Written by London Swaminathan
Date: 23 NOVEMBER 2017
Time uploaded in London- 18-30
Post No. 4425
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
விஷ்ணு ஏன் தலையை இழந்தார்?
பிரம்மா ஏன் தலையை இழந்தார்?
பிருகு ஏன் தலையை இழந்தார்?
தக்ஷன் ஏன் தலையை இழந்தார்?
கணபதி ஏன் தலையை இழந்தார்?
புராண, இதிஹாசங்களில் சுவையான கதைகள் உள்ளன. ஆனால் அவைகளுக்குப் பின்னுள்ள தத்துவங்கள் மறைந்து விட்டன. அவைகளை பின்னொரு சமயம் தனிதனியாகக் காண்போம். முதலில் தலை இழந்த கடவுளரின் கதைகளைச் சுருக்கமாகக் காண்போம். விஷ்ணுவுக்குத் தலை போன கதை சதபத பிராமணம் முதலிய நூல்களில் மட்டும் உள்ளது; வேறு எங்கும் காணக் கிடைக்கில.
முதலில் கணபதி!
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குத் தலை கழன்று, யானைத் தலை வந்து, ஆனைமுகன் ஆனதற்கு இரண்டு வரலாறுகள் உண்டு. பார்வதி தேவி குளியல் அறைக்குள் நுழைந்த சமயம் ‘மகனே! எந்த ஆண்மகன் வந்தாலும் இந்தப் பக்கம் வராமல் பார்த்துக்கொள்’ என்று கண
பதியைக் காவல் வைவத்தாள் தேவி.
அவரும் ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார். அப்போது சிவ பெருமான் அங்கே வரவே அவரையும் தடுத்தார் கணபதி; யாரென்று பாராமல், அல்லது மகன் என்றும் பாராமல்– அவர் தலையைச் சிரச் சேதம் செய்தாராம் சிவ பெருமான்.
‘முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடிசெய்த அதிசூரனுக்கே’ இந்த கதி. பிள்ளைக்கு ஒரு குறை என்றால் தாய் வாளாவிருப்பாளா? சிவனைக் கோபித்தார்; உடனே தலை வேண்டும் என்றார். சிவனும் அருகில் இருந்த ஆனைத் தலையைத் தூக்கி அவர் தலையில் பொருத்தினார்.
அந்தக் காலத்தில் தலை அறுவைச் சிகிச்சை எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்தது போலும்! கண்ணை மாற்றி ஆபரேஷன் செய்த கண்ணப்ப நாயனாரை அறிவோம்; ஆயிரம் தாமரை மலரில் ஒன்று குறைந்ததே என்று சிவனுக்கு கண் தாமரையால் பூஜித்த விஷ்ணுவை அறிவோம்; பின்வரும் கதைகளில் தலை ஆப்ரேஷன் பற்றியும் அறிகிறோம்.
கணபதி பற்றிய இரண்டாவது கதை:-
சனைச்சரனைக் கண்டால் எல்லோருக்கும் பயம்; இந்துக் கடவுள்களுக்கும் பயம்! “டேய், சனியனே! அந்தப் பக்கம் சனைச்சரன் வருகிறான்; அவனைப் பார்த்து, கீர்த்து தொலைத்து விடாதே; பொல்லாத பயல்; அவனவன் கர்ம வினைக்கு ஏற்ப பலன் தருபவன்; பெரிய வீட்டுப் பிள்ளை என்றும் பார்க்க மாட்டான்” என்று எச்சரித்திருந்தாள் உமை; கணபதி சிறு பிள்ளைதானே! தீராத விளையாட்டுப் பிள்ளை! சனைச் சரனைப் பார்த்துவிட்டார்; உடனே விநாயகப் பெருமானின் தலை சாம்பலாகப் போயிற்றாம்; ஒவென்று உமையம்மை கதற, அந்தப் பக்கம் வந்த பிரம்மதேவன் அம்மையாரே! உடனே வேறு தலையைப் பொருத்துங்கள்; மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் உறுப்புகள் எல்லாம் ஒரு சில மணி நேரத்துக்குள் கிடைக்க ஆஸ்பத்திரிகள் விமானம் ஹெலிகாப்டர், அதி வேக டாக்ஸி எல்லாவற்றையும் பயன்படுத்துவதை நீர் அறியீரா? என்று பிரம்மதேவன் சொல்ல, அவரும் அருகில் கிடைத்த யானையின் தலையை அவசரம் அவசரமாகப் பொருத்தினாராம்.
கதை கேட்க வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் யானைக்குள்ள முழு அறிவும் சிறு வயதிலேயே பிள்ளையாருக்குக் கிடைத்ததைக் காட்ட இப்படி ஒரு கதை போலும்.
என்ன இருந்தாலும் அந்த ஆனைமுகத்தைக் காணும் போது நமக்கு ஆனந்தம் பெருகுகிறது.
ஒரு வேளை யானை வேட்டை பெருகி தந்தங்களை ஏற்றுமதி செய்தவுடன் உலக நிறுவனங்கள் யானை வேட்டைக்கும் தந்த ஏற்றுமத்திக்கும் தடை விதித்தது போல அந்தக் காலத்திலும் யானை வேட்டை அதிகரிக்கவே இப்படி கடவுள் தலையில் யானையை வைத்து அந்த வேட்டையைத் தடுத்தனர் என்று சொன்னாலும் பொருத்தமே. தசரதர் யானை வேட்டைக்குப் போய் முனிவர் மகனைக் கொன்ற கதைதான் நமக்குத் தெரியுமே.
இன்று லண்டன் முதலிய நகர்களில் யானைப் பாதுகாப்புக்காக, சிலை வைத்து நிதி சேகரிக்கின்றனர் வெள்ளைக்காரர்கள்; நாமோ சின்னக் கதை மூலம் யானை வேட்டையைத் தடுத்துவிட்டோம்!
லக்கி (Lucky) கடவுள் விஷ்ணு!
அடுத்ததாக விஷ்ணுவுக்குத் தலைபோன கதையைக் காண்போம்:-
கடவுளரிலும் ‘லக்கி’ கடவுள் உண்டாம். எல்லாக் கடவுள்களையும் விட விஷ்ணுதான் அதிர்ஷ்டசாலி என்று பிராமண நூல்கள் புகழ்கின்றன. அவரை சிரேஷ்ட (இதிலிருந்து வந்த தமிழ்ச் சொல் சிறப்பு) — சிறப்பான கடவுள் என்று அவை பகரும். ஒரு போட்டியில் விஷ்ணு வெற்றி பெற்றார். இதனால் இந்திரனுக்கு அவர் மீது பொறாமையாம். விஷ்ணுவின் தலையை சிரச் சேதம் பண்ணி விட்டாராம். இதற்கு முன் ரிக் வேதம், தமிழ் வேத மான திருக்குறள் ஆகியவற்றில் வாமானாவதாரம் மட்டுமே பேசப்பட்டது (அடி அளந்தான் என்பான் வள்ளுவன்) மூன்றடியால் உலகளந்தவன் என்று வேதம் கூறும். ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு இங்கோ தலையே போயிற்று; இது பற்றி தைத்ரீய ஆரண்யகம் முதலியவற்றில் இன்னும் ஒரு கதையும் உண்டு.
போட்டியில் விஷ்ணு வெற்றி பெறவே தேவர் தலைவனான இந்திரனுக்குப் பொறாமைத் தீ எழுந்ததாம்; உடனே ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஜேம்ஸ் பாண்டு ஸ்டைலில் ஒரு புதிய திட்டம் தீட்டினர் தேவர்கள்; எறும்புகளை அனுப்புவோம் அவை விஷ்ணுவின் வில்லில் உள்ள நாணைச் சாப்பிடட்டும் . அப்பொழுது வில் ‘டமார்’ என்று விலகும்; அதை வைத்திருக்கும் விஷ்ணுவும் தலை சாய்ப்பார் என்று.
அவர்கள் திட்டப்படியே நடந்தது! எறும்புகள் அரிக்க, நாண் கயிறு அறுந்து போக, வில்லின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த பெருமாள் மீது வில் தெறிக்க, அவர் தலை உருண்டதாம். சதபத பிராமணத்தின் 14ஆவது பிரிவில் உள்ள கதை இது.
பிராமண நூல்கள் நிறைய தத்துவ கதைகளை மறை மொழியில் மொழியும்; அது போன்ற ஒரு கதை இது.
தலை என்பது ஒருவரின் மதிப்பு, பெருமை என்ற பொருள் உடைய ஒரு சொல். ஒருவரைத் தலைவன் என்று சொன்னால் அவருக்கு மட்டும் தலை இருக்கிறது, தொண்டர்களுக்கு எல்லாம் தலை இல்லை என்று பொருளல்ல ; மந்திரி சபையில் பல தலைகள் உருண்டன என்றால் பலர் பதவி இழந்தனர் என்று பொருள்; அலுவலத்தில் நாளை மாற்றங்கள் வரப் போகிறதாம்; யார் தலை உருளப் போகிறதோ என்கிறோம்– ஆகவே தலை போதல் என்பதன் உட்பொருளைக் காண்பதே பொருத்தம்.
பிரம்மா, தக்ஷன் கதைகளை இன்னும் ஒரு பகுதியில் காண்போம்.
TAGS:– தலை போன, தலை இழந்த கடவுள், விஷ்ணு தலை, யானைத் தலை
–தொடரும்