

1937ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்திலிருந்து உலகத்தைச் சுற்றுவது என்ற முடிவில் தன் பயணத்தைத் தொடங்கினார்.

 

 

அவருக்கு வழி காட்ட ப்ரெட் நூனன் என்பவர் உடன் சென்றார். மியாமி வழியாக தென் அமெரிக்கா சென்று பின்னர் அட்லாண்டிக்கிலிருந்து ஆப்பிரிக்கா சென்று இந்தியா வழியே தென்கிழக்கு ஆசியாவை அடைந்தார் அமிலியா.

ஜூன் 29ஆம் தேதி அவர்கள் நியூ கினியாவில் லீ என்ற இடத்தை அடைந்த போது 22000 மைல்கள் பறந்திருந்தனர். புறப்பட்ட இடத்தை அடைய இன்னும் 7000 மைல்கள் தான் பாக்கி. லீயிலிருந்து ஜூலை இரண்டாம் தேதி அமிலியாவும் நூனனும் கிளம்பினர். பிறகு அந்த இருவரையும் காணோம்.

உலகமே பரபரப்படைந்தது. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் பிரம்மாண்டமான ஒரு தேடுதல் வேட்டைக்கு ஏற்பாடு செய்தார். இரண்டு வார காலம் இந்தத் தேடுதல் பணி நடந்தது. ஆனால் பயனில்லை.

 

 

1937, ஜூலை 19ஆம் தேதி அவர்களைக் கடலில் மறைந்தவர்களாக அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அமிலியாவின் மர்மமான மறைவுக்கு ஏராளமான காரணங்கள் கூறப்பட்டன.

 

1937லிருந்து 2017 முடிய இந்த எண்பது ஆண்டுகளில் பல திடுக்கிடும் தகவல்களை அவரது மர்ம மறைவு பற்றி ஆராய்வோர் தந்து கொண்டே இருக்கின்றனர்.

‘விழுந்து மூழ்கிய கொள்கை என்பதை வலியுறுத்துவோர் அமிலியாவின் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போய்விட்டதால் ஹௌலேண்ட் ஐலேண்ட் அருகே அவர்கள் விமானம் கீழே விழுந்து மூழ்கியிருக்கலாம் என்கிறனர். கடந்த 15 ஆண்டுகாலமாக அவர்கள் பயணித்த விமானத்தின் சிதிலமடைந்த பாகம் ஏதேனும் கிடைக்குமா என்ற ஆராய்ச்சிக்காக ஹை டெக் சோனார் தொழில்நுட்பமும் ஆழ்கடல் ரொபாட்டுகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவர்கள் பயணித்த ‘எலெக்ட்ரா விமானத்தின் எந்த ஒரு பகுதியும் பசிபிக் பிராந்தியத்தில் கிடைக்கவில்லை.

     

 

 

     பன்னாட்டு விமான மீட்பு வரலாற்றுக் குழு தனது ஆய்வில் அவர்கள் ஒருவேளை ஹௌலேண்ட் ஐலேண்டிலிருந்து சுமார் 350 மைல் தள்ளில் உள்ள கார்ட்னர் ஐலேண்டில் இறங்கி இருக்கலாம் என்ற கொள்கையை முன் வைக்கின்றனர். யாருமே குடியிருக்காத அந்தப் பகுதியிலும் விமானங்கள் பறந்து ஆய்வை நடத்தின. ஆனால் பலனில்லை. ஒருவேளை அவர்கள் அந்தத் தீவில் தங்கி பசியால் வாடி இறந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.

1988ஆம் ஆண்டிலிருந்து பல முறை இந்தத் தீவிற்குப் பலரும் சென்று இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்தனர்.

ஜூன், 2017இல், அங்கு தொடங்கி நடத்தப்படும் ஆய்வில் ஏதேனும் மனித எலும்புக் கூடுகள் கிடைக்குமா என்று பார்க்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 

 

ஆயிரத்திதொள்ளாயிரத்து முப்பதுகளில் பெண்கள் அணிந்து வந்த மாடல் செருப்பு போல ஒரு செருப்பு அந்த ஆய்வில் கிடைத்தது. பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதன குடுவை ஒன்றும் கிடைத்தது. மனித  விரல் ஒன்றும் கிடைத்தது.

 

இது தவிர இந்த மர்மம் பற்றி, வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன.

 

 

சிலர் அவர்களை ஜப்பானியர்கள் பிடித்துக் கொண்டு சென்று கொன்று விட்டனர் என்கின்றனர். இன்னும் சிலரோ அமிலியா ரூஸ்வெல்ட் நிர்வாகத்தில் உளவாளியாகப் பயன்படுத்தப்பட்டதால் அவர் இறந்தது போல ஒரு நாடகம் நடத்தப்பட்டு ‘இறந்து போன இருவருக்கும் புதுப் பெயர்கள் வழங்கப்பட்டு அவர்கள் எங்கோ வாழ்கின்றனர் என்கின்றனர்.

   

 

  ஆயிரக்கணக்கான ஆவணங்களைத் தன் ஆய்வில் சேர்த்துள்ள லெஸ் கின்னி என்பவர், கப்பல் ஒன்று உடைந்த விமானத்தை ‘டோ செய்து இழுத்துக் கொண்டு செல்வது ஒரு போட்டோவில் காணப்படுகிறது என்றும் அந்தக்  கப்பலில் காணப்படும் இருவர் அமிலியா மற்றும் நூனன் போல இருக்கிறது என்றும் கூறுகிறார்.

 

 

இந்த போட்டோ உண்மையான ஒன்று தானா என்பதை ஆய்வு செய்த ஃபோரன்ஸிக் நிபுணரான டக் கார்னர், “சந்தேகமே இல்லை; இது உண்மையான போட்டோ தான் என்கிறார்.

‘சரி, கப்பல் யாருடையது என்பதை ஆராய்ந்த அவர்கள் அது கோஷு மாரு என்ற ஜப்பானியக் கப்பல் என்று கண்டு பிடித்துள்ளனர்.

 

அமிலியாவும் நூனனும் ஜப்பானுக்குக் கடத்தப்பட்டனரா? அவர்கள் ஜப்பானில் என்ன ஆனார்கள்?

மர்மத்தைத் துலங்கிக் கொள்ள ஆய்வு தொடர்கிறது.

இதில் ஆர்வம் உள்ள உலக மக்கள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

உலக சாதனை படைத்த மங்கையை அப்படியே விட்டு விடலாமா என்ன?என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேணடாமா?

 

 

தாய்க்குலம் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் பல்வேறு ஆய்வுகளைக் கவனித்து வருகின்றனர். மர்மம் தொடர்வது போல ஆய்வுகளும் தொடர்கின்றன!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . ..

 

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மறைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. என்றாலும் கூட அவர் அன்றாட செய்திகளில் அவ்வப்பொழுது முதலிடம் வகிக்கிறார். சமீபத்தில் விஞ்ஞானிகள் குழு நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர். அது கிராவிடேஷனல் அலைகளைப் பற்றி அவர் முன்னமேயே கூறி இருந்ததை மெய் என்று நிரூபித்தது.

 

 

   இப்போது அவர் தன் கைப்பட, ‘வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று எழுதிய அறிவுரைகளை ஏலம் போட்டதில் அது 18 லட்சம் டாலருக்கு விற்பனை ஆகி இருக்கிறது. (ஒரு டாலரின் இன்றைய மதிப்பு ரூபாய் 65)

 

ஜப்பானில் 1922இல் அவர் ஒரு சொற்பொழிவை ஆற்றச் சென்றிருந்தார். நோபல் பரிசு பெற்ற அவரது சொற்பொழிவு நான்கு  மணி நேரம் நடந்தது. 2500 பேர் அதைக் கேட்டனர். அங்கு தங்கி இருந்த போது ஒரு டெலிவரி பாய் அவரிடம் ஒரு செய்தியைக் கொடுக்கச் சென்ற போது அவனுக்கு டிப்ஸ் கொடுக்க அவர் விரும்பினார். ஆனால் போதுமான சில்லறை இல்லை. ஆகவே தன் கைப்பட அவர் குறிப்புகளை எழுதினார். அது தான் இன்று உலக பிரசித்தி பெற்ற ‘சந்தோஷக் குறிப்புகள் ஆகி விட்டன. ஒரு குறிப்பு ஹோட்டல் பேப்பரிலும் இன்னொரு குறிப்பு ஒரு துண்டுச் சீட்டிலும் எழுதப்பட்டன.

 ‘இதற்கு என்றேனும் ஒரு நாள் கொஞ்சம் மதிப்பு கிடைக்கும் என்று கூறியவாறே அவற்றை டெலிவரி பாயிடம் அவர் கொடுத்தார்.

 

அதில் ஒரு குறிப்பு இது: எப்போதும் அமைதியற்று வெற்றியை அடைய விழைவதை விட அமைதியான எளிய வாழ்க்கை சந்தோஷத்தைத் தரும் ( “A calm and modest life brings more happiness than the pursuit of success combined with constant restlessness.”)

இன்னொரு குறிப்பு இது : மனம் இருந்தால் மார்க்கம் உண்டு   ( “Where there is a will, there is a way.”)

 

ஐன்ஸ்டீன் ஆரூடம் கூறியது போலவே அவற்றின் மதிப்பு இன்று பதினோருகோடியே எழுபது லட்சம் ரூபாய் ஆகி விட்டிருக்கிறது.

பெரியோர் வாக்கு பொய்க்காது!

***

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: