சாணக்கியன் பற்றிய சுவையான கதைகள் (Post No.4547)

Written by London Swaminathan 

 

Date: 26 DECEMBER 2017 

 

Time uploaded in London- 6-36 am

 

 

Post No. 4547

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

சாணக்கியன் ஒரு பெரிய சிந்தனையாளர்; திட உறுதி பூண்டவர்; வெற்றி பெறுவதற்கு சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களையும் பயன்படுத்தத் தயங்காதவர். இந்தியாவில் தோன்றிய மிகப் பெரிய அரசியல்வாதி அவர்தான் என்றால் மிகையல்ல. பெரிய ராஜ தந்திரி; ராஜதந்திரம் உடையோருக்கு எல்லாம் முன்னோடி என்பதால் எந்த திறமையான அரசியல் வித்தகரையும் ‘சாணக்கியன்’ என்ற அடைமொழியோடு அழைக்கும் அளவுக்கு முன்னுதாரணமானவர். சூழ்ச்சிமிக்கவர்.

 

நரியின் தந்திரமும் யானையின் பேருருவமும், சிங்கத்தின் பராக்ரமும், புலியின் பாய்ச்சலும் உடையவர். ஆயினும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவி; செல்வத்தையும் பதவியையும் துச்சமாக மதித்தவர். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை — அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த பிரம்மாண்டமான படையை– உருவாக்கிய – சாணக்கியன் இருந்ததோ ஒரு சிறு குடிலில்; இதனால்தான் அவருக்கு மதிப்பு; பற்றற்ற வாழ்க்கையில் பற்றுக் கொண்டதால் எதைக் கண்டும் அஞ்சவில்லை.

 

சிறந்த நிர்வாகியான சாணக்கியனை நிறைய புராதன எழுத்தாளர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். நீதி நூல்களும் கதைகளும் அவர் பெயரை மொழிகின்றன. தண்டியின் தச குமார சரிதம், விஷ்ணு ஸர்மனின் பஞ்ச தந்திரம் அவர் பெயரைப் போற்றுகின்றன. பாணனும், வராஹமிஹிரரும், சோமதேவரும், நீதி சாஸ்திரத்தின் ஆசிரியர் காமந்தகியும் முதல் அத்தியாயத்திலேயே அவருக்கு முதல் வணக்கம் செலுத்துகின்றனர். விஷ்ணு புராணம் அவரைக் கௌடில்யர் என்ற பெயரில் குறிப்பிடுகிறது. பாகவத புராணம் நந்தர்களை முறியடிக்கும் பிராமணன் என்று மட்டும் சொல்லும்.

 

உயர்ந்த சிந்தனை, பரந்த அறிவு, எளிய வாழ்க்கைக்கு முன்னுதாரணம் சாணக்கியன். அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் போன்ற பொருளாதார நூல் பழங்கால உலகில் எங்குமே இல்லை.

 

சந்திரகுப்த மௌர்யன் என்னும் பேரரசனின் அதிகாரி அவர் வீட்டிற்குள் சென்றபோது கண்ட காட்சியை வருணிக்கிறார்:-

 

அஹோ ராஜாதிராஜ மந்த்ரிணோ விபூதிஹி–

 

உபலஸகலமேதத் பேதகம் கோமயானாம்

படுபிருபஹ்ருதானாம் பர்ஹிஷாம் ஸ்தூபமேதத்

ஸரணமபி சமிதிபஹ ஸுஸ்யமாணாபிராபி

விர்னமிதபடலாந்தம் த்ருஸ்யதே ஜீர்ணகுட்யம் (3-15)

 

பொருள்:

மன்னாதி மன்னனின் மந்திரியின் செல்வத்தைப் பற்றிக் கேளுங்கள்:-

பசுஞ்சாண விரட்டிகளை உடைக்க ஒரு கல்லைக் கண்டேன்; அதோ இளம் சிறார்கள் — சிஷ்யப் பிள்ளைகள் — சேகரித்த தர்ப்பைப் புல் இருக்கிறது; அவருடைய குடிலின் சுவர்கள் பாழடைந்து இருக்கின்றன; மேல் கூரையில் காயப்போட்டுள்ள யாகத்துக்கான மரக்  குச்சிகளின் பாரம் தாங்காது கூரை சரிந்து நிற்கிறது.

 

 

முதல் கதை

 

பாடலிபுத்திரத்தில் கிரேக்க தூதர் பதவி ஏற்ற மெகஸ்தனீஸ் சாணக்கியனைப் பார்க்க வந்தார். அது இரவு நேரச் சந்திப்பு. ஆட்சி சம்பந்தப்பட்ட ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருந்தார் சாணக்கியன். ஒரு மூலையில் தீப ஒளி பிரகாஸித்துக் கொண்டிருந்தது. மெகஸ்தனீஸ் உள்ளே நுழைந்தவுடன் அந்த விளக்கை அணைத்துவிட்டு, சாணக்கியன் வேறு ஒரு தீபத்தை ஏற்றினார். மெகஸ்தனீசுக்கு பெரும் வியப்பு!

 

ஐயன்மீர்! ஏன் ஒரு விளக்கை அனைத்து இன்னும் ஒரு விளக்கை ஏற்றினீர்? இதன் தாத்பர்யம் என்னவோ? என்றார் மெகஸ்தனீஸ்.

 

சாணக்கியன் சொன்னார்:

நீவிர் வரும் வரை எரிந்த தீபம் அரசங்கப் பணி நிமித்தம் ஆட்சி நிர்வாக வேலைகளுக்காக, அரசு செலவில் ஏற்றப்பட்டது. இப்போது நாம் சந்திப்பது அரசுப் பணியல்ல நீவிர் எனது விருந்தாளி; ஆகவே இது என் செலவில் எரிக்கப்படும் தீபம் ; ஆகையால்தான் இதை ஏற்றினேன்.

 

இதுதான் சாணக்கியனின் குணாதிசயங்களைக் காட்டும் நிகழ்ச்சி. தன்னலம் கருதாத் தகைமையாளராக இருந்தும் அரசுப் பணி இது, சுய வாழ்வு இது என்று வரம்பு கட்டிய மாமனிதன்.

 

அவலட்சணப் பிராமணன்; இரண்டாவது கதை

 

சாணக்கியன் பல நீதி நூல்களுக்கும் ஆசிரியன்; அவனுக்கு விஷ்ணுகுப்தன் கௌடில்யன் (கௌடல்யன்) என்ற பெயர்களும் உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் மகத சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் நவநந்தர்கள் எனப்படும் ஒன்பது பேர் ஆவர். மஹா பத்ம நந்தன் தலைவன். அவர்களுக்கு ராக்ஷஸன் என்ற திறமையான அமைச்சன் உதவினான்.

 

சாணக்கியன் பற்றி அதிகத் தகவல் கிடைக்கவில்லை. ஆனால் விஸாக தத்தன் எழுதிய முத்ரா ராக்ஷஸம் என்ற நாடகத்திலிருந்து வாழ்க்கைச் சரிதத்தை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. அவர் ஒரு முறை சாப்பாட்டுப் பந்தியில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தாராம். அறிவின் சிகரத்தை எட்டிய அவருக்கு ஆண்டவன் அழகைக் கொடுக்கவில்லை.

யார் இந்த அவலட்சணமான பிராமணன்? முதல் வரிசையில் இவன் எதற்கு உட்கார்ந்தான்? என்று மன்னன் மஹா பத்ம நந்தன், சாணக்கியனை தர, தர வென்று இழுத்துச் சென்று வெளியே விட்டானாம். காரணமின்றி தன்னை அவமானப் படுத்திய நந்த வம்ஸத்தை வேர் அறுக்காமல் என் ஸிகையை முடிய மாட்டேன் என்று குடுமியை அவிழ்த்துவிட்டு அவரும் வெளி ஏறினாராம். அன்று முதல் அவர் திட்டம்போட்டு நவ நந்தர்களை ஒழித்ததோடுமில்லாமல் மயில் வளர்க்கும் முரா வம்ஸத்தைச் சேர்ந்த சந்திரகுப்தனைப் பேரரசனாக்கினார்.

 

முத்ரா ராக்ஷஸ நாடக வசனத்தில் வரும் காட்சி:

என்னை அன்று தர தர என்று வெளியே இழுத்ததை வேடிக்கை பார்த்த மக்கள் இன்று நவ நந்தர்களை அரசுக் கட்டிலில் இருந்து நான் விழுத்தட்டியதையும் பார்த்தார்கள்; ஒரு மலை உச்சியின் மீதுள்ள யானையை சிங்கம் மலை உச்சியில் இருந்து இழுத்துப் போட்டதைப் போல நான் செய்துவிட்டேன்.

 

‘நந்த வம்ஸத்தை விழுத்தாட்டியது இருக்கட்டும்; என் புத்தி மட்டும் என்றும் குறைந்து விடக்கூடாது’ என்று வேண்டியதாகவும் ஸம்ஸ்கிருத நாடக வசனம் செல்கிறது. நவ நந்தர்களின் திறமை மிகு அமைச்சன் ராக்ஷஸன் போட்ட ஒவ்வொரு திட்டத்துக்கும் சாணக்கியன் வேட்டு வைத்ததை ஸம்ஸ்கிருத நூல்கள் சித்தரிக்கின்றன.

 

வேறு சில சுவையான கதைகளும் உள. அவற்றைத் தனியே மொழிவேன்.

 

–சுபம்–

Leave a comment

1 Comment

  1. ganesan kamatchi

     /  December 26, 2017

    Nice. Great

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: