((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))
Date: 10 JANUARY 2018
Time uploaded in London- 6-51 am
Written by S NAGARAJAN
Post No. 4601
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
புத்த சரிதம்
மஹாராஜா புக்குசாதியின் ஆசை!
ச.நாகராஜன்
Buddha in Bangladesh; picture sent by Lalitha Malar Maniam
ராஜக்ருஹத்தின் மஹாராஜா பிம்பசாரனுக்கும், தக்ஷசீல மன்னனான மஹாராஜா புக்குசாதிக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே நல்ல வர்த்தக உறவு ஆரம்பித்து, மேம்பட்டது.
பிம்பசாரன் அந்த நாட்டு வணிகர்கள் மூலமாக தன் நண்பனுக்கு பல பரிசுப் பொருள்களை அனுப்பினான். அந்தப் பரிசுப் பொருள்களுடன் கூடவே ஒரு கடிதமும் சென்றது.
கடிதம் தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்தது.
“அன்பு நண்பரே!, எனது நாட்டில் மூன்று ரத்தினங்கள் உள்ளன. புத்தம், தர்மம், சங்கம்!”
கடிதத்தின் வாசகத்தைப் படித்த புக்குசாதிக்கு அதைப் பற்றி அறிய ஆவல் மிகுந்தது.
புத்தரைப் பற்றியும் தர்மத்தைப் பற்றியும் சங்கத்தைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டான்.
புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
புத்தரை மானசீகமாகச் சரணடைந்தான்!
Picture by Puvana Sarma
எப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது புத்த தரிசனத்தை அடைய வேண்டுமென்று அடங்காத ஆவல் ஏற்பட்டது அவனுக்கு.
இளவரசன் சித்தார்த்தன் எப்படி ராஜ்யம், பட்டம் ஆகியவற்றைத் துறந்தானோ அதே வழியைக் கடைப்பிடிக்க எண்ணிய அவன், தன் மகுடத்துடன் அனைத்தையும் துறந்தான். மஞ்சள் ஆடையை அணிந்தான்.
நேராக ராஜக்ருஹம் நோக்கிக் கிளம்பினான்.
அவனது உற்றாரும் சுற்றமும், மக்களும் அழுது புலம்பினர்.
ஆனால் புக்குசாதி தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் பின்னால் பலரும் கூடவே வரலாயினர்.
சில நாட்களில் 192 யோஜனை தூரத்தைக் கடந்து ராஜக்ருஹத்தை வந்து அடைந்தான்.
புத்தர் எங்கிருக்கிறார் என்று கேட்டான்.
அங்கிருந்த மக்களோ, புத்தர் 45 யோஜனை தூரத்தில் உள்ள சாவட்டி என்னும் இடத்தில் இருப்பதாகக் கூறினர்.
அன்றிரவே அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை என்பதால் இரவைக் கழிக்க ஏதேனும் இடம் இருக்கிறதா என்று கேட்டான்.
ஒரு குயவனின் குடிசை இருப்பதாகத் தெரிய வந்தது.
குயவனின் அனுமதியைப் பெற்று அவன் அங்கு தங்கினான்.
அங்கோ சாவட்டியில் புத்தர் அன்றைய தினத்தில் தன் கருணையை அனுக்ரஹிக்க சத்பாத்திரமான ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார்.
தக்ஷசீல மன்னனான புக்குசாதி தன் அரசையும் சுக போகங்களையும் துறந்து தன்னப் பார்ப்பதற்காக நெடுந்தொலைவு கடந்து வந்துள்ளான் என்பதை அவர் அறிந்தார்.
மறு நாள் காலை அவன் ஒரு விபத்தில் இறக்கப் போவதையும் அவர் அறிந்தார்.
என்ன செய்வது? கருணை உள்ளம் ஒரு முடிவுக்கு வந்தது.
சாவட்டியிலிருந்து கிளம்பிய புத்தர் நேராக ராஜக்ருஹத்தை நோக்கி விரைந்து அதை அடைந்தார்.
புக்குசாதி தங்கியிருந்த குயவனின் குடிசையை அணுகினார்.
குயவனின் தான் அங்கு தங்க முடியுமா என்று கேட்டார்.
குயவன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான்.
குடிசைக்குள் நுழைந்த புத்தர் புழுதி நிறைந்த குடிசையின் தரையைப் பார்த்தார்.
Picture from Deccan Herald; Budhdha Gaya/Bodhgaya
அதே தரையில் தான் புக்குசாதி அமர்ந்திருந்தான்.
அவரும் அமர்ந்தார்.
இப்போது அந்த புழுதித் தரையில் இரண்டு பெரும் சாம்ராஜ்யங்களைத் துறந்த மன்னர்கள் அமரிந்திருந்தனர்.
சித்தார்த்தனாக இருந்து புத்தராக ஆனவர். இன்னொருவர் தக்ஷசீல மன்னன் புக்குசாதி.
இருவரும் நெடுதூரம் நடந்திருந்தனர். இருவருக்கும் களைப்பு;
இருவரும் பேச ஆரம்பித்தனர். அர்த்தமுள்ள உரையாடல் ஒன்று ஆரம்பித்தது.
புத்தர்: நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?
புக்குசாதி : நான் புக்குசாதி. தக்ஷசீல மன்னன்.
புத்தர்: மஞ்சள் ஆடை அணிந்திருக்கிறீர்கள்! யாரிடம் துறவறம் பெற்றீர்கள்? ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்?
புக்குசாதி: எனது நண்பர் மஹாராஜா பிம்பசாரன் ஒரு தங்கத் தகட்டில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் இந்த ராஜ்யத்தில் மூன்று ரத்தினங்கள் இருப்பதாகவும் அவை புத்தம், தம்மம், சங்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக் கேட்டவுடன் என் ராஜ்யத்தை நான் துறந்தேன். ஒரு கடையிலிருந்து இந்த துவராடையை வாங்கி அணிந்தேன். புத்தரைத் தேடி இங்கு வந்தேன். அவரோ சாவட்டியில் இருப்பதாக அறிகிறேன். இரவு நேரமாகி விட்டது. ஆகவே இங்கு தங்கி இருக்கிறேன். நாளை காலை அவரைத் தரிசிப்பேன்.
புத்தர்: அவரை இதற்கு முன்னர் பார்த்திருக்கிறீர்களா?
புக்குசாதி: இல்லை
புத்தர்: அவரைப் பார்த்தால் அவர் தான் புத்தர் என்பதை நீங்கள் உணர முடியுமா?
புக்குசாதி: முடியாது.
அவ்வளவு தான். உரையாடல் முடிந்தது.
Picture from Singapore; posted by Puvana Sarma
இருவரும் மௌனமாயினர்.
புலர்காலைப் பொழுது மலர்ந்தது.
புத்தர் புக்குசாதிக்கு உபதேசித்தார்.
அப்போது தான் புக்குசாதிக்குத் தெரிய வந்தது, முதல் நாள் இரவு தன்னுடன் உரையாடிய மகான் புத்தரே தான் என்று!
எல்லையற்ற ஆனந்தம் கொண்ட அவன், புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் முந்திய இரவு அவரை ‘ஆயுஷ்மத்’ என்று அழைத்தமைக்காக! ஆயுஷ்மத் என்றால் நண்பன் என்று பொருள்.
தனக்கு உரிய முறையில் சங்கத்தில் சேர்க்குமாறு அவன் வேண்டினான்.
புத்தரும் கருணையுடன் அவ்னிடம், ஒரு துவராடையையும் ஒரு பிக்ஷா கலயத்தையும் கொண்டு வரப் பணித்தார்.
புக்குசாதி வெளியில் சென்று குப்பைக் குவியல் ஒன்றில் துவராடை ஒன்றைத் தேடலானான்.
அநத சமயத்தில் புத்தர் ஜேடவனம் என்ற மடாலயத்திற்குச் சென்றிருந்தார்.
குப்பைத் தொட்டியில் துவராடையையும் கலயத்தையும் அவன் எடுக்கும் போது காளை ஒன்று தன் இரு கொம்புகளால் அவனைக் கூர்மையாகக் குத்தியது.
அதே இடத்தில் உடனே அவன் மரணமடைந்தான்.
ஏற்கனவே புத்தரின் உபதேசத்தால் அனாகாமி என்ற உயரிய நிலையை அடைந்த அவன் திரும்பி வராத ஒரு உயரிய நிலையைப் பெற்றிருந்தான்.
அவிஹா ப்ரம்ம உலகத்திற்குச் சென்ற அவன் அர்ஹாந்த் என்ற அற்புதமான நிலையை அடைந்து விட்டான்.
நடந்ததை எல்லாம் கேட்ட மஹாராஜா பிம்பசாரன் புக்குசாதியின் உடலை எடுத்து தக்க மரியாதைகள் செய்து தகனம் செய்தான்.
அவனது அஸ்தியைச் சேர்த்து ஒரு நினைவிடத்தை அமைத்தான்.
புத்தரின் எல்லையற்ற கருணை எப்படி இறக்கப் போகும் விதியுடைய ஒருவ்னையும் சென்று சேரும் என்பதற்கு புக்குசாதியின் வாழ்க்கை நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.
தன்னை அண்டி வந்த எவரையும் புத்தர் கைவிட்டதே இல்லை!
***