இருந்தும் இறந்தவர் யார், யார்? -1 (Post No.4741)

Date:14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-41 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4741

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ச.நாகராஜன்

 

1

இரண்டு கைகள், கால்கள், முகத்துடன் கூடி உயிருடன் உலவுகின்ற அனைவரும் மனிதர்கள் தானா?

இல்லை என்கின்றனர் மேலோர்.

 

இதற்கும் அப்பாற்பட்ட சில விஷயங்களைக் கொண்டு தான் மனிதன் தானா என்று நிச்சயிக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

 

உயிரோடு இருந்தாலும் இறந்தவர்கள் போலத்தான் என்று பல அறிஞர்கள் கூறுகின்ற பட்டியலைப் பார்த்தால் மனிதனாக வாழ்வதற்கான இலக்கணம் நன்கு புரிய வரும்.

சில பெரியோர்கள் இது பற்றிக் கூறியதைப் பார்க்கலாம்.

 

 

2

முத்து மீனாட்சிக் கவிராயர் என்பவர் குமரேச சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலாகும். இவர் வேளாள குலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு குருபாத தாசன் என்ற பெயரும் உண்டு.

குமரேச சதகத்தில் வரும் அவரது பாடல் ஒன்று இருந்தும் இறந்தோர் யார் என்பதைத் தெளிவுறக் கூறுகிறது.

 

மாறத வறுமையோர் தீராத பிணியாளர்

வருவேட் டகத்திலுண்போர்

மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்

மன்னுமொரு ராசசபையில்

தூறாக நிந்தைசெய் துய்குவோர் சிவிகைகள்

சுமந்தே பிழைக்கின்றபேர்

தொலையா விசாரத் தழுந்துவோர் வார்த்தையில்

சோர்வுபட லுற்றபெரியோர்

வீ றாக மனையாள் தனக்கஞ்சி வந்திடு

விருந்தினை ஒழித்துவிடுவோர்

வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு

மிக்கசபை ஏறும் அசடர்

மாறாக இவரெலாம் உயிருடன் செத்தசவம்

ஆகியொளி மாய்வர் கண்டாய்

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

மலைமேவு குமரேசனே

(குமரேச சதகம் – பாடல் எண் 32)

 

 

இதன் பொருள்: மயிலில் அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல் வயலில் உயர்ந்த மலையின் மேல் எழுந்தருளியிருக்கும் குமரக் கடவுளே!

 

நீங்காத வறுமையில் உழல்வோர்

நோய் தீராத பிணியாளர்

மாமனார் வீட்டில் நீண்ட நாள் தங்கி உணவுண்போர்

மனைவியைத் தீய ஒழுக்கத்தில் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவித்திருப்போர்

தாம் இருக்கும் அரச சபையில் வீணான பழியைக் கூறி அதனால் வாழ்வோர்

 

மனிதன் அமர்ந்திருக்க அந்தப் பல்லக்கைச் சுமந்து வாழ்வோர்

நீங்காத கவலையில் அழுந்தி இருப்போர்

சொன்ன சொல்லிலிருந்து வழுவும் பெரியோர்கள்

மனைவியின் அகம்பாவத்திற்குப் பயந்து வருகின்ற விருந்தினரை விலக்கி விடுவோர்

நடக்காத வழக்கை ஆதரவாகக் கொண்டு பெரிய நியாய ஸ்தலங்களிலே பிடிவாதமாகச் செல்லும் அசடர்கள்

இவர்கள் அனைவரும் உலகியலுக்கு எதிராக உயிரோடிருந்தும் செத்த பிணமாகிப் புகழ் குன்றுவர்!

 

3

திருவள்ளுவர் இருந்தும் இறந்தவர் பற்றி இரு குறள்களில் கூறுகிறார்.

 

ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது;

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்   (குறள் 214)

உலக நடையினை அறிந்து வாழ்பவனே உயிரோடு வாழ்பவன் ஆவான். அப்படிச் செய்யாதவன் உயிரோடு இருந்தாலும் கூட செத்தவருள் ஒருவனாக வைக்கப்படும்.

உலக நடை என்பது வேத நடையைப் போல என்கிறார் பரிமேலழகர் தம் உரையில்.

 

நன்றியில் செல்வம் என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது:

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃது உண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்       (குறள் 1001)

 

தன் வீடு முழுவதும் நிரம்பி வழியும் அளவு பெரும் பொருளை ஈட்டியும் கருமித்தனத்தால் அதனை அனுபவிக்காது இருக்கும் ஒருவன்  உயிர் வாழ்ந்தாலும் கூடச் செத்தவனே!

 

 

4

ஸ்வாமி விவேகானந்தர் மிக அழகுறக் கூறிய வார்த்தைகள் இவை:

 

THEY ALONE LIVE WHO LIVE FOR OTHERS

THE REST ARE MORE DEAD THAN ALIVE!

மற்றவருக்குச் சேவை புரிந்து வாழ்பவனே வாழ்பவன்;

மற்றவர்கள் உயிரோடிருந்தாலும் இறந்தவரே!

 

( அடுத்த கட்டுரையுடன் முடியும்)

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: