பாரதி போற்றி ஆயிரம் – 50 (Post No.4735)

DATE – 13 FEBRUARY 2018

Time uploaded in London- 5-59 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4735

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 327 முதல் 332

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

பாரதி பாடல் சிறப்பு மற்றும் பாரதி மணி மண்டபம்  ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஆறு பாடல்கள்

பாரதி பாடல் சிறப்பு

 

பாரதி கவிதை பாக்களின்று – இசையுடன்

   பாங்குற ஒலிக்கக் கேட்கின்றோம்!

பாரத சுதந்திர விழாக்களிலே – பாரதி

   பாக்களே முதன்மை வகிப்பதுகாண்

வீரர் தியாகிகள் அணிவகுப்பில் – பாரதி

   உணர்ச்சிப் பாக்கள் ஒலிப்பதுகாண்

பாரதி பாடிய ஆத்திசூடி – பள்ளியில்

   பிரார்த்தனை பாடலாய்த் திகழ்வதுகாண்

 

திகழ்தரு பாப்பா பாட்டுக்கள் – பள்ளித்

   தொடக்க வகுப்பில் சிறப்பதுகாண்!

மகத்துவ பாஞ்சாலி சபதமே – பள்ளி

   மேனிலை வகுப்பில் கமழ்வதுகாண்!

நிகரிலா பாரதி கட்டுரைகள் – பல்கலை

   கல்லூ ரிகளிலே களமேற்கும்

மிகப்பல பக்திப் பாடல்கள் – பலப்பல

   மொழிகளில் ஆக்கம் ஏற்பதுகாண்.

 

ஏற்புறு பாரதி துதிப்பாடல் – விழாவாம்

   நவராத் திரியில் இசைப்பதுகாண்

போற்றி தேவியர் மூவரையும் – விழாவில்

   பாடிடப் பாரதி கவிதந்தார்!

காற்றில் பறக்கும் தூசுகூட – பாரதி

   கவிதை கேட்டுக் கிறுகிறுத்து

தோற்றம் அசையா நிலையேற்கும் – மலர்ந்து

   தெய்வ சிலையும் முகங்காட்டும்

 

பாரதி மணிமண்டபம்

  

முகமே காட்டி கவர்ந்திடுவார் – பாரதி

   மீசை, பாகை கோட்டுடனே!

புகழ்தரு திரைப்படக் கதைகளிலே – பாரதி

   பாடல், நிகழ்ச்சி மாண்பேற்கும்!

புகலரு கவிஞர் வரிசையிலே – புரட்சிப்

   பாரதி பெயரே முன்னிற்கும்!

நிகழும் மாறு வேடத்தில் – பாரதி

   நடிப்பு வேடமே சிறப்பேற்கும்!

 

சிறப்புடன் அமரர் கல்கியவர் – மணிமண்

   டபத்தை எழுப்பினார் பாரதிக்கு

இறவாப் புகழுடன் பாரதியார் – எட்டய

   புரத்தில் சிலையாய் நிற்பதுகாண்

அறந்தரு சிந்தை இராசாசி – தமிழக

  முதல்வர் மண்டபம் திறந்து வைத்தார்

திறமிகு அனுபவ மூதறிஞர் – பாரதி

   பிறந்த வீட்டைக் கண்டார்காண்.

 

கண்டார் பாரதி பிறந்தவீடு – கவினுறு

   அரண்மனை கண்டு வியப்புற்றார்!

எண்டிசை போற்றஎட் டயபுரமும் – இன்று

   எழிலுடன் காட்சி தருவதுகாண்!

வண்ண பாரதி படைப்புகளின் – குவியலை

   அடைக்கலங் காத்தவர் விசுவநாதர்

தொண்டர், பாரதி இளவலர் – விசுவ

   நாதரை அழைத்தார் முதல்வருமே

 

(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: