Written by London Swaminathan
Date: 21 DECEMBER 2017
Time uploaded in London- 7-46 am
Post No. 4526
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
மநு நீதி நூல்-9 (Post No.4526)
கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்–
- லாப நோக்கும் காம நோக்கும் இல்லாதவர்களுக்கே தர்மத்தின் உபதேசம். (மற்றவர்களுக்கு அல்ல). தர்மத்தை அறியவிரும்புவோருக்கு வேதமே பிரமாணம் (2-13)
133.வேதம், ஒன்றுக்கொன்று முரண்பட்ட விஷயங்களைச் சொல்லுமானால் இரண்டும் சரி என்று அறிக; ஏனெனில் அறிஞர்கள் அவ்விரண்டும் சரி என்று சொல்லுவர்.
134.ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வேள்வியை சூரிய உதயத்துக்கு முன்னாலும், சூர்ய அஸ்தமனத்துக்குப் பின்னாலும், சூர்யனோ நட்சத்திரங்களோ இல்லாத காலத்திலும் செய்யலாம் என்று வேதங்கள் விளம்பும். இதில் முரண்பாடு ஏதுமில்லை. இவை அனைத்தும் தர்மமே.
- எந்த மனிதனுக்கு பிறப்பு (கர்ப்பாதானம் முதல்)
முதல் இறப்பு வரை வேதமுறைப்படியான சடங்குகள் விதிக்கப்பட்டிருக்கிறதோ அவனுக்கே- அந்த இரு பிறப்பாளனுக்கே – இந்த சாஸ்திரத்தை ஓதும் அதிகாரமுண்டு. மற்றவர்க்கில்லை.
136.சரஸ்வதி நதிக்கும், த்ருஷத்வதி நதிக்கும் இடைப்பட்ட பிரதேசம் கடவுளால் உருவாக்கப்பட்ட பிரம்மாவர்த்த தேசம் ஆகும்.
137.அந்த தேசத்தில் எப்போதும் பெரியோர் வசிப்பதால் பிராமணர் முதலிய வருணத்தாருக்கும் கலப்பு ஜாதியாருக்கும் ஆதிகாலத்திலிருந்தே ஆசார விதிகள் பாரம்பர்யமாக உள்ளன.
Geography in Manu Smrti
138.குரு, மத்ஸ்ய, பாஞ்சால, சூரசேன தேசங்கள் பிரம்மரிஷி தேசம் எனப்படும். இவை பிரம்மாவத்தத்துக்கு அடுத்த நிலையில் உள்ளன.
139.இந்த தேசங்களில் பிறந்த பிராமணர் இடத்தில் ஒவ்வொருவரும் தர்மத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்
140.இமய மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் விநாசன த்துக்கு கிழக்கேயும், பிரயாகைகு மேற்கேயும் உள்ள இடம் மத்திய தேசம் எனப்படும் (2-21)
141.கிழக்கு சமுத்திரத்திலிருந்து மேற்கு சமுத்திரம் வரையுள்ள பிரதேசத்துக்கு சாதுக்கள் வசிக்கும் ஆர்யாவர்த்தம் என்று பெயர்.(2-22)
Antelope Black buck picture from Wikipedia.
Zoology in Manusmrti
142.கிருஷ்ணசாரம் (BLACKBUCK) என்னும் மான் இயற்கையில் எங்கு வசிக்கிறதோ அந்த பூமியே யாகம் செய்வதற்குரிய பூமியாகும். மற்றவிடம் அசுத்தமான மிலேச்ச தேசம் என்பப்படும் (2-23)
143.இருபிறப்பாளர்கள் (BRAHMIN, KSHTRIA, VAISYA) இந்தப் பிரதேசத்தில் வாழ எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும். சூத்திரர்கள் ஊழியத்துக்காக எந்த தேசத்திலும் வசிக்கலாம்.
144.இதுவரையில் உலகத்தின் உற்பத்தியையும் தர்மத்திற்குக் காரணமான புண்ய தலங்களையும் எடுத்துச் சொன்னேன். இனி வர்ணாஸ்ரம தர்மங்களைக் கேளுங்கள் (2-25)
145.இருபிறப்பாளர்கள் வேத சாஸ்திரங்களில் சொல்லப்படிருக்கிற கர்ப்பாதானம் முதலிய சடங்குகளை, இம்மை நலனுக்காகவும், மறுமையில் புண்ணியப் பிறப்பெடுக்கவும் உரிய சரீர சுத்திகளைச்செய்ய வேண்டும்.
146.கர்ப்பாதான மந்திர ததாலும், சீமந்த ஹோமத்தாலும் (வளைகாப்பு),
ஜாதகர்மம் (பிறப்பு தொடர்பான சடங்கு) நாமகரணம் (பெயர் சூட்டல்), அன்னப் ப்ராசனம் (உணவூட்டுதல்) சௌளம் (முடி இறக்கல்), உபநயனம் (பூணூல் போடுதல்) முதலிய சடங்குகளால் இருபிறப்பாளர்கள் செய்த பாவங்கள் நீங்கும்; புணர்ச்சி செய்யக்கூடாத நாட்களில் புணர்ந்த தோஷமும், அன்னையின் கருப்பையில் வசித்த தோஷமும் நீக்கப்படும் (2-27)
147.வேதம் ஓதுவதாலும், மது மாமிசம் சாப்பிடாத விரதத்தாலும், ஔபாசனம் மு தலிய ஹோமங்களாலும், தேவரிஷி பிதுர தர்ப்பணத்தினாலும் (நீத்தார் நினைவுச் சடங்குகள்), ஐம்பெரும் வேள்விகளாலும் (பஞ்ச மஹா யக்ஞம்) அக்னிஷ்டோம ஹோமங்களாலும் , புதல்வர்களைப் ச பெறுவதாலும், சரீரமானது மோட்சத்திற்குரிய தாக்கப்படுகிறது.(2-28)
Ayurveda in Manu smrti
148.தொப்புள்கொடியை அறுப்பதற்கு முன்,ஆண் குழந்தைக்கு ஜாத கர்மம் என்னும் பிறப்பு தொடர்பான சடங்கு செய்யப்படும். அப்போது வேத மந்திர முழக்கத்தோடு குழந்தைக்கு தங்கத்தை இழைத்து தேனும் வெண்ணையும் கொடுக்க வேண்டும்.
எனது கருத்து: Geography in Manu
மேற்கூறிய ஸ்லோகங்களில் உள்ள சுவையான விஷயங்களை ஆராய்வோம் அல்லது சிந்திப்போம். ஸரஸ்வதி நதி குறித்து மனு சொல்லும் விஷயம் ஆராய்ச்சிக்குரியது. மநு இன்னும் ஒரு இடத்திலும் இந்த நதி பற்றிப் பேசுகிறார். 11-78-லும் ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார். பிரம்மஹத்தி- அதாவது பிராமணனைக் கொன்ற பாவம்- போவதற்காகச் சொல்லப்படும் ஒரு பரிஹாரம் சரஸ்வதி நதியின் முழு நீளத்தையும் நீரோட்டத்துக்கு எதிராக நடந்து கடக்க வேண்டும் என்பதாகும்.
இங்கே ஒரு கேள்வி எழுகிறது. மனுவின் காலத்தில் ஸரஸ்வதி நதி ஓடியதை அறிகிறோம். அதே நேரத்தில் விநாஸன் என்ற சொல்லுக்கு ஸரஸ்வதி நதி பூமியில் மறையும் இடம் என்று வியாக்யானம் எழுதுவோர் உரை எழுதுகின்றனர். ஸரஸ்வதி, த்ருஷத்வதி என்று இந்த அத்தியாயத்தில் மநு குறிப்பிடுவன வேத கால நதிகள். ஆகவே மநு, சரஸ்வதி ஓடிய கி.மு.2000ஐ ஒட்டி இதை எழுதியிருக்கவேண்டும். ரிக் வேதமோ மலையில் தோன்றி கடலில் மறையும் பிரம்மாண்ட நதி பற்றிப் பேசுகிறது. மஹாபாரதமோ மறையும் (விநாசன்) நதி பற்றிக் குறிப்பிடுகிறது. 11-ஆம் அத்தியாயத்தின் ஸ்லோகத்தில் ஸரஸ்வதி நதியை எதிர் நீச்சல் போட்டுக் கடக்க வேண்டும் என்று மநு சொல்லுவதால் அவர் ஸரஸ்வதி நதி காலத்தவர் என்பது தெளிவாகிறது. ஆகவே மநுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அல்ல. கி.மு2000-க்கும் முன்னர் என்று அறியலாம். சதி (உடன்கட்டை ஏறும் வழக்கம்) பற்றி எங்குமே குறிப்பிடாததும். விந்தியத்துக்கு அப்பாலுள்ள விஷயங்களைப் பே சாததாலும் தெற்கில் நாகரீகம் பரவியதற்கும் முன்னதாக வாழ்ந்தவர் என்று துணியலாம்.
இன்னும் இரண்டு சுவையான விஷயங்கள் (Medicine and Sociology in Manu):–
ஆயுர்வேதம்: சிறு வயதிலேயே குழந்தைக்குத் தங்கத்தில் இழைத்து — தங்கச் சத்துடன் வெண்ணை, தேன் கொடுக்கச் சொல்லுவது அக்கால மருத்துவ வளர்ச்சியைக் காட்டுகிறது.
மிலேச்ச என்ற சொல், ‘பண்பாடற்ற மக்கள்’ பிற இடங்களில் வசித்ததையும் காட்டுகின்றது. பிற்கால இலக்கியத்தில், இவை கிரேக்கர்களையும் ரோமானியர்களையும் குறித்தன. அதற்குப் பின்னர் இது அராபியர்களையும், துலுக்கர்களையும், கிறிஸ்தவர்களையும் குறித்தது. ஆகவே மநு காலத்தில் கிரேக்கர்கள் அல்லது வேதத்தைப் பின்பற்றாத பிற ஜாதியினர் பற்றிய அறிவு இருந்திருக்கலாம்.
பிராணி இயல் தகவல் (zoology in Manu)
எல்லாவற்றையும் விட சுவையான தகவல் கிருஷ்ண சாரம் (Blackbuck antelope) என்னும் மான் வகைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆகும்.
கிருஷ்ணசாரம் எனப்படும் மான் உலவும் இடம் எல்லாம் வேள்விக்குரிய பூமி என்று சொல்லப்படுகிறது. இது இந்தியாவின் தென் கோடி முனையில் இருந்து இப்போதுள்ள வங்க தேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தேசங்களிலும் 1850 வரை இருந்தது வெள்ளைக்கார்கள் எழுதிய குறிப்புகளில் இருந்து தெரிகிறது. ஆக இந்திய பூமி முழுதும் புனித பூமி, வேள்விக்குரிய பூமி என்ற அரிய பெரிய உண்மையை மநு பறை சாற்றுகிறார். இதை சங்கத் தமிழ் இலக்கிய நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.
கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டம் செய்து வேள்வி இயற்றிய தையும், சோழ மன்னன் ராஜ சூய யாகம் செய்ததையும், முது குடுமிப் பெருவழுதியின் பாண்டிய நாடு முழுதும் வேள்வித் தூண்கள் பெருகி இருந்ததையும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழ் நூல்கள் பாடிப் பரவுகின்றன. ஆக கருப்பு மான் உலவிய புண்ய பூமி பாரதம்; அதிலும் குறிப்பாக புண்ணியப் பிரதேசம் சரஸ்வதி நதி தீரம், குருக்ஷேத்ரம், பாஞ்சாலம் எனலாம். காரணம் என்னவெனில் இங்கு தலைநகரை அமைத்துக் கொண்டு அவர்கள் ஆண்டனர். மேலும் வற்றாத ஜீவ நதிகள் அவை என்பதால் அபரிமித தான்ய விளைச்சலும் இருந்தது. நீர் இன்று அமையாது உலகு என்பது வள்ளுவன் வாசகம் அன்றோ!
TAGS:– மநுநீதி நூல், கறுப்பு மான், சரஸ்வதி, மர்மம்
to be continued………………………………
–SUBHAM–