31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)

 

31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)

Written by London Swaminathan 

 

Date: 25 FEBRUARY 2018

 

Time uploaded in London – 17-40

 

Post No. 4785

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மார்ச் 2018  ‘நற்சிந்தனை’ காலண்டர்

(ஹேவிளம்பி- மாசி/ பங்குனி மாதம்)

இந்த மாத காலண்டரில் நாலடியார் நானூறு என்னும் நீதி நூலில் இருந்து 31 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

 

முக்கிய விழாக்கள் – மார்ச் 1 ஹோலி, மாசி மகம் ;  14-காரடையான் நோன்பு; 18- யுகாதி/ தெலுங்கு வருஷப் பிறப்பு, வஸந்த பஞ்சமி ஆரம்பம்; 22- வஸந்த பஞ்சமி; 25- வஸந்த பஞ்சமி முடிவு, ஸ்ரீ இராமநவமி, ஷீர்டி சாய் பாபா பிறந்த தினம்; 29- மஹாவீர் ஜயந்தி’;  30- புனிதவெள்ளி, பங்குனி உத்திரம்.

பௌர்ணமி– 1, 31; அமாவாசை– 17  ; ஏகாதஸி விரதம்-13, 27;

சுப முகூர்த்த தினங்கள்:- 4, 5, 26, 30

 

 

 

மார்ச் 1 வியாழக்கிழமை

 

பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க,அகடுற யார் மாட்டு நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும் (காளை உழுது பெற்ற உண்வை பகுத்து உண்க; செல்வமானது, நடு நிலையுடன், வண்டிச் சக்கரம் போல மாறி மாறி வரும்)

மார்ச் 2 வெள்ளிக்கிழமை

 

நின்றன நின்றன நில்லாவென உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயிற் செய்க (நிலையாக இருக்கும் என்று எண்ணப்பட்டவை நிற்காது; ஆகையால் உங்களுக்குப் பொருந்திய அறப்பணிகளை உடனே செய்க)

 

மார்ச் 3 சனிக்கிழமை

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின், யாரும் பிறந்தும் பிறவாதாரில் (தர்மம் செய்து கருணை உடையவராக இருங்கள்; அப்படி செய்யாவிடில் பிறந்தும் பிறவாதவரே)

மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை

ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த

பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் (ஒரு நன்மை செய்தாலும் கூட அதற்காக சான்றோர் 100 பிழைகளையும் பொறுப்பர்)

 

மார்ச் 5 திங்கள் கிழமை

வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி யரிது (குற்றமில்லாத நூல்களைக் கற்றும், அதன் உட்கருத்தை அறியமாட்டார் புத்தி இல்லாதவர்)

மார்ச் 6 செவ்வாய்க் கிழமை

மைதீர் பசும்பொன்மேன் மாண்ட மணியழுத்திச்

செய்ததெனினுஞ் செருப்பும்தன் காற்கேயா

மெய்திய செல்வத்த ராயினுங் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப்படும் (தங்க, ரத்ன செருப்பானாலும் காலில்தான் பயன்படும். கீழ்களுக்குச் செல்வம் இருந்தாலும் அவர்களின் செயல்களே அவர்களைக் காட்டிவிடும்)

 

மார்ச் 7  புதன் கிழமை

 

தினையனைத்தே யாயினுஞ் செய்தநன் றுண்டால்

பனையனைத்தா வுள்ளுவர் சான்றோர் (கொஞ்சம் உதவி செய்தாலும் உயர்ந்தோர் அதைப் பெரிதாகப் பாராட்டுவர்)

 

மார்ச் 8 வியாழக்கிழமை

 

முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை

யிந்திரனா வெண்ணி விடும் ( முந்திரி என்னும் சிறு தொகைக்கும் சற்று மாகாணி செல்வம் அதிகரித்தவுடன் கீழ்மட்ட மக்கள் தங்களை இந்திரன் என்று எண்ணுவர்)

 

மார்ச் 9 வெள்ளிக்கிழமை

நுண்ணர்வினாரொடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே யொக்கும் ( நுட்பமான அறிவு உடையோருடன் அமர்ந்து புசிப்பது தேவ லோகம் போல இன்பம் தரும்)

 

மார்ச் 10 சனிக்கிழமை

காம நெறி படரும் கண்ணினாற்கு இல்லையே

ஏம நெறி படருமாறு (வயதான காலத்திலும் காமம் உடையோருக்கு

நிலையான இன்பம்/ பாதுகாப்பு இல்லை)

 

மார்ச் 11 ஞாயிற்றுக்கிழமை

 

பாய்திரைசூழ் வையம் பயப்பினு மின்னாதே

ஆய்நல மில்லாதார் பாட்டு (உலகமே கிடைப்பதானாலும் நல்ல குணம் இல்லாதார் நட்பினை விரும்பமாட்டார்கள் சான்றோர்)

 

மார்ச் 12 திங்கள் கிழமை

கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி

விடாஅ ருலகத் தவர் ( செல்வம் உடையோர் ஒரு காசு தராதபோதிலும், மக்கள் அவரைச் சுற்றி வட்டம் இடுவர்)

 

மார்ச் 13  செவ்வாய்க் கிழமை

 

அருளினற முரைக்கு மன்புடையார் வாய்ச்சொற்

பொருளாகக் கொள்வர் புலவர் (பெரியோர் சொல்லும் புத்திமதியை நல்லோர் பெரும்பேறாக கொள்வர்)

மார்ச் 14  புதன் கிழமை

நாப்பாடஞ்சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்த்

தீப்புலவர் சேரார் செறிவுடையார் (வாய்க்கு வந்தபடி பாடம் சொல்லும் நேர்மையற்ற புலவருடன் அடக்கமுடைய நற்புலவர் சேர மாட்டார்கள்.)

 

மார்ச் 15 வியாழக்கிழமை

 

தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமுந்

தெருண்ட வறிவினவர் (தானே பெரியவன் என்று கருதும் செல்வரிடத்து, தெளிந்த அறிவுடையார் செல்ல மாட்டார்கள்)

 

மார்ச் 16 வெள்ளிக்கிழமை

 

வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மான மழுங்க வரின் (சுவர்க்கமே கிடைப்பதாயினும் , மானம் கெட்டுப்போக நேரிட்டால் , மானமுள்ள பெரியோர் அதை நாட மாட்டார்கள்)

 

மார்ச் 17 சனிக்கிழமை

கடையெலாங் காய்பசி யஞ்சுமற்றேனை

இடயெலா மின்னாமை யஞ்சும்….தலையெல்லாம் சொற்பழி யஞ்சிவிடும் (பயத்தின் வகை: கடைத்தரத்தில் உள்ளோர் பசிக்கு பயப்படுவர்; இடைத் தரத்தில் உள்ளோர் துன்பத்துக்கு பயப்படுவர் ; முதல் தரத்தில் உள்ளோர் சொல்லால் வரும் பழிக்கு பயப்படுவர் )

 

மார்ச் 18 ஞாயிற்றுக்கிழமை

 

புறங்கடை வைத்தீவர் சோறு மதனால்

மறந்திடுக செல்வர் தொடர்பு (செல்வந்தர் நம் வீட்டுக்கு வந்தால் மனைவியை அறிமுகம் செய்து, சோறு படைப்போம்; நாம் அவர்கள் வீட்டுக்குப் போனால் மனைவியின் கற்பழிந்துவிடுவது போல நம்மை வாசலில் வைத்தே சோறு போடுவர்; அவர்களை மறப்பதே நலம்)

 

மார்ச் 19 திங்கள் கிழமை

 

உள்ளூர்

இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்

விருந்தினனா நாதலே நன்று (ஒருவர்க்கு சோறு போட முடியாவிட்டால், உள்ளூரில் இருந்து காலத்தைக் கழிக்காமல் நாமே பிச்சை எடுத்தல் நன்று)

 

மார்ச் 20  செவ்வாய்க் கிழமை

வாழாதார்க்கில்லை தமர் ( பொருள் இல்லாமல் வாழ்வோருக்கு சுற்றத்தார் இல்லை)

 

மார்ச் 21 புதன் கிழமை

கலா அற் கிளிகடியுங் கானக நாட

இலாஅ அர்க் கில்லைத் தமர் ( கல் கொண்டு கிளி ஓட்டும் காடுகளைக் கொண்ட மன்னவா! செல்வம் இல்லாதவர்களுக்கு உறவினர் இல்லை)

மார்ச் 22 வியாழக்கிழமை

 

இரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்

புகற்கரிய பூழை நுழைந்து (பிச்சை எடுக்கும் துன்பம் உள்ளவன், புகை போக முடியாத இடத்திலும் புகுந்துவிடுவான்)

மார்ச் 23 வெள்ளிக்கிழமை

 

இரவலர் கன்றாக வீவார வாக

விரகிற் சுரப்பதாம் வண்மை (பிச்சை எடுப்போர் கன்று; பிச்சை இடுவோர் பசு; இப்படி, தானே அன்புடன் சுரப்பதே கொடுக்கும் குணம்)

 

 

மார்ச் 24 சனிக்கிழமை

அட்டதடைத்  திருந்துண்டொழுகு  மாவதின் மாக்கட்

கடைக்குமா மாண்டைக் கதவு (சமைத்ததைத் தாமே சாப்பிடும் குணமில்லாத மனிதருக்கு மேலுலகத்தின் கதவானது மூடப்படும்)

 

 

மார்ச் 25 ஞாயிற்றுக்கிழமை

ஓதியுமோதா ருணர்விலா ரோதாதும்

ஓதியனையா ருணர்வுடையார் (பகுத்தறிவு இல்லாதவர்கள் படித்தும் படியாதவர்களே; பகுத்தறிவு உடையோர், ஓதாமலும் படித்தவர்களுக்குச் சமமானவர்கள் ஆவர்;பகுத்தறிவு = விவேகம்)

 

மார்ச் 26 திங்கள் கிழமை

வலவைகளல்லாதார் காலாறு சென்று

கலவைகளுண்டு கழிப்பர் (பேய்த்தனம் இல்லாத நல்லோர் தூர இடங்களுக்குச் சென்று பல விதமான உணவு வகைகளை உண்டு மகிழ்வர்; வலவை= இடாகினி, காளி ஆகியோருக்கு ஊழியம் செய்யும் பேய்கள்)

 

மார்ச் 27 செவ்வாய்க் கிழமை

செல்வம் பெரிதுடையாராயினுங் கீழ்களை

நள்ளா ரறிவுடையார் ( மிகுந்த செல்வம் படைத்திருந்தாலும் கீழ் மக்களாக இருந்தால், அவர்களை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்; கீழ்கள்= குணத்தினால் கீழானவர்கள்)

மார்ச் 28 புதன் கிழமை

 

கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா

நோலா வுடம்பிற் கறிவு ( கோல் கொண்டு அடித்துச் சொன்னாலும்  புண்ணியம் செய்யாத உடம்புக்கு ஞானம் புக மாட்டாது/ வராது)

மார்ச் 29 வியாழக்கிழமை

 

கடாஅயினுஞ் சான்றவர் சொல்லார் பொருண்மேற்

படாஅ விடுபாகறிந்து (கேட்டால் கூட, எங்கு தன் சொல் எடுபடாதோ, அங்கே அறிஞர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்; மூடர்கள் சபையில் பேசார்)

 

மார்ச் 30 வெள்ளிக்கிழமை

 

நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே

பூவின் கிழத்தி புலந்து (சரஸ்வதி தேவி உறைவதால், அவ்விடத்தில் பிணங்கி, லெட்சுமி தேவி சேர மாட்டாள்; பணமுள்ள இடத்தில் அறிவு இராது)

மார்ச் 31 சனிக்கிழமை

 

உணர வுணரு முணர்வுடை யாரைப்

புணரப் புணருமா மின்பம்

(நம்மை நன்கு அறிந்த, நம் குணத்தைப் பாராட்டும் விவேகம் உள்ளவர்களை சந்தித்து அளாவும்போது இன்பம் ஏற்படும்)

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

–SUBHAM–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: