Date: 27 DECEMBER 2017
Time uploaded in London- 5-39 am
Written by S NAGARAJAN
Post No. 4551
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவியல் ஆற்றல்!
ச.நாகராஜன்
1
கவியரசு கண்ணதாசனுக்கு ஈ.எஸ்.பி. பவரா? இது என்ன புது தகவல் என்று வியக்க வேண்டாம்.
அதீத உளவியல் ஆற்றல் என்பது சில மனங்களுக்குக் கை கூடும்.
அந்த ஆற்றல் இருப்பதும் கூட சிலருக்குத் தெரிய வரும்.
சரி, கண்ணதாசன் தன்னைப் பற்றி இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
2
ஞான ஸ்நானம் என்ற கட்டுரையில் ஒரு ப்குதி!
கண்ணதாசன் சொற்களை அப்படியே கீழே தருகிறோம்:
தோன்றாமல் தோன்றும் சுடரொளி ஒன்று அடிக்கடி என்னைக் காப்பாற்றுகிறது. அமைதியைத் தருகிறது.
என்ன நடக்கப் போகிறது என்பது கனவிலே வருகிறது.
பத்து நாட்களுக்கு முன்பு பெங்களூர் மண்டிப்பேட்டையில் ஒரு ஹோட்டலைத் திறந்து வைக்கச் சென்றேன்.
விமானம் போய் இறங்கியபோது மாலை மணி நான்கு. படுத்துத தூங்கிவிட்டேன்.
ஒரு கனவு. அற்புதமான கனவு.
கண்ணன் என் கனவிலே வந்தான். ஒரு சிறு குடிசையில் அவனுக்கு நான் அமுது படைத்தேன். அவன் என்னோடு பேசிக் கொண்டிருந்தான். என்னென்னவோ அவனிடம் பேசினேன். அவன் சொன்னது மட்டும் நினைவிருக்கிறது. “எல்லாம் சரியாக நடக்கும், கவலைப்படாதே.”
மறுநாளைக்கு மறுநாள் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு.
ஒரு பெருமாள் கோயில். ஒரு பட்டாச்சாரியார் எனக்குக் குங்குமம் வழங்குகிறார்.
இவை என்ன கனவுகள்?
நல்லவர்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே வரும் கனவுகள். எனக்கும் அவை ஏன் வந்தன? பல்லாயிரம் ஆண்டுகளாக ஞானம் பிறந்த கதை இது தான்.
சிறைச்சாலை தீயவர்களுக்கு மட்டுமே.அறச்சாலை நல்லவர்களுக்கு மட்டுமே.
பரம்பொருளைப் பற்றிய சிந்தனை வளர வளர, கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடிகிறது..நல்லவனாக இருப்பது சுல்பமாகிறது.
இறைவன் கவனித்துக் கொண்டே இருக்கிறான். அளக்க வேண்டிய நேரத்தில் அளக்கிறான். இந்து தர்மம் பொய்த்ததே இல்லை.
அது சொல்லும் ஒவ்வொன்றும் நூற்றுக்கு நூறு உண்மை.
நான் ஓர் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
ஒரு நல்ல இந்து மற்றவர்களுக்குத் தீமை செய்ய மாட்டான்.
நான் யாருக்கும் தீங்கிழைத்ததில்லை.
ஒவ்வொரு நாளும் எனக்குத் தீங்கிழைத்த பாவிகளை என் கண்ணா, நீ மன்னித்து விடு.
*
1975ஆம் ஆண்டு கல்கி வார இதழில் கடைசிப் பக்கம் என்ற ஒரு தொடரை கண்ணதாசன் வழங்கி வந்தார்.
அருமையான தொடர் இது. இதில் தான் மேற்கண்டவாறு என்ன நடக்கப் போகிறது என்பது என் கனவிலே வருகிற்து என்று அவரே சொல்லியுள்ளார். (துரதிர்ஷ்டவசமாக் எந்த தேதியிட்ட இதழ் என்பதை நான் எனது தொகுப்பில் குறித்து வைக்க மறந்து விட்டேன்.)
விவரங்களை முழுதுமாக அவர் தரவில்லை. அது ஏன் என்பதும் புரிகிறது. பாவிகள் ஒவ்வொரு நாளும் இழைக்கும் தீங்குகளைப் பட்டியல் இட முடியுமா? அதைச் சுட்டிக்காட்டும் இறைவனின் கருணையையும் தான் எழுதிக் கொண்டே இருக்க முடியுமா?
நமக்குப் புரிவது கண்ணதாசனுக்கு அபூர்வமான ஈ.எஸ்.பி. பவர் இருந்தது என்பதைத் தான்.
ஈ.எஸ்.பி பவர் என்றால் என்ன?
Extra Sensroy perception என்பதன் சுருக்கமே E.S.P. அதாவது புலன் கடந்த அறிவு. அதீத உளவியல் ஆற்றல் என்று இதைச் சொல்கிறோம்.
*
3
இனி இளையராஜா கூறும் ஒரு சம்பவத்தை அவர் சொற்களில் அப்படியே தருகிறேன்.
‘கவிஞர் என் கனவில் வந்தார்; பாடல் எழுதினார்’ என்ற கட்டுரையில் ஒரு பாரா இது:
கவிஞர் சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர். அவருடைய வாக்குப் பொய்த்ததே இல்லை. அதற்கு எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘பாட மாட்டேன்!’ என்ற அடிகளைப் பாடியதால் தான், கே.ஆர். ராமசாமி அந்த்ப் பாடலுக்கப்புறம் பாடவே முடியவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததே.
**
4
கவிஞருடன் கூடவே இருந்த இராம. முத்தையா ‘தெய்வத்தை ந்ம்பி ‘ என்ற கட்டுரையில் கூறும் ஒரு வரி இது”
அவர் அடிக்கடி சொல்லிக் கொள்வது- “எனக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியால் தான் நான் எதையும் செய்ய முடிகிறது!” என்று.
**
5
மேலே கூறியவற்றால், கவிஞருக்கு நடக்கப் போகும் பல நிகழ்ச்சிகள் பூடகமாகத் தெரிந்தன் என்றும். ஒரு அளப்பரிய சக்தி உதவியுடன் அவர் இயங்கினார் என்றும், அவரது கவிதா வாக்கு பொய்க்காமல் இருந்தது என்றும் அறிய முடிகிறது.
இன்னும் சில நிகழ்ச்சிகள் உள்ளன. அவை கவிஞரின் கவிதா சக்தியின் மேன்மையையும், அவரது அதீத உளவிய்ல் ஆற்றலையும் விளக்குபவை.
அவற்றை இன்னொரு கட்டுரையில் காண்போம்.
****