சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள் (Post No.4583)

Date: 5 JANUARY 2018

 

Time uploaded in London- 5-41 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4583

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் ஜனவரி 2018 இதழில் வெளியாகியுள்ள

மகர சங்கராந்தி சிறப்புக் கட்டுரை.

ஞான ஆலயம் வருட சந்தா ரூ300. சந்தா அனுப்ப வேண்டிய முகவரி :திருமதி மஞ்சுளா ரமேஷ், பழைய எண் 7, புதிய எண் 32, அருணாச்சலபுரம் இரண்டாவது தெரு, அடையாறு, சென்னை, 600020

 

குஷ்ட ரோகம், கண் வியாதிகள் உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள்

 

ச.நாகராஜன்

1

உலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. ஆனால் ஹிந்து நாகரிகமோ சூரியனின் அபார வல்லமையை ஆய்ந்து கண்டு பிடித்து அதை மனித குலத்தின் நன்மைக்காகப் பெறுவதற்குள்ள அனைத்து வழிகளையும் தந்திருக்கும் நாகரிகமாக அமைகிறது.

ஏராளமான சூரிய ஸ்துதிகள், சூரிய வழிபாட்டு முறைகள் ஹிந்து பாரம்பரியத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

2

ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனனின் சாம்ராஜ்யம் மிகப் பெரிதாக விளங்கியது. ஹர்ஷவர்த்தனனும் அவனது தந்தை ப்ரபாகரவர்த்தனனும் சூரிய தேவனை உபாசிப்பவர்கள்.

 

அவனது அரசவையில் மிகப் பெரும் கவிஞராக மயூர பட்டர் என்பவர் இருந்தார். அபாரமான சம்ஸ்கிருத சொல் வன்மை உடையவர் அவர். அவருக்கு அதிரூபலாவண்யம் கொண்ட பேரழகியாக ஒரு மகள் இருந்தாள்.

அவளது அழகு அனைவரையும் சொக்க வைக்கும் அழகு.

அப்படிப்பட்ட அழகைப் பார்த்த மயூர பட்டர் அதைத் தன் அழகிய சொற்களினால் வர்ணித்துக் கவிதை இயற்றினார்.

இந்தப் பாடல்களைக் கேட்ட மகள் பெரிதும் வருத்தமடைந்தாள். சொந்தப் பெண்ணின் அழகை எந்தத் தந்தையாவது வர்ணிப்பானா? இது முறையா என்று அவள் வெகுண்டாள்.

மிகுந்த ஒழுக்க சீலமும் ஞானமும் வாய்ந்த அவள் பெரும் தபஸ்வினியும் கூட.

தந்தையை நோக்கி, “இப்படி நீங்கள் தகாத ஒரு செயலைச் செய்ததற்காக என்னை வர்ணித்த அந்தக் கண்கள் பார்வையை இழக்கட்டும். உங்கள் உடலைக் கொடிய குஷ்டம் தாக்கட்டும்” என்று சாபம் கொடுத்தாள்.

பெரும் சக்தியைக் கொண்டிருந்த அவளது சாபம் உடனே பலித்து விட்டது.மயூர பட்டர் பார்வையை இழந்தார். அவரது உடலோ குஷ்ட ரோகத்தால் பீடிக்கப்பட்டு சோபையை இழந்தது.

மயூர பட்டர் துக்கத்தினால் அழ, அவரது நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட மகளும் தன் சாபம் அவருக்குச் செய்த கெடுதியைக் கண்டு நொந்து போனாள்.

பின்னர் மனத்தெளிவு பெற்று தந்தையிடம், “தந்தையே! கவலைப்பட வேண்டாம். அனைத்து ரோகங்களையும் போக்கி ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரும் சூரியனைக் குறித்து உங்கள் வாக் வன்மையால் நூறு செய்யுள்களைக் கொண்ட சூர்ய சதகம் ஒன்றை இயற்றி அவனை வழிபடுங்கள். வழி பிறக்கும்” என்றாள்.

மகளின் அமிர்தம் போன்ற வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த மயூர பட்டர் மனமுருக சூரியனை நோக்கி நூறு மந்திர சக்தி வாய்ந்த அபூர்வமான பாடல்களைப் பாடலானார்.

என்ன ஆச்சரியம்! பாடல்கள் முடிந்த போது அவர் மேனி குஷ்ட ரோகம் நீங்கிப் பளபளத்தது. கண் பார்வை தீர்க்கமாக வந்தது.

ஹர்ஷவர்த்தனன் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியத்தால் பிரமித்தனர்.அவரையும் அவர் மகளையும் உலகமே போற்றியது.

 

SUN TEMPLE AT MODHERA IN GUJARAT

அந்த நூறு பாடல்களைக் கொண்ட சதகம் சூர்ய சதகம் என்றும் மயூர சதகம் என்றும் அனைவராலும் போற்றப்பட்டு இன்று வரை ஓதப்பட்டு வருகிறது.

குஷ்டரோகம், கண்பார்வை இல்லாமை உள்ளிட்ட ரோகங்களால் வருந்தும் யாரானாலும் சரி, அவர்கள் இந்த நூறு ஸ்லோகங்களையும் ஒதியோ அல்லது ஓதக் கேட்டோ சூரியனை பயபக்தியுடன் வழிபட்டால் அவர்கள் ரோகம் நீங்கி ஆரோக்கியம் பெறுர். இதை வரலாறு கூறும் ஏராளமான சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

சுமார் 12 பேரறிஞர்கள் இந்த சூர்ய சதகத்திற்கு விரிவுரை என்னும் பாஷ்யத்தைச் செய்திருப்பதிலிருந்தே இதன் மஹிமையைச் சுலபமாக அனைவரும் அறியலாம்.

சமீபகாலத்தில், காஞ்சி பரமாசார்யாள் இதை பிரபலப் படுத்தியது குறிப்பிடத் தகுந்தது.

இதை இன்று சுலபமாக நெட்டிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

3

முக்கோடி வாழ்நாளும் , முயன்றுடைய பெரிய தவமும், எக்கோடியாராலும் வெல்லப்படாய் என்ற வரத்தையும் பெற்ற இராவணனை எப்படி வதம் செய்வது என்று ராமன் சற்று திகைத்து நின்ற போது அவனுக்கு எதிரில் தோன்றிய அகஸ்திய மாமுனி ஆதித்ய ஹ்ருதயம் என்ற அற்புதமான சூரிய வழிபாட்டு மந்திரத்தைக் கற்பித்தார்.

இன்று வரை அனைவருக்கும் பலன் தரும்  மஹா மந்திரம் இது.

 

 

“இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:ப்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார்.

அதைச் சொல்லி விட்டு அகஸ்தியர், “இதோ, இந்தக் கணத்திலேயே ராவணனை வதம் செய்”  (அஸ்மின் க்ஷணே, மஹா பாஹோ, ராவணம் த்வம் வதிஷ்யஸி) என்று அருளினார்.

இந்த வார்த்தை அன்னை ஜானகிக்கு பொருள் பொதிந்த ஒன்றாக அமைந்திருப்பதை சுந்தர காண்டம் ஓதும் அனைவரும் உணர்வர்.

 

SUN SCULPTURE IN BATH IN ENGLAND, UK

அசோக வனத்தில், கோர ராக்ஷஸிகள் அன்னையைச் சூழ்ந்திருக்க அவர்களில் ஒருத்தி, “என் வார்த்தையை அங்கீகரித்து நடக்காவிட்டால் இந்த க்ஷணத்தில் நாங்கள் எல்லோரும் உன்னைக் கொன்று தின்று விடுவோம் (அஸ்மின் முகூர்த்தே ஸர்வாஸ்த்வாம் பக்ஷயிஷ்யாமஹே வயம்) என்று பயமுறுத்தியதற்குப் பதிலடியாக வந்த மந்திர வார்த்தையாக அஸ்மின் க்ஷணே ராவணனை வதம் செய் என்ற அகஸ்தியர் வார்த்தை அமைவதை உணரலாம்.

கண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம். எதிரிகளை ஒழிப்பது; பரம மங்களமானது; சர்வ மங்களத்தையும் அருள்வது; அனைத்துக் கவலையையும் ஓட்டுவது, ஆயுளைத் தருவது என்பதை ஆதித்ய ஹ்ருதயமே உறுதி செய்கிறது.

(ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாஸனம் I

ஜயாவஹம் ஜபேந் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் II

ஸர்வ மங்கள மாங்கள்யம் ஸர்வபாப ப்ரணாஸனம் I

சிந்தாஸோக ப்ரஸமனம் ஆயுர்வர்த்தந முத்தமம் II ஸ்லோகம் 4, 5)

இதை இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது.

வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் சொல்லப்படும் ஆதித்ய ஹ்ருதயம் பற்றி மேலே பார்த்தோம்.

இன்னொரு ஆதித்ய ஹ்ருதயம் (சற்று நீளமானது) ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக – கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் உரையாடலாக – அமைகிறது.)

சிவபிரானால் அருளப்பட்ட சூர்யாஷ்டகம், “ஆதி தேவ நமஸ்துப்யம்” என்று ஆரம்பிக்கும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது. சுலபமாக சில வினாடிகளில் அன்றாடம் அனைவரும் கூறும் அஷ்டகம் இது. பெரிய பலனைத் தர வல்லது.

இன்னொரு சூர்யாஷ்டகம் ஸ்ரீ பண்டித ரகுநாத சர்மாவினால் அருளப்பட்டுள்ளது. ப்ரபாதே என்று இது ஆரம்பிக்கும்.

சூரியனை கவசமாகக் கொள்ள விரும்புவோர் ஓதுவதற்கு உரிய சூர்ய கவசம் ஸ்ரீ சூர்ய உவாச என்று ஆரம்பிக்கும்.

ஸ்ரீப்ரஹ்ம யாமளத்தில் உள்ள இது ‘த்ரைலோக்ய மங்களம் நாம சூர்ய கவசம்’ என்று அழைக்கப்படுகிறது

 

4

வேதங்கள் சூரியனை ‘ரோக நாசகன்’ என்று புகழ்கின்றன. ரிக் வேதம் முதலாம் மண்டலத்தில் நாற்பதாம் சூக்தத்தில் சூரியனைப் பற்றிய அனைத்து இரகசியங்களையும் பற்றி அறியலாம். நண்பர்களின் நண்பனான சூரியனே என்று இது சூரியனை விளிக்கிறது. உனது சிவப்புக் கிரணங்களினால் எனது பீடைகள் தூர விலகுகின்றன என்று அது கூறுகிறது.

ரிஷிகள் சூரியனின் மகத்தான சக்தியை உணர்ந்தவர்கள்.  ஆகவே சூரியனுக்கு என ஒரு தனி உபநிஷத்தே உள்ளது. சூர்யோபநிஷத் என்னும் உபநிடதத்தில் சூரியனே ஞான விஞ்ஞான ஆனந்த ரூபன் என்று வர்ணிக்கப்படுகிறான்.

சூர்ய காயத்ரியின் மஹிமையோ எல்லையற்றது.

“ஓம் பாஸ்கராய வித்மஹே, திவாகராய தீமஹி, தன்னோ சூர்ய ப்ரசோதயாத்” என்பதே சூர்ய காயத்ரி.

(“ஒம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி, தன்னோ சூர்ய ப்ரசோதயாத்” என்றும் சூர்ய காயத்ரி சொல்லப்படுகிறது)

ஆரோக்கிய ப்ராப்தி, சக்தி, புகழ், தேஜஸ் உள்ளிட்ட சகல நலன்களையும் பெற சூர்ய சூக்தத்தை பாடம் செய்யுங்கள் என்பது ரிஷிகளின் அருளுரை. சூர்ய சூக்தம் 47 அபூர்வமான சக்தி வாய்ந்த மந்திரங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.

சூரிய மந்திரத்துடன் சூர்ய ஸ்தவராஜத்தின் ஐந்து பாடங்களையும் சிரத்தையுடன் ஒருவன் சொன்னால் எப்பேர்ப்பட்ட ரோகமும் போய் விடும் என்பது முனிவர்களின் அருள் வாக்கு.

சாந்தோக்ய உபநிஷத் (1-4-1&2) புத்ர ப்ராப்திக்கு சூரியனை வழிபடுமாறு அருளுரை பகர்கிறது.

மைத்ராயண்யுபநிஷத் சூரியனுக்கும் ஓம்காரத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.

சூரிய ஜப விதிகளை வல்லார் வாய் கேட்டு, குரு மூலம் ஆசி பெற்று அனுஷ்டிப்பதே உசிதம்.

 

5

இன்னும் யாக்ஞவல்க்யர் அருளிய சூர்யகவச ஸ்தோத்திரமும், மஹாபாரதத்தில் வரும் சூரிய அஷ்டோத்தரமும் பக்தர்களுக்கு சூரியனின் அருளைப் பொழிவதற்காகவே உள்ளன.

யுதிஷ்டிரர் அருளியுள்ள சூர்ய ஸ்தோத்ரமும் மஹாபாரதத்தில்  உள்ளது.

ஆயிரம் நாமங்களால் ஆயிரமாயிரம் கிரணம் கொண்ட சூர்யனை வழிபடுவதற்கெனவே சூர்ய ஸஹஸ்ரநாமமும் பிரபலமாக உள்ளது.

எட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

அன்றாட ஆரோக்கியத்தை உறுதி செய்து நீண்ட ஆயுளைப் பெற விரும்புவோர் காலம் காலமாக செய்யப்பட்டு அனுபவத்தால் உண்மை என்று அறியப்படும் சூரிய நமஸ்காரத்தை உரிய மந்திரங்களுடன் தினமும் செய்து சூரியனை காலை நேரத்தில் வழிபடலாம்.

6

இன்னும் மந்திர மற்றும் தந்த்ர சாஸ்திரங்கள் அருளும் விவரங்கள் அபாரமானவை.

இந்த மந்திர,தந்திர பிரயோகங்களை நன்குணர்ந்த குருமார்கள் மூலமாகவே பெற வேண்டும் என்பதால் இங்கு குறிப்பிடவில்லை.

சூரியனுக்கு உரிய யந்திரமாக அமைவது கீழே தரப்பட்டுள்ள யந்திரம்:

 

6 7 2
1 5 9
8 3 4

சூரியனுக்கு உரிய நவக்ரஹ ஸ்துதி:

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் I

தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம் II

சூரியனுக்குரிய ஸ்தலம் : சூரியனார் கோவில் (மாயவரத்திலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)

இதர தலங்கள் : கோனார்க் உள்ளிட்ட ஏராளமான தலங்கள்

சூரியனின் மனைவி : உஷா ப்ரத்யக்ஷா

சூரியன் அதிபதியாக உள்ள ராசி : சிம்மம்

நவக்ரஹங்களுக்கு நடுவில் உள்ளவர்.

அதி தேவதை:அக்கினி

ப்ரத்யதி தேவதை: ருத்ரன்

நிறம்: சிவப்பு

தானியம் : கோதுமை

மலர் : செந்தாமரை, எருக்கு

வஸ்திரம்: சிவப்பு ஆடை

ரத்தினம் : மாணிக்கம்

சமித்து: முருக்கு

7

சூரியனை வழிபடுவதற்கான விசேஷ தினங்கள் ஏராளம் உள்ளன. மகர சங்கராந்தி (பொங்கல்) அன்று விசேஷமாக சூரிய நாராயண பூஜை செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு. பாரதமெங்கும் இதைக் கொண்டாடாமல் யாரும் இருப்பதில்லை.

சூரியன் பிறந்த தினமான ரத சப்தமி தை மாதம் அமாவாசை கழிந்த ஏழாம் நாளன்று வருகிறது. அன்று தெற்கு நோக்கிச் சென்ற சூரியன் தன் பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்குகிறான். அன்று சூரியனை வழிபடுவதன் மூலமாக நீடித்த ஆயுளையும் நல்ல உடல் நலத்தையும் பெறலாம். புதிய தொழில் துவங்க ரத சப்தமி நல்ல நாள். பெண்கள் இந்த நாளில் சூரியனை வழிபடுவதன் மூலமாகச் சிறப்பான மேல் நிலையை அடைவர்.

ரத சப்தமிக்கான ஒரு அருமையான நீண்ட கதை உண்டு,

அதில் ஒரு அந்தணன் ஒரு மரத்தடியில் தினமும் சூரியனின் 12 நாமங்களைச் சொல்லி வழிபட மரத்திலிருந்து ஒரு குரல் ஏதேனும் கேள் என்று தினமும் ஒலிக்க, அதை அவன் தன் மனைவியிடம் கூற, அவள் சிறிது அன்னமும் செல்வமும் அருளும் படி கேட்கச் சொல்ல, அதை அந்தணன் கூறி வழிபட,  வீ ட்டிற்குத் திரும்பி வந்தவன் வீடு முழுவதும் மலை போல அன்னமும், ஏராளமான செல்வமும் குவிந்து கிடப்பதைப் பார்த்துத் திகைக்க, பின்னர் அவனும் அவன் மனைவியும் அனைவருக்கும் அன்ன தானமும் செல்வ தானமும் தினமும் செய்து பெரும் புகழ் பெற்றனர் என்று வருகிறது.

சூரியனின் வழிபாடு ஹிந்து வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்த ஒரு அன்றாட வழிபாடு.

சூரியனின் பெருமையில் இது வரை நாம் பார்த்தது எழு கடல் மணலில் ஒரு சிறு  மணல் துளியைத் தான்.

சகல சௌபாக்கியங்களையும் பெற பிரத்யக்ஷ தெய்வமாக – அன்றாடம் நாம் காணக் கூடிய தெய்வமாக – அறிவியலும் வியந்து ஆமோதிக்கும் பெரும் சக்தியாக – விளங்குவது சூரியனே.

அவனை வழிபட்டு உயர்வோம்; உய்வோம்!

****

 

Leave a comment

5 Comments

  1. sir surys sadhagam 100 where we get sir. please guide

  2. just google it. you may download all the 100 verses with english meaning. if u r not able to locate pl contact us. we will send
    s nagarajan

  3. ஐயா
    “சூரியன் பிறந்த தினமான ரத சப்தமி தை மாதம் அமாவாசை கழிந்த ஏழாம் நாளன்று வருகிறது. . அன்று தெற்கு நோக்கிச் . .சென்ற சூரியன் தன் பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்குகிறான். “ என்று தான் தமிழ் நாட்டில் பெரும்பாலும் கூறப்படுகிறது.
    தமிழ்நாட்டில் சௌரமான பஞ்சாங்கம் (Solar Calendar) வழக்கில் இருந்தாலும் எல்லா பண்டிகைகளும் சாந்திரமான பஞ்சாங்கத்தின் (Lunar Calendar) அடிப்படையில்தான் கொண்டாடப்படுகின்றன. இதன்படி தைமாத அமாவாசைக்கு அடுத்து மாக (மாசி) மாதம் தொடங்கும்.
    சூரியன் வடக்கு நோக்கித் திரும்புவது
    இராமயண காலத்தில் சுமார் கி.மு.6000
    மகாபாரத காலத்தில் சுமார் கி.மு 3000
    தமிழ் பஞ்சாங்கம் தொடங்கிய கி.பி 150 ல் தை 1/பொங்கல் /சங்கராந்தி /January 14/15
    தற்காலத்தே மார்கழி 7/8 December 21
    இராமாயண காலத்திலிருந்ததைவிட உத்தராயணம் சுமார் 110 நாட்கள் முன்பாக நிகழ்கிறது் இதற்குகக காரணம் பூமியின் அச்சு சுமார் 73 ஆண்டுகளில் ஒரு பாகை முன்னோக்கி சுற்றுவது. இதன் பெயர் சாயனம் /of Equinoxes.
    நாம் ரதசப்தமியை 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கின்படியும் பொங்கலை 1800 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கின்படியும் தவறாகக் கொண்டாடுகிறோம்.

    S.Govindaswamy
    Email : govindaswamy.s77@gmail.com

  4. REPLY
    For Sanskrit orginal with Sanskrit commentary pl download from:

    Click to access surya_shataka.pdf

    for English translation pl download from:

    Click to access Suryasatakam-Chowkhamba.pdf

    surya satakam may be downloaded from other sites also.

    Sarawathi mahal, Tanjore, Tamilnadu has published surya satakam.

    S.NAGARAJAN

  5. nparamasivam1951

     /  January 22, 2018

    மிக அருமையாக எழுதி உள்ளீர்கள். நன்றி. மேலும்,
    “மயூர பட்டர் மனமுருக சூரியனை நோக்கி நூறு மந்திர சக்தி வாய்ந்த அபூர்வமான பாடல்களைப் பாடலானார்.”” இவை எங்கு கிடைக்கும் என தெரிவித்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: