பாரதி போற்றி ஆயிரம் – 6 (Post No.4500)

Date: 16  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-22 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4500

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 31 முதல் 36

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாடல்கள் 31 முதல் 36

31

புதுநெறி காட்டிய புலவன்

தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே!
வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன்!
வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம்
இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற்
கென்னைத் தலைமை ஏற்கும் வண்ணம்
செய்தமைக்கு நன்றி செலுத்து கின்றேன்.

உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும்
வானொலி நிலையம் வாழ்கென வாழ்த்தினேன்!
இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம்.
எக்கா ரணத்தால்? என்பீ ராயின்,
ஊர்ஒன் றாகி உணர்வொன் றாகி
நேர்ஒன்று பட்டு நெடுநாள் பழகிய
இருவரிற் சுப்பிர மணிய னென்று
சொற்பா ரதியை சோம சுந்தர
நற்பா ரதிபுகழ்ந்து சொற்பெருக் காற்றுவார்;
அன்றியும் பாரதி அன்பர் பல்லோர்
இன்றவன் கவிதை எழிலினைக் கூறுவார்.

இங்குத் தலைமை ஏற்ற நானும்
திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல்
பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில
கூறுவேன்; முடிவுரை கூறுவேன் பின்பே.
கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம்
தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ?
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்ற தன்றோ?
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித்
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?
துருக்கர் கிருத்துவர் சூழ்இந் துக்களென்
றிருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவோன் வேண்டுமென் றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்!
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க
விக்டர் யூகோ மேவினான் அன்றோ?
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்த மிழ்த்தேர்ப் பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில்நீக்கப் பாடி வந்தநிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வா றென்பதை எடுத்துரைக் கின்றேன்:
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்
பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும்
கடவுளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங்
கிடஎழு துவதும் ஏற்கா தென்றும்
பொய்ம்மதம் பிறிதெனப் புழுகுவீர் என்றும்
கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்
பழமை அனைத்தையும் பற்றுக என்றும்
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத் தனைநிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண் ணால்என் றறைக என்றும்
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்
மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
முன்னால் நிலையிலே முட்டுக என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்
புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்
நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்!
அந்தப் படியே அவரும் ஒழுகினர்.
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ்!
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்.
விழுந்தார் விழித்தே எழுந்தார் எனஅவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்!
“வில்லினை எடடா – கையில்
வில்லினை எடடா – அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா”
என்று கூறி, இருக்கும் பகையைப்
பகைத் தெழும்படி பகர லானான்.
“பாருக்குள்ளே நல்லநாடு – இந்தப் பாரதநாடு”
என்பது போன்ற எழிலும் உணர்வும்
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்!
இந்நாடு மிகவும் தொன்மை யானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்:
“தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்”
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்கு கின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்:
“முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – அவள்
செப்பும் மொழிபதி னெட்டுடையாள் – எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்”
இந்நாட் டின்தெற் கெல்லை இயம்புவான்:
“நீலத்திரை கடல் ஓரத்திலே – நின்று
நித்தம் தவம்செய் குமரி யெல்லை”
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு
மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர்:
“இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதம்திரு இரண்டுமாறிப் பழிமிகுத் திழிவுற்றாலும்
விதம்தரு கோடிஇன்னல் விளைத்தெனை யழித்திட்டாலும்
சுதந்திர தேவிநின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.”
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடு வீர்கள்:
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு”
“விடுதலை! விடுதலை! விடுதலை!”
“மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே” என்றறைந்தார் அன்றோ?
பன்னீ ராயிரம் பாடிய கம்பனும்
இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை.
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்:
“செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே” – என்றான்.
சினம்பொங்கும் ஆண்டவன் செவ்விழி தன்னை
முனம்எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான்:
“வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா – அங்கு
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது
வேலவா” என்று கோலம் புதுக்கினான்.
பெண்உதட் டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லி யுள்ளான் சொல்லு கின்றேன்:
“அமுதூற்றினை யொத்த இதழ்களும் – நில
வூறித் ததும்பும் விழிகளும்”
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு
வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்.
“முனைமுகத்து நில்லேல்” முதியவள் சொல்இது.
“முனையிலே முகத்துநில்” – பாரதி முழக்கிது!
“மீதூண் விரும்பேல்” மாதுரைத் தாள்இது.
“ஊண்மிக விரும்பு” – என உரைத்தான் பாரதி.
மேலும் கேளீர் – “கோல்கைக் கொண்டுவாழ்”
“குன்றென நிமிர்ந்துநில்” “நன்று கருது”
“நினைப்பது முடியும்”, நெற்றி சுருக்கிடேல்”
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப்
பாய்ச்சு கின்றான் பாரதிக் கவிஞன்!
அன்னோன் கவிதையின் அழகையும் தௌிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுதும் எடுத்துக் கூற
இயலா தென்னுரை இதனோடு நிற்கவே.

( அனைத் திந்திய வானொலித் திருச்சி நிலையத்தில் 5-வது கவியரங்கில்
தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது. 1946 )

 

 

32, 33

பாரதியாரும் பையனும்

கொஞ்ச வயதுடையான் அவன்

கூனற் கிழவனைப் போல

அஞ்சி நடந்து சென்றான் ஐயர்

ஆரடா தமி என்றார்!

அஞ்சலி செய்து நின்றான் ஐயர்

அவனிடம் உரைப்பார்

நெஞ்சு நிமிர்ந்து நட! – உன்

நேரில் அச்சேவலைப் பார்!

 

சொன்னசொல் பையனுளம் தனில்

சுடர் கொளுத்திடவே,

முன்னைய கூனல் நடைதனை

முற்றும் அகன்றவனாய்ச்

சென்னி தனை நிமிர்த்திக் கொஞ்சம்

சிரிப்பையும் காட்டிச்

சன்னத்த வீரனைப் போல் அந்தச்

சாலை வழி நடந்தான்

 

             34,35

திருப்பள்ளியெழுச்சி

(திருப்பள்ளியெழுச்சி என்ற பாடலை பாரதி ஏன் பாடினார்?)

நற்பெரு மார்கழி மாதமோர் காலை

    நமது நற் பாரதி யாரோடு நாங்கள்

பொற்பு மிகும் மடு நீரினில் ஆடிட[

    போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்

பெற்ற முதுவய தன்னை யார் ஐயரே,

      பீடு தரும் திருப்பள்ளி யெழுச்சி தான்

சொற்றிறத் தோடு நீர் பாடித் தரு கெனத்

     தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே

 

நீல மணி யிருட்காலை அமைதியில்

  நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையில்

கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால்,

  கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில்,

காலை மலரக் கவிதை மலர்ந்தது;

   ககன முழுமையும் தேனலை பாய்ந்தது!

ஞானப் பொழுது புலர்ந்த தென்றார்ந்த

    நல்ல தமிழ்க் கவி நாமடைந்தோமே!

 

36

 

ஸ்ரீ சி. சுப்ரமண்ய பாரதியார் புகழ்
 (தில்லானா மெட்டு) இராகம் நாட்டை, தாளம் ஆதி

பல்லவி

தோயுந்தேன் கவிதரு நம்
சுப்ரமண்ய பாரதியைச் செப்புக தினம் (தோ)

அநுபல்லவி

சுவை நிலாவை நாம் எலாம் மிக வின்பத்தால்
சொந்தத் தமிழ் நாடாம் இந்தப் பெருவானில் சந்தித்தோமே
(தோ)

சரணம்

ஓய்ந்த தமிழரிடம் உணர்வினை யூட்டும்
உலக மனிதர் சமம் என நிலை நாட்டும்
தீயமறை வகற்றி அகத்தெழில் கூட்டும்
செகம் பெறும் ஒவ்வொரு பாட்டும்

தாகிடஜெம் தாகிடஜெம் தகும்தரிகிடக்க தத்தரிகிடதக
தளாங்கு தகதிக தொக ததிங்கிண த்தோம் – தளாங்கு
ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம். (தோ)

 

****

கவிஞரைப் பற்றிய குறிப்பு

பாரதிதாசன்: (தோற்றம்: 29-4-1891 மறைவு: 21-4-1964) பாரதிதாசன் புதுவையில் பாரதியார் வசிக்கும் போது அவரை நேரில் அறிந்தவர்; அவருடன் நன்கு பழகியவர். பாரதியாரால் உத்வேகம் பெற்று புதுநடை கொண்டு பாடல்களை இயற்ற ஆரம்பித்தவர். பாரதிதாசன் என்ற பெயரே அவரைப் பாரதியின் தாசனாக அறிமுகப்படுத்துகின்ற நிலையில் வேறு ஒரு அறிமுகமே அவருக்குத் தேவையில்லை.

*****

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: