Written by London Swaminathan
Date: 15 DECEMBER 2017
Time uploaded in London- 19-18
Post No. 4499
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
முதல் அத்யாயம் ஸ்லோகம் 111 முதல்
111.உலகத்தின் படைப்பு, குருகுலக் கல்வி, அதற்குப் பின்னுள்ள நடைமுறைகளையும்,
112.திருமண முறைகள், இல்வாழ்க்கை, யாக யக்ஞ கர்மங்களையும்,
113.வாழ்க்கையின் தேவைகளையும், இல்வாழ்வானின் கடமைகளையும், உணவு விஷயத்தில் கொள்ளுவன, தள்ளத்தக்கன, தீட்டு, பொருட்களின் அசுத்தம், சுத்தப்படுத்தும் முறைகளையும்
114.பெண்களின் கடமைகளையும், வானப்பிரஸ்த தர்மங்களையும், மோட்சத்துக்கு உதவும் துறவு விஷயங்களையும், ராஜ நீதியையும், வாதப் பிரதிவாதங்களில் காணவேண்டிய துணிபுகளையும்
115.சாட்சி விசாரணை முறைகளையும், ஆடவர் மாதர் தர்மங்களையும்,
சூதாடுதல், சொத்துக்கள் பிரிவினை, (குற்றவாளிகளைக் களைதல்) திருடர்களுக்கான தண்டனை ஆகியவற்றையும்
- வைஸியர், சூத்திரர் தர்மத்தையும், கலப்பு வர்ணத்தாரின் வரிசைக் கிரமத்தையும், எல்லா ஜாதிகளுக்கும் உரிய ஆபத்துக் கால தர்மத்தையும் பிராயச்சித்தங்களையும்
117.வேறு பிறவி எடுப்பதற்கான கர்மங்களையும், உயர்தர, நடுத்தர, கீழ்த்தர சுப, அசுப செயல்களின் பிரிவையும், மோட்ச மார்கமான ஆத்ம தியானத்தையும், குண தோஷங்களைப் பகுத்தறிவதையும்
118.பழமையான தேச, சாதி, குல ஒழுக்கங்களையும், வேதங்களை ஒப்புக் கொள்ளாதவர்களின் ஒழுக்கத்தையும் மநுப் பிரஜாபதியானவர் வரிசையாகச் சொல்லியிருக்கிறார்.
- நான் கேட்டதால் இதை அவர் எனக்கு எடுத்துரைத்தார். இந்த சாஸ்திரத்தை அவர் சொன்ன வாறே நான் உங்களுக்குச் சொல்லுவேன்.
இரண்டாவது அத்தியாயம் துவக்கம்
- விருப்பு, வெறுப்பற்ற கற்றோர், நல்லோரிடமிருந்து, ஆய்ந்தவிந்தடங்கிய சான்றோரிடமிருந்து தர்மத்தைக் கற்கவேண்டும் (2-1)
121.ஆசையின் காரணமாக செய்யக்கூடிய எதுவும் அறச் செயல் அன்று; ஆனால் இவ்வுலகில் ஆசையில்லாமல் செய்யும் கருமம் எதுவும் இல்லை. வேதத்தைக் கற்றலும், வேள்வி முதலியவற்றை இயற்றலும் கூட ஆசசையின் காரணமாகவே நடைபெறுகிறது (2-2)
122.இந்தச் செய்கையால் இந்தப் பலன் கிடைக்கும் என்று சொல்லுவது சங்கல்பம் எனப்படும்; அதனால் விருப்பம் உண்டாகின்றது. அதனல்தான் வேள்விகள், சடங்குகள் விரதங்கள், நியமங்களைச் செய்கின்றனர்.
123.பலனை எதிர்பாராது செய்யும் சடங்கு எதுவுமே இல்லை; ஆசையை ஒழித்தவனுக்கு எந்தவிதச் செயலும் தேவை இல்லை. கொஞ்சம் செய்கை இருந்தாலும் அது காமத்தின்பாலே செய்யப்படுகிறது (காமம்= ஆசை)
124.எவன் ஒருவன் பலனை எதிர்பார்க்காமல் எதையும் செய்கிறானோ அவன் மோட்சத்தை அடைகிறான். இந்த உலகத்திலும் விரும்பியதெல்லாம் கிடைக்கும்.
125.தர்மத்தின் ஆணிவேர் வேதம் ஆகும். அதற்கடுத்தாற்போல வேதங்களைக் கற்றுணர்ந்த பெரியோர்களின் ஆசார அனுஷ்டானங்களும், அதற்கடுத்த நிலையில் நல்லோரின் நடத்தையும், எது ஒருவனுக்கு மகிழ்ச்சி தருமோ அதுவே தர்மத்தின் அடிப்படையாக அமைகிறது.
அதாவது,
வேதம், ஸ்ம்ருதி, நல்லோர் நடத்தை, மனதிற்கு சுகம் தருவது இந்த நான்கே தர்மத்தின் அடிப்படை
126.ஒவ்வொருவர்க்கும் மனு விதித்த தர்மமானது, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. வேதத்தில் எல்லா அறமும் உளது (2-7)
- கற்றறிந்த ஒருவன் ஞானக் கண்களினால் பார்த்து, இவை அனைத்தையும் வேதத்தில் சொல்லப்பட்டதாகவே அறிந்து அதன் படியே நடப்பானாகுக. (2-8)
- வேதத்திலும் ஸ்ம்ருதி எனப்படும் சட்டப் புத்தகத்திலும் சொன்னவற்றை எவன் ஒருவன் பின்பற்றுகிறானோ அவன் இக பர சௌபாக்கியங்களைப் பெறுவான். இவ்வுலகத்தில் பெரும் புகழ் பெறுவான்; இறந்த பின்னரோ சுவர்க்கத்தை அடைகிறான்.
- வேதத்தை சுருதி (கேள்வி) என்றும் தர்ம சாஸ்திரத்தை ஸ்ம்ருதி என்றும் அறிக. இவை இரண்டையும் யாரும் புறக்கணிக்கக்கூடாது; இவை கேள்வி கேட்பதற்கு அப்பாற்பட்டவை. இவற்றினால்தான் அறம் நிலைத்து நிற்கிறது (2-10)
130.எவன் ஒருவன் தர்மத்தின் மூலாதாரமான இவ்விரண்டையும் தர்க்க சாஸ்திர யுக்திகளால் எதிர்க்கிறானோ அவனைத் தள்ளிவைக்க வேண்டும்; அவனைக் கர்மானுஷ்டானங்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்; வேதத்தை நிந்திப்பவன் நாஸ்தீகன்; தெய்வம் இல்லை என்று சொல்லுபவன் ஆவான் (2-11)
131: தர்மத்தின் அடையாளங்கள் நான்கு:
1.வேதம், 2.நீதி நூல்/ஸ்ம்ருதி, 3.பெரியார்களின் அனுஷ்டானம் (மேலோர் மரபு)/ பெரியார்களின் செய்கைகள், 4.எது ஒருவனுக்கு மகிழ்ச்சி (ஆத்ம திருப்தி )தருமோ அது. இவை சான்றோர் அறிந்த, கண்கண்ட உண்மை.(2-12)
xxx
எனது கருத்து:-
இரண்டாவது அத்தியாயத்தின் முதல் 11 ஸ்லோகங்களைப் படித்தால் மநு எவ்வளவு பெரியவர், எவ்வளவு பெரிய அறிவாளி, எவ்வளவு நீதிமான் என்பது புலப்படும். சில கடுமையான- சூத்திரர்களுக்கு எதிரான விஷயங்களை
இவர் எழுதி இருக்க முடியாது; அவை இடைச் சொருகல்களே என்பது வெள்ளிடை மலை என விளங்கும்.
தர்மத்துக்கு என்ன அற்புதமான விளக்கம்!
தர்மத்தின் நான்கு அடையாளங்கள்
வேதம், அறநூல்கள், காலாகாலமாக பெரியோர் பின்பற்றும் நடைமுறைகள் எல்லாவற்றுக்கும் மேலான ஒருவனின் மனச் சாட்சி. நம் எல்லோருக்கும் எது நல்லது எது கெட்டது என்று தெரியும் ஆயினும் ஆசையால், பேராசையால், காம உ ர்ச்சியால் தவறு செய்கிறோம். நம் எல்லோருக்கும் எது சிற்றின்பம், எது பேரின்பம் என்றும் தெரியும். அதாவது சிறிது நேரம் மட்டும் இன்பம் தருவது எது, வாழ்நாள் முழுதும் இன்பம் தருவது எது , இறந்த பின்னரும் புகழ் தருவது எது என்பது தெரியும். அப்படி இருந்தும் தெரியாதவர் போல நடிக்கிறோம். சிறைச் சாலை நிரம்பி வழியவும், டாக்டர்கள் க்ளினிக்கில் கூட்டம் அதிகரிக்கவும், வக்கீல்கள் ஆபீஸில் கூட்டம் அதிகரிக்கவும் நம் ஆசைதானே காரணம்? மனு எவ்வளவு அழகாக தர்மத்தின் நான்கு அடையாளங்களச் சொல்லிவிட்டார்.
அதற்கும் முன்னதாக வேதத்தை நிந்திப்பவன் நாஸ்தீகன் என்று இலக்கணம் கற்பிக்கிறார்.
அதற்கும் முன்னதாக உலக மஹா உண்மை ஒன்றை எடுத்துரைக்கிறார்
ஆசை இல்லதவன் ஒருவனும் இல்லை; வேத கர்மங்களைச் செய்வோனும் எதையோ எதிர்பார்த்தே செய்கிறான். ஆசையில்லாமல் கர்மம் இயற்றுபவன் இக, பர நலன்களைப் பெறுவான் என்றும் அடித்துச் சொல்கிறார் மநு.
இதனால்தான் எல்லா அற நூல்களையும் ஒதுக்கிவிட்டு மநுதர்ம நூலை அனைவரும் ஏற்றனர்.
தொடரும்…………..
–சுபம்–
Venugopal Krishnamoorthi
/ December 16, 2017Namaskaram….eagerly awaiting for next post