Date: 6 JANUARY 2018
Time uploaded in London- 6-35 am
Written by S NAGARAJAN
Post No. 4587
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாக்யா 5-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 46வது) கட்டுரை
கடலிடம் கற்போம்!
ச.நாகராஜன்
“அனைவரையும் ஒருங்கிணைக்கும் கடல் தான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை! இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது!” – ஜாக்குவஸ் யூஸ் குஸ்டாவ், கடல் வள நிபுணர்
2017ஆம் ஆண்டு முடிந்து விட்ட தருணம். உலகில் ஏராளமான நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. அவற்றினுள் கடலில் நடந்த நல்லதும் கெட்டதுமான மாபெரும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளனர்.
அவற்றுள் முதலிடத்தைப் பிடிப்பது வானிலை மாறுதல்களால் கடலில் ஏற்படும் சூறாவளிப் புயல் தான். அமெரிக்காவில் 2017, ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட ஹார்வி என்ற சூறாவளிப் புயல் 48 மணி நேரத்தில் பிரமிக்க வைக்கும் 60 அங்குல மழையைப் பெய்வித்தது. இந்தப் புயலால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் உத்தேச மதிப்பீடு சுமார் நூறு பில்லியன் டாலர் ஆகும்! (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி; ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 64.). அடுத்து உடனடியாக கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட இர்மா என்ற சூறாவளிப் புயல் மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்றைத் தொடர்ந்து 37 மணி நேரம் வீசிக் கொண்டிருந்தது. பல தீவுகள் மூழ்கியே விட்டன.
இந்த ஒவ்வொரு புயலும் மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தி: பூமியை வெப்பமயமாக்கிக் கொண்டே போகாதீர்கள். இப்படியே போனால் பூமியில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் என்பதைத் தான்!
அடுத்து வட அட்லாண்டிக்கில் ரைட் வேல் (Right Whale) எனப்படும் திமிங்கிலமும் வாக்விடா பார்பாய்ஸ் (Vawuita porposes) என்ற அரிய வகை கடல் வாழ் உயிர்னமும் படாத பாடு படுகின்றன. பிரம்மாண்டமான அது கொல்வதற்கு உகந்தது, லாபகரமானது என்பதாலும் கடற்கரைக்கு அருகில் இருப்பதாலும் அதன் பெயர் ரைட் வேல் என்பதாயிற்று. இந்த இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. நூறே நூறு பெண் திமிங்கிலங்கள் தான் இந்த இனத்தில் இப்போது இருக்கின்றன. இந்த வகை திமிங்கிலத்தை வமிச விருத்தி செய்ய நூறு பெண் திமிங்கிலங்கள் போதாது என்பது தான் வருத்தமூட்டும் செய்தி! வாக்விடா இனத்தில் இன்று இருப்பது வெறும் 30 மட்டுமே!
அடுத்து பவழப்பாறைகள் மிகவும் குறைந்து கொண்டே வருகின்றன. ‘சேஸிங் கோரல்’ என்ற டாகுமெண்டரி படம் இந்த அபாயத்தை உருக்கமாக விளக்குகிறது. நச்சு வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை மனித குலம் என்று குறைக்கிறதோ அன்று தான் பவழப் பாறைகளுக்கு நல்ல நாள். கடற்கரை பகுதிகளைக் காப்பதோடு ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆதரவாக உள்ள பவழப் பாறைகளின் அழிவு உண்மையிலேயே வருத்தமூட்டும் ஒரு செய்தியாகும்.
அடுத்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. மரீனா பீச்சிலிருந்து உலகின் சகல கடற்கரைகளும் பிளாஸ்டிக் மயம். எவ்வளவு பிளாஸ்டிக் கழிவு உலகத்தில் இருக்கிறது என்பதை ஆராயப் போன விஞ்ஞானிகள் பயந்து நடுநடுங்கி விட்டனர்.அதாவது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு இருக்கிறதாம். (பூமியின் ஜனத்தொகை 760 கோடி).
போகிற போக்கில் நாம் உண்ணும் உணவில் கூட பிளாஸ்டிக் இருக்கும் அபாயம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்! கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம்! ‘பிளாஸ்டிக் டம்ளரையோ ஸ்டிராவையோ கையில் வைத்திருக்கும் போது நீங்கள் உலகத்திற்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தயவு செய்து ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக்கை எந்த விதத்தில் இருந்தாலும் தவிருங்கள்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.
london swaminathan in Greece
கடற்கரைக் காற்று அபரிமிதமான ஆற்றலை உருவாக்க வல்லது. விண்ட் டர்பைன்களை ஒவ்வொரு நாடும் அமைக்க ஆரம்பித்து அளப்பரிய ஆற்றலை உருவாக்குகிறது. அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுக்ள் இதில் நல்ல முன்னேற்றதைக் கண்டு விட்டன.
2017இல் கடல் வாழ் உயிரினங்களை நன்கு ஆராய்ந்து பல உத்திகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் ஒன்றைப் பிடித்தால் பிடித்தது தான். எப்படி அவ்வளவு அழுத்தமாக அது ஒன்றைப் பற்றிப் பிடிக்க முடிகிறது என்பதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதே உத்தியை ரொபாட்டுகளில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் கப்பலின் முகப்பில் பொருத்தப்படும் ரொபாட்டுகள் தான் இருக்க வேண்டிய இடத்தை நன்கு பிடித்துக் கொள்ளும். அதே போல பெலிகன் இனத்தை ஆராய்ந்து கடலடி நீரில் ட்ரோன்கள் எப்படி வேகமாக நீந்திச் செல்ல முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
கடல் வாழ் உயிரினத்தில் விசேஷ வகையான சன் ஃபிஷ் என்னும் மீன் ஒன்பது அடி நீளம் இருக்கும்,. அதன் எடையோ மலைக்க வைக்கும் இரண்டு டன். இந்த வருடம் நான்கு புது வித சன் ஃபிஷ் வகைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மோலா டெக்டா (Mola Tecta) என்ற புதுப் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.
பிலிப்பைன்ஸில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த 2017இல் பிரகாசமான ஆரஞ்சு நிற முகம் கொண்ட ஒரு புது சர்ஜன் மீனைக் கண்டு பிடித்துள்ளனர். நூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய இந்தப் பகுதியில் விஞ்ஞானிகள் அடைந்த போனஸ் பரிசு இது!
கடல் செல்வம் உண்மையிலேயே மனித குலத்திற்கான பெரிய செல்வம். அதைப் பாழடித்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வையும், அதிலிருந்து கற்க வேண்டியவை ஏராளம் என்பதையும் உணர்த்திய ஆண்டாக 2017ஐ விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அது சரிதானே!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அடிவயிற்றில் ஆபரேஷன் செய்வது இன்று சர்வ சகஜமாகி விட்டது. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இது மிகவும் அபாயகரமான ஒன்றாக டாக்டர்களால் கருதப்பட்டு வந்தது. அடிவயிற்று ஆபரேஷன் நிச்சயம் மரணத்தில் கொண்டு விடும் என்பதால் அதை யாரும் செய்வதில்லை.
சரியாக 200 வருடங்களுக்கு முன்னர் 1817இல் நடந்தது இது. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் 40000 அடிமைகள் இருந்தனர். க்ராபோர்டு (Crawford) என்ற ஒரு அடிமைப் பெண் கர்ப்பமாக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் அது கர்ப்பப் பை கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மக்டவல் (McDowell) என்ற பிரபல டாக்டர் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருந்தார். அவர் அந்தப் பெணமணியை நோக்கி, “இந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். ஆனால் அது ஆபத்தான ஆபரேஷன். அதைச் செய்யாவிடிலோ மரணம் நிச்சயம்” என்றார்.
க்ராபோர்டு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் செய்யும் நேரத்தில் பைபிளிலிருந்து பிரார்த்தனை தோத்திரங்களை அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.
உலகின் முதல் அடிவயிற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்தப் பெண்மணி அதற்குப் பின்னர் 32 வருடங்கள் வாழ்ந்து தன் 78வது வயதில் மரணம் அடைந்தாள்.
மக்டவலின் நினைவாக அவரது கல்லறையில் இந்தியானா ஹாஸ்பிடல் அசோசியேஷன் சார்பில் இது பொறிக்கப்பட்டது. சரியாக 200 வருடங்கள் முடிந்த நிலையில் இப்போது அவர் நினைவு போற்றப்படுகிறது.
****