Date: 8 DECEMBER 2017
Time uploaded in London- 5-26 am
WRITTEN BY S NAGARAJAN
Post No. 4468
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாக்யா 8-12-17 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 42வது) கட்டுரை
உலகின் முதல் விண்வெளி தேசம்!
ச.நாகராஜன்
“பூமியின் மீது அஸ்ட்ராய்டுகளால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்து பூமியை அஸ்கார்டியா காப்பாற்றும்” – அஷுர்பெய்லி
உலகின் முதல் விண்வெளி தேசம் பிறந்து விட்டது. அதன் பெயர் அஸ்கார்டியா (Asgardia).
மூன்று லட்சம் பேர் அதன் குடிமக்களாக ஆக விரும்பி பதிவு செய்துள்ளனர். அந்த தேசத்திற்கு என்று தனி ஒரு அரசியல் சட்டம் உண்டு.
அது எப்போதும் விண்ணில் மிதக்கும் ஒரு தேசம்.
ஆம், கடந்த 12-11-2017 அன்று அது விண்ணில் ஏவப்பட்டது.
53 வயதே ஆன ரஷிய விஞ்ஞானியான ஐகார் அஷுர்பெய்லி என்பவர் சென்ற வருடம் இப்படி ஒரு தேசம் உருவாக்கப்படுவதை உலகத்தினருக்கு அறிவித்தார்.
அஸ்கார்டியா -1 என்ற விண்கலம் அவரது சொந்தச் செலவில் அமைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.
அது சிக்னஸ் என்ற பெரிய விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு அதிலிருந்து விண்ணில் பறக்க விடப்பட்டது!
அஸ்கார்டியா கலத்தில் அதன் அரசியல் சட்டமும், தேசீய சின்னமும் வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பல்வேறு உலகநாடுகளைச் சேர்ந்த அஸ்கார்டியா குடிவாசிகளாக ஆக விரும்புவோரின் தனிப்பட்ட குறிப்புகளும் அதில் வைக்கப்பட்டுள்ளது. எத்தனையோ கலங்கள் விண்ணில் பறந்தாலும் ஒரு புதிய தேசமாக உலவும் கலம் இது ஒன்று தான்!
சிக்னஸ் கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருள்களை சப்ளை செய்து விட்டு அஸ்கார்டியாவை விண்ணில் மிதக்க விடும். பின்னர் அது பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு பக்கம் போய் பறக்க ஆரம்பிக்கும். அதன் பணி அவ்வளவு தான்!
இது ஏதோ சிறு பிள்ளைகளின் மாயாஜாலக் கதை மாதிரி இருக்கிறதே என்று பலரும் எண்ணலாம். ஆனால் இதை உருவாக்கிய ரஷிய விஞ்ஞானி வாஷிங்டனுக்கு விரைந்துள்ளார்.
அவர், அங்கு ஐக்கிய நாடுகள் சபையில் இந்த நாட்டைப் பற்றிக் கூறி அதனுடைய அங்கீகாரம் பெற்ற தேசமாக இதை ஆக்கப்போகிறார்.
அந்த தேசத்திற்கென பார்லிமெண்ட் தேர்தலும் உண்டு. அந்த தேசத்தின் குடிமக்களுக்கு அடையாளக் கார்டுகள் தரப்படும். பாஸ்போர்ட் கூடத் தயாராகி வருவதாக அஸ்கார்டியாவின் வணிகத்துறை பிரிவின் தலைமை அதிகாரியான லீனா டி வின்னி கூறுகிறார். இவை ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படும் அஸ்கார்டியாவின் தூதரகம் மூலமாக அதன் குடிமக்களுக்கு விநியோகிக்கப்படும்.
பல்வேறு தேசங்களைச் சேர்ந்த 18000 பேர் இதன் குடிமக்களாக இப்போது ஆகியுள்ளனர்.
2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த தேசம் உருவாக்கப்பட்டது.
பழைய கால புராணத்திலிருந்து பெறப்பட்ட ஒரு நகரத்தின் பெயரை அஸ்கார்டியா அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் அமைதி நிறைந்த ஒரு சமுதாயமாகத் திகழ்வர். அங்கிருந்து அவர்கள் பூமிக்கு ஏற்படும் ஆபத்துக்களைச் சமாளித்துப் போக்குவர்.
ஆனால் தற்போதைக்கு அஸ்கார்டியாவின் குடிமக்கள் அவரவர்களின் தேசத்தில் தான் வாழ்வார்கள்.
விண்ணில் பறக்கும் அஸ்கார்டியா சுமார் 18 மாதங்கள் தனது குடிமக்களின் விவரங்களைக் கொண்டு பறக்கும். பிறகு அதன் ஆயுள் காலம் முடிவுக்கு வரும். இப்படிப்பட்ட சிறிய விண்கலங்களின் ஆயுள் காலம் அவ்வளவு தான்.
இந்த தேசம் உருவாக்கப்படும் போது நான் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றி விட்டேன் என்று பெருமிதம் பொங்க விஞ்ஞானி ஐகார் அஷுர்பெய்லி கூறுகிறார்.
இந்த தேசத்தின் குடிமகனாக ஆக யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
அவர்களுக்கு 18 வயது ஆகி இருக்க வேண்டும். ஒரு ஈ-மெயில் முகவரி இருக்க வேண்டும். ஆணோ, பெண்ணோ, எந்த தேசமோ, எந்த இனமோ, அந்தஸ்தோ எதுவும் ஒரு தடையில்லை. ஏன், தண்டிக்கப்பட்ட பழைய கைதிகளாகக் கூட இருக்கலாம். ஆக அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இப்போதைய அஸ்கார்டியாவின் ஜனத்தொகை 204 நாடுகளைச் சேர்ந்த 1,14,000 பேர்கள் என ஒரு தகவல் கூறுகிறது. அஸ்கார்டியாவின் அரசியல் சட்டத்தை ஒப்புக் கொண்டவர்கள் மட்டுமே அதனுடைய குடிமக்களாக ஆக முடியும்.
துருக்கியிலிருந்து மட்டும் அதிக பட்சமாக 16500 அஸ்கார்டியன்கள் இருக்கின்றனர்.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஜான் ஸ்பைரோ என்ற ஒரு விற்பனையாளர், “என்னைப்பற்றிய விவரங்களை இப்படி ஒரு சாடலைட்டில் அனுப்புவதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்கிறார்.
“புத்தரின் சூத்ரங்களை மொழிபெயர்த்து அந்த புத்த மத நூல்களை விண்ணில் உள்ள சொர்க்கத்திற்கு அனுப்புவது எவ்வளவு பெரிய பெருமைக்குரிய விஷயம்” என்று அவர் வியக்கிறார்.
அஸ்கார்டியா தேசத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை, பூமிக்கு அருகில் சுற்றும்படியான – அதாவது நூறிலிருந்து இருநூறு மைல்களுக்குள் சுற்றும்படியான ஒரு ‘தேசத்தை’ அமைப்பது தான்!
இன்னும் எட்டு வருடங்களுக்குள் இது அமைக்கப்பட்டு விடும்!
யார் வேண்டுமானாலும் இதில் பங்கு கொள்ளலாம் என்கிறார் அஷுர்பெய்லி.
“நாம் பிறந்த நகரமோ, கிராமமோ நமது உண்மையான வீ டு இல்லை. உண்மையில் பூமி தான் நமது வீ டு. அதை நாம் காக்க வேண்டும். செவ்வாய்க்கு மனிதன் போவது என்பதெல்லாம் நடக்க முடியாத கற்பனைக் கதை போன்ற ஒன்று. ஆனால் நானோ நடக்க முடியும் நிஜத்தைக் கூறுகிறேன்” என்கிறார் அவர்.
Dr Igor Ashurbeyli Credit: From ashurbeyli.eu.com
அஷுர்பெய்லியின் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுமார் பத்தாயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். 2010இல் அவருக்கு ரஷிய அரசின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திற்கான விருது வழங்கப்பட்டது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் வியன்னாவில் ஏரோஸ்பேஸ் இண்டர்நேஷனல் ரிஸர்ச் செண்டர் என்ற ஒரு மையத்தை ஆரம்பித்தார்.
சுருக்கமாகச் சொல்வது என்றால் விண்வெளி அஷுர்பெய்லிக்கு புதிதான ஒன்று அல்ல. 2011இல் அனைத்து அரசு சார்ந்த நிறுவனங்களின் பதவிகளையும் ராஜிநாமா செய்து தன்னை எந்தக் கட்சியிலும் சேராத ஒரு நடுநிலையாளர் என்பதை முதலில் அவர் நிலை நாட்டிக் கொண்டார்.
ஹாங்காங்கில் 2017, ஜூன் மாதம் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்கார்டியா என்ற தேசம் அவர் இளமை முதல் கண்ட கனவு என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இப்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது ஐ.நா. இந்த தேசத்தை அங்கீகரிக்குமா என்பதைத் தான்.
இதற்கு ஐ.நாவின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.
ஒரு நாடு என்பது நிலையான ஒரு ஜனத்தொகையைக் கொண்டிருக்க வேண்டும்; வரையறுக்கப்பட்ட பூகோள எல்லையைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு அரசைக் கொண்டிருக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்தும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் நாடு பற்றிய வரையறுப்பாகும்.
பார்லிமெண்ட் தேர்தலை உடனடியாக நடத்தப் போவதாகக் கூறும் அஷுர்பெய்லி அதில் நின்று உறுப்பினராக விரும்புவோர் விண்ணப்பங்களை வரும் மார்ச் 29க்குள் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதர ஐ.நா.வின் எதிர்பார்ப்புகளை அவர் எப்படி பூர்த்தி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நீங்களும் விண் தேசத்தின் மாண்புமிகு குடிமகனாக ஆக வேண்டும் என விரும்பினால் உடனே விண்ணப்பிக்கலாம்; விண்வெளியின் முதல் தேசத்தில் – விண்வெளியில் மிதக்கும் ஒரே தேசத்தில் – குடிமகனாக ஆகலாம்.
வாழ்த்துக்கள்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
விண்வெளி விஞ்ஞானியன நீல் டீ க்ராஸ் டைஸன் (Neil deGrasse Tyson) அனைவரும் விரும்பும் ஒரு ஜாலியான ஜோக் அடிக்கும் விஞ்ஞானி. அவர் சுவைபட விளக்காத விஷயமே இல்லை. தொலைக்காட்சியிலும் நெட்டிலும் அவரது நிகழ்ச்சிகள் மற்றும் வீடியோக்களை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசிக்கின்றனர். அவரது மேற்கோள்கள் மிகப் பிரபலமானவை. அவரது ஜோக்குகளும் உலக மக்களால் பரவலாகப் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அவருக்கு ட்விட்டரில் மட்டும் 40 லட்சம் விசிறிகள் உள்ளனர்.
தன்னை விஞ்ஞானி ஆக ஆவதற்கு ஊக்கமூட்டியவர் யார் என்பதை மிக்க நெகிழ்ச்சியுடன் அவர் கூறியுள்ளார்.
அவர் 17 வயது இளைஞனாக இருக்கும் போது நடந்தது அந்த சம்பவம்.
1996இல் மறைந்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் (Carl Sagan)
கார்னெல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது விஞ்ஞானியாக விரும்பிய டைஸனை ஒரு சனிக்கிழமை தன்னுடன் இருக்குமாறு அழைத்தார்.
டைஸனுக்குத் தனது லாபரட்டரி உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பொறுமையாகச் சுற்றிக் காண்பித்த கார்ல் சகன் ‘தி காஸ்மிக் கனெக்ஷன்’ என்ற தனது நூலில் முதல் பக்கம் கையிழுத்திட்டு, “எதிர்கால விண்வெளி வீரருக்கு” என்று எழுதிக் கொடுத்தார். இந்த ஒரு புத்தகம் அவருக்குப் பெரும் உத்வேகத்தை ஊட்டி அவர் வாழ்க்கையையே மாற்றி அவரைப் பெரிய விண்ணியல் விஞ்ஞானியாக மாற்றியது என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இத்தோடு நிற்கவில்லை கார்ல் சகன். அவரை தனது காரில் அமர்த்தி பஸ் ஸ்டாண்ட் கொண்டு சென்று விட்டார்.பின்னர் டைஸனிடம்,”ஒருவேளை பஸ் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நேராக எனது வீட்டிற்கு வந்து விடு. ஒரு நாள் என் குடும்பத்தினருடன் தங்கலாம்” என்றார்.
இந்த நிகழ்ச்சியைத் திருப்பித் திருப்பிக் கூறி வியக்கிறார் டைஸன்.
ஹார்வர்டு சென்று படித்து பெரிய விஞ்ஞானி ஆகி விட்ட டைஸன், “கார்ல் சகன் எனக்குக் கற்றுக் கொடுத்த இந்தப் பாடத்தை நான் இன்றளவும் கடைப்பிடிக்கிறேன். படிப்பதற்கு யார் விருப்பம் தெரிவித்தாலும் அவரை கார்ல் சகன் போல உத்வேகம் ஊட்டி வருகிறேன்” என்கிறார்.
உண்மையில் டைஸனை, கார்ல் சகன் உருவாக்கிய விஞ்ஞானி என்றே கூறலாம்!
***