மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை! (4662)

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London- 6-59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4662

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(என் வாசகர்கள் தமிழர்கள்= நல்லவர்கள்; தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

பாக்யா 26-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 49வது) கட்டுரை!

 

மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை!

 

 

ச.நாகராஜன்

 

 

 

 

“மரபணு பற்றிய விதிகள் அவற்றை நீங்கள் அறிய மறுத்தாலும் கூட உங்களுக்கும் அது பொருந்தும்!” – ஆலிஸன் ப்லோடென்

 

இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல விஞ்ஞானிகளில் பெரிதும் போற்றப்பட்டு வருபவர் மரபணு சம்பந்தமான பெரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த பெரும் விஞ்ஞானி சர் பால் நர்ஸ்! (Sir Paul Nurse).

 

முக்கியமாக கான்ஸர் வியாதி குணமாகக் கூடியதே என்பதை அவர் சொல்லும் போது உலகமே ஆறுதல் அடைகிறது. மருத்துவத்திற்கான 2001ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை அவர் மற்ற இரு விஞ்னானிகளுடன் கூடச் சேர்ந்து பெற்றுக் கொண்டார்.

பிரிட்டனைச் சேர்ந்த நர்ஸ் 1949ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். இப்போது அவருக்கு வயது 69.

உலகிற்கே மரபணு பற்றிய ஏராளமான உண்மைகளைத் தெரிவித்த இந்த விஞ்ஞானியின் சொந்த வாழ்க்கையில் அவரது மரபணு பற்றிய விஷயம் பெரிய ரகசியமாக அமைந்தது தான் விசித்திரம்.

 

பெரிய மர்ம நாவல் போல அவரது வாழ்க்கை வரலாறு இருக்கிறது.

 

இதை அவரே ஒப்புக் கொள்கிறார். டிக்கன்ஸ் நாவலையும் தோற்கடிக்கும் அளவு அவரது வாழ்க்கை மிக்க சுவையான மர்மம் நிறைந்த ஒன்று.

 

அமெரிக்காவில் ராக்ஃபெல்லர் பல்கலைக் கழகத்திற்கு அவர் தலைவர் ஆனார். சுமார் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த அவர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டை வாங்க ஒரு விண்ண்பத்தை சமர்ப்பித்தார். ஆனால் அது அமெரிக்க ஹோம்லேண்ட் செக்யூரிடி பிரிவால் நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டது.

 

திகைத்துப் போன அவர் ஏன் என்று கேட்டார்.

அந்தப் பிரிவோ அவரது பிறப்புச் சான்றிதழில்  தந்தை பெயரும் தாயின் பெயரும் இல்லை என்று பதில் கூறியது.

இவ்வளவு தானே என்று நினைத்த நர்ஸ், ஒரு முழு பெர்த் சர்டிபிகேட்டை அனுப்புமாறு பிரிட்டன் ஜெனரல் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். பின்னர் நிம்மதியாக இரு வார விடுமுறை எடுத்துச் சென்று விட்டார்.

திரும்பி வந்தவர் தன் செயலாளரிடம், ‘இப்போது எல்லாம் சரியாக ஆகி விட்டதல்லவா’ என்று கேட்டார்.

“ஊஹூம்” என்று சொன்ன அவர் பிரிட்டனிலிருந்து வந்த பெர்த் சர்டிபிகேட்டை அவரிடம் நீட்டினார். அதில் தாயார் என்பதற்கு நேராக அவரது சகோதரியின் பெயர் இருந்தது. தகப்பனார் என்பதற்கு நேராக ஒரு கோடு -டேஷ் – மட்டும் இருந்தது.

தகப்பனார் இல்லாத ஆளா நான் என்று வியப்புற்றார் நர்ஸ்.

உலகிற்கே மரபணு பற்றி விளக்கம் அளிப்பவர் தன்  மரபணு பற்றித் தெரியாமல் திகைத்தார்.

 

அவரது மனைவி என்ன திகைப்பு என்று கேட்டு விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆராய ஆரம்பித்தார்.

பின்னர் கூறினார்,”நீங்கள் தந்தை தாய் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் உங்கள் தாத்தாவும் பாட்டியுமே. நீங்கள் உங்கள் சகோதரி என்று நினைத்துக் கொண்டிருபபவர் தான் நிஜத்தில் உங்கள் தாயார்!”

திகைத்துப் போன நர்ஸால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

 

அவரது தந்தையும் தாயும் உயிருடன் இல்லை.

சகோதரியும் உயிருடன் இல்லை.

அவர் வாழ்ந்த வீடு பெரிய அத்தையின் வீடு. அந்தப் பெரிய அத்தையும் உயிருடன் இல்லை.

என்ன செய்வது?

பெரிய அத்தையின் பெண் உயிருடன் வாழ்கிறார். உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டார்.

“உனது வாழ்வில் ஒரு மர்மம் இருக்கிறது” என்று கூறிய அவர் “நீ பிறந்த போது எனக்கு 11 வயது. உனது தாயார் 17 வயதிலேயே கர்ப்பமானாள். கர்ப்பமானவுடன் அவரை இங்கு கொண்டு வந்து விட்டனர். நீ பிறந்தாய். உன்னை உன் தாத்தாவும் பாட்டியும் கொண்டு சென்று வளர்க்க ஆரம்பித்தனர். உன் அம்மாவை உனது சகோதரி என்று சொல்லி விட்டனர். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று ரகசிய பிரமாணமும் செய்ய வைத்தனர்.

 

உன் தாயார் பின்னர் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இது தான் நடந்த கதை” என்றார் அவர்.

 

இப்போது உலகப் பெரும் விஞ்ஞானியின் தலை சுழன்றது.

அப்போது தனது தந்தை யார்?

உறவுகள் எல்லாம் இப்போது அவருக்கு மாறிப் போனது.

அப்பா என்று கூப்பிட்டு வந்தவர் தாத்தா ஆனார். அம்மா என்று அழைத்தவர் பாட்டி ஆனார். சகோதரி மிரியம் இப்போது அம்மா ஆகி விட்டார்.

 

சகோதரர்கள் என்று நினைத்தவர்கள் இப்போது மாமன்மார் ஆகி விட்டனர். ஒரே குளறுபடி உறவுமுறையில்!

“நான் என்ன செய்வது? நான் ஒரு மோசமான மரபணு விஞ்ஞானி இல்லை. எனது குடும்பத்தினர் தான் என் மரபணு பற்றிய விஷயத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரகசியமாக வைத்து விட்டனர்!” என்கிறார் நர்ஸ்!

 

அவரது சகோதரி மிரியம் – இப்போது ரகசியம் தெரிந்து விட்ட நிலையில் அவரது அம்மாவாகி விட்ட மிரியம் – திருமணம் செய்து கொண்ட போது அவரது கணவரை ஒரு கையிலும் குழந்தை நர்ஸை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு எடுத்துக் கொண்ட போட்டோ நர்ஸின் நினைவுக்கு வந்தது.

தன் சொந்த அம்மா பிரியப் போகிறார் என்பதைத் தாங்க முடியாமல் தானோ என்னவோ அன்று நடந்த நிகழ்வு ஒன்றைச் சொன்னார் நர்ஸ். திருமண ஸ்பெஷல் கேக் வைத்திருந்த குட்டி மேஜையின் அடியில் புகுந்த நர்ஸ் அதன் காலை வாரி விட வெடிங் கேக் கீழே விழுந்து உடைந்து போனது. இது ஒரு சகுனமோ என்னவோ என்கிறார் நர்ஸ்.

 

தனது டி என் ஏ சாம்பிளையும் குடும்ப உறுப்பினர்களின் டி என் ஏ சாம்பிள்களையும் சோதனைக்கு அனுப்பியும் நர்ஸால் ஒன்றும் புதிதாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.

 

உலகின் தலை சிறந்த விருதான நோபல் பரிசைப் பெற்றவர்; உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் தந்த அறுபதுக்கும் மேற்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள்  பெற்றவர்; ஏராளமான விருதுகளைப் பெற்றவர். – அதைத் தனியே எழுதினால் ஒரு புத்தகமாகவே ஆகி விடும்!-  அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானிக்கு – மரபணு ஞானிக்குத் – தன் சொந்த வாழ்க்கை பற்றிய மர்மம் ஒரு விசித்திரமான விஷயமாக ஆகி விட்டதை விதியின் கொடுமை என்று சொல்வதா?

 

தன் தந்தை ஒரு சர்வீஸ்மேனாக இருக்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார் அவர்.

 

அவரது வாயால் வந்த உண்மைகளை உலகின் தலை சிறந்த பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டன.

 

சிலரது வாழ்க்கை விசித்திரமானது மட்டுமல்ல; மர்மமானதும் கூட என்பதற்கு நல்ல ஒரு உதாரணம் சர் பால் நர்ஸ்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

விண்வெளி வீ ரர்களிலேயே மிகவும் துணிச்சல்காரர் என்ற பெயரெடுத்த ஜான் யங் தனது 87ஆம் வயதில் 5-1-2018 அன்று மரணமடைந்தார்.

 

அவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை நினைவு கூறும் விண்வெளி ஆர்வலர்கள் தங்கள் துக்கத்தை இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் பதிவு செய்து கொண்டே இருக்கின்றனர். 1972இல் ஏப்ரல் மாதம் சந்திரனில் இறங்கிய அபல்லோ 16 விண்கலத்தின் கமாண்டராக இருந்தவர் யங். சந்திரனின் ஆராயப்படாத புதிய பகுதியில் தனது ல்யூனார் ரோவரை இயக்கி சாதனை படைத்தார். சுமார் 200 பவுண்ட் எடையுள்ள சந்திரக் கற்களைக் குவித்தார்.

 

அவரைப் பற்றிய சுவையான சம்பவங்கள் பல உண்டு.

24-9-1930 இல் பிறந்த அவர் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் ‘சந்திரனுக்கு மனிதன் செல்ல வேண்டும்’ என்ற உரையைக் கேட்டு உத்வேகம் அடைந்தார். நாஸாவில் சேர்ந்தார். 42 ஆண்டுக் காலம் பணியாற்றினார். 6 முறை விண்வெளிக்கு ஏகினார்.

நாஸாவில் அவர் சேர்ந்தவுடன் உடா என்ற இடத்தில் உள்ள தியோகால் தொழிற்சாலையில் ராக்கட்டின் இயக்கத்தைச் சோதனை செய்யும் போது ராக்கட் பூஸ்டர் பயங்கர சத்தத்துடன் சீறிப் பாய்ந்து அனைவரையும் பயமுறுத்தியது. அவரது சகாவும் அவருடன் விண்வெளியில் பின்னர் கூடப் பறந்தவருமான கிப்பன் என்பவர் அவரை நோக்கி, “ என்ன யங், இந்த மாதிரி ராக்கட்டுகளில் ஒன்றில் பறக்க ஆசைப் படுகிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு உடனே யங், “ஒன்றென்ன, இரண்டில் பறக்க ஆசைப்படுகிறேன்” என்று பதிலளித்தார். அப்படியே விண்வெளியில் பறந்தும் காண்பித்தார்.

 

சந்திரனுக்கு மட்டும் மனித்ன் போனால் போதாது, இதர கிரகங்களுக்கும் சென்று கால் ஊன்ற வேண்டும் என்பதே மனித குலத்திற்கு அவர் அளித்த செய்தி. அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் நாமும் இணைவோமாக!

***

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: