Date:11 FEBRUARY 2018
Time uploaded in London- 9-42 am
WRITTEN by London swaminathan
Post No. 4728
PICTURES ARE TAKEN from various sources.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா? பழமொழிக் கதை
இது ஒரு உண்மைக் கதை –பர்த்ருஹரி நீதிசதகம் பற்றி 1916ல் கோபாலாச்சாரியார் என்பவர் எழுதிய புத்தகத்தில் உள்ளதைப் புதுக்கி வரைகிறேன்
தென்னாட்டில் ஒரு ஊரில் ஒரு பணக்கார பார்ப்பனி வாழ்ந்து வந்தாள்; அவள் கணவன் இல்லாமல் தனித்து வாழ்ந்து வந்தாள்; நிறைய செல்வத்துக்கு அதிபதி அந்தப் பிராஹ்மணப் பெண்மணி.
அந்தக் காலத்தில் கொள்ளையர்கள் இந்த வீட்டில் இன்ன நாளன்று திருடப் போகிறோம் என்று அறிவித்துவிட்டு வந்து திருடுவார்கள். இதனால் அனாவசிய வன்முறை தவிர்க்கப்படும்; கொள்ளையர்களும் எந்த சேதமும் இன்றி பணம், நகைகள் முதலியவற்றை எடுத்துச்செல்வர்.
பணக்கார பார்ப்பனிக்கும் கடிதம் வந்தது; அவளுக்கோ ஆண் துணை கிடையாது. வெறும் வேலையாட்கள் மட்டுமே; அவளுக்கு ஒரு யோஜனை பிறந்தது.கொள்ளையர்கள் கெடு வைத்த நாளன்று அறுசுவை உண்டி சமைத்தாள்; வடை பாயசம், அப்பளம் பொறியல் கூட்டு, லட்டு என கல்யாண சமையல் சாதம்! வாசனை தெரு முழுதும் பரவியது.
கொள்ளையர்களும் குறித்த நேரத்தில் தீவட்டி சஹிதம், தாரை தம்பட்டைகளை முழக்கிக் கொண்டு கும்பலாக வந்தனர். எல்லோரும் அவரவர் வீட்டைத் தாழிட்டுக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு ‘கம்’ என்று இருந்தனர். இந்தப் பிராஹ்மணப் பெண்மட்டும் கொள்ளையர்களுக்காக கதவை லேஸாகத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.
கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அறு சுவை உணவின் வாசனை மூக்கைத் துளைத்தது. நாக்கில் ஜலம் ஊறியது. இந்த அம்மாளும் வாருங்கள், முதலில் சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்த காரியத்தைச் செய்யுங்கள் என்று தலை வாழை இலை விரித்துப் பரிமாறினாள்.
அவர்கள் சாப்பிட்டு எழுவதற்கு முன்னார், ஒரு புடவையை தரையில் விரித்து நகை நட்டுகளைக் கழட்டி வைத்தாள்; வீட்டிலுள்ள விலை உயர்ந்த பட்டுப் புடவை, பட்டு வஸ்திரங்களையும் சமப்பித்தாள். கொள்ளையர்களுக்கு ஒரே ஆச்சர்யம்; அட, வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடிந்து விட்டதே என்று கீழ்மட்டக் கொள்ளையர்கள் நினைத்தனர்.
தலைவா! உத்தரவிடுங்கள்; கைவரிசையைக் காட்டுகிறோம் என்று அவர்கள் தலைவனை நோக்கினர். அவனோ, ”சீ, சீ, விலகிப் போங்கள். அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடலாகாது என்பதை அறியீரோ; உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாகாது; உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றெல்லாம் தமிழில் சொல்வார்களே. அப்படி இருக்க நாம் இந்த அம்மணிக்கு ஒரு தீங்கும் செய்யலாகாது வாருங்கள் என்று அந்த அம்மையாருக்கு வந்தனம் கூறி விடை பெற்றனர்.
பின்னர் அவன் தன் கொள்ளைச் சொத்துகளை அந்த அம்மையார் பெயருக்கே எழுதி வைத்தானாம்.
இந்தக் கதையை 1916ல் வெளியிட்ட கோபாலாச்சாரியார், இன்றும் அந்தக் குடும்பத்தினர் அந்த சொத்துகளை அனுபவித்து வருகின்றனர் என்று அடிக்குறிப்பு கொடுத்துள்ளார். ஆனால் பெயரோ ஊரோ குறிப்பிடவில்லை.
அன்னதானத்தின் மஹிமை அவ்வளவு பெரியது; திருடர்களையும் மனம் மாற வைத்துவிடும்; அது மட்டுமல்ல; ‘’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’’ — என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க, அந்த அம்மையாரின் அன்பான உபசரிப்பும் அவர்களை நெகிழவைத்துவிட்டது எனலாம்!
கன்னம் இடல்:- வீட்டின் சுவரில் ஓட்டை போடுதல்; அதிலும் திருடர்கள் வெவ்வேறு வடிவத்தில் ஓட்டை போட்டு தன் கலைத் திறமையை வெளிப்படுத்துவர். சூத்ரகர் எழுதிய ‘ம்ருச்ச கடிகம்’ நாடகத்தில் இதன் விளக்கங்களைக் காணலாம்.
இரண்டகம் :— உண்ட வீட்டில் பிளவு ஏறபடுத்தல்; கருத்துப் பிளவு அல்லது வீட்டை உடைக்கும் பிளவு — இரண்டு அகம் = இரண்டு வீடுகள்/ துண்டுகள் ஆக்குதல்
–சுபம்–