Date- 7 April 2018
British Summer Time- 7-09 am
Compiled by S Nagarajan
Post No.4890
Pictures are taken from various sources; thanks.
பாரதி போற்றி ஆயிரம் – 72
பாடல்கள் 588 முதல் 600
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஏழாம் அத்தியாயமான புதுமைப் பெண் பார்வையில் பாரதி துவங்குகிறது.
ஏழாம் அத்தியாயம்: புதுமைப்பெண் பார்வையில் பாரதி
1 முதல் 13 வரை உள்ள பாடல்கள்
ஆதிபொது வுடைமையாம் சமுதா யத்தில்
அன்னைக்கே முதலிடமாய் ஆய்ந்தோர் சொல்வார்
ஓதுவால்கா முதல்கங்கை வரையென் கின்ற
உன்னதநூல் ஆய்வுமதை உரக்கப் பேசும்
போதித்துத் தந்தையின் வழியென் கின்ற
பேசுநிலப் பிரபுத்வ சமுதா யத்தில்
வாதித்துச் சொத்துரிமை தன்னில் பெண்ணும்
வலிமையுள தமதுடைமை என்றே கொண்டார்
அந்நாளில் தொடங்கியபெண் ணடிமைத் தன்மை
அடுத்தடுத்து மென்மேலும் இறுக்க மாகி
எந்நாளும் மாறாத கொடுமை யாக
இன்றுவரை தொடர்வதனை என்ன சொல்வோம்?
இந்நாளில் கூடயெம் பெண்டிரெல்லாம்
எமக்குற்ற விதியிதுவே என்று ஏற்று
உந்தியெழ மாட்டாமல் அடங்கிப் போனார்
உலைவைத்தல் பாய்விரித்தல் வாழ்வாய்க் கொண்டார்
சங்கயிலக் கியகாலம் உயர்ந்த தென்று
சாற்றுவோர் பெண்டிற்கங் குயர்வுண் டென்பார்
இங்கதனை ஆயுங்கால் முழுமை யாக
ஏற்பதற் கில்லையென இயம்ப வேண்டும்
அங்கந்நாள் பரத்தையரைத் தேடிச் செல்லல்
அதனாலே ஊடலெனன் ஒழுக்க மாக்கி
பங்கமுறச் செய்தாரே பெண்டிர் தம்மைப்
பார்க்கிலிது பெண்டிர்க்குப் பெருமை யாமோ?
இதிகாசம் என்றுநாம் பெருமை பேசும்
இராமா யணந்தனில் மட்டு மென்ன?
பதிவிரதா தர்மத்தை நாட்டு தற்குப்
பண்புள்ள சீதைதீக் குளிக்கச் செய்தார்
மதிகுலத்துப் பாண்டவர்தம் மனையாளான
மகத்தான திரௌபதியைச் சூதில் வைத்து
கதியற்ற நிலையிலவள் துகிலு ரிந்தார்
கண்டதெலாம் பெண்ணடிமைத் தனமே யன்றோ?
அம்பிகையை சமபாகம் ஏற்றி ருக்கும்
அரனாரின் அடியார்தாம் செய்த தென்ன?
தம்மனைவி தனையடியார் கேட்ட போது
தயங்காது தந்துஇயற் பகையா யானார்
அம்மட்டோ மகள்கூந்தல் அறுத்துத் தந்தார்
அரன்கோயில் மலர்முகர்தல் குற்ற மென்று
அம்மம்மா நாசியுடன் கரம்து ணித்தார்
அங்கும்பெண் ஆணுக்கு அடிமை தானே?
அந்நியர் படையெடுப்பு நேரும் போதில்
ஆங்கவர்க்குப் பலியாடு பெண்கள் தானே
அந்நாளில் தமைக்காத்துக் கொள்ள வேண்டி
ஆடவர்கள் பெண்களைத் தானம் தந்தார்
இந்நாளில் கூடயிங்கு பெண்க ளுக்கு
எந்தவுரி மையுமென்றும் இல்லை என்றார்
எந்நாளும் பெண்களுக்கும் தம்மைப் போல
இதயம்உண் டென்பதனை மறந்தே போனார்
கும்மியடிப் பெண்ணே என்றெம்மைக் கைகளைக்
கொட்டவைத்தாய் எங்கள் பாரதியே
செம்மையு டன்எம்மை வாழவைக்க அன்று
சிந்தித்தவன் நீயே பாரதியே
எண்ணற்ற காலங்கள் ஆடவரா லுற்ற
பெண்னடி மைத்தனம் தீர்ப்பதற்கே
மண்ணிலோர் ஆடவன் குரல்கொடுத்தாய் என்றும்
மாறாத சரித்திரம் இதுவல்லவா?
மனைத்த லைவிக்கு வாழ்த்துசொன் னாயவள்
மகத்து வந்தனை ஆய்ந்துரைத்தாய்
அனைத்தை யுமவள் பயனுறச் செய்து
அனுபவ மாக்குவள் என்றுரைத்தாய்
சீனவீ ராங்கனை சியூசினி பேச்சை
செம்மைமி குந்தநல் பாடலென
தானருந் தமிழில் தந்துபெண் விடுதலை
தானுணர வழி காட்டிவிட்டாய்
பாரதம் விடுதலை பெறுவதென்றால் முன்னம்
பாவையர் விடுதலை வேண்டுமென்றாய்
யாரதை அந்நாளில் ஏற்றார்கள் வந்த
எதிர்ப்பினை ஏற்றுநீ ஓங்கிநின்றாய்
பள்ளிக்குப் பெண்ணை அனுப்புவதே பெரும்
பாபமென் றெண்ணிய காலத்திலே
எள்ளிந கைத்தவர் தம்மையொ துக்கியே
ஏட்டினை எம்கையில் தந்துவிட்டாய்
கல்விகற் றால் பெண்கள் தம்முரை மைதன்னைக்
கண்டுகொள் வாரென்று எண்ணியன்றோ
நல்லபெண் னென்றிடில் நாணம்அச் சத்துடன்
நாடும் மடமையும் வேண்டுமென்றார்
புதுமைப்பெண் பார்வையில் பாரதி தொடரும்
XXXX
பாரதி போற்றி ஆயிரம் – 73
பாடல்கள் 601 முதல் 613
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஏழாம் அத்தியாயமான புதுமைப் பெண் பார்வையில் பாரதி தொடர்கிறது.
ஏழாம் அத்தியாயம்: புதுமைப்பெண் பார்வையில் பாரதி
14 முதல் 26 வரை உள்ள பாடல்கள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்விதத்திலும்
அறிவினில் குறையேதும் இல்லையென்றாய்
பேணும்நற் கல்வியைப் பெற்றுப் புதுமைப்பெண்
புகழ்பெற லாமென வழியமைத்தாய்
கூடத்தி னில் பெண்ணை நிற்க வைத் துப்பலர்
கூடிப் பலப்பல பேசுவதோ?
மூடத்த னமென்று காறியு மிழ்ந்துபின்
முறையான காதலின் வாழ்த்துரைத்தாய்
கற்பெனல் பெண்ணுக்கு மட்டுமென் றேயதை
காலங்கா லமாகச் சொல்லிவந்தார்
உற்றமு றையினில் இருவர்க்கும் பொதுவென
உணர்த்திய ஆண்மகன் நீயல்லவா?
பொட்டுக்கட் டும்தேவ தாசிமுறை யென்று
பெண்மையைக் கேவலம் செய்து விட்டார்
கொட்டிய கும்மியில் பொட்டுக்கள் யாவையும்
கட்டவிழ்ந் துவிழச் செய்துவிட்டாய்
ஜனநாய கம்தந்த ஓட்டுரி மைகூட
சற்றும் எமக்கிங்கு இல்லையென்றார்
துணிவோடு அதனையும் தந்தனர் என்றிடின்
தூயநின் பாடலின் உரமல்லவா?
பெண்மை வாழ்கென்று போற்றினாய் பாரதி
பெண்மை வெல்கவென்று வாழ்த்தினாய் பாரதி
உண்மைக் கவிஞனின் உயரிய நோக்கினால்
திண்ண மாய்யாவும் நிகழ்ந்தன பாரதி
மாதர் பட்டங்கள் யாவையும் பெற்றனம்
ஓதத் தகுமுயர் சட்டங்கள் கற்றனம்
சாதம் சமைத்திடல் மட்டுமல் லாதுயாம்
சாத னைகள்பல செய்தனம் பணிகளில்
மருத்து வந்தனில் வியத்தகு சாதனை
திருத்த முடனிங்கு செய்தனர் பெண்களே
பெருமை மிகுந்த காவலதி காரியாய்
பொறுப்பினை ஏற்றதில் சிறந்தனர் பெண்களே
வாட்டம் தருவது எனும்பல பணிகளும்
நாட்ட முடன்செய்து நற்புகழ் பெற்றனர்
வீட்டை யாளல்இல் லாளெனல் மாற்றியே
நாட்டை யாண்டனர் நங்கையர் இத்தினம்
கண்ணில் காதலி காட்டிய பணியென
விண்ணைச் சாடுவர் ஆடவர் என்றனை
எண்ணி வியப்புற இன்றொரு மங்கையே
விண்ணைச் சாடினள் உயிர்பண யமாக்கியே
சமயப் பணிகளில் சார்ந்ததை ஏற்றுளோர்
சமூகப் பணியொடு கல்வியும் வளர்த்தனர்
எமக்கின் றமைந்துள எண்ணிலா புகழையும்
எமதல உனதென சமர்ப்பித் தோமே!
இத்தனையும் இருந்தாலும் பெண்கள் வாழ்வில்
ஈவ்டீசிங் இழிவால்தற் கொலைகள் நேரும்
எத்தர்கள் பெண்களைக் கடத்திச் சென்று
எவர்க்கோ விற்றிடல் தொடரும் இன்னும்
எத்துவர தட்சனைத் தீயில் பெண்கள்
எரிகின்றார் தீயின்னும் அணைய வில்லை
இத்தனையும் தீர்கின்ற நாள்தான் அன்றோ
இங்குநின் கனவுநிறௌ வேறும் நாளே…
அடிமைத்தன மென்கின்ற விலங்கை மாட்டி
அறியாமை இருளிலெமைப் பூட்டி வைத்தார்
ஒடித்தாய்நின் கவிதையெனும் ஆயு தத்தால்
ஒளிவிளக்காய் கல்விதனை ஏற்றச் செய்தாய்
அடிவிளக்கில் இருள்சற்றே இருத்தல்போல
அதில்சில குறைகளின்னும் இருந்திட் டாலும்
விடிவுவரும் இருள்முழுதும் விலகிப் போகும்
வித்தகனே புதுமைப்பெண் போற்ற வாழ்க!
புதுமைப்பெண் பார்வையில் பாரதி முற்றும்
தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.
கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
***