கின்னஸ் சாதனை நிகழ்த்திய விண்வெளி வீராங்கனை! (Post No.4427)

Written by S.NAGARAJAN

 

 

Date: 24 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-09 am

 

 

 

Post No. 4427

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 24-11-2017 இதழில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 40வது) கட்டுரை

 

 

கின்னஸ் சாதனை நிகழ்த்திய விண்வெளி வீராங்கனை! 

 ச.நாகராஜன்

 

 “இன்னும் பல உலகங்களுக்கு நான் செல்ல விரும்புகிறேன். சந்திரன், செவ்வாய் ஏன் இன்னும் பல இடங்களுக்கும் நான் செல்ல விரும்புகிறேன். – 2017, ஏப்ரல் 13ஆம் தேதி விண்வெளியிலிருந்து பெக்கி விட்ஸன் கொடுத்த பேட்டியில் கூறியது

 

அமெரிக்க விண்வெளி வீராங்கனையான பெக்கி விட்ஸன் (Peggy Whitson)  மற்ற எல்லா அமெரிக்க விண்வெளி சாதனையாளர்களையும் விஞ்சி அதிக நேரம் விண்ணில் இருந்து சாதனை படைத்திருக்கிறார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் இன்னும் பணி புரிவதால் இன்னும் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

 

அமெரிக்காவில் ஐயோவா மாகாணத்தில் 1960ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி பிறந்த பெக்கிக்கு இப்போது வயது 56.

உயிரியலிலும் இரசாயனத்திலும் பட்டப் படிப்பு படித்த பின்னர் அவர் நாஸாவில் ஸ்பேஸ் ரிஸர்ச் செண்டரில் சேர்ந்தார்.

தனது 29ஆம் வயதில் 1989,மே, 6ஆம் தேதி சாம்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1992இல் அனுபவமிக்க அவரை மிர் ஷட்டில் திட்டத்திற்கு திட்ட விஞ்ஞானியாக நாஸா நியமித்தது.

 

1996இல் அவர் விண்ணில் செல்லத் தகுதியானவர் என்பதை நாஸா அறிவித்து அவருக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தது.

இரண்டு வருட காலம் கடுமையான பயிற்சிக்குள்ளானார். பின்னர் விண்வெளி வீரருக்கான அலுவலகத்தில் 1998-99இல் விண்வெளியில் செல்பவர்களுக்கான உதவிக் குழுவில் தரையில் இருந்தே பணி புரிய ஆரம்பித்தார்.

 

பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அவரை அனுப்ப நாஸா முடிவு செய்தது. 2002இல் ஜூன் மாதம் 5ஆம் தேதி அவர் விண்ணில் பயணமானார். ஆறு மாதங்கள் விண்வெளி நிலையத்தில் இருந்தார். மனித வாழ்க்கை சம்பந்தமான 21 ஆய்வுகளை அவர் அங்கு வெற்றிகரமாக முடித்தார்.

 

     2002, டிசம்பர் 7ஆம் தேதி பூமிக்குத் திரும்பினார். அப்போது அவர் விண்ணில் இருந்த நேரம் 184 நாட்கள்,22 மணி 14 நிமிடங்கள்.

 

எக்ஸ்பெடிஷன் 16இல் அவர் மீண்டும் விண்வெளிக்கு 2008, அக்டோபர், 10ஆம் தேதி சென்றார்.

பமீலா மெல்ராய் என்ற பெண்மணியும் அவரோடு இணைந்து சென்றார். ஆக விண்வெளியில் முதல் ஜோடிப் பெண்மணிகளாக இவர்கள் திகழ்ந்தனர். இது ஒரு சாதனை.

 

    விண்வெளி நிலையத்தில் இருந்தபோது நிலையத்தின் விரிவாக்கத்திற்காக அவர் கடுமையாக உழைத்தார்.

191 நாட்கள்,19 மணி 18 நிமிடங்கள் விண்வெளியில் இருந்த பிறகு, 2008, ஏப்ரல் 19ஆம் தேதி பூமிக்குத் திரும்பினார்.

இந்தக் கால கட்டத்தில் பல ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடைப் பயிற்சியைச் செய்து அதுவரை அதிகமாக விண்வெளி நடை நடந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்தார்.

 

 

2009 முதல் 2012 வரை மூன்று ஆண்டுக் காலம் விண்வெளி   வீ ரர்களின் தலைவியாகப் பணியாற்றி இந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணியாகச் சாதனை படைத்தார்.

விண்வெளியில் செல்லும் முன்னர் அதற்கான ஆயத்தங்களைச் செய்வது,  அவர்க்ள் விண்வெளியில் ஓடுபாதையில் சுற்றும் போது அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது , விண்வெளி நிலையத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்து உதவுவது போன்ற பணிகளைத் தலைவியாக இருந்து ஆற்றுவது என்பது கடுமையான வேலை மட்டுமல்ல; பொறுப்பான வேலையும் கூட. ஒவ்வொரு திட்டத்தின் வெற்றிக்கும் இவரே காரணமாக அமைந்தார்.

 

எக்ஸ்பெடிஷன் 50/51இல் 2016 நவம்பர் 17ஆம் தேதி அவர் விண்ணுக்குப் பறந்தார். 56ஆம் வயதில் விண்வெளிக்குச் சென்ற மிக அதிக வயது கொண்ட பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார்.

 

மூன்று மாதம் தங்குவதற்காகச் சென்றவர் அங்கு ஆறு மாதங்கள் தங்கிப் பணி புரிந்தார்.

 

289 நாட்கள், 5 மணி, 1 நிமிடம் விண்வெளியில் இருந்து, இந்த 2017இல் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி பூமிக்குத் திரும்பினார்.

  அமெரிக்க வீரர்களில் மிக அதிக காலம் – (தங்கி இருந்த நாட்களை மொத்தமாகக் கூட்டிப் பார்க்கும் போது) – இருந்தவர் என்ற சாதனையை இப்போது படைத்திருக்கிறார்.

கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்ட்ஸ் அவரைச் சாதனையாளராக அறிவித்தது. கின்னஸுக்கு விண்வெளியில் இருந்தவாறே ஜுலை 26இல் அவர் பேட்டி கொடுத்த போது,சரியான அணுகுமுறை இருந்தால் நீங்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விண்வெளியில் சந்தோஷமாக, திருப்திகரமாக விண்ணில் இருக்கலாம் என்றார்.

 

 

    விண்வெளியில் அவர் நடந்த ஸ்பேஸ் வாக் மொத்தம் 10.

இது அதிகமாக ஸ்பேஸ்வாக் செய்த பெண்மணி என்ற சாதனையோடு அதிகமான நேரம் விண்வெளியில் நடந்த பெண்மணி என்ற சாதனையையும் அவரை சாதிக்க வைத்தது.

அவர் படைத்த சாதனைகளின் பட்டியல் :-

எக்ஸ்பெடிஷன் 16

 

  • ஒரே நேரத்தில் ஜோடிப் பெண்மணிகளில் ஒருவராக விண்ணில் இருந்தது.
  • 2008, அக்டோபர், 10 – பன்னாட்டு விண்வெளி நிலைய முதல் பெண் கமாண்டராக இருந்தது
  • 2008, டிசம்பர், 16 – ஐந்தாவது ஸ்பேஸ் வாக்கை முடித்து, ஸ்பேஸ் வாக்கில் மொத்தம் 32 மணிகள்,36 நிமிடங்கள் நடந்து சாதனை படைத்தது

விண்வெளி அலுவலகத்தில் :-

  • 2009 – ராணுவத்தில் பணிபுரியாதவராக இருந்தும் விண்வெளி அலுவலகத் தலைவியாக ஆனது

 

எக்ஸ்பெடிஷன் 50/51 இல் :-

  • 2016,நவம்பர், 17 – 56 வயதில் மிக அதிக வயதான பெண்மணியாக விண்ணுக்குச் சென்று பன்னாட்டு விண்வெளி நிலையத் தலைமைப் பொறுப்பை இருமுறை ஏற்றது
  • 2017, மார்ச், 30 – மொத்தம் கூட்டிப் பார்க்கையில் அதிகமான நேரம் விண்வெளியில் நடந்தவராக ஆனது
  • 2017, ஏப்ரல், 24 – அமெரிக்காவைச் சேர்ந்தவர்களில் மிக அதிகமாக விண்வெளியில் இருந்தது. அனைத்து நாடுகளையும் எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அதிக நேரம் விண்ணில் இருந்த பெண்மணியானது ( 534 நாட்கள், 2 மணிகள், 48 நிமிடங்கள்; பூமிக்குத் திரும்பியபோது அவர் விண்ணில் இருந்த மொத்த நாட்கள் 665)
  • 2017,மே, 23 – பத்தாவது ஸ்பேஸ் வாக்கில் மைக்கேல் லோபரஸுடன் நடந்தது

 

     2017, நவம்பர், 17 – 665 நாட்கள் இருந்து சாதனை படைத்த போது விண்வெளியில் தாக்குப் பிடித்து இருக்க முடிவோரின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

 

  உலகெங்கும் வாழும் அனைத்து மங்கையருக்கும் உத்வேகமூட்டும் ஒரு பெண்மணியாகத் திகழும் இவரைப் பற்றி இந்தியப் பெண்கள் அறிவது அவசியம்.

பெண்களால் எதையும் மண்ணில் மட்டுமல்ல, விண்ணிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்த ஒரே சாதனையாளர் பெக்கி தான்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . .

 

 

40 டாலர் விலையில் (சுமார் 2600 ரூபாய்) இப்போது வெளியாகியுள்ள ‘வியூ ஃப்ரம் எபவ் (View From Above) என்ற புத்தகத்தை விண்வெளி வீரரான கமாண்டர் டெர்ரி விர்ட்ஸ் (Commaner Terry Virts) எழுதியுள்ளார்.

 

அதில் விண்வெளியில் சென்ற போது எப்படியெல்லாம் அதை அனுபவித்து உணர்ந்து கொண்டார் என்பதை அழகுற எடுத்துக் கூறுகிறார்.

 

 

நூலில் உள்ள சில சுவையான குறிப்புகள் இதோ:-

“நான் என் வாழ்நாளில் அது போன்ற ஒரு நீலச் சாயையை பார்த்ததே இல்லை. கறுப்பு-வெள்ளை உலகத்திலிருந்து மிக மிக உயர்ந்து ஒரு வண்ணத்தை முதன் முதலில் பார்ப்பது போல இருந்தது. என் மகளின் நீலக் கண்களை முதன் முதலில் பார்த்தது போல இருந்தது.

 

 

“ஒரே நாளில் உலகத்தைப் பற்றிய எனது கருத்து முற்றிலுமாக மாறிப் போனது.

200 நாட்கள் விண்வெளியில் கழித்த அவர் 2015ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் நடந்த ஒரு திடுக்கிடும் சம்பவத்தை நினைவு கூர்கிறார்.

 

திடீரென்று விண்வெளி நிலை அபாய எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. அந்த எச்சரிக்கை ஒலி அம்மோனியா லீக் ஆகிக் கொண்டு இருக்கிறது என்பதை அறிவிக்கத் தான்!

அலறிப் புடைத்துக் கொண்டு விண்வெளி ஸ்டேஷனில் இருந்த அனைவரும் ரஷிய பகுதிக்கு ஓடினார்கள். பல மணி நேரம் அங்கு ஆய்வை நடத்தினார்கள்! ஆனால் கடைசியில் தான் தெரிந்தது அது ஒரு “ஃபால்ஸ் அலார்ம் (தவறான எச்சரிக்கை மணி ஒலி) என்று!

 

 

நாஸாவிலிருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் பூமியின் சுற்றுப் பாதையையும் தாண்டிச் செல்லும் எதிர்கால விண்வெளிப் பயணம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் ஃபாஸ்ட் ட்ராக் பயணங்களும் இதில் அடக்கம்.

***

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: