பாரதி போற்றி ஆயிரம் (Post No.4479)

Date: 11 DECEMBER 2017

 

Time uploaded in London- 9-09 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4479

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 1

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

1

ஏறத்தாழ கடந்த நூறு ஆண்டுகளில் பாரதிக்குப் புகழாரம் சூட்டியோர் ஆயிரக்கணக்கானோர். அவனைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கும் ஒன்று.

எத்தனை கவிதைகள் என்பதை எண்ணிச் சாத்தியமில்லை. ஆனால் அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றிய ஆவலின் விளைவே இந்த முயற்சி.

இதில் பாரதியைப் பற்றிப் பாடியவர்களின் கவிதைகள் தொகுத்து வெளியிடப்படும்.

 

காபிரைட் பிரச்சினை இருப்பின் அதை எழுதியோரோ அல்லது கவிதைகள் அல்லது புத்தகத்தை வெளியிட்டோரோ வேண்டாம் என்று சொன்னாலோ ஆட்சேபணை தெரிவித்தாலோ அது உடனடியாக இந்தத் தொகுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று உறுதி கூறுகிறோம்.

 

பாரதிக்குப் பாமாலை சூடியோர் அனைவரையும் முடிந்த மட்டில் ஒரு இழையில் இணக்க முயலும் முயற்சி இது.

அன்பர்கள் இதை வரவேற்பர் என்றே கருதுகிறோம்.

 

 

2

 

இந்தத் தொகுப்பிற்கென முதல் கவிதையைத் தேர்ந்தெடுத்தப்பதில் எனக்கு எந்த வித சிரமமும் இருக்கவில்லை.

பாரதியை எனக்கு அறிமுகப்படுத்தி, அந்த பக்தியை வளர்த்து அதற்கு உரமும் இட்டவர் பாரதி அன்பர் திரு வி.ஜி. சீனிவாசன் அவர்கள்.

சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

தீரா பாரதிக் காதலன். பாரதி பற்றி பேசாத நாள் எல்லாம் அவருக்குப் பிறவாத நாளே! நூற்றுக் கணக்கானோருக்கு பாரதி பற்றும் பக்தியும் ஊட்டியவர்.

 

 

சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியின் சிலை நிறுவ பாடுபட்டவர். உருவச்சிலை கமிட்டியின் செயலாளர். பல ஊர்களிலும் சென்று பாரதி புகழ் பரப்பியவர்.

நல்ல பேச்சாளர். எழுத்தாளர். மதுரை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். திரு கி.வா.ஜகந்நாதன், தீபம் நா.பார்த்தசாரதி உள்ளிட்ட ஏராளமானோரை நண்பராகக் கொண்டவர்.

 

எனது வீட்டிற்கு அடிக்கடி வருவார். எனது தந்தையாரிடம் பேசிக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி மகிழ்ச்சி அவருக்கு.

எனக்கு ஜர்னலிஸ்ட் என்ற அந்தஸ்தைத் தந்தவரும் அவர் தான்.

எட்வர்ட் ஹாலில் மாணவர்கள் உறுப்பினராக முடியாது. அங்கிருந்த நூலகத்தின் மீதோ எனக்கு அளவற்ற பற்று.

ஒரு நாள் பாரத்தைக் கொடுத்து அதில் ஜர்னலிஸ்ட் என்று போட்டு அவரே என்னைச் சேர்த்து விட்டார்.

சற்று திகைத்த என்னை.”நீ தான் தினமணியில் மதிப்புரைகள் எழுதுகிறாயே” என்றார்.

 

மழலைச் செல்வி, ஜீவகுப்தா, நாகராஜன் என்று பல பெயர்களில் நான் புத்தக மதிப்புரை எழுதினாலும் சரியாக நான் தான் அந்தப் பெயரில் எழுதினேன் என்பதை உடனடியாக ஊகித்து அறிந்து என்னைப் பாராட்டுவார்.

 

ஆக என்னை ஜர்னலிஸ்டாக ஆக்கியவருக்கு, பாரதி பணியில் இந்த நாள் வரை – 57 வருடங்களுக்கும் மேலாக – உத்வேக மூட்டிய ஆசிரியருக்கு இந்தத் தொகுப்பைக் காணிக்கையாக சமர்ப்பிப்பதில் பேருவகை அடைகிறேன்.

ஆகவே தான் பாரதியாரைப் போற்றி அவர் எழுதியுள்ள வெண்பாக்களை தொகுப்பின் முதல் போற்றியாக வெளியிட்டு அவரின் நினைவைப் போற்றுகிறேன்.

 

பாடல்கள் 1 முதல் 6

 

பாரதியார் பா

வி.ஜி.சீனிவாசன்

1  

தொன்மொழியாம் தென்மொழியும் தூய வடமொழியும்

தன்மொழியாக் கொண்டு தமிழகத்தை – நன்மையுறச்

செய்தபுகழ் பாரதிசீர் செப்புதற்குத் தானெளிதாய்

எய்திடுமோ என்றனுக்கு மே!

 

2

நாட்டிற்கு இன்பம் நனிவிளையச் செய்வதற்கும்

வாட்டம் ஒழிப்பதற்கும் வாய்ந்தசுகம் – ஈட்டுதற்கும்

சத்தியமும் ஒற்றுமையும் தான்வேண்டும் என்றுரைக்கும்

பத்தியுள பாரதியார் பா!

 

3

 

மன்னுலகோர் என்றும் மனவேறு பாடின்றி

தன்மையுட னேயிருந்தால் தாரணியுள் – இன்பமெலாம்

பொங்குமெனச் சொன்ன புதுயுக சக்தியின்

தங்குரலே பாரதிசொல் தான்!

 

4

 

நாட்டின் விடுதலைக்காய் நம்வீரர் பாரதியின்

பாட்டென்னும் மந்திரத்தைப் பத்தியுடன் – போட்டியிட்டுப்

பாடி அதன்சக்தி பாலிக்கத் தாமகிழ்ந்து

நாடிதனைப் பெற்றார் நயந்து!

5

 

விஞ்ஞான முண்டுநல் வேதாந்த மும்முண்டு

அஞ்ஞானம் போக்கும் அருளுண்டு – மெஞ்ஞான

சீலகுண பாரதியார் செந்தமிழ்ப் பாடலிலே

ஞாலமிது தானுணரும் நன்று!

6

 

பாட்டுத் திறத்தாலே பாரிதனைப் பாலித்திட

நாட்டமுற்ற பாரதிசொல் நம்புபவர் – கேட்டதெலாம்

தந்தருளும் இன்பம் தழைக்க அருள்செய்யும்

சந்ததமும் மக்களுக்குத் தான்!

 

 

Picture posted by Bhaskran Shivaraman

தமிழ்க் குயில் என்ற சிறு வெளியீடு மதுரையில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்டது.

இரகுபதி சாமிநாதன், இரா. இளங்குமரன், கலைமோகன், சூ.கிரிதரன், மு.சதாசிவம், ம.க. சிவசுப்பிரமணியம், வி.ஜி.சீனிவாசன், கா.தேவராசக்கனி, க.பாண்டியன், சு.சா. பாப்பையா (சாலமன் பாப்பையா), நா.பார்த்தசாரதி, நா.சீ.வரதராஜன் ஆகிய 12 கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்த நூல்.

 

அதில் திரு வி.ஜி.சீனிவாசன் பற்றிய குறிப்பு இது:

வி.ஜி.சீனிவாசன்: பி.ஏ., எல்.டி. இந்தி மொழியில் ‘விசாரத் பட்டம் பெற்றவர். ‘பரிதிமாற் கலைஞரின் பெண்வழிப் பேரர். பன்னூலாசிரியர். மதுரைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்.

 

          ****           தொடரும்

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: