ரிக் வேதம் உருவாகப் பல நூற்றாண்டுகள் பிடித்தன! (Post No.4401)

Written by London Swaminathan 

 

Date: 16 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-29

 

 

Post No. 4401

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ரிக் வேதம் இப்போதுள்ள வடிவில் உருவாக  பல நூற்றாண்டுகள் ஆனது அதிலுள்ள பல துதிகள் மூலம் தெரிகின்றன. முதல் மண்டலத்திலும் கடைசி மண்டலத்திலும் உள்ள பெரும்பாலான துதிகள் காலத்தால் பிந்தியவை என்றும் இடையிலுள்ள ஆறு மண்டலங்கள் காலத்தால் முந்தியவை என்பதும் பொதுவாக உள்ள கருத்து. 500 ஆண்டுக் காலத்தில் தோன்றிய  பாடல்கள் இருக்கலாம் என்பது பலர் கருத்து.

 

ரிக்வேதம் என்பது கவிகளால் இயற்றப்பட்டது அன்று; வானத்தில் எப்போதுமுள்ள ஒலிகளை ரிஷிகள் கண்டு (மந்த்ர த்ருஷ்டா:) அளித்தனர் என்பது இந்துக்கள் ஏற்கும் கொள்கை; ஆயினும் அதை அவர்கள் வெவ்வேறு காலங்களில் கேட்டு அல்லது கண்டு அளித்தனர் என்பதை வேதத்தில் உள்ள குறிப்புகளாலும் இலக்கண அமைப்புகளாலும் அறிய முடியும்; இதை ஒப்புக்கொள்வதால் வேதத்தில் புதியதும் பழையதும் உண்டு என்று அறிந்து அவைகளில் எது எது புதியது என்று சொல்ல முடியும்; அதற்குச் சில உத்திகள் உள்ளன.

இதனால் வேதம் பற்றிய நம்பிக்கை பாதிக்கப்பட மாட்டாது என்றே நான் கருதுகிறேன். “உண்மையே உலகில் வெல்லும் – சத்யம் ஏவ ஜயதே” – என்பதை யார் எந்த மொழியில் எப்படிச் சொன்னாலும் , புதிய இலக்கணத்துடன் சொன்னாலும் பழைய இலக்கண விதிகளின்படி சொன்னாலும், வெவ்வேறு மொழிகளில் சொன்னாலும் அந்த மந்திரத்தின் பொருள் மாறாது. இதனால்தான் வேதம் அனாதியானது; என்றுமுளது என்று நாம் சொல்கிறோம். அதாவது அழியாத தர்மங்கள், கொள்கைகள், பண்புகள் அதிலுள்ளன.

 

ரிக்வேதத்திலுள்ள பத்து மண்டலங்களில் 2, 3, 4, 5, 6, 7 ஆகிய ஆறு மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் (2- க்ருத்சமடர்  3-விஸ்வாமித்ரர், 4- வாமதேவர், 5- அத்ரி, 6-பரத்வாஜர், 7-வசிஷ்டர்) எனப்படும்; அதாவது ஒரு ரிஷி பரம்பரையில் வந்த தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்பவர்கள் கண்டு (கேட்டு) நமக்கு அளித்தது. வேதத்தில் “மிகப் பழங்காலத்தில்”, “முன்னோர்கள் சொன்னது” என்றெலாம் வாக்கியங்கள் வருகின்றன. அப்படியானால் அந்த ரிஷிகளுக்கு முன்னதாகப் பல தலைமுறைகள் இருந்தன என்பதை நாம் அறிகிறோம்.

சுமார் 450 புலவர்கள் இயற்றிய சுமார் 2500 பாடல்களை உடைய சங்கத் தமிழ் இலக்கையமும் 300, 400 ஆண்டுகளில் உருவானவையே என்பர் அறிஞர் பெருமக்கள். ஏனெனில் கடை எழு வள்ளல்களைத் தனித் தனியாக பாடிய புலவர்களை நாம் புற நானூறு முதலிய நூல்கள் மூலம் அறி வோம். மலைபடுகடாம் போன்ற நூல்களில் அவர்களை “கடை எழு வள்ளல்கள்” என்று படிக்கும்போது , அவ்வாறு அவர்களை ஒரு அணி சேர்த்துப் பாடுவதற்கு சில நூற்றாண்டுக் காலமாவது ஆகியிருக்கும்; தற்காலம் போலத் தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்களை ஒரு தொகையில் சேர்த்து “கடை எழு” என்று சொல்லுவதால் இதுதான் காலத்தால் பிந்தியது என்று நாம் கருதுகிறோம்.

 

இது போலவே ரிக் வேதத்திலும் சில குறிப்புகள் உள்ளன.

இது பற்றி உரையாற்றிய  டாக்டர் கடே என்பார் சில விஷயங்களைப் பட்டியல் இடுகிறார்; அவைகளைத் தொட்டுக் காட்டுவன்:-

 

எட்டாவது மண்டலத்தின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ள 11 துதிகள் வாலகில்ய துதிகள் என்று அழைக்கப்படும். இது பொருந்தாத ஒரு இடத்தில் இருப்பதாலும், இதற்கு சாயனர் உரை (பாஷ்யம்) எழுதாததாலும் இதை பிற்சேர்க்கை எனக் கருதுவாரும் உளர். ஆயினும்  காத்யாயனர் தனது அனுக்ரமணியில் (Index) இவைகளைக் குறிப்பிடுவதால் இரண்டாயிரத்து ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னையது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

 

 

மேலும் தைத்ரீய ஆரண்யகத்திலேயே (1-23) வாலகில்யர் பற்றிய விஷயங்கள் காணப்படுகின்றன.

 

ஆப்ரி துதிகள்

 

ஆப்ரி துதிகள் என்பனவும் பல கேள்விக ளை எழுப்பும் விநோதத் துதிகள் ஆகும்.

சாம வேதம், யஜூர் வேதம் ஆகியவற்றில் இருக்கும் துதிகள் போலுள்ளதால் இவைகளும் யாக நோக்கங்களுக்காக இயற்றப்பட்டதாக இருக்கலாம். பத்து மண்டலங்களிலும் பத்து துதிகள் விரவிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் 11 மந்திரங்கள்/ பாடல்கள் இருக்கும். 11 கடவுளரை நோக்கி, ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் மந்திரங்கள் இருக்கும். அவையாவன: 1.அக்னி, 2. தனூனபாத் அல்லது நராம்சச (இவை அக்னியின் இரு வேறு அம்சங்கள்), 3. ஈலா (தானம்), 4.பர்ஹி: (யாகத்துக்கான புல்), 5. தேவீ: த்வார: 6.உஷசானகௌ 7.தைவ்யௌ ஹோதாரௌ (அக்னி, ஆதித்யன் முதலானோர்), 8.ஸரஸ்வதீ, ஈளா, பாரதீ , 9.த்வஷ்ட (படைப்போன்), 10. வனஸ்பதி 11.ஸ்வாஹாக்ருதி

ரிக் வேதத்தின் துதிகள் இரு வடிவங்களில் கிடைக்கின்றன: 1. சந்தி பிரிக்காமல், இலக்கணப்படி உள்ள சம்ஹிதை, 2.பத பாடம். பத பாடம் என்பதில் சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

ஆறு துதிகளுக்குப் பத பாடம் இல்லை: 7-59-12; 10-20-1; 10-121-10; 10-190-1/3. இவைகளும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக அறிஞர் பெருமக்கள் கணிப்பர்.

 

புதியது, பழையது பற்றி  துதிகளிலேயே சில சான்றுகள் கிடைக்கின்றன; ஒரு மண்டலத்தில் மட்டும் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்:

 

7-18-1

த்வே ஹ யத்பிதர ஸ்ரவன்ன இந்த்ர விஸ்வா வாமா ஜரிதாரோ அசன்வன்

 

7-22-9

யே ச பூர்வே ருஷய; யே ச நூத்னா: ப்ரஹ்மாணி ஜனயந்த விப்ரா:

7-29-1

உதோ கா தே புருஷ்யா இதாசன் யேஷாம் பூர்வேஷாம் ச்ருணோர் ருஷீணாம்

7-53-1

தே சித்தி பூர்வே கவயோ க்ருணந்த:

7-76-4

த இத் தேவானாம் சதமாத  ஆசன் க்ருதாவான: கவய: பூர்வ்யாச:

7-91-4

புரா தேவா அனவத்யாச ஆசன்

இவைகளில் புரா (முன்பு), பூர்வ கவய: (முன்னாள் கவிஞர்கள்) என்ற சொற்றொடர்கள் வருவதைக் ‘கொஞ்சம்’ சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களும் கண்டுபிடித்துவிடலாம்.

 

புதிய கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் 7-56-23, 7-15-4, 7-59-4, 7-61-6, 7-98-1 ஆகியவற்றில் காணலாம். இதில் நவ (புதிய) என்ற சொல் வருகிறது. வேதங்களை நன்கு அறிந்தவர்கள் கண்டுபிடித்தவை இவை.

இலக்கணமும் , சில சொற்றொடர்களும் கூட புதிய செய்யுட்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

பெயர் சொற்கள், வேற்றுமை உருபுகள், வினைச் சொற்களை ஆராய்ந்தோர் குறைந்தது 16 வேறுபாடுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

 

சொற்களைப் பொருத்தமட்டில் ‘அக்து’, அத்ய (வேகம்), அம்பிஷ்டி (உதவி)க்ஷிதி (இருப்பிடம்) சன: (ஆனந்தம்) முதலிய பழைய சொற்கள் ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே காணப்படும்.

 

மாயாஜாலம், நோய்கள், சடங்குகள், தத்துவம், தொழில்நுட்பச் சொற்கள் முதலியன புதிய துதிகளிலும், அதர்வ வேதத்திலும் மட்டுமே காணப்படும்.

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கையாளப்பட்ட பல சொற்களை மத்திய கால இலக்கியத்தில் காணமுடியாது. சங்க காலத்தில் நிகழ்காலம், இறந்த காலம், வருங்காலம் என்ற மூன்று காலங்கள் கிடையா. பல உவமை உருபுகள் தொல்காப்பியப் பட்டியலில் உள்ளன. ஆனால் சங்க காலத்தில் கூட 2500 பாடல்களில் அவை இல்லை! இதை ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். உலகில் எல்லா மொழிகளும் மாற்றத்துக்குட்பட்டவை. சந்தி இலக்கணமும் வேத காலத்திலும் பாணினி காலத்திலும் வேறு வேறு.

 

யாபிலக்கணமும் வேதத்தில் மாறிக்கொண்டே வருகிறது. உஷ்ணிக், ககுப, ப்ருஹதி, சதீப்ருஹதீ ஆகியன ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

 

அதர்வ வேதத்தில் காணப்படும் ரிக்வேதப் பாடல்களும் புதியவை.

 

இன்னொரு பொதுவான வித்தியாசம்:- பழைய துதிகள், இறைவனை மட்டும் துதித்தன. பிற்காலத்தில் சடங்குகள், சமயத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் முதலியன விவாதிக்கப்பட்டன.

தான துதிகளும் பெரும் சடங்குகளுக்குப் பின்னரே, பெரிய யாகங்களுக்குப் பிறகே தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு.

சமபாஷணை/ உரையாடல் உள்ள துதிகளும் பிற்காலத்தியவை; எடுத்துக்காட்டுகள்

புரூருவஸ் — ஊர்வசி உரையாடல்

யமா- யமீ உரையாடல்

அகஸ்தியர் – லோபாமுத்ரா உரையாடல்

முதலியன.

எனது கருத்து:

 

இவை எல்லாம் வெள்ளைக்காரர் வாதங்கள்; அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இந்திய வேத பண்டிதர்களும் பேசிய உரை இது; நாம் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை; பல பழைய கொள்கைகளை புதிய ஆராய்ச்சி உத்திகள் பொய்யாக்கிவிட்டன. மேலும் மொழி வேறு பாடு என்பதும் மொழிக்கு மொழி வெவ்வேறு வேகத்தில் நடைபெறக்கூடும்.

 

ஆக இவை எல்லாம் ஆராய்சிக்கு ‘வித்து’ என்று வைத்துக்கொண்டு மற்ற பழங்கால மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் என்று மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக வைத்துக்கொண்டு ரிக் வேதத்துக்கு காலம் கற்பித்தார். ஆனால் உலகில் வேறு எந்த மொழிக்கும் இப்படிக் காலம் நிர்ணயித்ததாகத் தெரியவில்லை.

 

இந்தியப் பண்பாட்டில் ஊறித் திளைத்த பால கங்காதர திலகர்,  அரவிந்தர் போன்றோரின் வேதக் கொள்கைகளை நாம் பின்பற்றுவது நல்லது.

 

சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: