சிறந்த மூலிகை எது? சாணக்கியன் தகவல் (Post No.4648)

Written by London Swaminathan 

 

Date: 22 JANUARY 2018

 

Time uploaded in London 8-17 am

 

 

 

Post No. 4648

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கௌடில்யர் என்றும் சாணக்கியன் என்றும் பெயர் கொண்ட மேதாவி 2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்தார். ஏழையாகவும், அவலட்சணமாகவும் இருந்த அந்த ப்ராஹ்மணன், மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். பல நீதி நூல்களை யாத்தார். உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினார். அவர் டாக்டர் அல்ல. ஆயினும் போகிற போக்கில் பல மருத்துவக் குறிப்புகளையும் பாடி வைத்துள்ளார். மூலிகையில் சிறந்தது எது என்றும்,  நீரின் மஹிமை, நெய்யின் சக்தி என்ன   என்றும் சொல்லிவைத்தார்.

 

இதோ மூலிகையில் சிறந்தது எது என்ற ஸ்லோகம்:-

 

ஸர்வௌஷதீனாம் அம்ருதா ப்ரதானா

ஸர்வேஷு ஸௌக்யேஷ்தசனம் ப்ரதானம்

ஸர்வேந்த்ரியானாணாம் நயனம் ப்ரதானம்

ஸர்வேஷு காத்ரேஷு சிரஹ ப்ரதானம்

சாணக்ய நீதி, அத்யாயம் 9, ஸ்லோகம் 4

 

பொருள்:

எல்லா மூலிகைகளிலும் சிறந்தது அம்ருதா

மகிழ்ச்சியான விஷயங்களில் சிறந்தது   உணவு உண்ணல்;

ஐம்புலன்களில் சிறந்தது கண்;

உடல் உறுப்புகளில் சிறந்தது தலை.

 

எண்சாண் உடம்புக்கு சிரசே (தலை) பிரதானம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இவர் சொல்லக்கூடிய அம்ருதாவை அம்ருதவல்லி என்ற மூலிகையாக வியாக்கியானக்காரர்கள் கருதுகின்றனர்

 

எது அமிர்தவல்லி என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. தமிழில் சீந்தில் கொடி என்றும் இந்தியில் ‘குடூசி’

என்றும் சொல்லுகின்றனர். இதனுடைய தாவரவியல் பெயர் கொக்குலஸ் கார்டிபோலியஸ்  (Cocculus Cordifolius OR Tinospora cordifolia) என்று சாணக்கிய நீதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அறிஞர் சத்ய வ்ரத சாஸ்திரி சொல்கிறார். கார்டிபோலியஸ் என்றால் இருதய வடிவிலான இலை என்று பொருள்; இந்த மாதிரி இருதய வடிவு இலைகள் அரச மரத்துக்குக் கூட உண்டு.

 

 

சீந்தில் கொடிக்கு பல    மருத்துவ குணங்கள் உண்டு; இது சர்க்கரை வியாதி, புற்று நோய் ஆகியவற்றுகும் வேறு பல நோய்களுக்கும் மருந்து என்று ஆயுர்வேத நூல்கள் பகரும்.

 

 

சிலர் அமிர்தவல்லி, ஓம வல்லி என்றும் சொல்லுவர். எப்படியாகிலும் குறிப்பிடப்படும் எல்லா மூலிகைகளுமே நன்மை பயக்கக்கூடியவையே.

XXX

நெய்யின் மஹிமை

 

சாணக்கியன் நெய், மாமிசம், பால் பற் றிப் பல சுவையான விஷயங்களைக் குறிப்பிடுகிறான். இதோ ஸ்லோகங்கள்:

 

அன்னாத் தசகுணம் பிஷ்டம் பிஷ்டாத் தசகுணம் பயஹ

பயசோ அஷ்ட குணம் மாம்ஸம் மாம்ஸாத் தசகுணம் க்ருதம்

சாணக்ய நீதி, அத்யாயம் 10, ஸ்லோகம் 19

 

 

அரிசியைவிட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது மாவு; மாவை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது பால்;  பாலை விட எட்டு மடங்கு சக்தி வாய்ந்தது மாமிஸம்; மாமிஸத்தை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது நெய்.

 

XXXX

 

சாகேன ரோகா வர்தந்தே பயஸா வர்ததே தனுஹு

க்ருதேன வர்ததே வீர்யம் மாம்ஸான் மாம்ஸம் ப்ரவர்ததே

சாணக்ய நீதி, அத்யாயம் 10, ஸ்லோகம் 20

 

 

பொருள்

காய்கறிகள் மூலம் வியாதிகள் வருகின்றன; பால் மூலம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது; நெய் மூலமாக ஆண்களின் விந்து பெருகுகிறது; மாமிஸம் மூலம் உடலில் மாமிஸம் கூடுகிறது.

 

இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்; கழுவாத காய்கறிகளோ, கெட்டுப்போன காய்கறிகளோ உடலுக்குக் கேடு விளைவிக்கும். மேலும் மேலை நாட்டு வைத்திய முறையில் இல்லாத பத்தியம் என்பது ஆயுர்வேதம், சித்த மருத்துவ சிகிச்சைகளில் உண்டு; சிற்சில சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் போது சிற்சில காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும் என்று நாட்டு வைத்தியர்கள் சொல்லுவர். அந்த வகைகளிலும் காய்கறிகள் நோயை உண்டாக்கும் என்ற வாசகம் பொருந்தும்

 

மாமிஸத்தால் உடல் மாமிஸம் அதிகரிக்கும் எனபது வள்ளுவனும் சொன்ன அருமையான வாக்கு ஆகும்

 

 

தன்னூன் பெருக்கற்குத்தான் பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251) என்பார்

 

“தன் உடம்பைப் பெருக்குவதற்கு பிற உயிரின் ஊனைக் கொன்று தின்பவனுக்கு வாழ்க்கையில் அருள் எப்படி இருக்க முடியும்? “(குறள் 251)

வள்ளுவனின் கேள்வி நல்ல கேள்வி.

 

XXX

 

நீரின் மஹிமை

 

இன்னும்  ஒரு பாட்டில் நீரின் மஹிமை பற்றி செப்புகிறார்:

அஜீர்ணே பேஷஜம் வாரி ஜீர்ணே வாரி பலப்ரதம்

போஜனே வாரி சம்ருதம் வாரி போஜனாந்தே விஷப்ரதம்

—சாணக்ய நீதி, அத்யாயம் 8, ஸ்லோகம் 7

 

 

பொருள்

அஜீர்ணக் கோளாறு உள்ளவர்கள் தண்ணீர் சாப்பிடுவது மருந்து போலாகும்; ஜீரண சக்தியோடு உடலுக்குப் பலத்தையும் தரும்; சாப்பாட்டுடன் நீர் அருந்துவது அமிர்தத்துக்கு ஒப்பாகும்; சாப்பிட்டு முடித்த பின்னர் குடிக்கும் நீர் விஷத்துக்குச் சமம்.

 

இவ்வாறு சாணக்கியன் சொல்லும் பல மருத்துவக் குறிப்புகள் நீதி வாசகங்களுக்கு இடையே உள்ளன.

 

–SUBAHM–

 

Leave a comment

1 Comment

  1. பழைய நூல்களில் வரும் சொற்களுக்குச் சரியான பொருள் காண்பது இன்று அவ்வளவு சுலபமல்ல.அந்தப் பொருள்களை நடைமுறையில் பயன்படுத்திய
    பரம்பரைகள் நசித்துவிட்டதால், அவற்றைச் சரியாக அடையாளம் காண்பது கடினம். நெல்லிக்காயையும் ‘அம்ருத்’ என்று வட இந்தியாவில் சொல்கிறார்கள்.
    இன்று இந்திய மூலிகைகளின் தரம் ( மருத்துவ குணங்களின் தீவிரம்) குறைந்துவிட்டது. இவை இன்று வியாபார ரீதியில் வளர்க்கப்படுகின்றன; இதற்கு ரசாயனப்பொருள்கள் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. ( ரசாயன உரம் தவிர, பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி போன்ற ரசாயனங்கள்.) இவை மூலிகைகளின் இயற்கைக் குணங்களை பெரிதும் பாதித்துவிட்டன.. இதனால் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு அதிகப் பலன் இல்லை என அண்மையிலும் பத்திரிகைகளில் செய்தி வந்தது.

    சில பொருள்களும் பெயர்களும் நிலைத்துவிட்டன, ஆனால் அவற்றின் இயல்பு மாறிவிட்டது. சாணக்கியர் காலத்தில் ‘பால்’ என்பது பசும்பாலையும் ‘ நெய்’ என்பது பசும்பாலிலிருந்து தயிர்தோய்த்து அதிலிருந்து எடுத்த வெண்ணையைக் காய்ச்சி வந்த நெய்யையும் குறிக்கும். அந்தப் பாலும் நாட்டுப்பசுவை இயற்கையாக மேயவிட்டு , முறைப்படி கறந்தபால். அது தவிர பசுக்களுக்கு ( நாட்டு) பருத்திவிதை, புண்ணாக்கு, காய்கறித் தோல், தவிடு,
    கழுநீர் போன்றவை தரப்பட்டன. இன்று பசுக்களை மேயவிடுவதில்லை; அவற்றின் தீவனம் என்பதிலும் பலவித ரசாயனக் கலப்பு. இந்த நிலையில் வரும் பாலின் தரமென்ன? மேலும் இன்று முக்காலும் சீமைப் பசுக்களே. இவற்றின் பாலிலிருந்துவரும் கொழுப்புச்சத்து இந்தியர்களின் மரபணுவுடன் ஒத்துப்போவதில்லை என்றும் சொல்கிறார்கள். தவிர, இன்று பாலிலிருந்து நேரடியாக வெண்ணை எடுக்கிறார்கள். இதனால் வெண்ணையின் குணம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பது தெரியாது. ( ருசியில் உள்ள மாறுதல் நன்றாகத் தெரியும்.) எனவே, இன்று ‘பால்’, ‘நெய்’ என்று சொல்லும்போது, அதே பெயரில் சாணக்கியன் சொன்ன பொருளும் இன்று நாம் பயன் படுத்தும் பொருளும் குணத்தால் ஒன்றல்ல என்பது வெளிப்படை. இன்று பால் என்ற பெயரில் வருவது ஏதோ ஒரு வெள்ளை நிறத் திரவம்.

    காய்கறிகளைப் பற்றி சாணக்கியர் சொன்ன விஷயத்தில் ஒரு சூக்ஷ்மம் இருக்கிறது. இன்றைய விஞ்ஞானப்படி காய்கறியில் உள்ள சத்துக்களையே ( வைட்டமின், மினரல் போன்றவற்றையே) பார்க்கின்றனர். ஆனால் நமது முறையில் காய்கறிகளின் “குணங்களையே” பார்க்கிறோம்.[ குணம் ஒரு பொருள்பொதிந்த சொல். பகவான் கீதையில் உணவின் குணங்களைப் பற்றிச் சொல்கிறார். அவை ‘சைக்காலஜி’ சம்பந்தப்பட்டதால் இங்கு அவற்றைப் பற்றிச் சொல்லவில்லை].
    காய்கறிகள் ஐம்பூதங்களின் சம்பந்தத்தால் வருபவை. நமது உடலும் ஐம்பூதங்கள் சம்பந்தமுடையவை. ஒன்றுக்கொன்று மாறுபடுபவை. எனவே, நாம் உண்ணும் காய்கறிகள் எல்லோருக்கும் ஒரேவிதமாக வேலை செய்யா. மனிதரின் உடல் அம்சத்தைப் பொறுத்து ( வாதம், பித்தம், கபம்) அவற்றின் பலன் மாறுபடும். கத்திரிக்காய் சிலருக்கு ‘உஷ்ணம்’ கொடுக்கும்; மூல நோய் உள்ளவர்களுக்கு அது ஆகாது. பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்பார்கள்; ஆனால் சிலருக்கு இதனால் பித்தம் அதிகமாகும், தலை சுற்றும். கொத்தவரங்காய் சிலருக்கு பித்தமாகும். சில காய்கறிகள் உடலைக் குளிர்ச்சியாக்கி, சளியைத் தரலாம். கிழங்கு வகைகள் ( கருணையைத்தவிர) வாதத்தை அதிகப்படுத்தும்.- அதுவும் ஒரு வயது கடந்தவர்களுக்கு. சில பொருள்களின் குணம் இடத்திற்கேற்பவும் மாறுபடும்: சில நிலங்களில் (ஊர்களில்) விளைந்த நிலக்கடலை சிலருக்குப் பித்தம் அதிகரிக்கச் செய்யும் (இதை நாட்டு வெல்லம் கொண்டு சமனம் செய்வர்.)
    பொதுவாக ஒரு இடத்திலிருப்பவர்கள் அந்தச் சூழ்நிலையில் ( மண், நீர், தட்பவெட்பம்) வளரும் காய்கறிகளையே பயன்படுத்தவேண்டும் என்பதை நம் பெரியவர்கள் பின்பற்றினர். அந்தந்த சீஸனில் விளையும் பொருள்களையே உபயோகித்தனர், ஆக, காய்கறிகள் உண்பதில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. மேலும், இன்று எல்லா காய்கறிகளும் வியாபார ரீதியில் அதிக ரசாயனப் பொருள்களைக் கொண்டு விளைக்கப்படுகின்றன, சீசன் தப்பியும் கிடைக்கின்றன. இவற்றில் பூச்சிக்கொல்லி போன்றவை நீரால் மட்டுமே நீங்காதவை. பல காய்கறிகளும் Genetically Modified. இவற்றின் எதிர்கால விளைவு என்ன என்பது விஞ்ஞானி என்ற போர்வையில் வளையவரும் ராக்ஷஸர்களுக்கே தெரியாது! எனவே, காற்கறிகளைப்பற்றி சாணக்கியர் விடுத்த எச்சரிக்கை இன்றைய நிலையில் பொருத்தமானதுதான்!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: