Date: 24 JANUARY 2018
Time uploaded in London- 5-44 am
Written by S NAGARAJAN
Post No. 4654
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.
பாரதி போற்றி ஆயிரம் – 34
பாடல்கள் 194 முதல் 197
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கண்ணதாசன் பாடல்கள்
மரணத்தை வென்ற மகாகவி
ஆசை தனக்கொரு காணிநிலம்என்று
அற்புதப் பாட்டிசைத்தான் – அன்று
ஆறறிவற்றவர் தம்மிடையே தமிழ்
ஆனந்தக் கூத்தடித்தான்!
மீசை துடித்திட மேனிகொதித்திட
வீரக்கனல் வடித்தான் – கவி
வேந்தன் உலகத்து மாகவிவாணரை
வெல்லும் தமிழ் கொடுத்தான்
தந்தையர் நாடென்ற பேச்சினிலேஒரு
சக்தி பிறக்குதென்றான் – அவன்
சாப்பிடும் சோற்றுக்கு வைக்கவில்லைகவிச்
சந்ததி வைத்துச் சென்றான்
சிந்தையணுவிலும் ரத்தத்திலும் இந்த
தேசத்தில் பாசம்வைத்தான் – அட!
தீயொரு பக்கமும் தேனொரு பக்கமும்
தீட்டிக் கொடுத்து விட்டான்!
சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்
சாவினை வென்றுவிட்டான் – ஒரு
சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்
தாய்மையை வார்த்துவிட்டான்
இந்திர தேவரும் காலில்விழும்படி
என்னென்ன பாடிவிட்டான் – அவன்
இன்றுநடப்பதை அன்றுசொன்னான்புவி
ஏற்றமுரைத்து விட்டான்!
வங்கத்து நீரினை மையத்துநாட்டுக்கு
வாரிக்கொணர் என்றான் – அந்த
வானம் அளந்துவிஞ் ஞானம்படைத்திட
வாரும்தமிழ ரென்றான்
சிங்க மராட்டியர் கற்பனைக்கீடொரு
சேரத்துத் தந்தமென்றான் -இந்த
தேசபெருமைக்கு ஆரம்பம் செய்தவன்
பாரதித்தேவன் என்பான்!
தொகுப்பாளர் குறிப்பு: இந்தக் கவிதை 1978ஆம் ஆண்டில் கல்கி வார இதழில் கண்ணதாசன் எழுதி வந்த ‘கண்ணதாசன் பக்கம்’ என்ற தொடரில் வெளியாகியுள்ளது.
10-9-1978 அல்லது 17-9-1978 தேதியிட்ட இதழாக இருக்கலாம். (இதழில் ஒன்பதாம் பக்கத்தில் வெளியாகியுள்ளது)
கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
‘***