Date: 19 DECEMBER 2017
Time uploaded in London- 5-58 am
Compiled by S NAGARAJAN
Post No. 4514
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 9
பாடல்கள் 52 முதல் 61
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
பாடல்கள் 52 முதல் 61
பாரதி பாட்டு
அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்
அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்
பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,
‘நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை
நீக்காமல் விடுவதில்லை!’ எனமுன் வந்து
துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்
தூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.
படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்
பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்
துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,
‘எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை
இப்பொழுதே இக்கணமே!’ என்றென் றார்த்திங்(கு)
அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்
அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்!
புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்
புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்
சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே
தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி
எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி
‘இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!’ என்று
பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்
பண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.
எத்தாலும் பணந்தேடி இன்பம் நாடி
உண்டுடுத்தே இறப்பதனை இகழ்ந்து தள்ளிப்
பித்தாகித் தான்பிறந்த பரத நாட்டின்
பிணிவீட்டல் ஒன்றினுக்கே பாடிப் பாடி
முத்தாதி மணிகளெனும் சொற்க ளோடு
முப்பழத்தில் சுவைகூட்டி முனிவி லாது
சத்தான வீரத்தின் சாறும் சேர்த்துக்
கவிசமைத்த பாரதியின் தகைமை என்னே!
நடித்தொழுகித் துதிபாடி நலங்கள் நாடி
நரைத்திறந்து மறைந்திடும்நா வலர்போ லன்றி
வெடித்தெழுந்த பக்தியோடு பரத நாட்டின்
விடுதலைக்குப் பாடுவதே வெறியாய்க் கொண்டான்
இடித்தெழுந்து தேன்பொழியும் சொற்க ளோடும்
இளங்கதிரும் முழுமதியும் இணைந்தா லென்னப்
பொடித்துடலம் புளகமுற அச்சம் போக்கிப்
புகழ்புரியும் பாரதியின் புலமை தானே.
‘மேனாட்டுப் புதுமொழிகள் வளர்ந்து நாளும்
மிகக்கொழுத்துப் பளபளத்து மேன்மை மேவ
மிக்கசுதைப் பழந்தமிழ்த்தாய் மெலிந்தா’ளென்றும்
தாய்நாட்டைத் தமிழ்மொழியை மறந்தீர் ஐயோ!
தமிழர்களே! தளதளத்து மூச்சு வாங்கித்
தலைவணங்கி உடல்சுகித்தீர் தவத்தால் மிக்க
வானாட்டுத் தேவர்களும் அறிந்தி டாத
வளமிகுத்துச் செழுசெழுத்து வாழ்ந்த நாட்டை
வறுமைதரும் அடிமையினில் வைத்தீ ரென்று
பாநாட்டிப் பலவழியிற் பாடிப் பாடிப்
படித்தவுடன் பதைபதைக்க வீர மூட்டும்
பாரதியின் பாடல்களின் பண்தான் என்னே!
“பாலொழுகும் சிறுகுதலை மகனைப் பார்த்துப்
‘படையெடுத்தார் பகையாளர்; மகனே! நீபோய்
வேலொழுகும் போர்களத்தில் வெல்வா யன்றேல்
வெம்படையை மருமத்தில் வாங்கென்’ றேவும்
சீலமிகும் பெண்மணிகள் திகழ்ந்த நாட்டைச்
சிற்றடிமைக் கொப்பிவிற்றுத் தின்றீர்!” என்று
தாலுழுது பறைசாற்றித் தமிழ்ப்பா வோதித்
தட்டியெழப் பாரதிதான் கவிசெய் தானே!
‘அருமகனைத் தேர்க்காலில் அரைத்த வேந்தும்
பழியஞ்சித் தன்கையை அரிந்த கோனும்
தருமமிலை கோவலனைக் கொன்ற தென்று
தானறிந்த அக்கணமே சவமாய் வீழ்ந்த
பெருமையுள்ள திறல்வேந்தர் பின்னே வந்தீர்
பித்தடிமைக் குற்றேவல் பிழைத்தீர்’ என்றே
உருகிமனம் விரிந்துயரும் கவிக களாலே
உணர்வளித்த பாரதியின் உரைதான் என்னே!
பாரிமுதற் சடையப்ப வள்ள லென்று
பாவலர்கள் நாவிலுறை பலபேர் வாழ்ந்து
சீரிலகும் தமிழ்மொழியின் இனிய ஓசை
திசையனைத்தும் போயலிக்கச் செய்த நாட்டில்
ஊறியநற் சுவையழுகும் கவிக ளாலே
ஊக்கமிகத் தமிழ்நாட்டிற் குணர்வைத் தந்த
பாரதியார் மிகக்கொடிய வறுமை மேவப்
பார்த்திருந்த தமிழுருற்ற பழிதான் என்னே!
சோற்றினுக் கறிவை விற்றுத்
தூர்த்தரைப் புகழ்ந்து பாடிச்
சோம்பரைச் செல்வ ரென்று
தொழுதுடல் சுகித்து வாழ்ந்து
கூற்றினுக் குடலம் போகக்
குப்பையிற் கவிகள் சோரக்
குறிவிடா திறந்து போகும்
கவிகளின் கூட்டம் சேரார்
வேற்றவர்க் கடிமை நீங்கும்
விடுதலை வரமே வேண்டி
வீரமும் ஞானம் பொங்கச்
சக்தியின் வேள்வி பாடி
நாற்றிசைத் தமிழ ரெங்கும்
நாட்டினைப் பணியச் செய்த
நாவலர் சுப்ர மண்ய
பாரதி நாமம் வாழ்க!
நாமக்கல் கவிஞர்: நாமக்கல் கவிஞர் என்று நாடறிந்த கவிஞரின் இயற்பெயர் வெ.ராமலிங்கம் பிள்ளை (தோற்றம் 19-10-1888 மறைவு 24-8-1972. பழைய சேலம் மாவட்டத்தில் மோகனூரில் பிறந்தவர். சிறந்த காந்தியவாதி. 1932இல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர். ஏராளமான நூல்களை இயற்றியவர். இவரது கவிதைகள் எளிமையாகவும் சுவையாகவும் பொருள் தெளிவுடனும் இருக்கும். ஆரிய-திராவிட வாதம் பொய் என்று நிறுவிய மாபெரும் தமிழர்.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
****