பிறவி ஏன்? முக்தி எப்போது? (Post No.4388)

Written by S.NAGARAJAN

 

 

Date: 12 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-52 am

 

 

Post No. 4388

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அத்வைத ஸார விளக்கம்

பிறவி ஏன்? முக்தி எப்போது?

 

ச.நாகராஜன்

 

1

நம்மைக் குழப்பும் கேள்விகள் பல. பிறவி ஏன்? அது ஏன் வந்தது? எப்போது போகும்? – இப்படிப் பல கேள்விகள்

அத்வைத, விசிஷ்டாத்வைதம், த்வைதம் ஆகிய மூன்றும் மூன்று நிலைகளை நம் முன்னே வைக்கிறது.

 

அத்வைதம் தரும் சில பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுத் தரப்படுகின்றன.

இங்கு தரப்பட்டதைத் தவிர ஏராளமான கேள்விகளும் உண்டு. அதற்கு அத்வைத சித்தாந்தம் தரும் அற்புத பதில்களும் உண்டு.

இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது சிந்திக்க வேண்டும் என்பது பெரியோர் போதனை.

இப்போது இதோ , சில கேள்விகள், அதற்கான பதில்கள்- அத்வைத நோக்கில்.

 

2

ஆத்மா சுகஸ்வரூபன். அழிவற்றவன் என்று சொல்லப்படுகிறது.

அப்படியானால் ஆத்மாவுக்குத் துக்கம் எப்படி வந்தது?

உடலை அடைவதால் – சரீரத்தை அடைவதால் வந்தது.

 

சரீரம் – உடல் – எப்படி வந்தது?

பூர்வ கர்மத்துடன் கூடிய ஐந்து பூதங்களால் (பஞ்சீகிருத பூதங்களால்)

 

கர்மம் எத்தனை வகை?

மூன்று வகை.

அவை என்ன?

ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என மூன்று வகை

 

ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்றால் என்ன?

ஆகாமியம் என்றால் இந்த தேகம் எடுத்த பதினான்கு வயது முதல் செய்ததும் ,சஞ்சிதத்துடன் சேருவதுமாம்.

சஞ்சிதம் என்றால் பூர்வ ஜென்ம கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை.

 

பிராரப்தம் என்றால் பூர்வ ஜென்ம கர்மங்களில் எந்தக் கர்மத்தின் பலனாக இந்த ஜென்மம் வந்ததோ,அந்த தேகத்தினால் அனுபவிக்க வேண்டியவையாம்.

இந்தக் கர்மங்கள் எப்போது நசிக்கும்?

 

ஞானம் வந்தால் ஆகாமியம் சஞ்சிதம் நாசம் அடையும்.

பிராரப்தம் அனுபவத்தால் தான் நசிக்கும்.

ஆகவே அனைவரும் விதேக முக்தியின் பொருட்டு பிரயத்னம் செய்ய வேண்டும்.

 

 

விதேக முக்தி என்றால் என்ன?

தேகமில்லாத முக்தி

 

அப்படியானால் வேறு பல முக்திகளும் உண்டா?

ஆம்.

ஸாலோக்கியம், ஸாமீப்யம்,ஸாரூப்யம், ஸாயுஜ்யம் என் இப்படி நான்கு வகை முக்தி உண்டு.

 

 

 

இவைகளை அடைவதற்கு சாதனங்கள் என்ன?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு உண்டு.

 

சரியை என்ரால் என்ன?

பகவத் கைங்கரிய ரூபமான தாஸ பாவனை.

 

கிரியை என்றால் என்ன?

தேவதா பூஜை செய்தல்

 

யோகம் என்றால் என்ன?

யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை,தியானம், சமாதி ஆகிய எட்டு அங்கங்களைக் கொண்டது யோகம். இவற்றினால் பரமாத்மாவுடன் ஜீவாத்மா ஐக்கியம் ஆதல் அதாவது ப்ரம்மத்துடன் கலந்து பேதமற்று ஒன்றாக ஆதல்

 

 

ஞானம் என்றால் என்ன?

ப்ரம்ம் சைதன்யத்தை எங்குமாய் ஏகமாய் கண்டு ஆனந்தித்து  ஐக்கியமுற்றிருத்தல்.

 

இந்த நான்கில் முந்தைய மூன்றும் மறுபடியும் பூமியில் ஜனனத்தைக் கொடுக்கும்.

ஸாயுஜ்யமே முக்கியமான முக்தி.

 

 

இன்னும் புண்யம், பாவம், மிஸ்ரம், இராக த்வேஷம் போன்றவற்றிற்கும் விளக்கம் உண்டு. அவற்றை பின்னால் பார்ப்போம்

***

 

 

Leave a comment

2 Comments

 1. இது மிக முக்கியமான விஷயம். இதைப்பற்றிப் பல விளக்கங்கள் இருப்பது இயற்கையே ! விஷயம் கிடைத்தால் நமது தத்துவ வாதிகள் விடுவார்களா?

  உடலை அடைவதால் துக்கம் வருகிறது என்பதை முழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது ! ஏனெனில் துக்க நிவ்ருத்திக்கான முயற்சிகளும் இந்த உடலை வைத்துதானே செய்கிறோம்! “ஶரீரமாத்யம் கலு தர்ம சாதனம்”. இது மனிதப்பிறவிக்கு மட்டுமே சாத்யமானது, அழியும் உடலைக்கொண்டு அழியாத பரம்பொருளைப் பெறுகிறோம், இது எவ்வளவு பாக்கியம் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. அதனால் உடலை துக்கத்திற்குக் காரணமாக மட்டுமே பார்க்கவேண்டியதில்லை ! ஸ்ரீ ரமண பகவான் கூறியபடி, உடலை நாம் என்று கருதுவது தான் துக்கத்திற்குக் காரணம் . (தேஹாத்ம புத்தி- identification of the Self with the ego, and its embodiment, the body.)

  நமது பழைய நூல்களில் உடலை பலவாறு பழித்துக் கூறியிருக்கிறார்கள். இவற்றை உடல்மீது உள்ள நமது தீவிரப் பற்று அற வேண்டும் என்பதற்காகச் சொன்னதாகவே கொள்ளவேண்டுமே தவிற, உடலை வெறுத்து , அதனை வருத்த வேண்டும் என்று சொன்னதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதை திருமூலர் அழகாக விளக்குகிறார்:

  உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
  திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
  உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
  உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

  உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
  உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
  உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்
  றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

  ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் நானே இருக்கிறேன் என்று பகவான் கீதையில் சொல்லவில்லையா !
  உடல் நமது வினையினால் வருகிறது. “விதி காணும் உடம்பு ” என்பார் அருணகிரிநாதர். வினை நீக்கத்திற்கு ஞானம், கர்மம் [ ஸாங்க்யம், யோகம்] என்று இரு பழைய வழிகள் இருந்தன. ( த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா – கீதை) ஆனால் பகவான் கீதையில் அனன்ய பக்தியை மூன்றாவது வழியாகச் சொன்னார். இதையே மிகவும் சிறந்ததாகச் சொன்னார் ( குஹ்ய தமம்,குஹ்ய தரம், மே பரமம் வச, குஹ்யாத் குஹ்ய தரம், ஸர்வ குஹ்ய தமம் என்றெல்லாம் பக்திக்கு மட்டுமே அடைமொழி கொடுத்துச் சொல்கிறார் பகவான் கீதையில் ) சங்கரர் வழி அத்வைத ஸித்தாந்தத்தைப் பின்பற்றுவோர் ஞானம்-கர்மாவுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஆதி சங்கரர் பக்திபரமான பல துதிகளை இயற்றியிருக்கிறார்; ஆனால் பக்தியே முக்திக்கு நேர் சாதனம் எனச் சொல்லவில்லை! ஆனால் நமது நாயன்மார்கள் பக்தியையே சாதனமெனச் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் தொகுத்த மாதிரி, அருணகிரி நாதர் சொல்கிறார்:
  “ஆன பய பக்தி வழிபாடு பெறுமுக்தி
  யதுவாக நிகழ் பத்த சன வாரக்காரனும் ”
  என வேளைக்காரன் வகுப்பில் சொல்கிறார்.
  சங்கர பரம்பரையில் வந்தாலும், காஞ்சி மடத்தின் 59வது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீ போதேந்த்ர ஸ்வாமிகள் கலிகாலத்தில் பக்தியே வழி என்பதை தெளிவாகச் சொன்னார்:
  “கலி கல்மஷ சித்தானாம்
  பாபத் த்ரவ்ய ஜீவினாம்
  விதி கர்ம விஹீனானாம்
  கதி கோவிந்த கீர்த்தனம். ”
  இதையே ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரும். ஸ்ரீ ரமண பகவானும் சமீப காலத்தில் சொன்னார்கள்.. [Either enquire into your true Self or surrender.] பகவான் முக்தி கொடுத்தாலும் கொடுப்பார், பக்தியை எளிதில் தரமாட்டார் என்பார் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் ! பக்தியையே ஐந்தாவது புருஷார்த்தமாகச் சொல்வதும் உண்டு – அது சாதனமாகமட்டுமல்லாது, சாத்யமாகவும் இருக்கிறது! இதுவே கீதை நமக்குக் காட்டித்தரும் பாதை!

 2. சிக்கலான விஷயத்தை எளிதாக விளக்கியுள்ளளீர்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: