Betel-nut cutter with Vishnu and Lakshmi; areca nut tooth paste
Date: 7 FEBRUARY 2018
Time uploaded in London- 8-39 AM
WRITTEN by London swaminathan
Post No. 4712
PICTURES ARE TAKEN by London swaminathan
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST
WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
லண்டன் ஆயுர்வேதக் கண்காட்சியில் நிறைய அதிசயச் செய்திகள், அபூர்வ படங்கள் இருக்கின்றன. எவ்வளவுதான் சொல்ல முடியும்? இது நாலாவது கட்டுரை. முடிந்தவரை சொல்கிறேன்.
ஜோதிட உடம்பு
ஒரு உடலில் 12 ராசிகளை வரைந்த படம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் பாரசீக மொழிக் குறிப்புகள் உள்ளன. 1396 ஆம் ஆண்டில் பாரசீகத்தைச் சேர்ந்த (இப்போது இந்த நாட்டின் பெயர் ஈரான்) மன்சூர் இபின் முகமது என்பவர் ஒரு நூல் எழுதினார். அந்த மருத்துவ புஸ்தகத்துக்கு தஸ்ரிக் இ மன்சூரி என்று பெயர். அதில் உடலின் ஐந்து அம்சங்கள் விளக்கப்படுகின்றன: எலும்பு, நரம்பு, சதை, சுத்த ரத்தக் குழாய்கள், அசுத்த ரத்தக் குழாய்கள். அவர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த மருத்துவ மேதை காலன் (GALEN, 130-210 CE) என்பவரைப் பின்பற்றி இந்த புஸ்தகத்தை எழுதினார். . இஸ்லாமிய நாடுகளில் இதுதான் முதல் வைத்திய கிரந்தம் என்று சொல்வதற்கிலை. ஆயினும் இந்தக் க்ரந்தத்தின் சிறப்பு யாதெனில் அழகிய வரைபடங்களுடன் வெளியானதே; இதற்கு முந்திய நூல்களில் உடற்கூறுகளின் படங்கள் இல்லை. இதே முறையில்தான் ராஸி மனிதன் படமும் அமைந்துள்ளது
உடலின் பல அங்கங்கள், நவக் க்ரஹங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்துக்கள் நம்புவர். கண்ணுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன், ஜனன உறுப்புகளுக்கு சுக்கிரன் என பல க்ரஹங்களுக்குப் பல பணிகள் உண்டு. இதன் அடிப்படையிலேயே பாரசீக 12 ராஸி மனிதன் வரையப்பட்டிருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை.
மனிதனின் முதுகெலும்புக்கு அருகில் உள்ள தண்டுவடம் வழியாக ஆறு சக்கரங்கள் இருப்பதாக இந்துக்கள் நம்புவர். இத்தகைய ஆறு சக்கரங்களைக் காட்டும் பழைய ஓவியமும் இங்கே உள்ளது. இந்த தண்டு வடத்துக்குக் கீழே பாம்பு சுருண்டு கிடப்பதுபோல மஹத்தான ஒரு சக்தி உறக்க நிலையில் இருப்பதாகவும் அதை தியானம் மூலம் தட்டி எழுப்பி ஆறு சக்கரங்கள் வழியே வழிநடத்தும் வல்லமை உடையோர் ஆன்மீக விழிப்புணர்ச்சி அடைவார்கள் என்றும் அத்தோடு நில்லாமல் நெற்றிக் கண் (மூன்றாவது கண் எனப்படும் ஞானக் கண்) திறக்கப்பட்டு அற்புதங்களை செய்ய முடியும் என்றும் இந்துமத நூலகள் செப்பும். இக்கால விஞ்ஞானிகளுக்கோ, மாற்றுமதத்தினருக்கோ இந்த பிரம்மாண்ட ரஹஸியம் இன்று வரை தெரியாது; விளங்காது.
விநாயகர் அகவலில் அவ்வையார் கூறுவதை அறிந்தோருக்கு இதன் சிறப்பு புரியும்.
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
ஆயூர் வேதம் என்றால் ‘நீண்ட வாழ்க்கை வாழ்வதற்கான அறிவு’ என்று பொருள்படும். உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களின் அடிப்படையில் அமைந்த மருத்துவ முறை இது. இப்பொழுது இந்தியாவுக்கு வெளியிலும் பிரபலமாகிவிட்டது.
இந்தக் கண்காட்சிக்கு ‘ஆயுர்வேத மனிதன்’ என்று பெயர் சூட்டியமைக்குக் காரணம் ஒரு நேபாள ஓவியம் ஆகும். இது 200 ஆண்டுப் பழமையானது. நேபாள நாட்டிலிருந்து இந்தியா வழியாக லண்டன் வரை வந்ததிலிருந்தே இதன் சிறப்பு விளங்கும்.
இந்த வண்ண ஓவியத்தில் ஆயுர்வேத நூல் அடிப்படையில் உடல் உறுப்புகளும் ரத்த நாளங்களும் காட்டப்பட்டுள்ளன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ‘பாவ ப்ரகாஸ’ என்ற சம்ஸ்க்ருத மருத்துவ நூலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் இந்த ஓவியத்தில் இருக்கின்றன. ஓவியத்தை வரைந்தவர் நல்லறிவு பெற்றிருந்தாலும் சம்ஸ்க்ருத எழுத்துக்களை எழுதியவர் பிழைபட எழுதியுள்ளார். எழுத்துப் பிழைகளோடு கருத்துப் பிழைகளும் உள.
விஷ்ணு-லெட்சுமி உருவத்துடன் கூடிய பித்தளை பாக்குவெட்டியும் கொட்டைப் பாக்கில் இருந்து செய்யப்பட்ட பற்பசையும் காட்சியில் இடம்பெற்று உள்ளன. அந்தக் காலத்தில் மூலிகைகளை பெரிய வரைபடமாக வரைந்த மூலிகைப் புஸ்த்தகத்தையும் காணலாம். இவை எல்லாம் 200-ஆண்டுப் பழமையானவை.
பார்க்க அருமையானவை.
–SUBHAM–