நான் ஏன் நன்றாக இருக்கிறேன்? (Post No.4886)

Date- 6 April 2018

 

British Summer Time- 6-42 am

 

Written by S Nagarajan

 

Post No.4886

 

Pictures are taken from various sources; thanks.

 

 

ச.நாகராஜன்

 

 

நல்ல மனிதர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் அவர் நன்றாக இருப்பதற்கான காரணத்தைப் பணிவுடன் கேட்டேன். அவர் கூறிய பதில்:

 

நான் ஏன் நன்றாக இருக்கிறேன்?

நான் யார் சொத்துக்கும் ஆசைப்படுவதில்லை. ஒரு பைசா என்றாலும் கூட அடுத்தவர் காசு என்றால் தவறாக தரப்பட்டாலும் திருப்பித் தந்து விடுவேன். ஏனெனில் கர்ம பலன் விடாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

தினமும் லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து; சர்வே ஜனா சுகினோ பவந்து; எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று சொல்லத் தவறுவதில்லை. இதில் எனது சுயநலமும் இருக்கிறது என்பதை நான் பூரணமாக உணருகிறேன். ஏனெனில் அனைவரும் நலமாக இருந்தால் அதில் நானும் ஒருவன் தானே. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

பிரார்த்தனை செய்ய நான் தவறுவதில்லை. அது அனைத்துச் சமயங்களிலும் உடனடியாகப் பலிப்பதில்லை என்று தெரியும். ஆனால் எது தரப்பட வேண்டும் என்பதை நம்மை விட எங்கும் நிறைகின்ற பொருளுக்குத் தெரியாதா என்ன? ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

எனது சம்பிரதாயங்களை நான் விட்டுக் கொடுப்பதில்லை. எனது வழிபாட்டு மதம் எனக்கு போற்றத் தகுந்தது. ஆனால் மற்றவர் வழிபாட்டு முறையையும் நான் மதிக்கிறேன். ஆகாயத்திலிருந்து விழும் நீரானது எப்படி கடலைச் சென்று கலக்கிறதோ அதே போல எந்த்த் தெய்வத்தை வழிபட்டாலும் அது கேசவனைச் சேர்கிறது என்ற மந்திரத்தைச் சிறு வயது முதலே நான் சொல்லி வருகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

முன்னோர் வழிபாடு முக்கியம் என்பதால் எனது முன்னோர்களை நினைக்காமல் இருப்பதில்லை. தேவையான வழிபாடுகளைச் செய்வதால் அவர்களின் பரிபூரண ஆசி எனது குடும்பத்திற்கு இருக்கிறது.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

அடுத்தவர் விஷயங்களில் நான் தலையிடுவதில்லை. அவர்கள் மனம் புண்படும் படி பேசுவதில்லை. வலியச் சென்று பிறருக்கு யோசனைகள் கூறுவதில்லை. சொற் குற்றம் நேரக் கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

வருமானம் பெரிதாக இல்லாவிட்டாலும் நான் கவலைப் படுவதில்லை. ஆனால் வருகின்ற வருமானம் அறத்தின் அடிப்படையில் லஞ்சம் போன்ற ஊழல் பணம் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். வருகின்ற வருமானத்திற்குள் செலவு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.

ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

சொந்த நாட்டில் வாழ்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

பெண்களை நான் நன்கு மதிக்கிறேன். அவர்களிடம் கண்ணியத்துடன் பழகுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

உடல் ஆரோக்கியத்திற்கு முதலிடம் தருகிறேன். உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற படி உடல் பெரும் பேறை அடைவதற்கான சாதனம் என்பதை உணர்ந்து செயல் படுகிறேன். உடல் பயிற்சி, தியானம் இவற்றில் முழுமனதுடன் ஈடுபடுகிறேன். அதே சமயம் சுற்றுப்புறச் சூழ்நிலையால் என்னை மீறி வரும் வியாதிகளை ஏற்க வேண்டியதிருந்தால் ஏற்று உரிய மருத்துவ உதவியால் மீள்கிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

ஆடம்பரப் பொருள்கள் என்னிடம் ஏதுமில்லை. தீமை விளைவிப்போர் செய்யும் அரசியலுக்குள் நுழைவதுமில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

எனது நேரத்தின் ஒரு  பகுதியை சமுதாயப் பணிக்காக ஒதுக்குகிறேன். மருத்துவ உதவி, படிப்பு உதவி, ஆலயங்களைச் சுத்தம் செய்தல், அன்ன தானம் ஆகியவற்றைப் புரிவோருடன் இணைந்து என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

எனது வருமானத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்காக ஒதுக்குகிறேன். இந்தப் பணத்திற்கு பலன் ஒன்றும் எதிர்பார்ப்பதில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

மொழிச் சண்டை, இனச் சண்டை, மதச் சண்டை போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

நண்பர்களை பெரிதும் மதிக்கிறேன். அவர்கள் நட்பினால் ‘இடித்தல்’ செய்தாலும் அதை ஏற்கிறேன். ஆனால் நம்பிக்கை துரோகிகளுடன் மட்டும் நான் பழகுவதில்லை. அவர்களை ஏற்பதுமில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

குடும்ப உறுப்பினர்கள் நலமே முக்கியம் என உழைக்கிறேன்.அவர்களை உயர்த்தப் பாடுபடுகிறேன். ஒரு குடும்பம் முன்னேறினால் ஒரு தெரு உயரும். ஒரு தெரு உயர்ந்தால் ஒரு நகர் உயரும். நகர் உயர்ந்தால் நாடு உயரும்.  ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

 

 

தேச பக்தியும் தெய்வ பக்தியும் எனக்கு இரு கண்கள். தேச சேவை எனக்கு மிக முக்கியம்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

முன்னோர்களின் அற நூல்கள் உள்ளிட்ட புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் என்னிடம் உள்ளது. அவ்வப்பொழுது அதைப் படித்து என்னை உற்சாகப்படுத்திக் கொள்கிறேன், அறிவைப் பெருக்க விழைகிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

இசை தரும் பயன்கள் அனைத்தும் தெரியும் என்பதால் அதைப் பயன்படுத்தி மன அமைதி பெறுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

ரிஷிகள், பெரியோர், மகான்கள், அறவோர் ஆகியோரை மிகவும் போற்றுவதாலும் அவர்களை அணுகி ஆசி பெறுவதாலும் கஷ்டங்கள் வருவதில்லை. சிறிய கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை பெரியோர் ஆசியால் எதிர் கொண்டு சமாளித்து மீள முடிகிறது. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

அறநூல்களின் அறிவுரைப்படி இரகசியமாகக் காக்க வேண்டிய விஷய்ங்களைக் காக்கிறேன். அடுத்தவர் இரகசியங்களை அறிய விழைவதில்லை. வம்புப் பேச்சை ஆதரிப்பதுமில்லை. அப்படி வம்பு பேசுவோருடன் பழகுவதுமில்லை.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

வயதாக ஆக, நல்ல செயலகளும் செய்த நற்பணிகளும் மனதில் நிழலாடுவதால் அமைதியுடன் இருக்க முடிகிறது. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

***

 

Leave a comment

3 Comments

 1. Ganesan V

   /  April 6, 2018

  Nice!!

  Sent from iPhone
  Ganesan V,
  Coimbatore

  >

 2. Venugopal Krishnamoorthi

   /  April 7, 2018

  நான் நன்றாக இருக்கிறேன்..இந்த பதிவில் உள்ள விஷயங்களில் பலவற்றை கடைப்பிடித்தும்,..சிலவற்றை கடைபிடிக்க தீவிரமாக முயற்சி செய்தும் வருகிறேன்..மேலும் தினம் மூன்று முறையாவது நமது இந்த வலை தளத்திற்கு வந்து …புதிய பதிவுகளையும்..பழைய பதிவுகளையும் படித்து எனக்கு நானே உரமேற்றி கொள்வதால் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்…நன்றி..நமஸ்காரம்.

 3. அன்பு வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி,
  நன்றி. நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். இதில் சந்தேகமே இல்லை.
  அன்புடன் ச.நாகராஜன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: