Written by London Swaminathan
Date: 1 JANUARY 2018
Time uploaded in London- 6-59 AM
Post No. 4572
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks
‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)
சாணக்கியனின் நீதி சாஸ்திரம் ஒரு மருத்துவ நூலன்று; அப்படியும் கூட அவன் போகிற போக்கில் மூலிகைகள் பற்றியும் உணவு பற்றியும் பல அறிவுரைகளை வழங்குகிறான்.
ஒருவனுடைய உடலைப் பார்த்தாலேயே அவன் சாப்பிடும் உணவைக் கண்டுபிடித்து விடலாம் என்பார் சாணக்கியன்.
என்ன சரியான கணிப்பு!
தொந்தியும் தொப்பையுமாக இருந்தால் ஆசிய (Asian) நாட்டவர் என்று கண்டு பிடிக்கலாம். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் அரிசிச் சோறு அவர்களை இப்படி ஆக்கி விடுகிறது. இது போல ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளோ, குறிப்பாக நாம் அளவுக்கு அதிகமாக எதைச் சாப்பிடுகிறோமோ, அது நம் உடலில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம்.
முழு ஸ்லோகம்:-
ஒருவன் நடத்தையைப் பார், அவன் குடும்பத்தைச் சொல்லிவிடலாம்;
ஒருவனுடைய பேச்சைப் பார், அவன் ஊரையும் நாட்டையும் சொல்லி விடலாம்;
ஒருவனுடைய அங்க அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார், அவனுடைய அன்பை/ காதலைச் சொல்லிவிடலாம்;
ஒருவனுடைய உடலைப் பார், அவன் சாப்பிடும் உணவைச் சொல்லி விடலாம்.
ஆசாரஹ குலமாக்யாதி தேசமாக்யாதி பாஷணம்
சம்க்ரமஹ ஸ்னேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம்
—–அத்தியாயம் 3, ஸ்லோகம் 2
xxx
தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு
அருகில் நெருப்பு இல்லாவிட்டாலும் உடலை எரிக்கக்கூடிய, தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு:
கெட்ட உணவு (வாய்க்கு ருசியான, ஆனால் உடம்புக்கு ஒவ்வாத உணவு ) சிற்றூரில் வசித்தல், கீழ்மட்டத்தில் உள்ளவனுக்கு சேவை செய்தல், எரிந்து விழக்கூடிய மனைவி, முட்டாளான மகன், விதவையான மகள் – இந்த ஆறும் உடலை தகிக்க வைக்கும்.
குக்ராமவாஸஹ குலஹீனஸேவா குபோஜனம் க்ரோதமுகீ பார்யா
புத்ரஸ்ச மூர்க்கோ விதவா ச கன்யா வினாக்னினா ஷட் ப்ரதஹந்தி காயம்
—அத்தியாயம் 4, ஸ்லோகம் 8
xxxx
அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் !
இப்போதெல்லாம் கல்யாணத்துக்குப் போனால் சீக்கிய குருத்வாரா லங்கார் (Langar) போல 24 மணி நேரமும் சாப்பாடு போடுகிறார்கள். அங்காவது குறைவான அயிட்டம் (items )கள்தான்- வகைகள் தான் கிடைக்கும். கல்யாணத்திலேயோ, ஒரு குடும்பத்துடன் மற்றொரு குடும்பம் போட்டி போட்டுக்கொண்டு 30, 40 வகைகளை பரிமாறி அவர்களுடைய பணத்தையும் வீணடித்து நம்முடைய வயிற்றையும் பாழடைய வைக்கிறார்கள். நாமும் வேண்டாம் என்று சொல்வதில்லை; கிடைக்கக் கிடைக்க வயிற்றில் திணிக்கிறோம்; முன் சாப்பிட்ட உணவு இன்னும் செமிக்கவில்லை என்பதை அறிந்தும் உண்கிறோம். அவை எல்லாம் வயிற்றில் விஷமாகிப் போனது அடுத்த சில நாட்களில் நமக்குத் தெரிகிறது; புரிகிறது.
அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் ஆகும்;
பாராயணம் செய்யாத படிப்பு விஷம் ஆகும்;
சபையில் நிற்பது ஒரு ஏழைக்கு விஷம் ஆகும்;
வயதான மனிதனுக்கு இளம் பெண் விஷம் ஆகும்.
விஷம் என்பதைப் பொருந்தாது, ஏற்காது என்று பொருள் கொள்ளலாம்.
அனப்யாஸே விஷம் சாஸ்த்ரம் அஜீர்ணே போஜனம் விஷம்
திவம் ஸபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்
xxxx
திருப்தி வேண்டும்
ஒருவன் தனக்குக் கிடைத்த உணவு, வாய்த்த மனைவி, சம்பாத்தித்த செல்வம் மூன்றிலும் திருப்தி அடைய வேண்டும். இதற்கு நேர் மாறாக எப்போதும் திருப்தி அடையக் கூடாத மூன்று விஷயங்களும் உண்டு:-படிப்பு, தானம் செய்தல், தவம்.
ஸந்தோஷ த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே
த்ரிஷு சைவ ந கர்தவ்யோ அத்யயனே தப தானயோஹோ
—அத்தியாயம் 7, ஸ்லோகம் 4
பிரிட்டனில் டெலிவிஷன் பார்ப்போர் எல்லோருக்கும் பால் மக்கென்னாவைத் (Paul McKenna) தெரியும். பெரிய மனோ வஸிய நிபுணர். (Hypnotist); நாலு பேரை மேடைக்கு அழைப்பார்; நீ மைக்கேல் ஜாக்ஸன், நீ மடொன்னா, நீ பீட்டில்ஸ் பாடகர் என்று ஒவ்வொருவரிடமும் ஒன்றைச் சொல்லிவிட்டு கையைச் சொடுக்குவார். அவர்கள் அடுத்த நொடியில் அவர் யார் பெயரை சொன்னாரோ அது போலவே நடிப்பர்.
அவரே தமிழ் நாட்டில் இருந்தால் நாலு பேரில் ஒருவரை எம்.ஜி.ஆர், ஒருவரை சிவாஜி கணேசன், ஒருவரை ரஜினிகாந்த், இன்னும் ஒருவரை கமலஹாசன் என்று சொல்லிவிட்டு ஹிப்னாடிஸம் செய்த அடுத்த நொடியில் கேள்வி கேட்டால் அந்தந்த நடிகர் போலப் பேசுவார்.
அவர் உடல் இளைக்க ஒரு சில வழிமுறைகளைச் சொன்னார்; நினைவில் உள்ளதை மட்டும் தருகிறேன்:
எந்த ஒரு உணவுப் பண்டம் கிடைத்தாலும் அதை டெலிவிஷன் பார்த்துக் கொண்டோ, பாட்டுக் கேட்டுக் கொண்டோ, புஸ்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடாதீர்கள். உணவுப் பண்டத்தைப் பாராட்டி, சீராட்டி, கொஞ்சிக் குலவிப், போற்றிப் புகழ்ந்து அணு அணுவாக ரஸித்து, ருஸித்து, அனுபவித்து உண்ணுங்கள்.
இறைவன் உங்களுக்கு அதைக் கொடுத்தானே என்று எண்ணி மகிழுங்கள்.
இதுவே வயிற்றின் பசியை ஆற்றிவிடும் என்று நம்பி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள்.
நாளடைவில் கொஞ்சமாகச் சாப்பிடுவீர்கள்; வயிறு நிறைந்த திருப்தியும் ஏற்பட்டுவிடும்.
நீங்களும் பின்பற்றிப் பாருங்கள்.
–சுபம்—