Date: 4 DECEMBER 2017
Time uploaded in London- 5-51 am
WRITTEN BY S NAGARAJAN
Post No. 4457
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 9)
24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ; 21-11-17 – 4418 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
மழைத்தாரை போலப் பொழியும் காவிய அமுதால் கம்பன் கவி மந்திரம் அமைத்தான்!
ச.நாகராஜன்
கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.
பாடல் 58
வில்லெடுக்கும் மீளிகை விரல்தெரிந்த வாளி போற்
சொல்லெடுக்கும் வன்மையி லவைதொடுக்குஞ் சூழ்ச்சியில்
எல்லெடுக்கும் கம்பன்முன் னெதிரடுத்த பாவலர்
புல்லெடுக்கும் போர்மறவர் போலொதுங்கிப் போவரே
பாடல் 59
சொல்லினுட் டுவன்றலாம் பொருட்டொரும் தெருட்டலோ
கல்லினுட் டுறுமணுக் கலைத்தெடுத்த லாகுமோ
புல்லுட னுயிர்த்திறன் பொறித்திறன் புலத்திறன்
எல்லைமாய வொன்றினொன் றெழுந்தவா றெழுதவால்
பாடல் 60
கடல்மடைதி றந்தகாட்சித் தாயினுங்கம் பன்கவி
அடலடைந்தொ ளிர்சொல்வ னத்துமட்டி னன்றுகாண்
உடலடைந்தி யக்குயிர்போ லொண்பொருளூ டோடியாற்
றிடையடைந்தொ ழுக்குபோலி சையுமுன் னிழுக்குமால்
பாடல் 61
நாடிநாடிப் பாவல்லோர் நயந்தசெஞ்சொல் மாமணி
மூடிமூடி வைத்தசெப்பும் முற்றுமுட்டல் செய்வதோ?
தேடித்தேடிச் சென்றுமன்னார் சேர்கிலா மணித்திரள்
கோடிகோடி யாக்குவிக்கும் கம்பனாழி கூலமே
பாடல் 62
ஐயின் வாரிக்கொண்டவா ரமுதளாவு சீர்பதம்
கையின் வாரித் தூவினர்மற் றைக்கவிஞர்; கம்பனோ
மெய்யின் வாரிக் கொண்டசொல் விரைமுகந்து போகமே
வையமாரு மாறுவட்டி வட்டியாகக் கொட்டினான்
வேறு
பாடல் 63
பொருள்தேடிடப் புகுவார்மிடிப் புரையாடிடல் முறையோ
தெருளாய்ந்துறத் திரிவார்செறி மருள்மாய்ந்திடல் திறனோ
அருனாடிய உளத்தார்கவி யருட்பாவினை மிகத்தாம்
சுருள்குடுசூத் திரமாமெனத் தொகுத்தாரிருள் மிகுத்தார்
பாடல் 64
முன்னார்வினை விளைவோகலை முடிப்பார்தவ முடிவோ
மின்னார்தமிழ் மிளிர்மேனியின் மெலிவோ பிணிநலிவோ
பின்னாளுறை வார்கொண்டதோர் பித்தோ கவிமுத்தேன்
சின்னாபின மாக்கிட்டுருச் சிதைத்தார்திருப் புதைத்தார்
பாடல் 65
அறியார்செயுந் தீங்கோசிறி தறிந்துமறி யாராய்
வெறியார்புரி வினைமுன்னரே வெளிறாமெனல் மெய்யே
குறியாதுமுன் னார்பாட்டுறை குறைப்பெய்தனர் பின்னார்
செறியாதன செருகாங்கவி யுளவோவுளச் செருக்கால்
பாடல் 66
குருடனெறி காட்டக்குறி யிடங்கூடிடல் செலுமோ?
புருடன்வெலாப் போரையொரு பூவைவெலப் புகுமோ?
அருடன்வரத் தாலாங்கவி யறிவானரு ளிலையேல்
மருடன்வயத் தாராய்தொடர் வழிவிட்டுழல் வாரே
பாடல் 67
எல்லார்விரி வெயிலைச்சில ரிருளோவென மருளாப்
புல்லார்சிறு விளக்காலொளி புகட்டப்புகுந் தனரே
முல்லைமுருக்கவிழ்மாமணம் முடையென்றிவ ரடையாம்
வில்லைவெறி யளவாவெறி யளவாமிகுத் துரைத்தார்
பாடல் 68
அழகுக்கழ கணிதலருஞ் செயல்யாவினு மரிய
பழுதும்பழக் கனிவைப்படுங் கனியாக்கலும் பழுதே;
மழைத்தாரைபோற் கம்பன்பொழி வான்காவிய வமுதைக்
குழைத்தாரென லன்றிச்சுவை குவித்தாரென லாமோ?
பாடல் 69
தெய்வமணம் நாறியுயிர் திளைக்குங்கவித் தெறியற்
செய்வான்வரு மலரோசிறு தரைசிந்தின வலவே;
மெய்வானுறைதரு நின்றவன் மிளிர்மாலர் பொறுக்கிப்
பெய்வாந்தனிப் பிணையலிதைப் பிறிதார்கமழ் பிணிப்பார்
பாடல் 70
மின்னற்பிழம் பாலுமெரி வெயிலோன்கதி ராலும்
பொன்னினொளி யாலுஞ்சுவர் போக்கிமணிக் குவைக்காழ்
தன்னிற்புரை தபுத்தேசவி தனதந்துயர் கம்பன்
கன்னிக்கூர் காலம்பொலி கவிமந்திர மமைத்தான்
பாடல் 71
கவிமாளிகை புனைவாரிவண் கடந்தேகவின் கிடந்த
சவியோவியச் சமைப்பால்விழி யிமைப்பற்றுயிர்ப் பெடுப்பர்
புவியுள்ளுற யொருவனிதிற் புரைகாணிய விரைவான்
அவிகொள்வன வமுதிற்சுவை யறுபாகமாய் வானே
வேறு
பாடல் 72
சொல்கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான
எல்கண்டார் எல்லே கண்டார்; இனிமை யோடிகலுஞ் சந்த
மல்கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய
வல்கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?
பாடல் 73
மொழிவளம் மொழிகு வேனோ? மொழிகதைத் தருண முன்னிப்
பொழிவளம் புகலு கேனோ? பொருள்வளம் புடைத்து விம்மிக்
கழிவளங் கழறு கேனோ? காவியக் கழனி யோங்கிச்
செழிவளஞ் சிரித்து முத்தந் தெரித்தொளி சிதறும் பாவில்
வேறு
பாடல் 74
பொன்கொண் டிழைத்தமணி யைக்கொடு பொதிந்த
மின்கொண் டமைத்தவெயி லைக்கொடு சமைத்த
என்கொண் டியற்றியவெ னத்தெரிகி லாத
மன்கொண் டமாமதிம ருட்கேவி மாடம்
***
கம்பனின் சொற்களாலேயே கம்பனைப் புகழும் வித்தையைக் கொண்டவர் கவிஞர் சிவராஜ பிள்ளை. கம்பன் கையாண்ட அதே சந்தத்தை அவர் கையாளும் போது சுவை இன்னும் கூடுகிறது.
கம்பன் முன் மற்ற கவிஞர்கள் போர்க்களத்தில் புல் எடுக்கும் மறவர் போல ஒதுங்கி ஒடுங்கி ஓடி விடுவர்.
முன்னவர் செய்த வினையின் விளைவோ என்னவோ! கவிதையின் உரு சின்னாபின்னமாகப் போகும் நிலை! குருடன் வழி காட்டப் போகுமிடம் செல்ல முடியுமா? பெரிய போர் வீரனான புருஷன் வெல்ல முடியாத போரை அவனது மனைவி வெல்ல முடியுமா? கவிஞனின் உளத்தை அறிந்தோரின் அருள் பெறாவிட்டால் அவன் கவிதையின் பொருளை உணர முடியாது.
கம்பனது பாடல்களை ரஸிக்கப் போனவர்கள் சொல் இன்பப் பிரியர்களாக இருப்பின் சொல் இன்பத்திலேயே திளைத்து நிற்பார்கள். அதில் விளங்கும் பொருளின் ஒளி கண்டவர்கள் அதிலேயே லயித்திருப்பர். இப்படிப்பட்ட அபூர்வ கவிஞரின் மொத்த நூலை யார் தான் முடியக் கண்டார்? ஒருவரும் இல்லை!
காலம் வென்ற ஒரு கவி மந்திரம் அல்லவா கம்பன் அமைத்து விட்டான்!
மொழிவளத்தைப் புகழ்வதா! கதைத் தருணம் நினைத்துப் பொழிகின்ற தன்மையைப் புகழ்வதா? பொருள் வளத்தைப் புகழ்வதா?
என்று இப்படி உளத்திலிருந்து எழும் சொற்களால் கம்பனின் அருமையை விதந்து கூறுகிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.
இதுவரை 90 பாடல்களில் 74 பாடல்களைப் பார்த்து விட்டோம். அடுத்த கட்டுரையில் எஞ்சியுள்ள பாடல்களைப் பார்ப்போம். அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்.
*********** SUBHAM ******************