Isaikkavi Ramanan as Bharati, picture by Manion cgs
DATE – 12 FEBRUARY 2018
Time uploaded in London- 5-52 am
COMPILED by S NAGARAJAN
Post No. 4731
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாடல்கள் 318 முதல் 326
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்
மகாகவி பாரதி அந்தாதி
எதிர்பாரா இன்னல், அமரமேற்றல் மற்றும் மக்கள் துயர் ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஒன்பது பாடல்கள்
எதிர்பாரா இன்னல்
தினமும் கோவில் யானைக்கு – பிரசா
தத்தை அளிப்பது வழக்கமாகும்!
கனன்று ஒருநாள் வெறிகொண்டு – யானை
குணமும் மாறுப டநின்றதுகாண்!
வினயம் அறியா பாரதியார் – பழமுடன்
உடைத்த தேங்காய் அதற்கிட்டார்!
மனவெறி கொண்டு பாரதியை – யானை
மிடுக்குறப் பற்றித் தூக்கியதே!
தூக்கிப் பற்றி பாரதியை – வெடுக்கெனத்
தரையில் போட்டது யானையுமே!
கூக்குர லிட்டுப் பாரதியார் – யானையின்
கால்களுக்கிடையே விழுந்தார்காண்
தாக்கிய யானையின் செயலறிந்து – பதறி
குவளைக் கண்ணன் ஓடிவந்தார்!
ஊக்கிய உள்ளத் துடிப்புடனே – விரைந்து
இறுகப் பற்றினார் பாரதியை
பாரதி உடலை ஒருங்குப்பற்றி – அலாக்காய்ப்
பிடித்து வந்து கிடத்தினார்காண்
தீரன் கிருட்டின மாச்சாரி – திறத்தால்
துயரம் தீர்த்தார் பாரதியார்
பாரதி அருளைப் பெற்றவராம் – பாரதி
பாரதப் புரட்சிக் கவிஞராவர்
இராயப்பேட்டை மருத்துவத்தில் – பாரதி
உடல்நல சிகிச்சை ஏற்றார்காண்!
அமரமேற்றல்
ஏற்றார் உடல்நலம் பாரதியார் – அனுதினம்
அலுவல கம்போய்ப் பணிபுரிந்தார்!
ஆற்றல் பெற்றார் பாரதியார் – எனினும்
அவதி வயிற்றுப் போக்கேற்றார்!
ஏற்புடைக் கடவுள் பரம்பொருளே! – அதனை
இயல்பா யறிந்தார் பாரதியார்!
ஏற்புழி கட்டுரை எழுதினாரே! – அதுவே
மனித னுக்கு மரணமில்லை.
மரண மில்லா பெருவாழ்வு – ஏற்போன்
மகிமை பரமருள் அமரமேற்பான்!
சிரமம் வயிற்றுப் போக்குடனே – பணியை
செவ்வனே புரிந்தார் பாரதியார்!
இரக்கங் காட்டி பணியேற்றார் – மித்திரன்
அரங்க சாமி ஐயங்கார்!
உரமிகு உடலைப் பெறுதற்கு – பாரதி
ஏழு நாட்கள் விடுப்பேற்றார்.
விடுப்பு ஏற்ற பாரதியார் – வீட்டில்
உடல்வ ளம்பெற ஓய்வெடுத்தார்!
தொடுத்த கோட்டு, தலைப்பாகை – அணிந்தே
தேசத் தொண்டை நினைத்தார்காண்!
நடுக்க முற்று வாயொலிக்க – பாடலாம்
நல்லதோர் வீணை இசைத்தாரே!
ஒடுங்கி மனமும் உடல்சோர – யாவரும்
அலற இயற்கை எய்தினார்காண்!
மக்கள் துயர்
எய்த குறிக்கோள் பலவிருக்க – பாரதி
அமரம் கண்டார் விதியாலே!
தொய்வு ஏற்று செல்லம்மாள் – மக்கள்
சூழ்ந்து வெம்பித் தவித்தார்கள்!
வெய்துய ருற்ற விசுவநாதர் – இளவல்
வேதனை யுற்றுக் கலங்கினாரே
செய்தி எங்கும் பரவியது – நாடே
சோர்ந்து வெந்துயர் துய்த்தனர்காண்
துய்த்துக் கண்ணீர் சொரிந்தார்கள் – தேசத்
தலைவர் பலரும் கலங்கினார்கள்!
எய்தவன் இருக்க அம்பைநோவ – நாமும்
எடுத்தோம் பிறப்பு நன்றறிவோம்!
பெய்தான் உயிரை உடற்கூட்டில் – இறைவன்
பெட்புறு செயலை யாமறிவோம்!
தெய்வம் எழுத்து எழுதுகோலும் – வாழ்வு
தேசப் பற்றுமே பாரதியார்
பாரதி புவியில் வாழ்ந்தகாலம் – முப்பத்
தொன்பது ஆண்டுகள் என்றறிவோம்!
நீரதன் புதல்வர் என்றுநம்மை – பாரதத்
தாயிடம் கூறிப் போற்றினார்காண்.
பூரண சுதந்திரம் பாடினாரே – எனினும்
பாரத சுதந்திரம் கண்டிலரே!
பாரத விடுதலை வேண்டிநின்றார் – அமரராய்ப்
பார்த்து மகிழ்ந்தார் பாரதியார்!
(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)
கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.
அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.
நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.
****