Date: 1 FEBRUARY 2018
Time uploaded in London- 8–11 am
Compiled by London swaminathan
Post No. 4690
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST
WITH YOU.
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
‘ஆண் நல்லது, பெண் பொல்லாதது’ என்று ஒரு பழழொழி உண்டு. இதன் பின்னாலுள்ள கதையை, திராவிடப் பூர்வ கால கதைகள் என்ற புத்தகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் நடேச சாஸ்திரி என்னும் பெரியார் தொகுத்து வைத்துள்ளார்; பழைய கால, பிராஹ்மண மொழியில் உள்ளதை நான் புதுக்கி வரைகிறேன்.
ஒரு ஊரில் ஒரு பிராஹ்மணர் இருந்தார். மிகவும் நல்லவர். ஊருக்கு வருவோருக்கெல்லாம் அக்கால வழக்கப்படி போஜனம் (சாப்பாடு) செய்துவிட்டுத்தான் உண்பார். அவருடைய மனைவியோ பொல்லாதவள். புருஷனுக்கே சோறு போட மறுப்பவள்.
அவள் ஒரு தந்திரம் வைத்திருந்தாள்; முதலில் புருஷன் சாப்பிட வந்த விருந்தாளியை திண்ணையில் உட்கார வைத்து விட்டுப் பக்கத்தில் உள்ள நதியில் குளித்துவிட்டு வருவது வழக்கம். அப்படிப் புருஷன் போன பின்னர் இந்தப் பெண்மணி (பெண் சனி) ரேழியில் (வராண்டாவில்) வந்து நின்று கொண்டு, “ஊர்ப் பயல்களுக்கு எல்லாம் நான் ஏன் சமைத்துக் கொட்ட வேண்டும். அதுதான் இந்த ஊரில் இது போன்ற சோற்றால் அடித்த பிண்டங்களுக்கு என்று சத்திரம் ஒன்றைக் கட்டி வைத்து இருக்கிறார்களே அங்கே போய்ச் சப்பிடக்கூடதா? இங்கு வந்து என் கழுத்தை ஏன் அறுக்கிறார்கள்; எனக்கோ உடம்பு சரியில்லை” என்பாள்.
இதைத் திண்ணையில் உடகார்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களில் பாதிப் பேர் ரோஷம், மானம், வெட்கம், சூடு, சொரணை இருந்தால் சாப்பிடாமல் போய் விடுவார்கள் கணவன் வந்து கேட்டால், ‘’அவருக்கு மிகவும் பசியாம்; ஆகையால் சத்திரத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று போய்விட்டார்’’ என்பாள்; சிலர் என்னதான் திட்டு வாங்கினாலும் சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்று உட்கார்ந்து சாப்பிடுவர்.
இப்படிக் காலம் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு தேஜஸ் உள்ள ( முகப் பொலிவு) பிராஹ்மணர் வந்தார். அவரைத் திட்ட இப்பெண்மணிக்கு (பெண் சனி) மனம் வரவில்லை. வேறு ஒரு தந்திரம் செய்தாள். தனது வீட்டிலுள்ள இரும்புப் பூண் போடப்பட்ட உலக்கையை ரேழிக்குக் கொண்டு வந்தாள். பின்னர் திண்ணையில் உட்கார்ந்து இருந்த தேஜஸ் மிக்க பிராஹ்மணனை அழைத்தாள்.
“சுவாமின்னு! இங்கே வாரும்! உமக்கு ஏதாவது கடைசி நிமிட பிரார்த்தனை இருந்தால் இப்போதே அதை ஜபித்து விடும்; இன்னும் சற்று நாழியில் உம் பிராணன் (உயிர்) போய் விடும்” என்றாள். அவரோ நடுநடுங்கி , “அம்மணி! என்ன விஷயம்? இப்படி யெல்லாம் பேசுகிறீர்கள்? என்றார்.
“அதுவல்ல, உம்மைப் போன்ற பிராஹ்மணர் யாராவது கிடைத்தால், நீங்கள் சாப்பிடும்போது இந்த உலக்கையால் என் கணவர் அடித்துக் கொன்றுவிடுவார். என் கணவர் ஒரு மாதிரியானவர்” என்றாள்.
அவர் பயந்துகொண்டு வெளியே நடந்தார்.
இதற்குள் ஆற்றில் குளிக்கப்போன அந்தப் பிராஹ்மணர் வந்தார். சாப்பிட வந்த பிராஹ்மணர், அவரைக் கண்டதும் வேகமாக நடக்கத் தொடங்கினார்.
உடனே, எதனால் சாப்பிட வந்த பிராஹ்மணர் இப்படி வேகமாகப் போகிறார்? என்று மனைவியிடம் கேட்டார்.
“ஓ, அதுவா? நான் பொறந்தாத்துலேயிருந்து கொண்டுவந்த இந்த உலக்கை தனக்கு வேண்டும் என்றார். நான் கொடுக்க முடியாது; இது பரம்பரைச் சொத்து என்றேன். கோபித்துக் கொண்டு சாப்பிடமாட்டேன் போ என்று வேகமாகப் போய்விட்டார்” – என்றாள்.
“அடக் கடவுளே! இந்த உலக்கை என்ன? உனக்கு தங்கத்தால் உலக்கை வாங்கித் தருகிறேன். அவரிடம் உலக்கையைக் கொடுத்து சாப்பிட அழைத்து வருவேன்; இல்லாவிடில் மஹா பாபம் வந்து சேரும் என்று உலக்கையுடன் ஓடினார். வேகமாக நடந்த பிராஹ்மணன் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தார். இந்தப் பிராஹ்மணன்
இப்படி உலக்கையுடன் ஓடி வருவதைப் பார்த்தவுடன் ‘’அடப் பாவி கொலைகாரா, உன் மனைவி சொன்னது உண்மைதான்; என்னைக் கொல்லவா வருகிறாய்’’ என்று கூவிக்கொண்டே குதிங்கால் பிடரியில் அடிக்க ஓடிப் போனார்.
ஆண் நல்லது, பெண் பொல்லாது என்பதற்கு அவ்வையார் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் உண்டு. அவரும் இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதை விட சந்யாசம் மேற்கொள்வதே நல்லது என்றார். சாக்ரடீஸோ மனைவி நல்லவராக இருந்தால் கல்யாணம் செய்து கொண்டவன் அதிர்ஷ்டசாலி; கெட்டவளாக இருந்தால் கணவன், பிலாஸபராகலாம் PHILOSOPHER — தத்துவ ஞானியாகலாம் என்றார். சாணக்கியனோ பெண் கெட்டவள் என்று தெரிந்தால், கல்யாணம் செய்துகொள்ளாமலே வாழ்வது சாலச் சிறந்தது என்றார்.
கல்யாணம் கட்டாதே!
கெட்ட அரசன் ஆளும் நாட்டைவிட காடே மேல்;
கெட்ட நண்பனைவிட, நண்பனில்லாததே மேல்;
கெட்ட மாணவனை விட மாணவன் இல்லாதததே மேல்;
கெட்ட மனைவியைவிட மனைவி இல்லாததே மேல்.
வரம் ந ராஜ்யம் ந குராஜராஜ்யம் வரம் ந மித்ரம் ந குமித்ரமித்ரம்
வரம் ந சிஷ்யோ ந குசிஷ்யசிஷ்யோ வரம் ந தாரா குதார தாராஹா.
6-12
–சுபம்–