Date: MARCH 24, 2018
Time uploaded in London- 6-16 am
WRITTEN by S NAGARAJAN
Post No. 4845
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
நகைச்சுவை நடைச்சித்திரம்
ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 1
ச.நாகராஜன்
நிர்வாகம் என்ன எதிர் பார்க்கிறது என்பதை எல்லா மேனேஜர்களும் அறிவது அவசியம் என்பதன் அடிப்படையில் எங்கள் அனைவருக்கும் புரிய வந்தது தாரக மந்திரமான ஒரே வார்த்தை என்பது தான்!
எஃபிஸியன்ஸி – EFFICIENCY
ஆம், அது தான் வேண்டும்!
உடனடியாக ஒரு நண்பரைப் பார்க்கப் போனேன்.
அவர் நான் போனவுடன் ஒரு புத்தகத்தை ஓரமாக ஒளித்து வைத்துக் கொண்டார்.
எட்டிப் பார்த்தேன். ஊஹூம், ஒன்றும் தெரியவில்லை.
என்ன புத்தகம் என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று மழுப்பி விட்டார். மண்டை குடைந்தது! என்ன புத்தகம்?!
எஃபிஸியன்ஸி பற்றிப் பேசி விட்டுக் கிளம்பினேன்.
எங்கும் இதே தான் பேச்சு என்றார்.
அடுத்த நாளும் அவர் ரூமுக்குச் சென்றேன் – தேவையில்லாவிட்டாலும் கூட!
அவர் ஒரு நிமிடம் என்று பாத்ரூமுக்குச் சென்ற போது புத்தகங்களைக் குடைந்தேன்.ஆஹா, கிடைத்தது அவர் படித்த புத்தகம்.
ஒன்று டேல் கார்னீகி எழுதிய ‘ஹௌ டு வின் ஃப்ரண்ட்ஸ் அண்ட் இன்ஃப்ளூயன்ஸ் பீபிள்’ இன்னொன்று நெப்போலியன் ஹில் எழுதியது – தி சக்ஸஸ்.
ஆஹா, வந்த காரியம் முடிந்தது.
குட்டி அரட்டையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.
டேல் கார்னீகி புத்தகத்தை முதலில் வாங்கினேன்.
அட்டை டு அட்டை படித்தேன். அற்புதம்.குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.
என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று நண்பர்களே கேட்டு விட்டனர்.
எஃபிஸியன்ஸி.
ஆனால் இது ரொம்ப நாள் ஓடவில்லை.
இன்னும் அதிக எஃபிஸியன்ஸி தேவையாம்.
ஓடினேன் கடைக்கு. நெப்போலியன் ஹில்லின் புத்தகத்தை வாங்கினேன். அடடா,சக்ஸஸ் ஃபார்முலா, எப்படித் தருகிறார்!
ஆழ்மனதை உபயோகியுங்கள்.
சரி, உபயோகிக்கிறேன்.
எல்லா டெக்னிக்கையும் அத்துபடி செய்து கொண்டு அலுவலகத்தில் ஆழ்மன எக்ஸ்பர்ட் போல நடந்தேன்.
சற்று விசித்திரமாக என்னப் பார்த்தார்கள்!
எல்லாம் ஆழ் மனம் பார்த்துக் கொள்ளும்!
இல்லை என்றது நிர்வாகம்.
சோம்பி இருக்கிறீர்களே!
வாருங்கள், தெரிந்து கொள்ளுங்கள் எம்.பி.ஓ -ஐ என்றது!
M.B.O.?!
MANAGEMENT BY OBJECTIVE!
ஆஹா, குறிக்கோளின்றிக் கெட்டேனே என்று அப்பர் பிரான் சும்மாவா பாடினார்?
இலக்கு என்ன?
எழுதி எழுதி நிர்வாகத்தின் குறிக்கோளை நோக்கி நடை பயில ஆரம்பித்தோம்.
அடடா, அதற்கு வந்தது அல்பாயுசு!
ஒரு நிமிடத்தில் ஒரு மேனேஜர் எல்லாவற்றையும் முடிக்க வேண்டுமாம்.
எப்படி ஐயா சாத்தியம் அது?!
ஒரு மேனேஜர் இருக்கிறார், அவர் டேபிளில் பேப்பரே கிடையாது. க்ளீன்! அவர் மாதிரி ஆகு!
யார் ஐயா அவர்? வியப்புடன் கேட்டேன்.
ஒன் மினட் மேனேஜர்!
ONE MINUTE MANAGER!
ஓடினேன் கடைக்கு!
சார், ஒன் மினட் மேனேஜர் புக் கொடுங்கள்.
சார், ஒரு சீரிஸே இருக்கிறது.
எல்லாவற்றையும் கொடுங்கள்.
இரவு முழுவதும் ஒன் மினட் மேனேஜர் ஆக ஐந்து மணி நேரம் – 300 நிமிடங்கள் செலவழித்தேன்.
டேபிளை க்ளினாக வைத்ததன் பலன், “அவருக்கு வேலையே இல்லை போல இருக்கிறது.இன்னும் கொஞ்சம் லோடை ஏற்றுங்கள்” என்று நிர்வாகம் கூற நான் முழி பிதுங்கி ‘ஙே’ என்று ஆனேன்.
ஒன் மினட்டைக் கழட்டி விட்டேன்.
மானேஜர்களுக்கு ஆரோக்கியம் தான் முக்கியம். ஓடுங்கள் ஒரு கோர்ஸுக்கு என்று துரத்தவே ஆரோக்கிய கோர்ஸுக்கு ஓடினேன்.
ஒரு நாள் முழுவதும் கேள்விகளால் துளைத்தனர்.
கடைசியில் கோர்ஸ் முடிய இன்னும் முப்பது நிமிடமே இருக்கும் சமயம் அரிய ஆரோக்கிய ரகசியத்தை அருளினர்.
இரு கைகளையும் விரல்களால் நன்கு மூடித் திறக்க வேண்டும்.
இதனால் ரத்தம் சீராக உடலில் பாயும்.
சீராக ரத்தம் பாய்ந்தால் ஆரோக்கியம் மேம்படும்.மன நலம் உயரும்!
அடடா, ஆரோக்கிய ரகசியத்தைக் கேட்டு அனைவரும் அலுவலகம் திரும்பினோம்.
வந்தது பாருங்கள், ஒரு ஜப்பானிய அலை!
அதில் மூழ்கியவன் பல ஆண்டுகளுக்கு அம்பேல் ஆகிப் போனேன்.
அது என்ன ஜப்பானிய அலை என்கிறீர்களா?
உலகின் டாப் நிறுவனங்களான டொயோடோ, சுஸுகி ஆகியவை மற்ற மேலை நாடுகளை விட அதிகம் உற்பத்தித் திறன் கொண்டுள்ளது.
அதன் டெக்னிக்குகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.
நிர்வாகத்தின் உத்தரவால் எல்லோரும் ஜப்பான் வாழ்க என்று கோஷம் போட்டோம்!
டசாடா இஷ்கு, குமுட்டி பஷ்கோ,கஸ்வாகி ..
என்ன, குழம்புகிறீர்களா?
பழைய ஜப்பானிய வார்த்தைகள் மனதில் நிழலாட ஒரு நிமிடம் குழப்பமாகி விட்டது.
வாருங்கள், ஜப்பானிய அலையில் மிதப்போம்.
ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஒடுங்கள் – வெற்றி பெற என்பதல்லவா நமது தாரக மந்திரம்!
அடுத்த கட்டுரையுடன் முடியும்
***