Written by London Swaminathan
Date: 20 NOVEMBER 2017
Time uploaded in London- 13-15
Post No. 4415
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சோழநாட்டில் திருமங்கை என்னும் ஊரில் பிராமண குலத்தில் உதித்தவர். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுச் செந்தமிழில் விளையாடினார். ஆழ்வார்கள் பாடிய அமுதப் பாசுரங்களைப் பருகினார். இராமானுஜர் நூற்று அந்தாதி பாடிய திருவரங்கத்தமுதனார் வம்சத்தில் தோன்றியவர். கோனேரி அப்பனையங்கார் இவரது பேரன். ‘குலத்தளவே ஆகுமாம் குணமென்னும்’ ஔவையார் மொழிக்கேற்ப, வைணவ குலத்தின் ஆசார அனுஷ்டானங்களை அப்படியே பின்பற்றி வந்தார். வீர வைஷ்ணவராகத் திகழ்ந்தார். பெருமாளின் அருளில் பிறந்த பிள்ளை ஆதாலால் பிள்ளைப் பெருமாள் ஆனார். ஆனால் பெற்றோர் சூட்டிய திரு நாமம்- ரங்கநாததாசன். மற்றொரு பெயர் மணவாளதாசன்.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் வாழ்ந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் , நாயக்கரின் அரண்மனையில் செய்த அற்புதத்தை முன்னரே எழுதியுள்ளேன் ( கீழே இணைப்பு முகவரி உள்ளது). இப்பொழுது அவர் செய்த மேலும் சில அற்புதங்களைக் காண்போம். தவ வலிமையாலும், சொல் புலமையாலும் அவர் பல அற்புதங்களைச் செய்தார்; யமகம், சிலேடை, திரிபு என பல வகைப் பாடல்களை பாட வல்லவரான அவர் அஷ்டப் பிரபந்தம் என்று அழைக்கப்படும் எட்டு அருமையான தமிழ் நூல்களை மொழி அன்பர்களுக்கு வழங்கியுள்ளார். “அஷ்டப் பிரபந்தம் படித்தவன் அரைப் பண்டிதன்” என்னும் சொல் வழக்கினால் அதன் பெருமை நன்கு விளங்கும். அதாவது, அத்துணை சிறிய அளவு படித்துவிட்டாலே பண்டிதன் என்னும் பாதையில் பாதி தூரம் சென்றவர் ஆகிவிடுவோம்.
பாலும் தேனும் அமுதும் கைக்கும்படி பாட வல்லவர். கவிநயம் உணர்ந்த புலவரெலாம் இவரை திவியகவியெனக் கொண்டாடும் சிறப்பு வாய்ந்தவர் (திவிய= திவ்ய = தெய்வப் புலவர்)
இவர் தொடர்பாக வழங்கும் இன்னும் ஒரு சொல் வழக்கு, “அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன்” — என்பதாகும் இதற்கு இரு வேறு விளக்கங்கள் உண்டு.
ஐயங்காருக்கு ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டுள்ள அரங்கநாதனைப் பாடுவதிலே பேரின்பம் கிடைத்தது. ஆதலால் வேறு எவரையும் பாட மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்தார். பார் புகழும் திருவேங்கடத்தானைப் பாடாத ஆழ்வார் இலையே; அவர் மீதும் உங்கள் செந்தமிழில் இனிய கீதம் இசைக்கக் கூடாதா? என்று அன்பர்கள் வேண்டினர். ஆனால் இவரோ மாட்டேன் என்று சொல்லிவிட்டார். திருப்பதி மலையில் வீற்றிருந்த வெங்கடாசலபதியைத்தான் இவர் மலை மேதுள்ள குரங்கன் என்று சொன்னார். இரு பொருள்படும் சிலேடைக் கவியில் வல்லவர் அல்லவா?
கிருஷ்ணமாச்சாரியார் சொல்லும் விளக்கம்
“ஒரு நாள் இரவில் இவர் கனவில் திருவேங்கடத்தான் தோன்றி எம்மையும் பாடுக என்றனன். அப்போது ‘மாட்டேன்’ என்று சொல்லி மறுத்து விட்டார் இதைத் தொடர்ந்து இவருக்கு கழுத்தில் கண்டமாலை தோன்றியது உடனே தம் தவற்றை உணர்ந்து திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி என்று இரண்டு பிரபந்தங்களைப் பாடினார்; கண்டமாலை நோயும் காணாமற் போயிற்று!”
இது 1906 ஆண்டில் திவான் பகதூர் கிருஷ்ணமச்சாரியார் எழுதிய விளக்கம்.
இது சென்னை பல்கலைக் கழக பாடபுத்தகமாக அங்கீகரிக்கப்பட்டதால் இதுவே சரியான விளக்கம்.
சிலர் ஐயங்கார் குறிப்பிட்டது ‘மந்தி’ பாயும் வேங்கட மலை என்ற பொருள் அல்ல; குரங்கன் என்பது மானைக் (குரங்கம்) கையில் ஏந்திய சிவனைக் குறிப்பிட்டது என்பர். சைவர்கள் இவரிடம் வந்து சிவனைப் பாடும்படி கேட்ட போது இவ்வாறு சொன்னதாகக் கதை கட்டிவிட்டனர்.
இவருடைய கவிகளில் அப்பர் பெருமான், வள்ளுவப் பெருமான் ஆகியோரின் தாக்கத்தைக் காணலாம்.
“கற்றதனால் பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்” என்பான் வள்ளுவன்.
ஐயாங்காரோ 14 உலகம் சுற்றி வந்தாலும், பல நூல்கள் கற்றார் எனினும் அரங்க நாதனை வழிபடாவிட்டால் யாது பயன்? என்கிறார்:
கற்றாரெனினும் பதினாலுலகுங்
கண்டாரெனினுந் தண்டா மிருபற்
ற்றாரெனினுந்த் திருமாலடியார
ல்ரல்லாதவர் வீடில்லாதவரே
பொற்றாமரையாள் கணவன் றுயிலும்
பொற்கோயிலையே புகழ்வார் பணிவார்
மற்றாரெனினும் பெற்றாரவரே
வானோர் திருமாமணி மண்டபமே
–திருவரங்கக் கலம்பகம்
அரங்கனைப் புகழ்வார் மட்டுமே வைகுண்டத்திலுள்ள திருமாமணி மண்டபத்தைப் பெற்றவர்கள் என்பது இதன் பொருள்.
சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே
என்று அப்பர் பாடினார் சிவபெருமான் மீது.
இதன் எதிரொலியை ஐயங்கார் பாடலில் காணலாம்:-
பாதியா யழுகிய கால்கையரேனும்
பழிதொழிலு மிழிகுலமும் படைத் தாரேனும்
ஆதியா யரவணையா யென்பராகி
லவரன்றோ நாம் வணங்கு மடிகளாவர்
சாதியா லொழுக்கத்தான் மிக்காரேனுஞ்
சதுர் மறையால் வேள்வியாற் றக்கோரேனும்
போதினான் முகன் பணியப் பள்ளி கொள்வான்
பொன்னரங்கம் போற்றாதோர் புலையர்தாமே.
இவர் பாடிய எட்டு நூல்கள் (அஷ்டப் பிரபந்தம்) பின் வருமாறு:
திருவரங்கத்தந்தாதி – 105 பாடல்கள்
திருவரங்கக் கலம்பகம் – 105
திருவரங்கத்து மாலை- 112
திருவேங்கட மாலை -103
திருவேங்கடத்தந்தாதி-101
அழகர் அந்தாதி- 101
108 திருப்பதி அந்தாதி-114
ரெங்கநாயகர் ஊசற்றிரு நாமப் பாடல்கள் -32
ஆகமொத்தம் – 773
இவர் திரு நறையூர் நம்பி விஷயமாக மேக விடு தூது ( 205 பாடல்கள்), வீர வைணவ நிலையை நாட்டும் விடுதிக் கவிகள் 32 ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.
ஒருமுறை திருவரங்கத்துக் கோவில் பசு ஒன்று பொது நிலத்தில் மேய அதை சைவர்கள் பிடித்து வைத்துக்கொண்டனர். சிவன் மீது பாடல் பாடினால் அதை விடுவிப்போம் என்றனர். அவரும் சம்மதித்தார். அவர்கள் அருகிலுள்ள சிவத் தலமான திருவானைக் காவலைச் சேர்ந்தவர்கள். பசு இல்லாமல் விசுவ ரூப தரிசனம் தடைப்படுமே என்று அஞ்சிய ஐயங்கார் பாடலைப் பாடுவதாகவும் உடனே அதை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார். அவர்கள் பாடலைப் பாடுங்கள் என்று சொன்னவுடன் மங்கை பாகன் என்று தொடங்கி பின்னர் முடித்துத் தருவதாகச் சொன் னார். பசுவும் விடுதலை பெற்றது பின்னர் அவர் பாடிய பாடலோ சிவனை விட உயர்ந்தவர் பெருமாள் என்று முடிந்தது! இதோ அந்தப் பாடல்:–
சிவனை விட உயர்ந்தவர்!
மங்கைபாகன் சடையில் வைத்த கங்கைநீர் யார்பதத்து நீர்
வன்சமேவு முனிவனுக்கு மைந்தனான தித்ல்லையோ
செங்கையாலிரந்தவன் பால மார கற்றினார்
செய்ய தாளின் மலரரன் சிரத்தினா தில்லையோ
வெங்கண் வேழமூலமென்ன வந்ததுங்கள் தேவனோ
வீறு வாண லமரில் அன்று விரலழிந்ததில்லையோ
அங்கண் ஞால முண்டபோது வெள்ளி வெற்பகன்றதோ
ஆதலா ரங்கனின்றி வேறு தெய்வமில்லையே
புராணக் கதைகளில் சிவனுக்கும் மேலாக விஷ்ணு செய்த விஷயங்களை உள்ளடக்கியது இப்பாடல்; கங்கை நீர் விஷ்ணுவின் பாதத்திலிருந்து சிவன் தலைமீது விழுந்தது. விஷ்ணு உல கையே உண்டபோது அதில் கயிலையும் சென்றது சிவன் கை விரலில் சிக்கிய பிரம்மனின் கபாலம் விஷ்ணுவால் அகன்றது என்றெல்லாம் பாடித்தீர்த்தார்.
சுமார் எண்பது ஆண்டுக் காலம் வாழ்ந்த ஐயங்காரை, அவர் திருவரங்கத்தானை வழிபட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு நொண்டிப் ப்சு மோதியது ; அவர் அங்கேயே உயிரைவிட்டு அரங்கன் திருவடிகளை அடைந்தார்.
சைவ- வைணவ சண்டை ஒரு புறம் இருக்க,செந்தமிழ்க் கடலில் ஐயங்கார் இயற்றிய பல கவிதை முத்துக்கள், ஐயங்கார் மூலம் சேர்ந்தது என்றால் அது மிகையல்ல!
ஐயங்கார் செய்த அற்புதம்
https://tamilandvedas.com/tag/ஐயங்கார்/
பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்பவர் செய்த அற்புதம்பற்றி 1908 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் பெயரகராதியில் ஈக்காடு இரத்தினவேலு …
–Subham–
AL Anbarasu
/ December 29, 2017வணக்கம்,
“அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன்”
இங்கு குரங்கன் என்பது ஏன் குன்று+அரங்கன்= குரங்கன். குன்றின் மீது இருக்கும் அரங்கனை பாடமாட்டேன் என்று பொருள் கொள்ளக்கூடாது ?