Date: 24 JANUARY 2018
Time uploaded in London- 6-06 am
Written by S NAGARAJAN
Post No. 4659
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)
மஹாபாரதம்
மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!
ச.நாகராஜன்
1
உலகின் ஆகப் பெரும் இலக்கியமான மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள் மட்டும் சுமார் எட்டாயிரம் உள்ளன. ஒரு லட்சம் ஸ்லோகங்களில் 8000 என்றால் 8 % என்று ஆகிறது.
வியாஸர் மஹா கண்பதியை அணுகி தனக்கு இந்த இதிஹாஸத்தை எழுத உதவி புரிந்து அனுக்ரஹிக்குமாறு வேண்ட, அவரோ ‘எழுதுகிறேன், ஆனால் தங்கு தடையின்றி நிற்காமல் சொல்ல வேண்டும்’ என்று நிபந்தனை போடச் சற்றுத் திகைத்துப் போனார் வியாஸர். பதில் நிபந்தனையாக, ‘புரிந்து கொண்டு எழுத வேண்டும்’ என்று சொல்ல அதற்கு ஒத்துக் கொண்டார் விநாயகர். ஆகவே தான் எழுந்தன இந்த அற்புதமான புதிர் ஸ்லோகங்கள். ஆங்காங்கே முடிச்சுகளைப் போட, அதைப் புரிந்து கொள்ள விநாயகருக்குச் சற்று நேரம் ஆனது. அதற்குள் அடுத்த பல நூறு ஸ்லோகங்களை மனதிற்குள் கவனம் செய்து கொண்டார் வியாஸர்.
இந்த ஸ்லோகங்களுக்கு ‘ கூட ஸ்லோகங்கள்’ என்று பெயர்.
இவை அனைத்தையும் தொகுத்திருக்கும் புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ஆங்காங்கு பல காலமாக பல்வேறு விற்பன்னர்கள் நடத்திய உபந்யாசங்களில் இவை இடம் பெறும். கேட்போர்களின் மனதைக் கவரும். அவர்களையும் யோசிக்க வைக்கும்.
2
மஹாபாரத ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர் சி.வி. வைத்யா 1905ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட புத்தகம் ‘தி மஹாபாரதா – எ கிரிடிஸிஸம்’ (‘The Mahabharata: A Criticism” – C.V.Vaidya). இதில் அவர் மஹாபாரதத்தின் முதல் பர்வங்களில் நிறைய புதிர் ஸ்லோகங்களும், பின்னால் உள்ள பர்வங்களில் குறைந்த அளவு புதிர் ஸ்லோகங்களும் உள்ளன என்று கூறுகிறார்.
ஆதி பர்வத்தில் 3; சபா பர்வத்தில் 2; வன பர்வத்தில் 3; விராட பர்வத்தில் 4; உத்யோக பர்வத்தில் 3; பீஷ்ம பர்வத்தில் 1; துரோண பர்வத்தில் 5; கர்ண பர்வத்தில் 3; சாந்தி பர்வத்தில் 2;அஸ்வமேத பர்வத்தில் 1; ஆக மொத்தம் 27 புதிர் ஸ்லோகங்களை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். ஆனால் எட்டாயிரம் ஸ்லோகங்களையும் புரிந்து கொண்டு தொகுப்பார் இல்லையோ என்னவோ!
1915ஆம் ஆண்டு மஹாபாரதத்தைச் சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்த்து அளிக்கும் மகத்தான பணியில் இறங்கிய கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய, ஸ்ரீ ம.வீ. இராமானுஜாசாரியார் பல ஸ்லோகங்களுக்கு மஹாபாரத விற்பன்னர்களாலும் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாமல் போனதென்றும் அதற்கான சரியான அர்த்தத்தைக் கண்டுபிடித்து வெளியிட முயன்றதால் சில பர்வங்களை வெளியிடுவதில் கால தாமதம் ஆனதாகவும் தெரிவிக்கிறார்.
ஆக புதிர் ஸ்லோகங்கள் அனைத்தையும் ஒரு சேரப் படிக்க முடியாமலேயே உள்ளது.
3
விநாயகருக்கே சவாலாக அமைந்த தனது ஸ்லோகங்களைப் பற்றி வியாஸர் கூறும் போது, “அதன் கருத்தை நான் அறிவேன்; சுகன் அறிவான்; ஸஞ்சயன் அறிவானோ! மாட்டானோ!” என்று குறிப்பிடுகிறார்.
எடுத்துக் காட்டாக ஒரு புதிர் ஸ்லோகத்தை இங்கே காண்போம்:
நதீஸ லங்கேஅ ஸவநாரி கேது: நகாஹ்வ யோநாம நகாரி |
ஸுநு: ஏஷோங்க நாவேஷதா: கிரீடி:|
ஜித்வாவய; நேஷ்ய திசாத்ய காவ: ||
இதில் உள்ள முடிச்சை அவிழ்ப்பது கஷ்டமான ஒன்று.
சரியான இடத்தில் பதத்தைப் பிரித்து அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்!
அர்ஜுனன பேடியாக மாறி உத்தரனை தேரோட்டும் சாரதியாகக் கொள்ளும் விராட பர்வத்தில் கோக்ரஹண காலத்தில் வரும் ஸ்லோகம் இது.
துரோணர், பீஷ்மர், துரியோதனன் ஒரு சேர இருக்கின்றனர்.
பக்கத்தில் உள்ள துரியோதனன் அறியாத வண்ணம் பீஷ்மருக்கு, துரோணர், “ அவன், பசுக்களை மீட்க வந்த அர்ஜுனன்” என்பதைப் பூடகமாகத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது.
விநாயகர் கூடச் சற்று திகைத்து விட்டு அர்த்தம் கண்டுபிடிக்கும் படியாக அமைந்த ஸ்லோகமும் இது தான்;
பொதுவாக கவனித்தால் அர்த்தமே விளங்காது!
“ நதீ ஜலம் கேசவ நாரி கேது நநாஹ்வயோ நாம நகாரி ஸுநு:”
ஆற்றின் ஜலம், கேசவன், பெண், கொடி, கொடி மரத்தின் பெயர், மலையின், சத்ரு, பிள்ளை – என்ன இது? ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சொற்கள்!
இதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?
ஆனால் பதம் பிரிக்கும் போது நதீ ஜலம் என்று பிரிக்காமல் நதீஜ என்று கொண்டால் நதீஜ – நதியின் புத்திரனான பீஷ்மன்- அதாவது கங்கைக்குப் பிறந்த பீஷ்மன் என்று அர்த்தம் வரும்.
லங்கேசவந – இலங்கையில் உள்ள அசோக வனம்.
அரி சத்ரு – அந்த அசோகவனத்திற்கு எதிரி ஆஞ்சநேயர்.
கேது – அவரைக் கொடியாக உடையவன்
நகாஹ் வய – அர்ஜுன என்ற மரத்தின் பெயரைப் பெற்றவன்
நகாரி ஸுநு: – மலைச் சத்ருவான இந்திரனின் குமாரனான அர்ஜுனன்
என்று இப்படிப் பிரித்து ஸ்லோகத்தின் சரியான பொருளை உணர வேண்டும்!
பெண் வேஷத்துடன் கிரீடம் தரித்த அர்ஜுனன் நம்மை ஜயித்து பசுக்களை ஓட்டிச் செல்வான் என்பது இதன் பொருள்.
4
சபா பர்வத்தில் வரும் ஒரு சொற்றொடர் இது: “மனஸாதாளம் பேரிம்”
மனஸா என்றால் 12;
தாளம் என்றால் ஒரு சிறிய இடைவெளி.
ஆக இதன் உண்மையான அர்த்தம் 12 வெளியை விட்டமாகக் கொண்ட ஒரு பேரிகை!( A Drum with 12 spans as diameter)
5
மஹா பாரதத்தை நூற்றுக் கணக்கான கோணங்களில் அலசி ஆராய்ந்து படித்து வியக்கலாம். அதில் ஒன்று தான் கூட ஸ்லோகம் – புதிர் கவிதைகள் – கண்டு படிப்பது! புத்திக்குச் சவாலாக அமையும் இந்த புதிர் ஸ்லோகங்கள் மஹாபாரத்தைப் படிக்க ஆவலைத் தூண்டுபவை மட்டும் அல்ல; விநாயகரையே மலைக்க வைத்த வியாஸரின் புத்தி கூர்மையைக் காட்டும் ஸ்லோகங்களும் ஆகும்!
இப்படி ஒரு புதிர் செய்யுள்களைக் கொண்டுள்ள இன்னொரு இலக்கியம் உலக மொழிகளில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது!
படிப்போம்; வியப்போம்; புதிரை அவிழ்த்து மகிழ்வோம்.
***