இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ பெண்மணி! (Post No.4638)

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London- 6–47 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4638

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

 

வைணவச் சிறப்பு

 

இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ, ஞானப் பெண்மணி!

 

ச.நாகராஜன்

 

1

இராமானுஜாசார்யார் கருணையே உருவாகக் கொண்ட பெரும் வைஷ்ணவ ஆசார்யர்.

 

எல்லோருக்கும் அருள் பாலிப்பவர்.

ஒரு சமயம் அவர் திருக்கோளூர் என்னும் புனிதப் பதியில் எழுந்தருளியிருந்தார்.

பக்தர்கள் திரளாக வந்து அவரை வணங்கி அவர் அருளைப் பெற்ற வண்ணம் இருந்தனர்.

 

அவர் அங்கிருப்பதைக் கேட்ட பலரும் திருக்கோளூர் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது ஒரு மாதரசி அந்த ஊரிலிருந்து கிளம்பப் போவதாகக் கூறினாள்.

 

அதைக் கேட்ட பலரும் வியந்தனர். அனைவரும் இங்கு வரும் போது நீங்கள் அயலூர் செல்லலாமா என்று அவர்கள் கேட்டனர்.

மாதரசியோ பிடிவாதமாக அங்கிருந்து செல்லப் போவதாக கூறினாள்.

உடனே அவளை ஆசார்யரிடம் அழைத்துச் சென்று விஷயத்தைக் கூறினர்.

 

2

கருணையே உருவான ஆசார்யர் அவளைப் புன்முறுவலோடு நோக்கினார். அவளது உயர்ந்த ஆன்ம நாட்டம் அவருக்குப் புரிந்தது. அவளது உயரிய ஆன்மிக பக்குவமும் அவருக்குத்த் தெரிந்து விட்டது.

அவரது முகக்குறிப்பு ‘சொல்’ என்றது.

மாதரசி, “ நான் திருக்கோளூரை விட்டுச் செல்லப் போகிறேன்” என்றாள்.

ஆசார்யர் கனிவோடு அவளை நோக்கி, “ திண்ணமென்னிளமான் புகுமூர் திருக்கோளூரே! அனைவரும் வந்து சேரும் இந்த புனிதத் தலத்தை விட்டு ஏன் வெளியே போக உத்தேசம்?” என்று வினவினார்.

 

 

அதற்கு அந்த மாதரசி பதில் அளித்தார் இப்படி:-

அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே,

அகமொழிந்து விட்டேனோ விதுரரைப் போலே,

தாய்க் கோலம் செய்தேனோ அநசூயையைப் போலே,

தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே,

மூன்று எழுத்து உரைத்தேனோ க்ஷத்ரபந்துவைப் போலே,

முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே,

அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே,

அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே,

‘அவன் தெய்வம்’ என்றேனோ மண்டோதரியைப் போலே,

‘அகம் வேத்மி’ என்றேனோ விசுவாமித்திரரைப் போலே

‘அநு யாத்ரம்’ செய்தேனோ அணிலங்களைப் போலே,

அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே,

ஆயுதங்கள் ஈந்தேனோ அகத்தியரைப் போலே,

கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே,

‘அனுப்பி வையும்’ என்றேனோ வசிஷ்டரைப் போலே,

மண் மலரை இட்டேனோ குருவநம்பியைப் போலே,

‘மூலம்’ என்றழைத்தேனோ கஜராஜனைப் போலே,

வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே,

வழியடிமை செய்தேனோ இலக்குவனைப் போலே,

அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாள் போலே,

இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே,

இனியதொன்று வைத்தேனோ சபரியைப் போலே,

இங்குமுண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே,

இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே,

காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே,

கண்டு வந்தேனென்றேனோ திருவடியைப் போலே,

இரு கையும் விட்டேனோ திரௌபதையைப் போலே,

அனுகூலஞ் சொன்னேனோ மாலியவானைப் போலே,

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே,

தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே,

 

 

இப்படி நீண்டு சென்றது அவளது பட்டியல்! 81 பேரைச் சொல்லி அவள் முடித்தாள்.

 

பின்னர் இராமானுஜாசார்யரை நோக்கி அவள் பணிவுடன் கேட்டாள்: “ இப்படிப்பட்ட உயர்ந்தோர் வாழும் ஊர் அல்லவா திருக்கோளூர். இங்கிருக்க இப்படிப்பட்ட தகுதியல்லவோ வேண்டும். எனக்கு ஒன்று கூட இல்லையே! ஆகவே தான் நான் வெளியூர் செல்லப் போகிறேன்” என்றாள் அவள்.

இப்படி ஒரு பெரும் ஆன்ம ஞானப் பட்டியலை அறிந்து அதைத் தான் அடைய வேண்டும் என்ற அவாவுவது ஒன்றே பெரும் தகுதி அன்றோ – திருக்கோளூரில் வசிக்க!

அது போதாதா என்ன?

 

ஆசார்யரின் கருணை வெள்ளம் அவள் மீது  பொங்கி வழிந்தது.

புன்முறுவல் பூத்தார்.

“இவ்விடத்திலேயே இரு” என்று மட்டும் சொன்னார்.

அவர் சொன்ன வார்த்தையின் பொருளை உணர்ந்து கொண்ட அந்த மாதரசி அவரது அனுக்ரஹத்தைப் பெற்றதைப் பெரும் பேறாக எண்ணினாள்.

திருக்கோளூரிலேயே தங்கி விட்டாள்.

 

 

குறிப்பு : விசுவாமித்திரரின் நான் அறிவேன் என்பதற்குப் பொருள் – அஹம் வேத்மி.

அணில் கூடப் போனது அல்லவா, அது தான் அநு யாத்ரம் – ஒரு பயணத்தில் கூடவே செல்லுதல்!

மூலம் என்பது கஜேந்திரன் ஆதி மூலமே என்று அழைத்தது.

 

3

பெண்களுக்கு ஆன்ம ஞானம் லபிக்காது என்று சொல்வதெல்லாம் பொய்.

பேரருள் பெற்ற பெண்மணிகளைப் பற்றிய அருமையான சரித்திரங்கள் நமது இதிஹாஸ, புராணங்களில் உள்ளன.

இராமானுஜாசார்யரைச் சந்தித்த புனிதவதியின் சரித்திரமும் நவீன கால வரலாற்றில் ஒன்று.

இங்கு 81 வரிகளில் 30 மட்டுமே தரப்பட்டுள்ளன.

இதை ‘ வைணவம்’ என்ற கட்டுரையில் படித்தேன்.(கட்டுரையாளர் பெயர் ‘ஓரன்பன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது)

வெளியான இதழ் : பழைய தமிழ்ப் பத்திரிகை: “ஆனந்த போதினி”.

1914ஆம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பாடல் வெளியான இதழ் பிரபவ வருடம் ஐப்பசி மாதம் தொகுதி – 13 பகுதி – 4 பக்கம் 161  1927ஆம் வருடம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியிட்ட இதழ்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல்வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

***

 

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: