Date: 30 DECEMBER 2017
Time uploaded in London- 5-24 am
Written by S NAGARAJAN
Post No. 4563
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
நண்பரா, கைக்கூலியா!
மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி 11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 10 கட்டுரை எண் 4538 -வெளியான தேதி 24-12-17
இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.
மாக்ஸ்முல்லர் மர்மம்! – 11
ச.நாகராஜன்
19
இந்தத் தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.
ஸ்வாமி விவேகானந்தர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தது பற்றியும், அவரைப் பற்றிய ஸ்வாமிஜியின் அபிப்ராயத்தைப் பற்றியும் இப்போது பார்க்கப் போகிறோம்.
இதை வெவ்வேறு பகுதிகளிலிருந்து பார்ப்பதை விட அதிகாரபூர்வமான, அழகான, சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை எழுதிய சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களின் நூலிலிருந்து பார்ப்பதே சாலச் சிறந்ததாகும்.
இரு பாகங்கள் அடங்கிய இந்த நூல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை – 4 -இன் வெளியீடாகும்.
இதில் முதல் பாகத்தில் 723ஆம் பக்கம் தொடங்கி ஸ்வாமிஜி, மாக்ஸ்முல்லரைச் சந்தித்த விவரம் வருகிறது.
அதை அப்படியே கீழே தருகிறோம்.
20
இங்கிலாந்தில் சுவாமிஜி பேராசிரியர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார். அவரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார் சுவாமிஜி. ‘தாம் வேதங்களுக்கு எழுதிய உரையைப் புதுப்பிக்க சாயணர் தான் இப்போது மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார் என்று தான் எண்ணுகிறேன். நீண்ட காலமாகவே எனக்கு இந்தக் கருத்து இருந்தது. மாக்ஸ்முல்லரைப் பார்த்த பிறகு அது உறுதியாகிவிட்டது. இந்த நாட்டில் (இந்தியாவில்) கூட, வேத வேதாந்தங்களில் அவரைப் போல் அவ்வளவு உறுதியான, அவ்வளவு ஊறிப்போன ஒருவரை நீ காண முடியாது. அனைத்திற்கும் மேலாக, ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் அவருக்கு எவ்வளவு ஆழம் காண முடியாத பக்தி தெரியுமா! ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவதார புருஷர் என்பதை அவர் நம்புகிறார். நாம் அவரது விருந்தினராக இருந்த போது எவ்வளவு அற்புதமாக என்னை உபசரித்தார்! .. நான் பிரிந்து வரும் போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது என்று ஒரு முறை சுவாமிஜி தமது சீடரான சரத் சந்திரரிடம் கூறினார் (ஞானதீபம் 6-57-58)
அதற்கு சரத் சந்திரர், “சாயணரே மாக்ஸ்முல்லராக பிறந்தார் என்றால் அவர் புனிதமான இந்தப் பாரத நாட்டில் பிறக்காமல் மிலேச்ச நாட்டில் ஏன் பிறந்தார்?” என்று கேட்டார். உணர்ச்சிவசப் பட்டவராக சுவாமிஜி பதிலளித்தார்:
‘அறியாமை காரணமாகவே மனிதன், “நான் ஆரியன், மற்றவர்கள் மிலேச்சர்கள்” என்று வேறுபடுத்துகிறான். வேதங்களுக்கே உரை எழுதியவரான,ஞானத்தின் பேரொளிப் பிழம்பான அவரிடம் வருணாசிரமப் பிரிவுகளும், ஜாதிப் பிரிவுகளும் இருக்க முடியுமா?” அவருக்கு இவையெல்லாம் முற்றிலும் பொருளற்றவை. மனித குலத்தின் நன்மைக்காக, தாம் விரும்பும் இடத்தில் பிறக்க அவரால் இயலும். கல்வி, செல்வம் இரண்டுமே உள்ள நாட்டில் பிறக்கவில்லை என்றால், இவ்வளவு பெரிய நூல்களையெல்லாம் அச்சிட்டு வெளியிடுவதற்கான பொருள் எப்படிக் கிடைக்கும்! ரிக் வேதத்தை வெளியிட அவருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தது உனக்குத் தெரியாதா? அது கூடப் போதவில்லை. இந்த நாட்டில் அதற்காக நூற்றுக்கணக்கான அறிஞர்களை மாதச் சம்பளம் கொடுத்து அமர்த்த வேண்டியிருந்தது. இந்தக் காலத்தில் அறிவுக்காக, ஞானத்திற்காக இந்தியாவில் யாராவது இவ்வளவு பணம் செலவழிப்பதைக் காண முடியுமா? கையெழுத்துப் பிரதியைத் தயாரிக்கவே இருபத்தைந்து வருடங்கள் ஆகியதாகத் தமது முன்னுரையில் மாக்ஸ்முல்லர் எழுதியுள்ளார். அச்சிடுவதற்கு, மேலும் இருபது ஆண்டுகள் பிடித்தன. தமது வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டுக் காலத்தை, ஒரு நூலை வெளியிடுவதற்காகச் சாதாரண மனிதன் யாராவது கழிப்பானா? சற்று சிந்தித்துப் பார்! நான் அவரை சாயணர் என்று சொல்வது வெறும் கற்பனையா என்ன? (ஞானதீபம் 6-57-58)
இவ்வளவு தூரம் தாம் மதிப்பு வைத்திருந்த மாக்ஸ்முல்லரை சுவாமிஜி 1896 மே 28-இல் அவரது வீட்டில் சந்தித்தார். ‘என்ன அற்புதமான மனிதர் அவர்! சில நாட்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தேன். சந்தித்தேன் என்பதை விட அவரை வணங்குவதற்காகச் சென்றேன் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் ஸ்ரீ ராமகிருஷ்ணரை நேசிக்கின்ற யாரையும் சென்று சந்திப்பதை ஒரு தீர்த்த யாத்திரையாகவே நான் கருதுகிறேன்’ என்று பிரம்மவாதின் பத்திரிகைக்கு எழுதினார் சுவாமிஜி.
சுவாமிஜி சந்தித்த போது மாக்ஸ்முல்லருக்கு 70 வயது ஆகியிருந்தது. அழகிய தோட்டத்தினுள் அமைந்திருந்தது அவரது சிறிய வீடு. சுற்றிலும் மரங்கள், செடிகொடிகள், பூக்கள் என்று அந்த இடம் எனக்கு பண்டைய முனிவர்களின் தபோவனமாகத் தோன்றியது. அவரும் அவரது மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ்ந்து வருகின்றனர். பிரம்ம ரிஷிகளும், ராஜ ரிஷிகளும், மாபெரும் வானப்ரஸ்தர்களும் வாழ்ந்த வாழ்க்கையையே எனக்கு அவர்கள் நினைவூட்டினர்…. இந்தியாவின் மீதும் வேதாந்தத்திலும் அவர் வைத்துள்ள ஈடுபாட்டில் பாதியாவது எனக்கு இருக்காதா என்று தோன்றுகிறது’ என்று தமது சந்திப்பைப் பற்றிக் கூறினார் சுவாமிஜி.
மாக்ஸ்முல்லரிடமிருந்து விடை பெறும்போது சுவாமிஜி அவரிடம், ‘நீங்கள் எப்போது இந்தியாவிற்கு வரப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். முதியவரான அந்த முனிவரின் முகம் மலர்ந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது; மெதுவாகத் தலையை அசைத்தபடி அவர், ‘நான் இந்தியாவிற்கு வந்தால் என்னால் மீண்டும் இங்கே திரும்ப இயலாது. நீங்கள் என்னை அங்கேயே எரிக்க வேண்டியிருக்கும்’ என்று கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார் மாக்ஸ்முல்லர். அவரது வரலாற்றை எழுத வேண்டும், அதற்கு சுவாமிஜி உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சுவாமிஜியும் ராமகிருஷ்ணானந்தருக்கு எழுதி, அவருக்குத் தேவையான தகவல்களையும் குறிப்புகளையும் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மாக்ஸ்முல்லரிடம் இவ்வளவு மதிப்பு வைத்திருந்தாலும் மாக்ஸ்முல்லர் உட்பட மேலை நாட்டு அறிஞர்கள் இந்தியா பற்றியும் அதன் ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றியும் சரியாக அறிந்திருக்கவில்லை என்பது சுவாமிஜிக்குத் தெரிந்தே இருந்தது. மாக்ஸ்முல்லரும் தமது சில கட்டுரைகளில் இந்து மதத்தைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் சில உண்மையற்ற கருத்துக்களைக் கூறியிருந்தார். அதுபற்றி, ‘பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இந்து மதத்தைப் பற்றி எழுதுகின்ற எல்லா நூல்களிலும் இறுதியில் அதனைச் சிறுமைப்படுத்துகின்ற ஒரு கூற்றைச் சேர்த்து விடுகிறார் என்றாலும், நாளடைவில் முழு உண்மையையும் அவர் கண்டேயாக வேண்டும் என்று நான் நினைத்தேன். அவர் கடைசியாக எழுதியுள்ள வேதாந்தம் என்ற நூலின் பிரதி ஒன்றை முடிந்த அளவு விரைவில் பெறுங்கள்; அந்த நூலில் அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதை நீங்கள் காணலாம் – மறு பிறவி, மற்ற எல்லாவற்றையுமே ஏற்றுக் கொள்கிறார் என்று எழுதிகிறார் அவர். (ஞான தீபம் 10-156)
மொழியியலின் துணையுடன் மேலை நாட்டு அறிஞர்கள் வேதங்களின் காலத்தைக் கணித்திருப்பதும் சரியல்ல என்பதும் சுவாமிஜிக்குப் புரிந்திருந்தது. ‘வேதங்களைப் பற்றி மேலை அறிஞர்கள் கூறுகின்ற கருத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. அது இன்ன காலத்தைச் சேர்ந்தது என்று இன்று கூறுகிறார்கள். நாளையே அதத் தவரென்று தள்ளிவிட்டு, ஓராயிரம் ஆண்டுகள் முன்னால் கொண்டு வருகிறார்கள் என்று எழுதுகிறார் அவர். (ஞான தீபம் 5-427)
கருத்து என்னவாக இருந்தாலும் சுவாமிஜி இறுதி வரை மாக்ஸ்முல்லரிடம் வைத்திருந்த மதிப்பு மாறவில்லை.
**
மேலே உள்ளவை சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய சுவாமிஜியின் விரிவான வாழ்க்கை வரலாற்றில் உள்ளது.
இந்தத் தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். எல்லா உண்மைகளும் நம்மிடம் இப்போது உள்ளன.
அவற்றை அலசி ஆராய்ந்து மாக்ஸ்முல்லர் மர்மத்தை விடுவிப்போம்.
அதற்கு முன்னர் சுவாமிஜி மாக்ஸ்முல்லரைப் பற்றிக் கூறியவற்றில் சில பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் பார்த்து விடலாம்.
**** தொடரும்