Written by London Swaminathan
Date: 21 NOVEMBER 2017
Time uploaded in London- 8-16 am
Post No. 4419
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
சம்ஸ்கிருதத்திலுள்ள நீதி நூல்கள் கடல் போலப் பெருகி இருக்கின்றன. தமிழில் திருக்குறள் முதலிய 18 நூல்களில் நீதிகள் குவிந்து கிடப்பதை நாம் அறிவோம். அவ்வையின் ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், அதி வீரராம பாண்டியனின் வெற்றி வேற்கை, முனைப்பாடியாரின் அறநெறிச்சாரம், பெயர் தெரியாமல் அழிந்துபோன் ஆசிரியர்கள் யாத்த விவேக சிந்தாமணி, நீதி வெண்பா, குமரகுருபரின் நீதி நெறி விளக்கம், பாரதியாரின் புதிய ஆத்திச் சூடி– இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் சம்ஸ்கிருதத்தில் உள்ள நீதி நூல்களை அடுக்க முடியாது; தொகுக்க முடியாது; வகுக்க முடியாது; பகுக்க முடியாது!! அவ்வளவு இருக்கின்றன. சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் பலசுவைப் பாடல்கள் இடையே நீதி ஸ்லோகங்கள் காணப்படுகின்றன; மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்திலும், சாந்தி பர்வத்திலும் ஆயிரக் கணக்கில் நீதிகள் , பொன் மொழிகள் காணப்படுகின்றன. பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம் போன்ற கதைகள், சிறு வயதிலிருந்தே நீதிகளை போதிக்க உதித்த நூல்கள். இது தவிர நீதிக்காகவே — அதாவது நீதி நெறி பற்றிய ஸ்லோகங்கள் மட்டுமே அடங்கிய நூல்களின் பட்டியல்– நீண்ண்ண்ண்ண்ண்ண்ட பட்டியல்:-
சுக்ர நீதி
சாணக்ய நீதி
விதுர நீதி
பர்த்ருஹரியின் நீதி சதகம்
காமாந்தகீய நீதிசார
வரருசி நீதிசார
கடகாபரண நீதிசார
வேதாளபட்ட நீதிப்ரதாப
பல்லட சதக (வல்லாளன்)
பில்ஹணரின் சாந்தி சதக
சம்புவின் அன்யோக்திமுக்தலதா சதக
குசுமதேவனின் த்ருஷ்டாந்த சதக
குமானியின் உபதேச சதக
நாகராஜாவின் பாவசதக
சங்கரரின் சதஸ்லோகி
சாணக்ய நீதி
சாணக்ய சதக
சாணக்ய ராஜநீதி
வ்ருத்த சாணக்ய
லகு சாணக்ய
சாணக்ய சார சங்ரஹ ராஜநீதி சாஸ்திர
கௌடில்யரின் அர்த்த சஸ்திரம் (சாணக்ய)
சதகம் என்றால் நூறு ஸ்லோகங்கள் என்று பொருள்; பதிகம் என்றால் பத்து பாடல்கள் கொண்டது.
இவைகளிலுள்ள விஷயங்களைக் காணும் முன் ஒரு ஆறு நூல்களின் தொகுப்பை மட்டும் காண்போம்.
சாணக்யர், கௌடில்யர், குடிலர் என்ற பெயரால் அழைக்கப்படும் பிராமணன் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்துவிட்டு குடிசையில் போய் அமர்ந்து கொண்டார். இவ்வளவுக்கும் அவர் அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த மௌரியப் பேரரசின் — மகத சாம்ராஜ்யத்தின் மந்திரி — பிரதம மந்திரி!
நந்த வம்ச அரசர்கள் — இந்து மத வேள்விகளைக் கிண்டல் செய்து, அவைகளுக்குத் தடை போட்டு வந்தனர்; விடை ஏதும் கிடைக்காமல் நாடு தவித்தது. ஒருநாள் ஐயர் குடுமியுடன், சாணக்கியர் நடந்து கொண்டிருந்தார். புல்லோ கல்லோ தடுக்கியவுடன் தடுமாறினார். கெக்கெக்கென்று சிரித்தனர் நந்த வம்ச அரச குடும்பத்தினர். தடுமாற்றத்தில் ஐயருக்கு குடுமி வேறு அவிழ்ந்து போயிற்று.!
உங்கள் வம்சத்தை வேரறுக்கும் வரை இந்தக் குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்தார். (துரியோதனனின் ரத்ததைக் கூந்தலில் தடவும் வரை தலை முடியைப் பின்ன மாட்டேன் என்று சபதம் செய்து வெற்றி கண்ட திரவுபதி போல).
மயில்களை வளர்க்கும் முரா வம்சத்தில் உள்ள சில வீரர்களுக்கு பஞ்ச தந்திரங்களையும் சாம,தான பேத, தண்ட அணுகுமுறைகளையும் கற்பித்தார். நவ நந்தர்களை நடு நடுங்க வைத்தார். சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது. மௌரியப் பேரரசு உதய சூரிய ன் போலத் தொடுவானத்தில் தோன்றியது. அசோகன் காலம் வரை இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டது.
அந்த சாணக்கியர் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அர்த்த சாஸ்திரம்தான் உலகில் தோன்றிய முதல் பொருளாதார நூல். வரி விதிப்பு, எவ்வளவு வரி என்பது முதல் படை அமைப்பு வரை அவர் பேசுகிறார்.
அவர் பேசாத பொருளாதார விஷயம், அரசியல் கொள்கை ஏதுமில்லை. ஐயர் குடுமியை முடிந்து கொண்டு நீதி வாக்கியங்களை உதிர்த்தார்; பின்னர் மொழிந்தார்; இறுதியில் மழை போலப் பொழிந்தார். அவர் எழுதியதாக அவர் பெயரிலுள்ள ஆறு நூல்களை ஒரு வெளிநாட்டு அறிஞர் ( Ludwik Sternbach லுட்விக் ஸ்டேன்பாக்) ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிட்டார்.
சாணக்கிய சபதம் என்னும் நாடகம் தமிழ்நாட்டில் பலரால் இயற்றப்பட்டு, பலரால் நடிக்கப்பட்டும் இருந்தது; நூறு ஆண்டுகளுக்கு முன் வரை; வெள்ளைக்காரனுக்கு எதிராக போராட்டம் பெருகியவுடன் அவை எல்லாம் மறையத் தொடங்கின. பல தமிழ் நாடகங்கள் இன்றும் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைக்கின்றன.
சாணக்கியர் பெயரில் உள்ள ஆறு நீதி நூல்கள்:-
- வ்ருத்த சாணக்ய
எளிய நடையில் உள்ளதை சாணக்ய நீதி தர்பண என்பர் (தர்பண= கண்ணாடி)
2.வ்ருத்த சாணக்ய
கடின நடையில் உள்ள நூல்
3.சாணக்ய நீதி சாஸ்த்ர
இதில் 109 கவிகள் உண்டு; வேறு ஒருவர் இதைத் தொகுத்து அளிப்பதாக முதல் ஸ்லோகத்திலேயே சொல்லிவிடுகிறார்.
4.சாணக்ய சார சம்க்ரஹக
இதில் 300 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன. இதுவும் வேறு ஒருவரால் தொகுக்கப்பட்டதே. கங்கையையும் காசியையும் புகழ்வதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.
5.லகு சாணக்ய
எட்டு அத்தியாயம் உடையது; ஒவ்வொன்றிலும் 10 முதல் 13 ஸ்லோகங்கள் வரை உள்ளன. இதை ஒருவர் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதால் ஐரோப்பா முழுதும் பிரபலமாகியது.
6.சாணக்ய ராஜ நீதி சாஸ்த்ர
எட்டு அத்தியாயங்களில் 534 ஸ்லோகங்கள் இருக்கின்றன. திபெத்திய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
இவை அனைத்தும் சாணக்யரால் எழுதப்பட்டவையா, சொல்லப்பட்டவையா என்று எவராலும் சொல்ல முடியவில்லை. ஆனால் சாணக்யர் என்றால் ‘ராஜ தந்திரம்’, ‘நீதி’ என்ற பொருள் வந்துவிட்டது
இவை தவிர ஏராளமான நீதி நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உண்டு. ஆன்மீக விஷயம் பற்றிச் சொல்லும் நீதி வாசகங்கள் அடங்கிய நூல்களும் உள்ளன. அவைகளைப் பொதுவாக இதில் சேர்ப்பதில்லை.
அடுத்த சில கட்டுரைகளில் சாணக்ய நீதியிலுள்ள விஷயங்களை தமிழ் நீதி நூல்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறேன்.
TAGS:– சாணக்கியர், நீதி நூல்கள், கௌடில்யர், நீதி சாஸ்திரம்
–சுபம், சுபம்–